கவிதை மனிதம் கடந்து வரும் பாதை

 

 

மனிதம் கடந்து வரும் பாதை

அவர்களை எனக்கு
நன்றாகத் தெரியும்

பல நூற்றாண்டு காலமாய்..
இறக்காமல் இயங்குபவர்கள்..

நீங்கள் எங்கும்தேடி அலைய
தேவையில்லை அவர்களை.

உங்கள் பக்கத்தில்
நீங்கள் தேடிப் பார்க்கும் தூரத்தில்

உங்களோடும்
உங்களுக்குள்ளும் அவர்கள்
பயணித்து கொண்டே இருக்கிறார்கள்

கிலு கிலுப்பை
அசையொலியின் மகிழ்ச்சியில்
தன்னை மறந்த குழந்தை போல்..
புண்படாத புன்னகையோடு இருக்கும் அவர்களை
அடிக்கடி நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

புறநானூறு
நூற்றி தொண்ணூத்தி இரண்டை
எந்நாளிலும் இசைக்கும்
அந்த கேளிரை – நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இயற்கை சமநிலை
தவறும் போதெல்லாம்
ஆதாயம் தேடாமல் நீளும்
அவர்களின் கரங்களை -நீங்கள்
இறுகப் பற்றியிருப்பீர்கள்

யானும் நீயும் எவ்வழி அறியும்? – என்று
அன்பில் கலந்த அவர்களின்
நெஞ்சத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்

பிறப்பின் சமத்துவத்தை
ஆதாம் ஏவாளில் இருந்து
ஆரம்பியுங்கள் என்ற அவர்களின்
குரல்கள் உங்களுக்கு கேட்டிருக்கும்.

சுய பசிக்கு
முகஞ்சுருங்காமல்
புத்தரைப் போலாகும் அவர்கள்
சக உயிர் பசிக்காய்..
ரெளத்திரம் பழகும்
அவர்கள் உங்களுக்கு நன்றாக தெரியும்.

நீங்கள் எங்கும் தேடிய அலைய வேண்டியதில்லை

உங்களோடும்
உங்களுக்குள்ளும்
அவர்கள் பயணித்து கொண்டே இருக்கிறார்கள்.

உங்கள் மனங்களில்
மறைந்து கிடக்கும்
மனிதம் என்னும் வேர்களை
அசைத்துப் பாருங்கள்.

மனிதம்..
கடந்து வரும் பாதை

உங்களுக்குள்ளும்..
தொடர்ந்து வருவது தெரியும்.

– பிச்சுமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *