Subscribe

Thamizhbooks ad

கட்சிப் படிப்பகத்தில் வளர்ந்த வாசிப்பு..!

வாசிப்பதற்கான மனம் இருந்தால் போதும். புத்தகங்கள் தாமாக அந்த வாசகனைத் தேடி வந்துவிடும் என்பது இன்று வரை எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என் வாசிப்பின் முதல் பதினைந்து ஆண்டுகாலத்தில் நான் ஒரு புத்தகம் கூட காசு போட்டு சொந்தமாக வாங்கியதில்லை. ஆனால் அத்தனை புத்தகங்களும் என்னைத் தேடி வந்து படி படி என்று என் மடியில் ஏறி உட்கார்ந்துவிடும் மாயம் நடந்து கொண்டுதான் இருந்தது

நெருக்கடி நிலை முடிந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த சமயம் என் அரசியல் வாழ்விலும் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை நான் சிவாஜிக்காக காங்கிரஸில் இருந்தேன்.  சசிகுமார் என்ற காங்கிரஸ் கட்சி நடிகர் தீவிபத்தில் இறக்கும் போது தன் மீது காங்கிரஸ் கொடி போர்த்தச் சொன்னதாக தினத்தந்தியில் படித்தபோது, நமக்கு இப்படி ஏதேனும் நடந்தால் காங்கிரஸ் கொடிதான் போர்த்தச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் அண்ணாவின் சட்டக் கல்லூரி நண்பர் சுகுமாரன் என்பவர் ஜனதா கட்சி சார்பாக எங்கள் மத்தியத் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நின்றார். அண்ணா பிளாஸ்டிக், தகரம் என்று நான்கைந்து விதமான ஏர்உழவன் பேட்ஜ்கள், இரண்டு சூஸ்பொரி தந்து என்னை ஜனதா பேரியக்கத்தில் இணையுமாறு அழைத்தபோது மறுக்க முடியவில்லை. நான் ஜனதா கட்சி மீது ரகசியமாக ஒரு நன்மதிப்பு கொண்டிருந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

Image result for மார்க்சிஸ்ட் கட்சிப் படிப்பகம்

அக்காலத்தில் எல்லா கட்சிகளுக்கும் மன்றங்கள், வாசகசாலைகள் உண்டு. திமுக, அதிமுக வாசகசாலைகளில் கூட்டம் பயங்கரமாக இருக்கும். என் போன்ற சுள்ளான்களை உள்ளேயே விடமாட்டார்கள். ஜனதா வாசகசாலை காற்றாடும். சில கிழவர்கள் மட்டுமே இருப்பார்கள். எங்கள் வார்டு செயலாளர் ராமன் என்பவர் – அவர் ஜனதா ராமன் என்றே அழைக்கப்பட்டார் – தன் கைக்காசைப் போட்டு வாசகசாலையை நடத்தி வந்தார். அண்ணா அவரிடம், தம்பி பெரிய படிப்பாளி, எங்க இங்கிலீஷ் சர்குலேட்டிங் லைப்ர்ரிக்கே இவன்தான் லைப்ரேரியன் – எந்த பத்திரிகை என்னக்கி வரும்னு கிளீனா சொல்லுவான் பாத்துக்க, ஒனக்கு வாசகசாலைக்கு நல்லா ஹெல்ப் பண்ணுவான் என்று அறிமுகம் செய்து வைக்க, நான் வாசகசாலை கமிட்டி உறுப்பினரானேன். மற்றொரு உறுப்பினர் ராமன்தான் என்பதை நான் தனியாகச் சொல்லவேண்டாம்.

அனுமார் கோவில் அருகில் உள்ள வீரணன் கடையில் தம்பி கேக்கற பத்திரிகைய குடுத்து விடு, பில்ல நா மாசாமாசம் தந்துர்றேன் என்று ராமன் சொல்ல, ஜனதா வாசகசாலை புத்துயிர் பெற்றது. விகடன், குமுதம் மட்டுமின்றி குங்குமம், ராணி, சாவி, அலிபாபா, மஞ்சரி, கலைமகள், இதயம் பேசுகிறது,  மாதநாவல்களாக மாலைமதி, மோனா, மணியன் மாதஇதழ், கல்பனா போன்ற பல இதழ்கள் வாங்கிப் போட்டோம். பல புதிய இதழ்களின் முதல் இதழ்களையும் வாசகசாலைக்காக வாங்கிப் போடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.   பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் வாசகசாலையில்தான் குடியிருப்பு. எத்தனை எத்தனை கதைகள்.. எத்தனை எத்தனை எழுத்தாளர்கள்… ஜெயகாந்தன், பிவிஆர், சிவசங்கரி, இந்துமதி, லட்சுமி, மணியன், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, ஜோதிர்லதா கிரிஜா, தாமரைமணாளன், ஜே.எம்.சாலி, …. சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது புத்தகக் கண்காட்சிகளில் அன்று வாசகசாலைக்காக எண்பது பைசாக்கு வாங்கிப் போட்ட புத்தகங்கள்  120, 150 ரூபாய்க்கு விற்கப்படுவதைப் பார்க்கும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது.

Image result for குமுதம்

இந்த நேரத்தில்தான் குமுதத்தில் கண்ணதாசனின் விளக்கு மட்டுமா சிவப்பு? கதைக்கான விளம்பரம் வந்தது. ஜெயராஜ் படுகவர்ச்சியாகப் படம் போட்டு விளம்பரத்திற்கு பரபரப்பு ஊட்டியிருந்தார். எங்கள் தந்தையார் கண்ணதாசன் வெறியர். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா மாதிரியான அப்போதைய லேட்டஸ்ட் பாட்டிலிருந்து எந்தக் காலத்திலோ எழுதப்பட்ட அத்திக்காய் காய் காய் வரை எல்லா பாடல்களும் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். பேச்சிற்கு நடுவே, மிகப் பொருத்தமாக கண்ணதாசன் சொல்லிட்டானே…..  ….. என்று ஏதேனும் ஒரு பாட்டை அவிழ்த்துவிடுவார். அப்பாவிற்கு விகடனுக்கு பதிலாக குமுதம் வாங்க வேண்டும் என்று ஆசை. புரியறதோ, புரியல்லயோ எல்லாத்தையும் படி என்று சொல்லி உற்சாகப்படுத்தியதன் விளைவு சற்று விபரீதமாகப் போகிறதோ என்று அம்மாவிற்கு என்னைக் குறித்து சற்று பயம். இது எந்த புஸ்தகம்னாலும் அட்டை டு அட்டை படிக்கறதே… ஜெ படத்தப் பாத்தாலே ரொம்ப அசிங்கமா இருக்கு… என்று தயங்கினாள். அப்பா அவன இத மட்டும் படிக்க வேண்டாம்னா படிக்காம இருந்துடுவான் என்றார்…சரி படிக்கல்ல என்றேன். எங்கள் பரம்பரையின் மூதாதையர்களான பல்வேறு சுப்பாராவ்கள் இப்படித்தான் வாக்குக் கொடுத்தால் அதைக் காப்பாற்றுபவர்களாக இருந்தார்கள் என்று அப்பா ஏதோ சில கதைகளை அவிழ்த்து விட்டார். அம்மா நீங்க என்னமோ பழைய கதயா சொல்லுங்கோ… அவன் நம்ப முன்னாடி படிக்காம, ஜனதா வாசகசாலைல போய் படிக்கப்போறான், என்றாள் கொஞ்சம் கடுப்பாகவும், கொஞ்சம் பெருமையாகவும். இப்படியாக குமுதமும், கண்ணதாசனும் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

Image result for விளக்கு மட்டுமா சிவப்பு?

கண்ணதாசன் மட்டுமா? சாண்டில்யனும் சேர்ந்தல்லவா? அதற்கு முன் பக்கத்து வீட்டு சரவணன் அண்ணனின் உபயத்தில் சாண்டில்யனின் ஜீவபூமி படித்திருக்கிறேன். ராணிமுத்து இதழ்களில் மலைவாசல், மஞ்சள் ஆறு மாதிரி சில படித்ததுண்டு. ராணிமுத்துவில் கதையைச் சுருக்கிப் போடுவார்கள் என்று ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்து கொண்டேன். அதிலிருந்து அதைப் படிப்பதில்லை. குமுதத்தில் சாண்டில்யனின் ராஜபேரிகை தொடர் கதை. வரலாற்றில் படித்த ராபர்ட் கிளைவ், டூப்ளே, முகமது அலி, சந்தா சாகிப், என்று எல்லோரும் வரும் கதை.  சமீபத்தில் வேறொரு ஆய்விற்காக அதைப் படித்தபோது நாயக்கர் ஆட்சி, தஞ்சை மராட்டியர் ஆட்சி பற்றியெல்லாம் சாண்டில்யன் தூள் கிளப்பியிருப்பது தெரிந்தது. நடுநடுவே சமஸ்கிருத ஸ்லோகங்கள் வேறு!

Image result for ராஜ பேரிகை

மற்றொரு அரசியல் மாற்றம் என்னையறியாமலேயே நடந்தது. இந்த நேரத்தில்தான் எனக்கு அண்ணாவின் நண்பரான டெய்லர் மணியின் நட்பு கிடைத்தது. டெய்லர் மணி ஒரு கம்யூனிஸ்ட். எனக்கு அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மீது பெரிய ஈடுபாடு கிடையாது என்றாலும், மணவாளன் இசைக்குழு நிகழ்ச்சிக்காக ஏரியாவில் நடக்கும் அவர்களது எல்லா கூட்டங்களுக்கும் போய்விடுவேன். வலது கம்யூனிஸ்டில் குமார் இன்னிசைக்குழு என்று ஒன்று இருக்கும். இரண்டு குழுவிலும் ஹார்மோனியம் அப்படியே பேசும். தாலாட்டு.. பிள்ளை என்னை தாலாட்டு மெட்டில் ஏ…கே…ஜி… எங்கள் உள்ளம் ஏ…கே…ஜி.. என்று பாடுவதும், உச்சி வகுந்தெடுத்து…. மெட்டில் குத்தி கொலையும் செய்தார் சித்தமல்லி கிராமத்துலே..என்று எம்.பி.  எஸ்.ஜி.முருகையன் கொலை செய்யப்பட்டது பற்றி அவர்கள் பாடுவதும் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  நான் அப்போதுதான் பக்கத்து வீட்டு வஸந்தா ஆச்சியின் ஹார்மோனியத்தை வீட்டிற்குத் தூக்கி வந்திருந்தேன். ஆச்சி கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்  பாட்டை வாசித்துக் காட்டி என்னை மதிமயக்கி, ஹார்மோனியத்தைத் தந்திருந்தார்கள். அருமையான ஜெர்மன் டபிள்ரீடு ஹார்மோனியம். அக்காவின் பாட்டு நோட்டை வைத்துக் கொண்டு, நானாக ஸ்ரீகணநாதா, குந்தகௌர, ராரவேணு கோபாலா என்று வாசித்து வந்ததால் இசைக்குழுவை வைத்து கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்குச் செல்வேன்.

Image result for மார்க்சிஸ்ட் கட்சி படிப்பகம்

மணி நன்றாகப் பாடுவார். பெல்ஸ் டெய்லர்ஸ் என்று சின்னதாகக் கடை வைத்திருந்தார். சின்னது என்றால் ரொம்பச் சின்னது. தையல் மிஷின், சின்னதாய் ஒரு மேஜை போக ஒருவர் நிற்க கொஞ்சம் இடம். அவ்வளவுதான். தமுஎச தலைவர் போராசிரியர் தோழர். அருணன் வீட்டிற்கு அடுத்த வீட்டுத் திண்ணையில். (இப்போது வசந்தம் பதிப்பகம் இருக்கும் இடத்திற்கு அடுத்த வீடு – அப்போது எனக்கு இதெல்லாம் தெரியாது !) டெய்லர் மணி எனக்கு நா.பா வை அறிமுகம் செய்தார். குறிஞ்சிமலர், சத்தியவெள்ளம் எல்லாம் படித்தேன். மு.வ படித்தேன். அவரிடமிருந்துதான் யவனராணியும், கடல்புறாவும் கிடைத்தன. திருக்குறள்கள் பலவற்றிற்கு விளக்கம் சொல்வார். உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயேன்னு கண்ணதாசன் எழுதினது திருக்குறளப் பாத்து காப்பிதான் தெரியுமா?.. யான் நோக்கும்கால் நிலம் நோக்கும்ன்னா என்ன அர்த்தமாம்? என்பார். கண்ணதாச வெறியரான அப்பாவிடம் சொன்னபோது, great people think alike.. கண்ணதாசனுக்கு காப்பி அடிச்சுதான் எழுதணும்னு இல்ல..என்று ஒரே வரியில் முடித்துவிட்டார்.

Image result for பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

பட்டுக்கோட்டையை அறிமுகம் செய்து வைத்தார். என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே.. பாட்டை அருமையாகப் பாடுவார்.  பட்டுக்கோட்டை பாடல்களைத் தந்து என்னைப் படிக்கச் சொன்னார். புதிது புதிதாய் ஏதேனும் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒருநாள் என்னிடம் நான் தையல் தொழிலாளி, உங்க அப்பா ஆடிட்டர் தொழிலாளி. , உங்க அண்ணன் பி.எல்.முடிச்சு வக்கீல் ஆயிருவான். அவன் வக்கீல் தொழிலாளிதான்.. பட்டுக்கோட்டை சொல்றாரு

வீரத்தலைவன் நெப்போலியன் ஒரு வீடு கட்டும் தொழிலாளி

ரஷ்யாதேசத் தலைவன் மார்ஷல் ஸ்டாலின் செருப்பு தைக்கும் தொழிலாளி

விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு கார் ஓட்டும் தொழிலாளி

விண்வெளிக் கதிர் விபரம் கண்ட சர்.சி.வி.ராமனும் தொழிலாளி

என்று பாடிக் காண்பித்தார். அன்று சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டேன். பதினைந்து இருபது வருடம் கழித்து அவர் சொன்னதன் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

அதற்குள் அவர் துபாய் போய்விட்டார். சமீபத்தில் எங்கள் தெரு அண்ணன் ஒருவரிடம் விசாரித்தபோது மணி அண்ணன் துபாயிலிருந்து திரும்பி வந்து முனிச்சாலையில் டெய்லர் கடை வைத்து வசதியாக இருப்பதாகச் சொன்னார். அவரிடம் மணி அண்ணனின் நம்பர் இல்லை. வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

மணி அண்ணனை நேரில் சந்தித்து நீங்கள் எப்போதோ போட்ட விதை இப்போது மரமாக வளர்ந்து விட்டது அண்ணே என்று சொல்லவேண்டும். தையல்தொழிலாளியும், இன்சூரன்ஸ் தொழிலாளியுமாக உட்கார்ந்து டீ சாப்பிட்டபடியே பட்டுக்கோட்டை பாடல்கள் பற்றிப் பேசவேண்டும்.

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here