அற்புதத் தலைவனுடன் ஐந்து நாள் உரையாடல் என்ன சொல்வது, என்ன எழுதுவது என்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையிலிருந்து எழுதத் தொடங்குகிறேன். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது உண்மையில் நெகிழ்ச்சியும், உணர்ச்சியும், ஊக்கத்தையும் அளிக்கக் கூடியது. அப்படிப்பட்ட ஒரு தியாகத் தலைவனின் வரலாற்றைப் படித்து விட்டு அதைப் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யா விட்டால் அது மிகப்பெரும் துரோகமாகி விடுமென்ற தூண்டுதல் என்னை எழுத வைக்கிறது. கொரோனா பிரச்சனை முடிந்து பத்திரிகைக்குக் கூட எழுதலாமே என்று நண்பர் மருதன் கூறியதைக் கூட ஏற்க முடியவில்லை. உடனடியாக வெளியிட வேண்டுமென்றுதான் ஃபேஸ்புக்கிலேயே எழுதுகிறேன்.

யார் அப்படிப்பட்ட தலைவன்? அவர்தான் மால்கம் எக்ஸ். அமெரிக்காவில் உதித்த கருப்பினத் தலைவர். கருப்பர்களை இணைக்கப் போராடி, கடைசியில் தன் உயிரையே தியாகம் செய்தவர். அந்தக் காலத்தில் களத்திலிருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையானவர். அனல் கக்கும் பேச்சாளர். ஆனால் இவர் வாழ்ந்த காலம் வெறும் 42 வருடங்கள் மட்டுமே.

টুইটারে விகடன்: "``வரலாற்றை மறந்த ...

1923, மே 19 அன்று அமெரிக்காவில் உதித்தார் மால்கம். அவரது தந்தை லிட்டில் என்ற குடும்பப் பெயர் கொண்டிருந்தார். அவருடன் பிறந்தோர் ஐந்து பேர். அவரது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தோர் மூன்று பேர். அவர் சிறு வயதாக இருக்கும் பொழுதே வெள்ளை இன வெறியர்களான கு க்ளக்ஸ் க்ளான் உறுப்பினர்களால் அவரது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். அவரது அன்னை மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றார். வெள்ளை அதிகாரிகளின் சதியால் அவரது அன்னை மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவர் குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்களெல்லாம் வெள்ளையர்கள். அவர்கள் அவர்மீது பாசம் காட்டினாலும், தம்மை ஒரு நீக்ரோ என்று மட்டமாகப் பேசியதையே அவர் கேட்டு மனது வெம்பினார்.

நான்காம் வகுப்பு வரையே அவர் படித்தார். அங்கும் அவர் வகுப்புத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆச்சரியமாகப் பின்னர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலமும், வரலாறும் அவருக்குப் பிடித்தவை. ஆனால் அவர் ஒரு வழக்குரைஞராக வேண்டும், கருப்பர்களுக்காக வாதாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசிரியரோ, கருப்பர்கள் இதற்கெல்லாம் ஆசைப்படக் கூடாது, அவர்களுக்கே உண்டான அடிமை வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்று கூறி அவரது ஊக்கத்தைக் கெடுத்தார். இங்கு நமது சாதி அமைப்பை நினைத்துக் கொள்வதைத் தடுக்க முடியவில்லை. அவர் கூடைப்பந்து விளையாட்டு வீரராக இருந்தாலும், கருப்பு அடிமை கூன் என்றும், ரஸ்டஸ் என்றும் தொடர்ந்து எல்லா இடங்களிலும் அவமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது மூத்த சகோதரி எல்லாவின் அழைப்பை ஏற்று அவருடன் ஹார்லெமுக்குச்(நியூயார்க்கில் கருப்பர்கள் வசிக்கும் பகுதி) சென்று குடியேறினார். அங்கு கருப்பர் சேரியுடன் ஒன்று கலந்தார். சிறு, சிறு வேலைகளை முதலில் செய்து வந்தாலும், படிப்படியாக அவர் போதைப் பழக்கம், கஞ்சா விற்றல், விபச்சாரம், கடைசியில் திருட்டு வரை சென்று மீள முடியாத நிலைக்குச் சென்று விட்டார். இங்கும் கூட அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத் திகழ்ந்துள்ளார். தம்மை வெள்ளை இனத்தவர் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்று தமது முடியை காங்க் என்ற ,முறையில் சிகப்பாக மாற்றிக் கொண்டார். எப்போதும் துப்பாக்கியுடன் அலைவது, எப்போதும் முழு போதையிலேயே இருப்பது என்று ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைத்து விட்டார். லாரா என்ற வெள்ளையினப் பெண்ணுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்திருக்கிறார். இறுதியில் சிறைப்பட்டார்.

மால்கம் எக்ஸ் – ஆப்பிரிக்க ...

மார்ட்டின் லூதர் கிங்குடன் மால்கம்

சிறையில் அவர் இருக்கும்போது, அவரது சகோதர சகோதரிகள் நேஷன் ஆஃப் இஸ்லாம் என்ற அமைப்பில் இணைந்திருந்தனர். அதன் தலைவர் எலிஜா முகமது ஒரு இறைத்தூதராகவே மதிக்கப்பட்டார். சகோதரர் வில்ஃப்ரெட் மால்கமிடம் இஸ்லாம் பற்றி எடுத்துக் கூறி முகமதின் ஆசீர்வாதத்தைப் பெறுமாறு தூண்டினார். எதோ ஒரு தூண்டுதலில் மால்கம் தனது பழைய பொழுது போக்கான புத்தக வாசிப்பைக் கையிலெடுத்தார். அவரை புத்தகங்கள் முழுதும் உள்ளிழுத்துக் கொண்டு விட்டன. சிறையில் கிடைத்த அனைத்துப் புத்தகங்களையும் விழுந்து விழுந்து வாசித்தார். இரவில் பத்து மணிக்கு விளக்குகள் அணைக்கப்பட்டு விடும். அப்போதும் தூரத்திலிருந்து கிடைத்த மங்கலான வெளிச்சத்தில் இரவு மூன்று மணி வரை படித்துள்ளார் மால்கம்.

இது அவருக்கு நிரந்தரமாக கண்ணாடியைப் பெற்றுத் தந்து விட்டது. “ஒரே ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி விடக் கூடும்” என்று பின்னர் மால்கம் குறிப்பிட்டார். அவரது எழுத்து மிக மோசமாக இருக்கும். எனவே தானே எழுதிப் பழகத் தொடங்கினார் அவர். கடுமையாக முயன்று எழுதவும் செய்தார். தானே தன் கையால் முகமதுவுக்கு எழுத, அவர் இவருக்கு பதிலளித்தார். நேஷன் ஆஃப் இஸ்லாமில் புகை பிடித்தல், போதைப் பொருட்கள் ஆகியவை தடுக்கப்பட்டவை என்றறிந்து அவற்றைக் கைவிட்டார் மால்கம். சிறையிலிருந்து ஏழு வருடங்கள் கழித்து வெளியேறிய போது முழுமையான ஒரு இஸ்லாமியனாக, எலிஜா முகமதுவின் சீடனாக உருமாறினார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அவரை முழுமையாக ஆட்கொண்டார் எலிஜா முகமது.

நேஷன் ஆஃப் இஸ்லாமின் தொண்டராக இணைந்த போது அதில் வெறும் 400 பேர் மட்டுமே உறுப்பினர்கள். எலிஜா முகமதை நேரில் சந்தித்த போது ஒரு தகப்பனின் பாசத்தை அவர் அளிக்க, தம்மை முழுதும் அவருக்கு அர்ப்பணித்து விட்டார் மால்கம். அப்போதிருந்து கருப்பர்களை போதையிலிருந்து, மோசமான வாழ்க்கையிலிருந்து மீட்டு இஸ்லாமியனாக மாற்றுவதற்குத் தமது கவனத்தை செலுத்தினார். அவரது வார்த்தைகளின் படியே 40000 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பாக அது உயர்ந்தது.

அப்போது அவர் வெள்ளையர்களை முழுமையாகப் பிசாசுகள் என்றே அழைத்தார். அவர்களுடன் ஒருமைப்பாடு செலுத்த வேண்டும், சேர்ந்து உயர வேண்டும் என்ற கருப்பர் இனத் தலைவர்களையும் அவர் வெறுத்தார். தமது முன்னோர் வெள்ளையர்களுடன் கூடியதால்தான் தமக்குப் பழுப்பு நிறம் ஏற்பட்டுள்ளது என்று அதை வெறுத்தார். முழுதும் கருப்பராகவே இருக்க வேண்டுமென்பது அவரது ஆவல். தான் முன்பு செய்து கொண்ட காங்க்கைக் கைவிட்டு சாதாரண சிகைக்கு மாறினார். லிட்டில் என்பது யாரோ ஒரு வெள்ளையனின் குடும்பப் பெயர் என்று அதை விட்டு விட்டு, பல கருப்பர்களைப் போல் எக்ஸ் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். அதாவது தமது ஆப்பிரிக்க மூலம் தெரியாது என்பதால் எக்ஸ் என்ற பெயர். கருப்பர்களின் தன்மான உணர்வையும், வெள்ளையர்களின் குற்ற உணர்ச்சியையும் ஒருசேரத் தூண்டி விடும் பேச்சாற்றல் படைத்தவர் மால்கம். ஒரு மதகுருவாக எலிஜாவுக்கு அடுத்த இரண்டாமிடத்தை அடைந்தார் மால்கம். ஒரு கட்டத்தில் அமெரிக்கா முழுதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உட்பட அவர் பேசாத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

Fidel Castro And Malcolm X At The Hotel Theresa, 1960

பிடலுடன் மால்கம்

எலிஜா முகமது அவ்வளவு ஆற்றல் கொண்டவரல்ல. மெதுவாக அவரது பொறாமை உணர்வை மற்றவர்கள் தூண்டத் தொடங்கினர். அவரும் அதை நம்பத் தொடங்கினார். அதே சமயத்தில் எலிஜா முகமது மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், ஏமாற்றுக்காரர் என்ற குற்றச் சாட்டுகளும் எழத் தொடங்கின. அவரது இரண்டு முன்னாள் செயலாளர்களே இதை முன்வைத்தனர். மால்கமால் அதை நம்பவும் முடியவில்லை. ஆனால் எலிஜா முகமதே பின்னர் அது தமது பணியின் ஒரு பகுதி என்று அவரிடமே கூறிவிட்டார். இது மால்கம் தலையில் விழுந்த பெரும் இடி. ஏனெனில் பலரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக நேஷன் ஆஃப் இஸ்லாம் தன் கடும் விதிகளால் நீக்கியிருந்தது. ஒரு கட்டத்தில் எலிஜா முகமது மால்கமை அனைத்துப் பணிகளிலிருந்தும் பன்னிரண்டு ஆண்டுகள் நீக்கி விட்டார். அதாவது சரியாகச் சொல்வதென்றால் வெளியேற்றம். மால்கம் இதை எதிர்பார்த்திருந்தார். இந்தக் காலத்தில் நேஷன் ஆஃப் இஸ்லாமில் உறுப்பினராக இருந்த பெட்டி என்ற பெண்ணை மணந்தார் மால்கம். அவருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தாவது குழந்தை பிறக்குமுன்பேயே கொல்லப்பட்டு விட்டார் மால்கம்.

அதன் பிறகு அவர் மேற்கொண்ட ஹஜ் பயணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. உண்மையான இஸ்லாம் என்பது என்னவென்பதை அவர் அறிந்து கொண்டார். அவர் சந்தித்த அனைத்து முஸ்லிம்களும் அவரது கண்களைத் திறந்து விட, வெள்ளையர்கள் அனைவரும் மோசமானவர்களல்ல என்பதை உணர்ந்து கொண்டார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அவரைக் கைவிட்டாலும் அல்லா அவரைக் கைவிடவில்லை என்று உணர்ந்தார் மால்கம். அவரது பெயர் எல் ஹஜ் மாலிக் எல் ஷாபாஸ் என்று பதிவானது இப்போதுதான். இதற்குள் அவர் ஒரு அமெரிக்க இஸ்லாமியர் என்ற முறையிலும், ஒரு கருப்பினப் போராளி என்ற முறையிலும் ஹஜ் யாத்திரையில் முழு மரியாதையையும் பெற்றார். ஒரு இளவரசரே தமது அறையை அவருக்குக் கொடுத்தார் என்றால் எப்படிப்பட்ட மதிப்பை அவர் பெற்றிருப்பார்.

ஆனால் ஒரு உண்மையான இஸ்லாமியனாக, எளியவனாகவே இருப்பேன் என்ற அவரது கொள்கையை அவர் இறுதி வரை கடைப்பிடித்தார். (இந்த இடத்தில் ஒரு விஷயம். எனது இஸ்லாமிய நண்பர்கள் ஹஜ் பற்றிக் கூறியதையும், நான் கேட்டதையும் விட சற்று அதிக விஷயங்களை இதில் அறிந்து கொண்டேன்.)

Photos - Malcolm X

அவர் திரும்பிய பிறகு நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு தனது உயிருக்குக் குறி வைத்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். அதிலிருந்த சிலரே அவருக்கு விஷயத்தைக் கூறி விட்டார்கள். அவரது வீட்டையும் அது பிடுங்கிக் கொண்டு அவரை தெருவில் நிறுத்தியது அவ்வமைப்பு. எலிஜா அவர் மீது முழு வெறுப்பைக் கக்கினார். இவர் ஒரு போலி என்பதை முழுதாக மால்கம் உணர்ந்து கொண்டார். எனவே அதற்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பை உருவாக்க முயன்றார், அது முழுதும் உருவாவதற்கு முன்னரே ஒரு கூட்டத்தில் உரையாற்றச் சென்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மனைவியின் கண் முன்னாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் அவர்.
அதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் நேஷன் ஆஃப் இஸ்லாமைச் சேர்ந்தவர்களா, இல்லையா என்பது இன்னும் சர்ச்சையாகத்தான் இருக்கிறது. எலிஜா முகமது அதை மறுத்து விட்டார். முழு விவரங்கள் இன்னும் தெளிவில்லாமலேயே உள்ளன.

ஐந்து நாட்கள் அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. எந்த தேவாலயமும் அவரது உடலை அடக்கம் செய்ய மறுக்க இறுதியில் ஒரு தேவாலயம் கடும் மிரட்டல்களுக்கிடையே முன்வந்தது. அங்கு முஸ்லீம் சடங்குகள் நிறைவேற்றப்பட்ட பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
’நம்ம ஊர்ப்பையன்’ என்றும், ‘சைத்தான்’ என்றும், ‘பெரிய ரெட்’ என்றும் ‘மால்கம் லிட்டில்’ என்றும், ‘மால்கம் எக்ஸ்’ என்றும் ‘எல்.ஹாஜி மாலிக் எல் ஷாபாஸ்’ என்றும் பற்பல பெயர்களால் அழைக்கப்பட்டவரும் முஸ்லீமாக அடக்கம் செய்யப்பட்டவருமான அவரின் உடல் மீது இருள் கவிந்தது.

அவரது முழு வாழ்க்கையையும் அவர் சொல்லச் சொல்ல அமெரிக்க-ஆப்பிரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி பதிவு செய்து எழுதியுள்ளார். அதற்குக் கூட மால்கம் தன் குருவான எலிஜாவிடம் உத்தரவு பெற்றே சம்மதித்துள்ளார். இதை எழுதும் போதே அலெக்ஸ் ஹேலி மால்கமின் நெருங்கிய நண்பராகி விட்டார். ஹேலி எழுதியவற்றை விரைவில் வெளியிட வேண்டுமென்று மால்கம் நினைத்துள்ளார். எப்படியும் இந்தப் புத்தகம் வெளிவரும்போது தான் உயிருடன் இருக்க மாட்டோம் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார் அவர். அவர் நினைத்தது போலவே நடந்து விட்டது. நல்ல வேளையாக அதன் உரிமையை முன்னர் எலிஜாவுக்கு எழுதிக் கொடுத்தவர், பின்னர் இறப்பதற்கு முன் கடைசியாக ஹேலியை சந்தித்த போது தன் மனைவிக்கு மாற்றி விட்டார்.

என்னுடைய முன்னோர்கள் மீது ...

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது என்னால் உணர்வுபூர்வமாக ஒன்றி விட முடிந்தது. அதற்குக் காரணம், அது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் வெளிப்பாடு. அவரது விவரணைகளைப் படிக்கும் போது அமெரிக்க, அம்பேத்காரை நான் படிப்பது போல இருந்தது. அவர் சந்தித்த அவமதிப்புக்கள் எத்தனை எத்தனை. ஆனால் ஒரு வேறுபாடு, நம் அம்பேத்கார் எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை என்பதாகும். வெள்ளையர்களின் இன ஒடுக்கலுக்கு எதிரான கருப்பர்களின் போராட்டத்துடன் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நமது போராட்டங்களைக் கண்ட நாம் ஒன்றி விட முடிவது வியப்பல்ல.

அம்பேத்கார் எப்படித் தானாகவே ஒரு அறிஞராக மாற்றிக் கொண்டாரோ, அதேபோலவே மால்கமும் கடும் முயற்சியால் அறிஞராக ஆகியுள்ளார். அதை விடப் பெரிய வியப்பு, அவர் சாதாரணமாக ஒருவர் தன் முயற்சியால் செய்ய முடியாத வகையில் ஒரு மொழியியல் அறிஞராக உள்ளார். ஹேலி எழுதிய வார்த்தைகளைக் கூட சரி பார்த்து அந்த வார்த்தைகளின் மூலத்தைக் குறிப்பிட்டு சரி செய்துள்ளார் மால்கம்.

கடந்த மாதம்தான் ஆனந்த் டெல்டும்டேவின் ‘முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்’ என்ற நூலைப் படித்தேன். அதில் ஒரு இடத்தில் பிராமணர்கள் அந்தப் போராட்டத்தில் சேர வேண்டுமென்று கேட்க, அதற்குப் பலர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அம்பேத்கார் அதற்கு நம்முடன் நமது நோக்கத்துக்காக யார் சேர வேண்டுமானாலும் சேர அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுகிறார். (பக்கம் 278, 279, மேற்கூறிய புத்தகம்). இந்த உணர்வு மால்கமின் கடைசிக் காலத்தில்தான், ஹஜ்ஜுக்குப் பிறகுதான் அவருக்கு ஏற்பட்டுள்ளது. முன்பு அவர் ஒரு வெள்ளையினப் பெண் தாம் எப்படி அவரது போராட்டத்தில் இணைவது என்று கேட்ட போது அதற்கு அது முடியவே முடியாது என்று பதிலளித்ததைக் குறிப்பிட்டு அதற்காக வருந்தியுள்ளார். இன்னொரு வெள்ளையரிடம், “உங்களைப் போன்றவர்களை முன்பே பார்த்திருந்தால், உங்களைப் பற்றி ஒரு பத்தியையே எழுதியிருப்பேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

”அதே போல் பெண்கள் மீதான அவரது பார்வையும் மாறியுள்ளது. கருப்பின தேசியவாத செயற்திட்டத்துடன் ஓர் ஆப்பிரிக்க ஒற்றுமைவாத-சர்வதேசியக் கண்ணோட்டத்தை அவர் இணைத்தார். அவ்வாறு இணைக்கும் போக்கில் பெண்கள் மீதான மதிப்பீடு, ஆணாதிக்க முறைமை ஆகியவற்றின் மீதான தனது தொடக்கக் கால நிலைபாட்டை பெரிய அளவுக்கு மாற்றிக் கொண்டார். நேஷன் ஆஃப் இஸ்லாமில் அவர் பயன்படுத்தி வந்த பெண்களை இழிவுபடுத்துகின்ற மொழியைக் கைவிட்டதுடன், ஆப்பிரிக்க – அமெரிக்க ஒற்றுமைக்கான அமைப்பில் பெண்கள் தலைமை தாங்குவதை வலியுறுத்தினார். அவ்வமைப்பில் தலைவர்களாக வந்த லின் ஷ்ஃப்லெட் போன்ற பெண்களை முஸ்லீம் மசூதிகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். பாலின சமத்துவம் இயக்கத்துக்குத் தலைமை தாங்குவதில் பாலினம் வகிக்கும் பாத்திரம் ஆகிய பிரச்சனைகளை மையமாக வைத்துத்தான் அவ்விரு அமைப்புக்களுக்கு இடையில் முரண்பாடு வளர்ந்தது” என்று பேராசிரியர் மானிங் மார்பிள் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி மொழி | vetrimozhi

மால்கம் தனது உரையில் தன் வாழ்க்கையை எப்படிக் குறிப்பிடுகிறார்.”மதிப்புக்குரிய கனவான்களே! மிச்சிகனில், மேசன் என்ற இடத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் நான், மசாசூசெட்சில் ராக்ஸ்பெரி என்ற இடத்திலிருந்த கருப்பர்களின் சேரிகள்தான் எனது உயர்நிலைப்பள்ளி. ஹார்லெம் தெருக்கள்தான் என்னுடைய கல்லூரி. நான் பட்ட மேற்படிப்புப் படித்த இடம் சிறைச்சாலை, வெள்ளையர் அல்லாதவர்களுக்கு எதிராக – அதிலும் முக்கியமாக வட அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிராக – வெள்ளையர்கள் இழைத்த குற்றங்களை ஆதரிக்க அல்லது நியாப்படுத்த முயற்சிப்பவர்களின் அறிவாற்றலைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று திரு.முகமது எனக்குக் கற்றுத் தந்துள்ளார்”

மேலும் நம்மை மிகவும் நடுக்கத்துக்குள்ளாக்குவது அவரது வெளிப்படைத்தன்மை. நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை சத்திய சோதனை என்ற பெயரில் எழுதிய போது வெளிப்படையாகத் தனது தவறுகளை எழுதியதைப் போற்றுபவர்கள் நாம். அதிலிருந்து சற்றும் குறையாமல், சேரியில் தனது திரிந்து போன வாழ்க்கையை சற்றும் திரிக்காமல் அப்படியே வெளியிட என்ன ஒரு நேர்மை இருக்க வேண்டும். நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் மால்கம். வணங்குகிறேன்.

அவரைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் மானிங் மார்பிளின் வார்த்தைகளுடன் முடித்துக் கொள்ளலாம். ”இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கக் கருப்பின மக்களின் சமூகத்தில் உருவான வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியமான மனிதர் மால்கம் எக்ஸ் என்று நான் நினைக்கிறேன். இக்கருத்து சற்றே ஏற்றுக் கொள்ள முடியாததாகத் தோன்றலாம். ஆனால் 39 ஆண்டு காலமே வாழ்ந்த மால்கம் எக்ஸ் அமெரிக்காவின் நகர்ப்புறக் கருப்பின மக்கள், அவர்களது பண்பாடு, அரசியல், போர்க்குணம், அமைப்புரீதியான இனவெறிக்கு எதிரான அம்மக்களின் கோபம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கினார் என்று கருதுகிறேன். தனது வாழ்வின் இறுதி நாட்களில் மற்றெந்தவொரு தனிநபரைக் காட்டிலும் சிறந்த அளவுக்கு விடுதலையைப் பற்றிய ஒரு விரிவான சர்வதேசியப் பார்வையைக் கொண்டிருந்தவர் அவர். ஓர் ஆப்பிரிக்க ஒற்றுமைவாத – சர்வதேசிய கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தவர் என்ற முறையில் துபூவா, பால் ரோப்சன் அகியோருடன் சேர்த்து மதிக்கப்பட வேண்டியவர் அவர்.

The Assassination of Malcolm X - Biography

கருப்பின மக்களுக்காக வலிமை வாய்ந்த அமைப்புக்களை உருவாக்குவதில் அவர் காட்டிய ஈடுபாட்டில் மார்க்ஸ் கார்வேவுக்கு நிகரானவர் அவர். அமைதியின் மீதும், இன அடிப்படையில் ஒதுக்கப்படுகின்ற சிறுபான்மையினரின் விடுதலையின் மீதும் அவர் காட்டிய ஈடுபாட்டில் டாக்டர். மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு நிகரானவர் அவர். தெற்காசிய நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளை – குறிப்பாக வியட்னாம் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை – எதிர்த்து 1964-ஆம் ஆண்டிலேயே அமெரிக்க அரசைக் கடுமையாகக் கண்டனம் செய்த முதல் அமெரிக்கர் அவர்தான். உண்மையில் கருப்பின மக்களின் மாபெரும் தலைவர்கள் அனைவரைக் காட்டிலும் அவர் வெகுதூரம் முன்னால் சென்றிருந்தார் . . . “

இந்த மாபெரும் தலைவனின் வாழ்க்கை நிச்சயமாக ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொரு போராளியும் படித்து ஊக்கம் பெற வேண்டிய நூல். இதைத் தமிழில் மொழிபெயர்த்தார் என்று தோழர். வை.கோவிந்தசாமியை எளிதாகக் குறிப்பிட்டு விட முடியாது. நேராக மால்கம் கூற, அலெக்ஸ் ஹேலி ஆங்கிலத்தில் பதிவு செய்தாரா, கோவிந்தசாமி தமிழில் பதிவு செய்தாரா என்ற மாபெரும் ஐயத்தை எழுப்பி விட்டார் கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்ட நான் எனது பணிவான வணக்கங்களை உரித்தாக்குகிறேன் ஐயா.
இந்தப் புத்தகத்தை சிரமம் பார்க்காமல் சிந்தன் புக்ஸ் தோழர் மாதவ் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய முயற்சி. வாழ்த்துக்கள்.

மால்கம் எக்ஸ், 720 பக்கங்கள், விலை: ரூ.650/-. சிந்தன் புக்ஸ்

– கி.ரமேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *