ஐ. நா. வின் மனித வள மேம்பாட்டு அளவையின்படி கல்வியில் கியூபா உலக நாடுகளின் முன்னணி வரிசையில், பின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் அணிவகுத்து நிற்கிறது. அதன் மதிப்பெண் 1 க்கு 0.993 ஆகும். வயதுவந்தோர் எழுத்தறிவில் உலகில் இரண்டாம் இடம்; மக்கள் தொகைக்கு ஏற்ற டாக்டர்கள் அதிகமாகக் கொண்டதில் ( 150 பேருக்கு ஒரு டாக்டர்), உலகில் இரண்டாம் இடம். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் – தொடக்க, உயர் நிலைப்பள்ளி, கல்லூரி – ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 121சதவீதம்.
கல்வி முதலீட்டில் முதலிடம்
உலக வங்கியின் கணிப்பில் கல்விக்கு செய்யும் முதலீட்டில் உலக நாடுகள் அனைத்திலும் கியூபா முதலிடம் – தேச வருமானத்தில் (GDP) 13சதவீதம், டென்மார்க் 8.7சதவீதம், அமெரிக்கா 5.4சதவீதம், இந்தியா 3.75சதவீதம். ஒரு சமுதாயத்தின் மாண்பினைப் புள்ளி விவரங்களில் மட்டும் கணித்து விட முடியாது. ஆயினும் புள்ளி விவரங்களும் மறுக்க முடியாத சாதனை இது. கியூபாவின் மாபெரும் வெற்றி கல்வியில்; இந்தியாவின் இமாலயத் தோல்வி கல்வியில். கியூபா கடைப்பிடித்தக் கொள்கைக்கு எதிர்மறைக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்தது; எதிர்மறைப் பாதையில் பயணித்தது.
ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சிப் படையும்
கியூபாவின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று?
1959 இல் ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சிப் படையும், அதற்கு முன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டாவை விரட்டி அடித்து, புதிய யுகத்தைத் தொடங்கிய போது, கியூபா ஏழ்மையில் ஆழ்ந்துகிடந்த பின்தங்கிய நாடு. அன்று முதல் இன்றுவரை உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவின் இடைவிடா, கொடூரத் தாக்குதலையும், கடுமையான பொருளாதார முற்றுகையையும் தினந்தோறும் சந்தித்து வரும் நாடு.
அறிவொளி இயக்கம்
புரட்சி அரசின் முதல் முன்னுரிமை கல்விக்கு அளிக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே (1959) கல்விப் பிரகடனம் செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கியெடுத்த அறிவொளி இயக்கம் (Literacy Campaign) 1961 இல் தொடங்கியது. மக்கள் தொகையில் கால் பங்கு எழுத்தறிவற்றவர்; இன்னொரு கால் பங்கு கையெழுத்து மட்டும் போடத் தெரிந்தவர். காஸ்ட்ரோவின் அறைகூவல் நாடெங்கும் ஒலித்தது. ஒரே ஆண்டில் அனைத்து மக்களும் எழுத்தறிவு பெற வேண்டும். தன்னார்வத் தொண்டர் படை எழுந்தது. 2,50,000 தொண்டர்கள் 700,000 பேருக்குக் கற்பித்தனர்.
தொண்டர்களில் 1,00,000 பேர் 18 வயதினர்; பாதி பெண்கள். நாட்டின் மலைகளிலும், காடுகளிலும் மக்களை நாடி, கையில் ஒரு லாந்தர் விளக்கும், பாடப் புத்தகமும், கண்களில் ஒளிவீசும் லட்சியமும், நெஞ்சில் பொங்கிவரும் அர்ப்பணமும் ஏந்தி, தொண்டர் படை பரந்து சென்றது. நாடெங்கும் ஒலித்த கோஷம், ‘ஆம்; என்னால் முடியும்.’.’ ‘Yes; I can.’’ கற்பவர், கற்பித்தவர் இருவருக்கும் பொருந்திய முழக்கம். ‘உனக்குத் தெரிந்தால் கற்பி; தெரியாவிட்டால் கற்றுக் கொள்.’ ‘அதிகம் கற்றவர்கள் குறைவாகக் கற்றவர்களுக்குக் கற்பிக்கட்டும்’ என்பது அன்றைய முழக்கங்கள். அனைவரின் வெற்றி. புரட்சியின் வெற்றி.
காஸ்ட்ரோ சகோதரர்கள்
ஓரிரு ஆண்டுகளில் அனைத்து மக்களும் அடிப்படைக் கல்வி கற்ற பின், அடுத்த இயக்கம் தொடங்கிற்று. ‘6 ஆம் வகுப்பிற்கான போர்.’ (” The Battle for the Sixth Grade”) அனைவரும் கட்டாயம் ஆறாண்டு கல்வி பெரும் இயக்கம். அடுத்து ஏராளமான கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிறுவப்பட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டமும் மக்கள் அனைவரையும் இணைத்த இயக்கமாயிற்று; அனைவரின் பொறுப்பு, அனைவரின் வெற்றி, புரட்சியின் வெற்றி.
கல்வி முழுவதும் இலவசமாக, அரசின் பொறுப்பில், அனைவருக்கும் சம தரமுடையதாக அளிக்கப்பட்டது. புரட்சிக்கு முன்பிருந்த, வசதிபடைத்தவர் கற்ற பள்ளிகள் உடனே மூடப்பட்டன. அனைத்தும், புத்தகம், சீருடை, சத்துணவு, போக்குவரத்து, விடுதிகள் அனைத்தும் இலவசம்; பல்கலைக் கழக, தொழில்நுட்ப, மருத்துவ, ஆராய்ச்சி, அனைத்துக் கல்வியும் இலவசம். கல்விக்குப் புதிய இலக்கணம்; மாற்றுக் கல்வியின் பிதாமகன் பெளலோ ஃபிரெய்ரேயின் (Paulo Freiere) சித்தாந்தம் பாதை வகுத்தது. ‘To read the Word through the World’, ‘உலகின் வழியே சொல்லைக் கற்போம்’.
கற்பது வெறும் சொல்லல்ல; உலகை, வாழ்வை, சமூக சுழற்சியை, மனித உறவுகளை, அரசியலின் அர்த்தத்தை, உணரும் சொல். புத்தம் புதிய உத்வேக முழக்கம். கல்வி ஒருவழி பயணமல்ல; அதிகாரப் பீடத்திலிருந்து அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் மக்களுக்கு ஓதும் மந்திரமல்ல. மக்களின் வாழ்வும் உழைப்பும் உட்பொருளாகும் கல்வி. புதிய சமுதாயத்தின் புரட்சி அரசியலில் பாய்ந்து எழுந்த கல்வி. அதே காலத்தில் வெகு தூரத்தில் மாவோவின் ‘மக்களிடம் போய் கற்போம்’ என்ற குரல் சீனாவில் ஒலித்தது.
அன்றைய இயக்கத்தில் மாணவராகப் பங்கேற்றிருந்தவர்கள் அரை நூற்றாண்டுக்குப் பின் மெய் சிலிர்க்கும் அந்த அனுபவங்களை இன்று நினைவு கூர்கின்றனர். நகருக்கும், கிராமத்திற்குமான இடைவெளியைத் தகர்த்த இயக்கம் அது. நகர்புறக் கல்வி கற்போரின் பூர்ஷுவா அகங்காரத்தை உடைத்த இயக்கம். புரட்சிகர ஒருமைப்பாட்டிற்கு அடிகோலிய ஆரம்ப நாட்கள் அவை. சோசலிச சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தும் லட்சியப் பணியில், அதற்கு அடித்தளம் அமைக்கும் கல்வி உருவாகிற்று.
ஃபிடல் காஸ்ட்ரோவுடன் சே
இருபெரும் வெற்றி
அதே 1961 ஆம் ஆண்டு தேச எல்லையில் மற்றொரு படையெடுப்பு. பிக்ஸ் வளைகுடாவில், புதிய அரசை ஒழித்துக் கட்ட, அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவின் வல்லரசுத் தாக்குதல். கியூபாவினால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட தாக்குதல். இரு பெரும் வெற்றிகளைப் பெற்ற ஆண்டு, எழுத்தறிவின்மைக்கு எதிராகவும், வல்லரசுக்கு எதிராகவும் வாகை சூடிய பெருமிதம். முதலாளித்துவ நெறிமுறைகளை காஸ்ட்ரோ கடுமையாக சாடினார். ‘முதலாளித்துவம் எத்தகைய அற நெறியும், மானுடப் பண்புகளும் அற்றது. அதில் அனைத்தும் விலைபேசப்படும் கடைச்சரக்கு. அத்தகையச் சூழலில் மக்களுக்குக் கல்வி அளிக்கவே முடியாது. மக்கள் சுயநலமிகளாக ஆகிவிடுகின்றனர். சில சமயங்களில் கொள்ளையர்களாகவும் மாறிவிடுகின்றனர்.’
இன்று இந்தியாவில், கறுப்புப் பணம் அதிகமாகப் பதுக்கி வைத்திருப்பது ரியல் எஸ்டேட்டுக்கு அடுத்தபடியாக சுயநிதிக் கல்லூரிகளில்தான் என்கிற கேவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் இது உண்மையில்லை என்று மறுத்துவிட முடியுமா? சோசலிசக் கல்வி ஒன்றே வழி என்று காஸ்ட்ரோ நடைமுறைப்படுத்தினார்.
புதிய மனிதன்
ஃபிடல் காஸ்ட்ரோவுடன் சே
அடுத்த ஆண்டுகளில் கல்வி பிரம்மாண்ட பெருக்கத்தைக் கண்டபோது, காஸ்ட்ரோவின் தலைமையுடன், சே குவேராவின் லட்சியங்களும் இணைந்தன. சே குவேர சோசலிச ‘புதிய மனிதன்’ என்ற ஆதர்சத்தை தேசத்தின் முன் வைத்தார். ‘கம்யூனிசத்தைக் கட்டுவதற்கு, பொருளாதார அடித்தளத்துடன் இணைந்தே, ஒரு புதிய மனிதன் சிருஷ்டிக்கப்பட வேண்டும்.’ அதனை அடைய ‘சமுதாயம் முழுவதும் பிரம்மாண்ட பள்ளியாக வேண்டும்’ என்றார் சே. இந்த தேசியக் கனவை ஒட்டி, கியூபாவின் கல்வி, ஒற்றுமை, மனித நேயம், ஒழுக்கம், தியாகம், தன்னலமற்ற மாண்பின் உந்துதல் ஆகிய பண்புகளைத் தன் ஆன்ம லட்சியமாகக் கொண்டது. தேசத்தின் புரட்சியையும், சர்வதேச ஒற்றுமையையும் காக்க வேண்டுமென்ற அறைகூவல் கல்வி நிலையங்களிலிருந்து கிளம்பிற்று.
கல்வியும் உழைப்பும் இரண்டறக் கலந்தது
கல்வி, தொழிலுடன், உழைப்புடன் இணைந்தது என்பது கியூபக் கல்வியின் ஆதார அம்சம். அனைத்து மட்டங்களிலும், பல்கலைக்கழகம் வரை, கல்வியுடன் உழைப்பு இரண்டறக் கலந்தது. ஆசிரியரும், மாணவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர்; விவசாய வழி கற்றனர். காந்தியக் கல்வித் தத்துவமும் இதுதான். உழைப்பு உலகமும், அறிவு உலகமும் சங்கமிக்கும் கல்வி. மூவகைப்பட்ட திறமைகளை, சிந்தனைத் திறன் (cognitive skills), உணர்வு செழுமை (emotional development), கைவினைத்திறன் (psycho-motor skills) அனைத்தையும் அளிக்கும் வளர்ச்சிக் கல்வி. கல்லூரியில் பட்டம் பெற்ற பின் பல ஆண்டுகள் சமுதாயப் பணியில் ஈடுபடல் வேண்டும் என்று 1973 இல் சட்டம் இயற்றப்பட்டது.
மிகக் குறுகிய காலத்தில் கல்விப் புரட்சியை சாதித்துக் காட்டிய கியூபா, தான் பெற்ற இன்பத்தை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ள விளைந்தது. கியூபாவின் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவிச் சென்று கல்வி தீபம் ஏற்றினர். கியூபா வெற்றிகரமாக செய்துகாட்டிய ‘ஆம்; என்னால் முடியும்’ என்ற கல்வி முறை விரைவில் பல லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது வெனிசுலா, பொலிவியா, நிகராகுவா, ஹைதி, ஈக்வடார் போன்ற நாடுகளில் கல்வி வெள்ளம் பெருகிற்று.
இலவச மருத்துவக் கல்வி சேவை
கியூபாவின் மருத்துவக் கல்வி அதன் கொடிய எதிரிகளும் பாராட்டுவது. தலை சிறந்த தரம் கொண்ட மருத்துவக் கல்லூரிகள் நாடெங்கும் நிறுவப்பட்டு, இலவசக் கல்வி அளித்தன. இவர்கள் மூலம்தான் இன்று கியூபாவின் புகழ்பெற்ற மருத்துவ சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாட்டினருக்கும் அதே இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கியூபாவின் மருத்துவர் படை
அத்துடன், மற்ற நாட்டவருக்கும் மருத்துவக் கல்வி அளிப்பதற்கு லத்தீன் அமெரிக்க மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டு, உலகின் பல நாடுகளின் ஆயிரக்கணக்கான மாணவருக்கும், அமெரிக்கர் உட்பட, இலவசமாக தனது புகழ் பெற்ற மருத்துவக் கல்வியை அளிக்கிறது. இந்தக் கல்லூரிகளில் படித்த டாக்டர்கள் பல நாடுகளில் மருத்துவ சேவை செய்கின்றனர். உலகில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும், கொடிய நோய்கள் தாக்கினாலும், போரின் பேரழிவு ஏற்பட்டாலும், கியூபாவின் மருத்துவர் படை உடன் விரைந்து இலவச சேவை செய்கிறது. பாகிஸ்தானின் பூகம்பம், ஹைதியின் பெரும் புயல் தாக்கம், அங்கோலாவில் போரின் பேரழிவு, எங்கும் விரைந்தனர் கியூபாவின் மருத்துவர்கள்.
கியூபாவின் ஆசிரியர்களும், மருத்துவர்களும் எல்லைகள் தகர்த்துத் தங்கள் சேவையைப் பல நாடுகளில் செய்வது மற்றவர்களுக்குப் பெரும் வியப்பளிக்கிறது. காஸ்ட்ரோ சொல்கிறார், ‘அமெரிக்கர்களுக்குப் புரிவதில்லை. எங்கள் தேசம் கியூபா மட்டுமல்ல; மனித சமுதாயம் முழுவதுமே எங்கள் தேசம்தான்.’ சோசலிச சர்வதேசியம் (Socialist Internationalism) என்பது இதுதானோ?
கட்டுரையாளர்:
வே.வசந்தி தேவி
பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்