ஈழம்
கடலில் மிதக்கும் தீவு தேசம்
பசியில் மூழ்கிய மக்கள்
மூச்சுத் திணறித் துடிக்க
கடனில் மிதக்கும் தேய் தேசம்* ஆனது
இன்று

பை நிறைய பணத்திற்கு
ஒரு கை நிறையப் பொருள்
பொருளியலின் அழுத்தத்தில்
வெடித்துச் சிதறத் துடிக்கும் பணவீக்கம்
வடித்த கண்ணீருடன்
தவிக்கும் குடிமக்கள்
தாம் எக்குற்றமும் செய்திடாது

வியர்வையுடன் ரத்தம் வார்த்து
விளைந்த தேயிலையின் சாற்றை
யார் யாரோ பருக – பிழிந்த
தேயிலையின் சக்கையாய் மக்கள்
பிதுங்கிய விழிகளுடன் வீதிகளில்

எரியும் வயிறுகளுடன்
போட்டியிட விரும்பாத
அமைதி காத்திடும் அடுப்பு
ஒவ்வொரு வீட்டிலும்

உள் நாட்டுப் போர் தந்த
வெற்றியின் நிழலில்
ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்த
அண்ணன் தம்பிகள்
வாங்கிய கடனடைக்க
வாழும் நாட்டை விற்கத் துணிந்த
கயவர் கூட்டம் அவரைச் சுற்றி
மிச்சம் மீதியிருந்ததை
அச்சம் கொஞ்சமுமின்றி
தமதாக்கிக் கொண்டனர்
மக்களை அனாதைகளாக்கி

நட்பு நாடுகளாய்
அண்டை நாடுகள் – இருந்தும்
ராணுவச் செலவுக்கு
ஒதுக்கிய பணத்துக்கோ
ஓர் அளவில்லை – அதில்
ஆள்வோர் தம் சட்டைப் பையில்
ஒதுக்கிக் கொண்டதற்கோ …..
ஒரு கணக்கில்லை

தைக்க நூலின்றிக்
காத்திருக்கும் இயந்திரங்கள்
இயங்க எரிதிரவமின்றி
உறங்கும் ஊர்திகள்
துடிக்க உயிர் காக்கும் மருந்தின்றி
நின்று போன இதயங்கள்

குடிக்கப் பால் இன்றிக்
குரல் வற்றித் – தவழும்
குழந்தைகளின் அழுகையுடன்
அவர்கள் மூச்சும் நின்று போகலாம்
இந்த  நான்கு வரிகள்
காட்சியாகலாம்  ஒவ்வொரு தெருவிலும்
உருகி அழும் தாய்களின்
அருவியெனக் கொட்டும் கண்ணீர்
அதற்குச் சாட்சியாகலாம்
ஒவ்வொரு வீட்டிலும்
இன்னும் ஒரு சில நாட்களில்

சாரமற்ற வாழ்வு
யாதுமற்றுப் போனதாய்
ஆயிற்றே இன்று ஈழம்
இனி எந்த விடியல் விலக்கிடுமோ
அதைச் சூழ்ந்த காரிருளை?

அன்று
கடற்கரையில் கேட்ட அழுகுரல்
இன்னும் ஓயவில்லை
படகுகளில் சிந்திய கண்ணீர்
இன்னும் காயவில்லை
கடந்த காலம் அறிந்த அலைகள் -இன்று
பயணிப்போர் படும் வேதனையைக்
கண்ணெதிரே கண்ட பின்
வேகமெடுத்துப் பாய்ந்தன
கரை நோக்கிப் படகுடன்
கடுகளவும் கால விரயம் செய்திடாது

குடும்பம் ஒன்று
வாழ் நாள் உடைமைகள் மொத்தமாய்
நெகிழிப் பெட்டி ஒன்றில்
கணவனின் தோளில்
மூட்டையாய்க் கட்டிய உடைகள்
மனைவியின் இடுப்பில்
குழந்தைகள் இரண்டு காலடியில்
புது இடத்தைக் கண்டதில்
புதிர் கலந்த மிரட்சிப் பார்வையில்
உணவும் நீருமின்றி
உலர்ந்த முகங்களில்
வற்றா நம்பிக்கை கண்களில்

ராமேஸ்வரம் கடற்கரையில்
இறங்கி நிற்கும் குடும்பம் ஒன்று இது
இன்றைய ஈழத்தின்
துயரக் கடலின் துளி ஒன்று அன்றி
வேறன்று அது

அன்று
தமிழினம் கொதித்தது
கொத்துக் கொத்தாய்
தமிழ் உயிர்களைக் குடித்த
சிங்களவரைப் பார்த்து
உண்மைதான்

இன்று
ஒட்டிய வயிறும்
ரொட்டித் துண்டும்
அவர்களை ஒன்று சேர்த்திட
கையில் கிடைத்ததை ஆயுதமாக்கி
கேட்கத் தொடங்கியுள்ளனர் நியாயம்
வீதியில் இறங்கி
வேற்றுமை மறந்து

சிங்களரே
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
உண்மை இருக்காது இக்கூற்றில்
பழைய நினைவுகள்
தமிழகம் தேடி வரும்
உங்கள் நினைவைத் தடுக்கலாம் இன்று
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
இதுவே தமிழரின் நிலை
அவ்வரிகள் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தும்
இன்றும்
நாளையும்

நீங்களும் வாருங்கள்
தமிழரோடு சேர்ந்து
வாழ்வளித்து
தமிழ் கற்றுத் தருகிறோம்
உங்கள் குழந்தைகளுக்கு
சிங்களம் கற்றுத் தாருங்கள்
எங்கள் குழந்தைகளுக்கு

“தம்பி கேட்டது சரியே” என
நம்பத் தொடங்கியிருக்குமா
இன்றாவது உலகம்?

தேய் தேசம்* – வினைத் தொகை



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *