தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
நண்பர் “மைனா” சுகுமார் ஒளிப்பதிவிலும் நண்பர் செல்வநம்பி இசையிலும் “எருக்கம் பூ” எனும் குறும்படத்தை பெருங்காமநல்லூர் அருகே அழகுரெட்டியபட்டி எனும் கிராமத்தில் இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த நண்பர் மூவேந்தருக்கு என் உழைப்பு பிடித்துப் போய் ஒரு நாள் அவருக்கு நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் FCS கிரியேஷன்ஸ் துவார் G. சந்திரசேகரன் அவர்களிடம் புரொடக்ஷன் மேனேஜரும் தயாரிப்பாளரின் மைத்துனர் உறவுக்காரருமான மூன் சேதுராமன் அவர்களின் உதவியோடு கதை சொல்ல ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை வடபழனியில் உள்ள பீமாஸ் ஹோட்டலில் வைத்து அவருக்கு கதை சொன்னேன் பிடித்திருந்தது மறுநாளே வேலையைத் தொடங்க ஆணையிட்டார். தெருத் தெருவாக கதையை விற்க கூவிக் கொண்டிருந்த நான் இயக்குநர் ஆனேன். என் பத்தாண்டு முயற்சி வெற்றி பெற்றது. அந்த இரவு அன்றைக்கு மிகவும் புதிதாக இருந்தது. நானும் அப்படித்தான் இருந்தேன். அந்த படத்தின் பெயர் “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை”. நான் இயக்கிய முதல் படம். இந்த முதல் படத்திற்கு மொத்தப் பாடல்களையும் நானே எழுதினேன்.

அதற்கு முன் “எருக்கம் பூ” குறும்படத்திற்காக பட்ட பாட்டையும் எழுதிய பாடலையும் பற்றி சொல்லியே தீரவேண்டும். ஏனெனில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கண்மாய்க் கரையில் காமிராவைத்து, மைனர் ஜெயிலிலிருந்து விடுதலையான நாயகன் பேருந்து நிலையம் வருவதான காட்சியை இயக்க நான் முதன் முதலில் ஆக்சன் கட் சொன்ன தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
Paadal Enbathu Punaipeyar Webseries 5 Written by Lyricist Yegathasi தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிஇந்தக் குறும்படத்தை எடுத்து முடிக்க எட்டு நாட்கள் ஆயின. இப்படம் “மக்கள்” தயாரிப்பில் உருவானது. அன்றைக்கு பொருளாதரத் தோள் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் இப்போதும் ஈரத்தோடு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த குறும்படத்தை எடுக்க நினைத்த நாளிலிருந்து முடித்த நாள் வரைக்கும் என்னோடு இருந்து உழைத்த தம்பி கருமாத்தூர் புலித்தேவன்பட்டி அருளாந்தம் சிறப்பு நன்றிக்குரியவர். ஐம்பது ரூபாயையும் நூறு ரூபாயையும் நன்கொடையாகப் பெறுவதற்கு நாங்கள் பைக்கில் சுற்றிய சுற்றிருக்கே கண்கள் அனல் கக்கின பாடுகள். நடிகர்களுக்கு முக சவரமும் நானே செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சேவலை அறுப்பது போன்ற பாடல் ஷார்ட் ஒன்று இருந்தது. அந்த ஷாட்டை மதியத்திற்குள் முடித்துவிட்டால் அதை சமைத்து சாப்பாட்டிற்கும் வைத்துக் கொள்ளலாமென்று எண்ணி, சாப்பாட்டிற்குள் சேவல் வேண்டும் விரைவில் வந்துவிடு என்று சொல்ல, சேவல் வாங்க பக்கத்து ஊருக்குப் போயிருந்த தம்பி மெய்ராஜன் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், சேவல் சமையலுக்கென்று மட்டுமே நினைத்தவர் வாங்கி வரும் வழியிலேயே சேவலை அறுத்து வாட்டி, மஞ்சள் போட்டுக் கழுவி சமைக்கத் தயார் நிலையில் ஒரு சர்ப்ரைஸ்க்காக கோழியை பின்னால் வைத்துக்கொண்டு வந்து நிக்க.

“சீக்கிரமா கோழியக் குடுப்பா ஷார்ட் எடுக்கணும்” என்று நான் கத்த அவர் ஷாக் ஆனார். பிறகு மஞ்சள் போட்ட கோழியை பார்த்து நான் ஷாக் ஆனேன். ஷார்ட் எடுக்க முடியவில்லை ஆனால் அதை சாப்பிட்டோம். அப்படி அன்றைக்கு எடுக்க முடியாமல் போன ஷார்ட்டின் சூழல் என்னவெனில் தன் மகனைக் கொன்றவனை பழிதீர்க்க கிழவன் தன் பேரனை உருவாக்குகிறான். அப்படிக் கொடுக்கும் கொடூர பயிற்றுவிப்பின் பின்னால் இப்படி ஒலிக்கும்,

ரத்தப் பயம் போக்க
வித்த பல காட்டுறான்
பச்ச மனசுக் குள்ள
பந்தத் தீய மூட்டுறான்

எதிரிக் காரன் தலைய
எல போட்டுத் திங்கச் சொன்னான்
பழி தீர்க்கும் வரைக்கும்
பசியெடுக்கக் கூடா துன்னான்

அதே கதையில் மைனர் ஜெயிலில் ஒரு பாடலுக்கான சூழல் வரும். அந்தப் பாடலை எடுத்த நிகழ்வு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.. உசிலம்பட்டியில் உள்ள பாழடஞ்ச விடுதியை மைனர் ஜெயில் போல் தயார் செய்திருந்தோம். பெரிய திரைப் படம் போன்று மெனக்கிட்டு 50 சிறுவர்களுக்கு சீருடை தைக்கப்பட்டு அணிவித்து காட்சிகளை எடுக்கும்போது அமர்க்களமாக இருந்தது.
Paadal Enbathu Punaipeyar Webseries 5 Written by Lyricist Yegathasi தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிவரிசையில் சென்று சிறுவர்கள் சாப்பாடு வாங்குவதற்கும் உட்கார்ந்து சாப்பிடுவதற்குமான சார்ட்டுகளை எடுக்க உசிலம்பட்டி சப் ஜெயிலிலிருந்து 50 தட்டுகள் வாங்கிவந்திருந்தோம். மதிய உணவுக்குள் அந்த ஷார்ட்டுகளை எடுத்து முடித்து தட்டுகளை கைதிகள் சாப்பிட கொடுத்துவிட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் செட் வொர்க் முடிய தாமதமாகி உரிய நேரத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதால் கைதிகளுக்கு தட்டுகளை இரண்டு மணி நேரம் தள்ளித்தான் தர முடிந்தது. “இப்படி வரங்கொடுத்தவன் தலையிலே கைவச்சுட்டோமேன்னு” தோன்றியது, ஆனால் அந்தக் குறும்படத்தில் கைதிகளுக்காக இப்படியொரு பாடல் எழுதியதில் கொஞ்சம் ஆறுதல்.

பல்லவி:
வழிகள் தொலைத்த வாழ்க்கை
காற்றாய் அலைந்திடுமே
வயதைக் கூட்டும் காலம்
நூலாய் இளைத்திடுமே

திருத்தி எழுதும் ஞானம் இவர்கள்
பெறுவாரோ – இல்லை
கனத்த இருளில் தனித்த உருவாய்
திரிவாரோ

சரணம்:
உயிர்களின் மதிப்பை
அறிந்து போ
ஈரங்கள் வழிய
திரும்பிப் போ

தீயவை கழித்து
நல்லவை எடுத்துப் போ
பொய்யினைக் கொளுத்தி
மெய்யினை உடுத்திப் போ

மண்மேல் விழுந்தால்
முளைத்து மரமாகு
உன்னைநீ கொடுத்து
பிறர்க்கு இரையாகு

மீண்டும் “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” வருகிறேன். இந்தப் படம் இயக்க ஒப்பந்தமானபோது சென்னை வடபழனியில் நாங்கள் மிகச் சிறிய வீடொன்றில் இருந்தோம்.
Paadal Enbathu Punaipeyar Webseries 5 Written by Lyricist Yegathasi தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிவெக்கை தாளாமல் மனைவியும் குழந்தையும் வீட்டிற்குள் தூங்க, நான் கதவைத் திறந்து வைத்து கதவோர வாசலில் படுத்திருப்பேன். வாசல் என்பதுகூட அலங்காரச் சொல் சரியாய் சொல்ல வேண்டுமானால் அது சந்து. சந்தில் அமர்ந்தே நள்ளிரவு வரை படத்திற்கான வசனத்தை எழுதிக் கொண்டிருந்துவிட்டு காலை 7 மணிவரை படுத்திருப்பேன்.

பொது கழிப்பறைக்கு செல்பவர்கள் சிறு சிறு பக்கெட்களில் தண்ணீர் எடுத்து என்னை மிதித்து விடாமல் விலகிச் செல்வார்கள். பிறகு நான் கழிப்பறைக்கு கருவேலமரம் நிறைந்த பீக்காடொன்றுக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு அவர்கள் வைத்திருந்த பெயர் பெரிய மைதானம். அதே போல் குளியலும் சிறப்பாகத்தான் இருக்கும், அந்த சிறிய ஒற்றை அறைக்குள்ளேயே ஒரு ஓரத்தில் குளித்துவிட்டு, குளித்தோடிய அழுக்குத் தண்ணீரை அள்ளி மீண்டும் குடம் சேர்த்து சாக்கடையில் ஊற்றவேண்டும் அப்போதுதான் வீட்டிற்குள் புழங்க முடியும். பின்பு 9 மணிக்கு இயக்குநராக அலுவலகம் செல்வேன். அங்கே என்னிடம் வாய்ப்பு கேட்பதற்காக பத்துப்பேரும் வணக்கம் வைப்பதற்காகப் பத்துப்பேரும் காத்திருப்பார்கள். இது படம் எடுத்தவனின் கதை. படத்தின் கதை வேறு.
Paadal Enbathu Punaipeyar Webseries 5 Written by Lyricist Yegathasi தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகேந்திரனுக்கும் கோமதிக்கும் பூக்கிறது காதல். காதலர்களுக்கு காதல் கடிதங்கள் வீட்டுப் பத்திரத்தைவிட முக்கியமானவை. இரு வீடுகளிலும் கடிதங்களை பத்திரப் படுத்திரப்படுத்துவது கடினமென முடிவு செய்யும் இவர்கள் மாற்றி மாற்றி கொடுத்துக் கொள்ளும் கடிதங்களை பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் உள்ள சோளக்காட்டு பொம்மைக்குள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒளித்து வைக்கிறார்கள் சில மாதங்களில் தொத்தல் பொம்மை தொப்பை பொம்மை ஆகிவிடுகிறது.

“உசுரத் திருடிப் போறா ஒருத்தி
உள்ளுக்குள்ள வெளக்கப் பொருத்தி
எனக்குத்தான் என்ன ஆச்சு
மனசுக்குள்ள நூறாள் பேச்சு
தெசையெல்லாம் ஒண்ணாப்போச்சு – இது
முழிச்சாடும் கண்ணாமூச்சு”

எனத் தொடங்கும் பல்லவியைத் தொடர்ந்து வரும் சரணமொன்றில்,

“ஆடைக்குள்ள கோடையள்ளி
அருகினிலே நீயும் வந்தால்
வெளியூரு போன வெக்கம்
உள்ளூர் வருமே” என அவள் பாடுகிற வரிகளும்,

ஆண்:
முழிக்கின்ற நேரங்கள்
முன்னாலே நீ வேண்டும்
எப்போதும் உனைப் படிக்க

பெண்:
அன்புக்கு வயிறில்லை
ஆனாலும் பசிகொல்லும்
அணுவெல்லாம் கூடித்துடிக்க

என அவனும் அவளும் பாடுகிற வரிகளும் என்னை ஈர்த்தவை. இதே கதையில் நாயகன் ஒரு விபத்தில் மனப்பிறழ்வுற்று தேசாந்தரியாகத் திரிகிறான். முன்னால் காதலி மனக்காயமுற்று விரக்தியடைகிறாள். இவனின் பெற்றோர்களோ தன் செல்ல மகனை தமிழகமெங்கும் தேடி அலைகிறார்கள். வாழ்வும் உயிரும் ஓர் எடையற்ற குப்பையைப் போல் காற்றிலாட, துயரம் பற்றி எரியத் தொடங்கும் மகா கொடூரத்தின் நிழலாக இந்தப் பாடலை எழுத ஆசைப்பட்டேன். பரணியின் இசையும் பரத்வாஜின் குரலும் இருதயத்தைக் கொத்தித் தின்றன.

பல்லவி:
யாரடிச்சு அழுகிறதோ
உன்னுடைய வாழ்க்க – அத
சொல்லிச் சொல்லி அழுதிடத்தான்
இல்லையடா வார்த்த

விரும்பிச் செய்வதில்லஸ
யாரும் பிழைகள
காற்றும் விடுவதில்ல
உதிரும் இலைகள

ராரிரரோ ராரிரரோ – ரரி
ராரி ராரிரரோ

சரணம் – 1
சக்கரை உதிரும் வார்த்தைகள
மௌனம் கொன்றுவிட்டுப் போனதடா
சேமித்து வைத்த கனவுகளும்
குப்பைமின் பொருளாய் ஆனதடா

நாணயத்தின் இரண்டு பக்கம்
பார்த்துக் கொள்ள அட கூடாதோ
காயம் கொண்ட விழிகளுமே
இதயம் கொண்டு அட தேடாதோ

பயணத்தின் போது கண்கள் மூடிக் கிடக்க
காதலென்ன மைல் கல்லோ
ராரி ராரிரரோ – ரரி
ராரி ராரிரரோ

சரணம் – 2
தொலைந்த பொம்மைக்கு விளையாட
குழந்தை ஒன்று கிடைத்திடுமோ
இடைவெளி கொஞ்சம் இருப்பதனால்
இதயம் முகத்தினை மறந்திடுமா

வழிநெடுக தவமிருக்கும்
மரத்தடி போதும் குடியிருக்க
வீடிருக்க தாயிருக்க
வீதியில் திரிந்தால் யார் பொறுக்க

பொய்யான வாழ்க்கை
போதுமென்றோ நீயும்
முகவரி தொலைத்துக் கொண்டாய்
ராரி ராரிரரோ – ரரி
ராரி ராரிரரோ

முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.