கடல் அரக்கன்

கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில் இருந்த அவன், வாயைத்திறந்தான் என்றால் அது ஒரு குகைபோன்று இருக்கும் என்று சிலர் கூறினார்கள்.

அவனால் ஒரு கப்பலைக்கூட அப்படியே விழுங்கிவிட முடியும் என்றும், புயல் வீசும் இரவுகளில் அந்தத் தீவில் அமர்ந்துகொண்டு தீபோல் எரியும் தன் கண்களால் கடலை வேடிக்கை பார்ப்பதாகப் பலரும் நம்பிவந்தனர்.

மாலுமிகள்கூட அந்தக் கடல் அரக்கனைப்பற்றி நடுக்கத்துடன்தான் பேசிக்கொண்டனர். அவனது வெளித்தோற்றத்தைக் கண்டு பயந்தவர்கள் எல்லோரும் அவனைப்பற்றி இல்லாத பொல்லாத கதைகளைப் பரப்பினர். ஆனால் உண்மை என்னவென்றால் தான் இருக்கும் பாறைத்தீவில் வந்து யாரும் மோதிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அந்த அரக்கன் ஒளி உமிழும் கண்களோடு இரவு நேரத்தில் அங்கே அமர்ந்திருப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.

புயல் வீசிய ஓர் இரவில் கப்பல் ஏதேனும் கவிழ்ந்து, யாரேனும் தவித்துக்கொண்டிருக்கிறார்களா என்று பார்ப்பதற்காக கடலில் நீத்திக்கொண்டிருந்தான் அந்த அரக்கன்.
மரக்கட்டையைப் பற்றியபடி சிறுவன் ஒருவன் மிதந்துகொண்டிப்பதை அவன் கண்டான். அச்சிறுவனின் பெயர் கோ-கோ, அவன் அரக்கனைக்கண்டு பயந்துபோனான். ஆனால் சற்றுநேரத்திலேயே அரக்கன் தன்னைத் தாக்க முயலவில்லை என்பதை சிறுவன் புரிந்துகொண்டான். சிறுவனைத் தன்னுடைய முதுகில் ஏற்றிக்கொண்டு பாறைத்தீவில் இறக்கிவிட்டுத் திரும்பிவிட்டான் அரக்கன். இப்போது கோ-கோ மட்டும் அந்தத் தீவில் தனித்து அமர்ந்திருந்தான். சில நிமிடங்களில் திரும்பி வந்த அரக்கன் தன் வாயை “ஆ..”வெனத் திறந்தான்.

தன்னைத்தான் அரக்கன் விழுங்க நினைக்கிறானோ என்று கருதிய கோ-கோ தலை தெறிக்க ஓடினான். ஆனால் தன்னை அந்த அரக்கன் விரட்டிவரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் அரக்கனிடமே திரும்பி வந்தான்.

அவனைக்கண்ட அரக்கன் மறுபடி தன் வாயைத் திறக்க, “நீ என்னை உள்ளேபோகச் சொல்கிறாயா?” என்று கேட்டான் கோ-கோ.
அரக்கன் ‘ஆம்’ என்பதுபோல் தலையாட்ட, ‘இவன் நினைத்தால் என்னை இப்போதே விழுங்கிவிட முடியும். வேறு ஏதோ ஒரு விஷயத்திற்காகவே என்னை வாய்க்குள் நுழையச் சொல்கிறான்.’ என்று நினைத்த கோ-கோ தைரியமாக உள்ளே நுழைந்தான்.
இருந்தாலும் அரக்கன் எதற்காக வாய்க்குள் போகச்சொல்கிறான் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. உள்ளே போகப்போக ஒரே இருட்டாக இருந்தது. கடைசியாக ஓர் இடத்தில் அடுப்பு, நாற்காலி, இருக்கை ஆகியவை இருந்தன.

‘இவை எனக்கு உதவும். எனவே இவற்றை நான் வெளியே எடுத்துச் செல்லப்போகிறேன்.’ என்றபடி ஒவ்வொன்றாய் வெளியே கொண்டுவந்தான்.

அவன் எல்லாப் பொருட்களையும் வெளியே கொண்டுவந்ததும் அரக்கன் அவனிடம் எதுவுமே சொல்லாமல் கடலுக்குச் சென்றுவிட்டான். அரக்கன் திரும்பி வந்து வாயைத் திறந்தபோது அதற்குள் சில பெட்டிகள், உணவுப்பொருட்கள் அடங்கிய பீப்பாய்கள் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து அங்கிருந்த குகை ஒன்றில் பத்திரப்படுத்தினான் கோ-கோ. பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்ததும், அரக்கன் அங்கேயே படுத்து உறங்கிவிட்டான்.

மாலை மங்கி இரவானது. கோ-கோ உணவைத் தயாரித்துவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த அரக்கனிடம் “சாப்பாடு தயார்.” என்று சொன்னான். விழித்து எழுத்த அவனோ தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டிவிட்டுக் கடலுக்குள் குதித்தான். சில நிமிடங்களில் வாய் நிறைய மீன்களோடு அவன் திரும்பி வந்தான். அப்போதுதான் தனக்காக அந்த அரக்கன் ஒவ்வொருமுறையும் கடலுக்குள் சென்று மூழ்கிக்கிடக்கும் கப்பலில் இருந்து பொருட்களைக் கொண்டுவருகிறான் என்பதை கோ-கோ உணர்ந்தான். அவனுக்கு அரக்கன்மேல் இருந்த பயம் இப்போது முழுமையாக நீங்கிவிட்டது.

“நீ என்னோடு பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.” என்றான் கோ-கோ.

“யாருமே இதுவரை இப்படி விரும்பியதில்லை. இனி என்னால் பேச முடியும்.” என்று சொன்ன அரக்கன், “நான் இப்படி அரக்க உருவத்தில் அலைவதற்கு ஒரு சூனியக்காரிதான் காரணம். அவள் என்னை இப்படி மாற்றி, யாருமே இல்லாத இந்தத் தீவில் இருக்குமாறு சபித்துவிட்டாள். யாரேனும் மனதார விரும்பினால் மட்டுமே என்னால் பழைய உருவத்தை அடைய முடியும்.” என்றான்.

“நீ மீண்டும் மனிதனாக வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.” என்றான் கோ-கோ.

“இன்னொன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். ஒரு நபரால் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு சாபத்தை மட்டும்தான் நீக்க முடியும். நான் பேசவேண்டும் என்று நீ விரும்பினாய். நான் பேசுகிறேன். ஆனால் நான் மீண்டும் மனித உருவத்தை அடையவேண்டும் என்றால் வேறொரு நபர் அப்படி ஒரு விருப்பத்தைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் என்மீதான சாபம் நீங்கும்.” என்றான் அரக்கன்.

இப்படியே நாட்கள் ஓடின. அரக்கன் அவ்வப்போது கோ-கோவைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கடலில் சவாரி போவான். பெரிய பெரிய அலைகள் வரும்போது பயந்துபோன கோ-கோ மெதுவாக நகர்ந்து அரக்கனின் வாய்க்குள்போய் அமர்ந்துகொள்வான். கரை திரும்பியதும் அரக்கன் வாயைத் திறக்க சிறு கீறல்கூட இல்லாமல் வெளியே வருவான் கோ-கோ.
புயலடித்து ஓய்ந்த இரவொன்றில் கடலில் ஏதோ மிதப்பதைக் கோ-கோ பார்த்துவிட்டான். உடனே அவன் அரக்கனின் முதுகில் ஏறிக்கொள்ள அவர்கள் இருவரும் மிதந்துகொண்டிருந்த பொருளை நோக்கிப் பயணமானார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை.

கோ-கோவின் வயதே உள்ள ஒரு சிறுமி பீப்பாயைப் பிடித்தபடி மிதந்துகொண்டிருந்தாள். அரக்கனைப் பார்த்து முதலில் அவள் பயந்தாலும் விரைவிலேயே அவனுடைய நல்ல குணங்களைக் கண்டுகொண்டாள். இப்படியே மாதங்கள் பல ஓடிவிட்டன.

ஒருநாள் அவளும், கோ-கோவும் அரக்கனின் முதுகில் ஏறி கடலுக்குள் சவாரி செய்யத் தயாரானார்கள். அப்போது அப்பெண் அரக்கனிடம், “நீ இப்போது எங்களைப்போல் ஒரு மனிதனாக இருக்கக்கூடாதா?” என்று நினைக்கிறேன் என்றாள். அவ்வளவுதான் அடுத்த நொடி அங்கே மின்னல் வெட்டியதுபோல் ஒளி தோன்றியது. அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே அரக்கன் மறைந்து இருவரும் கடலுக்குள் விழுந்தனர். அரக்கன் இருந்த இடத்தில் ஒரு கிழவர்தான் நின்றுக்கொண்டிருந்தார். அவர் அவர்கள் இருவரையும் கரைக்கு மீட்டுவந்தார்.
“நீங்கள் மனிதரானதில் மகிழ்ச்சிதான். ஆனால் இனிமேல் சாப்பாட்டிற்கு என்ன செய்யப்போகிறோம்?” என்று கேட்டான் கோ-கோ.

“இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாதே. நான் கடல் தேவன். சாபநிவர்த்தி அடைந்ததால் என்னுடைய சக்திகள் மீண்டுமே எனக்குக் கிடைத்துவிட்டன. நான் இந்தத் தீவை அழகான தோட்டமாக மாற்றிவிடுகிறேன். நீயும், இந்தச் சிறுமியும் வளர்ந்து திருமணம் செய்துகொள்வீர்கள். அப்போது கடல் தேவர்களும், கடல் கன்னிகளும் உங்களுக்கு ஒரு கோட்டையை அமைத்துத்தருவதோடு உங்களை நன்றாகவும் கவனித்துக்கொள்வார்கள். இன்றிலிருந்தே நீங்கள் எதுகுறித்தும் கவலைப்படத் தேவையில்லை.” என்றார் கடல் தேவன். பிறகு, அவர்களைத் தனது வாகனங்களான டால்ஃபின்களின்மேல் அமரச்செய்து கடலுக்குள் அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் கடல் தேவன் சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றாய் நடக்கத்தொடங்கின. கோ-கோவும், அந்தச் சிறுமியும் வளர்ந்து பெரியவர்களாகி, திருமணம் செய்துகொண்டு தங்களுடைய கோட்டையில் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.

கதை: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர்
மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி
ஓவியம்: சுந்தரி முத்துவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *