எரியும் வீட்டில் பிடுங்கியது மிஞ்சம் என்ற பழமொழி உண்டு. அதுபோல் தான் மத்திய அரசு, இந்தியா-வில் எரிந்து கொண்டிருக்கும் கோவிட் 19 வைரஸ் காரணமான கொள்ளை நோயை, தடுப்பதற்கு செயல்படுவது போல் ஒரு பாவனையை செய்து கொண்டே, தொழிலாளர்களை மேலும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தினக்கூலித் தொழிலாளிக்கு, 36 நாள்கள் வீட்டில் இருப்பது, வேலையற்று இருப்பது, வருமானத்தை முடக்கிய அரசிடம் இருந்து, ஓராயிரம் ரூபாய், கொஞ்சம் அரிசி, பருப்பு ஆகியவற்றை, வரிசையில் நின்று பெறுவது போன்றவை, மிகப்பெரிய மன உலைச்சல் தரும் துயரம் ஆகும். இந்த துயரத்தை, 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் அனுபவித்து வருகின்றனர்.

தொழிலாளர்களில் யாருக்கு சட்டம்?

மீன் பிடிக்க இயலாத கையறு நிலை, கட்டுமானத்திற்கு, தையல் தொழில செய்ய, சலவை செய்ய, சலவை செய்த துணிகளுக்கு இஸ்த்திரி செய்ய, வீட்டு வேலை செய்ய, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகணங்களை ஓட்ட இயலாமை காரணமாக, பெரும் துயரம் மற்றும் மன உலைச்சலை அனுபவித்து வருகின்றனர். பாரம்பரியத் தொழில்களான, விவசாயம், தறி நெசவு போன்றவை முடங்கி போயுள்ளன. இந்த தொழில் செய்யும் மக்கள், பெரும் வருமானம் கொண்டவர்களோ, வங்கி இருப்பு கொண்டவர்களோ அல்லது, நகைகள் இருக்கிறது பின்னர் அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளவர்களோ அல்ல. மாறாக ஏற்கனவே இருக்கும் கடனுக்கு வட்டி செலுத்திக் கொண்டும், அரை வயிறுமாக வாழ்க்கை நடத்தும் மனிதர்கள். இவர்களுக்கு சட்ட வழி காட்டுதல்களோ, விதிமுறைகளோ இல்லை. 18 வயதில் வேலைக்கு சேரமுடியும், 58 அல்லது 60 வயதில் ஓய்வு போன்ற எந்த ஒழுங்கும் இல்லை. முதுகெழும்பு நிமிர்ந்து நிற்கும் வரை கடினமான வேலை, கூன் விழுந்தாலும், ஏதாவது ஒரு வேலை என்று தான் ஓடிக் கொண்டிருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து சுமார் 8 கோடிப்பேர் ஆலை மற்றும் சேவைத் துறைகளில், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உள்பட்டு வேலை செய்து வருகின்றனர். வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த என்ணிக்கை, விகிதாச்சார அடிப்படையில் அதிகம்.  சங்கம் வைக்கும் உரிமை அல்லது ஒன்று கூடும் உரிமை, ஊதியம் உள்ளிட்ட தனது தேவைகளை நிறுவனம் அல்லது முதலாளிகளுடன் பேரம் பேசி பெறுகிற, கூட்டு பேர உரிமை போன்றவை இன்றைக்கும் கூட, இந்தியாவில் இல்லை. இத்தகைய அடிப்படை ஜனநாயக உரிமைகளில் நாம் பின் தங்கி தான் இருக்கிறோம்.

                                                               photo courtesy Spor Haberleri

இந்தியா விடுதலை பெற்றபோது, படிப்படியாக பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் இந்தியத் தொழிலாளி வர்க்கம் மற்றும் இடதுசாரிகளின் போராட்டம் காரணமாக, மத்திய அரசினால் எடுத்துவரப் பட்டது. பிரிட்டிஷாரின் காலனியாதிக்க காலத்தில், இந்தியாவில், தொழிலாளர்கள் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டனர். சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அன்று தீவிரம் பெறத் துவங்கியது. 1901 முதல் 1929 வரை சென்னை, செங்கல்ப்பட்டு பகுதியில் நடைபெற்ற ஆலை விபத்துகள் குறித்து, சென்னைப் பெரு நகர தொழிற்சங்க வரலாறு எனும் புத்தகத்தில், பேரா. தே. வீரராகவன் குறிப்பிட்டது முக்கியமானது. மேற்படி கால கட்டத்தில் “சென்னை பெருநகர மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த ஆலைகளில் நடைபெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது ஒவ்வொரு 10000 தொழிலாளர்களில் 159 பேர் அன்று ஆலைக்குள் நடந்த விபத்துகளில் மரணத்தை தழுவியுள்ளனர். இவையன்றி பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகள் குறித்து புள்ளி விவரங்கள் இல்லை”, எனக் கூறியுள்ளார்.

விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்த, பிரிட்டிஷ் அதிகாரிகள் தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தினர். ஆம்ஸ்ட் ராங், என்ற சென்னை துறைமுக மேலாளர், மிகக் கடினமான சரக்குகளை சென்னை கூலிகள் சாதாரணமாக கையாளுவதாகவும், ஓடும் ரயில் பெட்டிகளில் சரக்குகளை ஏற்றி இறக்குவது கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறி இருக்கிறார். அதாவது தனக்கு தேவை என்றால், இந்தியத் தொழிலாளியை இப்படியெல்லாம் வேலை வாங்க முடியும், அதுவே சட்டத்திற்கு முன் கேள்வியாகிவிட்டால், தொழிலாளி மீதே பழி சுமத்துவது, எல்லா காலத்திலும் இருந்துள்ளது. இத்தகைய பின்னணியில் தான் வேலை ஆள் இழப்பீட்டு சட்டம் 1923 ல் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒன்று கூடுவது போராடுவது நீடிக்கவே 1926 ல் தொழிற்சங்க சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பளம் தராமல் இருப்பது, ஆலைகளில் 1850 களில் பயிற்சியாளர் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை உருவாக்கி, ஊதியமில்லாத ஊழியத்தை, கிழக்கு இந்திய கம்பெனியின், பின்னர் பிரிட்டிஷ் அரசு, வெள்ளைக் கார முதலாளிகளும் செய்து வந்துள்ளனர். திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் பீடி சுற்றி வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி தொழிலாளர்களும், சென்னை மட்டுமல்லாமல், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னெழுந்த போது, சம்பளப்பட்டு வாடா சட்டம் 1936 ல் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கை, போராட்டம், உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு ஆகியவை காரணமாக, வாரவிடுப்பு சட்டம் 1942 ஆகியவை பிரிட்டிஷார் காலத்தில் உருவானது.

                                                                         photo courtesy news 18 tamil

ஆனால் விடுதலை இந்தியாவில் 36 சட்டங்கள் மட்டுமே உருவாகியுள்ளன. பிரிட்டிஷார் காலத்தில் 22 ஆண்டுகளில் 4 சட்டங்களை இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்றுக் கொள்ள முடிந்தது. விடுதலை இந்தியாவின் வயது 73 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ஆலைகள் மற்றும் வேலை நேரம், குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை திருத்தி அமைப்பது போன்ற தொழிலாளர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் போதாது. உருவாக்கப்பட்ட 36 சட்டங்களின் தோற்றமும் கூட, இடதுசாரிகள் தொடர்ந்து நடத்திய போராட்டம் மற்றும் நிர்பந்தம் ஒரு காரணம் என்றாலும், சர்வதேச சமூகத்தின் நிர்பந்தமும் மற்றொரு காரணம். 1990 களுக்கு பின் சோசலிச நாடுகளின் அரசியல் தோல்வி காரணமாக, சர்வதேச சமூகமும், உழைப்பு சுரண்டலுக்கான புதிய வடிவங்களை கண்டறிந்து அமலாக்க துவங்கிய நிலையில் இந்தியாவில் எந்த ஒரு புதிய சட்டமும் உருவாக்கப்பட வில்லை. இடதுசாரிகள் ஆதரவில் 1996 ல் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி, கட்டுமானத் தொழிலாளர் செஸ் சட்டம் 1996 ஐ உருவாக்கியது. அதேபோல் இடதுசாரிகள் ஆதரவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு சட்டம் 2008 ல் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சர்வ தேச மூலதனக் குவிப்பு நடந்து வரும் நிலையில், சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் உள்ளிட்ட பல முதலீட்டாளர் ஆதரவு சட்டங்கள் உருவானதே தவிர, ஆலை தொழிலாளர்களுக்கான சட்டத்தில் முன்னேற்றமோ, புதிய சட்டங்களோ உருவாகவில்லை.

தொழிலாளருக்கான வேலை நேரம்:

உலகின் தொழிலாளர்கள் தங்களுக்கான வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடத் துவங்கிய போது, இந்தியாவில் ஆலைகள் பெரும் எண்ணிக்கையில் உருவாகி இருக்க வில்லை. 19 ம்நூற்றாண்டின் இறுதி பகுதியில் தான் பஞ்சாலைகள் பம்பாய், சென்னை, கல்கத்தா பகுதிகளில் உருவாகி வளர்ச்சி பெற்றது. வேலைநேரம் சூரிய உதயம் துவங்கி மறையும் வரையானதாக தீர்மனிக்கப்பட்டது. பின் மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்த பின், வேலை நேரமும் அதிகரித்தது. எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற போராட்டமும் தவிர்க்க முடியாததாக மாறியது. அதாவது இந்தியாவில், குழந்தைகளையும், பெண்களையும் அதிக எண்ணிக்கையில், பஞ்சாலை உற்பத்தியில் நேரம் காலம் இல்லாமல் ஈடுபடுத்தியதால், இந்தியாவின் ஆலைகள், இங்கிலாந்தின் லங்காஷயர் ஆலைகளை விடவும் மலிவாக உற்பத்தி செய்து தர முடிந்தது.

அதேநேரம் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1891 ல் தொழிற்சாலைகள் சட்டம் 12 வயதுக்கு கீழ் இருந்த சிறுவர்களின் உழைப்பு நேரத்தை, 9 மணிநேரமாகவும், பெண்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரமாகவும், இரவு வேலை செய்வதில் இருந்து பெண்களுக்கு விலக்களிப்பது என்றும், திருத்தி சட்டம் இயற்றப்பட்டது. மற்ற ஆண் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 14 அல்லது 16 மணி நேரமாக இருப்பது நீடிக்கும் என்றும் வரையறை செய்யப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நீடிக்கவே, 1908 ல் வேலைநேரம் குறித்து விசாரணை நடத்த மாரிசன் என்பவர் தலைமையில் ஒரு குழு வந்தது. அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பின்னணியிலேயே, 1911 ல் 12 மணி நேரம் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1922 ல் தொழிலாளர்கள் வேலைநேரம் மற்றும் ஓய்வு, இடைவேளை ஆகியவை குறித்த பிரச்சனைகள் முன்னுக்கு வந்தது. சென்னையில் 1923 ல் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சிங்காரவேலர் மே தினக் கொடியேற்றினார். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டிஷ் அரசு ராயல் கமிஷன் என்ற குழு மூலம் 1929 ல் விசாரணை நடத்தியது. அதன் பரிந்துரைப்படி, 1934 ல் வேலைநேரம் 9 மணிநேரமாக குறைக்கப்பட்டது.

                                      photo courtesy IndiaMART

அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக குரலின் அதிகரிப்பு ஆகியவை வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகப்படுத்தியது. அம்பேத்கார், 1942 நவம்பர் 7 ல் அரசு நடத்திய, தொழிலாளர் மாநாட்டில், வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து பேசினார். “வேலைநேரத்தைக் குறைப்பது என்பது, வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் செய்யும், அதேநேரத்தில் இக்கோரிக்கையை அரசு ஏற்கும் நிலையில், அவர்களின் அடிப்படை சம்பளத்தையோ, பஞ்சப்படியையோ குறைப்பது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது”, என தெளிவாக அம்பேத்கர் அவர்கள் பேசியுள்ளார். இப்படி பல்வேறு நிர்பந்தங்களைத் தொடர்ந்தே, பிரிட்டிஷ் அரசு 8 மணி நேர வேலைக்கு ஒப்புக் கொண்டது. இந்தியாவில் 8 மணிநேர வேலை வாரம் 48 மணி நேரம் என்பது அமலாக துவங்கி 80 ஆண்டுகள் ஆகிறது. 80 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், வேலை நேரத்தை 12 ஆக உயர்த்துவதை இந்த ஊடங்கு காலத்தில் அமலாக்க பாஜக அரசு எல்லா வேலைகளையும் செய்து வருகிறது.

7 மணி நேரமாக குறைப்பதே இன்றைய தேவை:

இப்போது இந்திய பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23% பேர் வேலை இழந்துள்ளனர். அல்லது வேலையின்றி உள்ளனர். இதன் எண்ணிக்கை சுமார் 10 கோடி. இவர்கள் கையிலும் வாங்கும் சக்தி ஏற்படும் போது தான், பொருளாதாரம் மேம்படும். உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இந்த சூழல் உருவாக வேலை நேரத்தை குறைப்பதே அவசியம், அது தொழிலாளர்களுக்கான ஓய்வு அல்லது நிவாரணமாக பார்க்கப்பட கூடாது.

ஆனால் மத்திய பாஜக ஆட்சி, கொரானா கால ஊரடங்கிற்கு, வாய் சவடால் நிவாரணம் வழங்கியது போல், வேலைநேரத்தை 8 ல் இருந்து 12 மணி நேரமாகஅதிகரித்து, அதிக உற்பத்திக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது உற்பத்தி தேக்கத்திற்கே வழிவகுக்கும், உற்பத்தியை தூண்டும், குறைவான தொழிலாளர்களின் வருவாயை மட்டும் உயர்த்துவதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்காது. மாறாக வேலை நேரத்தை குறைப்பது, மூலதனக் குவிப்பை கட்டுப்படுத்தும். பரவலான வருவாய் உயர்வுக்கு வழி வகுக்கும். கடந்த 80 ஆண்டுகளில் பெரும் பணக்காரர்களின்  செல்வ மதிப்பு பல்லாயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. புதிய பெரும் பணக்காரர்கள் தலையெடுத்துள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர் (1.26 லட்சம் கோடி) கடந்த ஓராண்டில் உயர்ந்துள்ளது. அலிபாபா அல்லது அமேசான் அதிபர்களின் சொத்து மதிப்பு கூட இந்த அளவு உயரவில்லை என எக்னாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

கோவிட் 19 பாதிப்பு, லாகடவுன் 1இன் போது, 21 நாள்களும், லக்டவுன் இரண்டின் போது19 என மொத்தமாக, 40 நாள்கள் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் வீட்டுக்குள் பூட்டி விட்டு, மறைமுகமாக, தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 51 ஐ, 12 மணிநேரமாக உயர்த்தும் வகையில் திருத்துகிறது. இத்தகைய திருத்தத்திற்காக, முன்மொழியப்பட்ட தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைதன்மை2019 மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடம் பெற்றுள்ள எளமரம். கரீம், தனது திருத்தங்களை 7 பக்கங்களில் முன்மொழிந்துள்ளார். குறிப்பாக வேலை நேரத்தை வரையறை செய்துள்ள, தற்போதைய பிரிவுகள், 51,54 ஆகியவற்றை திருத்தல் கூடாது. ஜப்பான் ஆய்வு சுட்டிக் காட்டியது போல், வேலை நேரத்தை குறைப்பதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதையும் இணைத்து கூறியுள்ளார்.

                                      photo courtesy IndiaMART

அன்மையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு 16 வது அகில இந்திய மாநாடு, வேலை நேரத்தை ஒருநாளைக்கு 7 மணிநேரம் எனவும், வாரம் 35 மணிநேரமாகவும் குறைக்க வேண்டும். இதன் மூலம் வாரம் இருநாள்கள் விடுமுறை உருவாகும். அதேபோல் கணிசமான வேலையின்மையை இதன் மூலம் குறைக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக, வாரம் 35 அல்லது 36 மணிநேரம் என்ற தன்மையில் வேலை நேரத்தை வரையறை செய்து, பல பத்தாண்டுகளாக அமலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாரம் 40 மணிநேரம் என்பது 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையாகும். எனவே அனைத்துவிதமான ஜனநாயக சக்திகளும், தற்போதைய வேலைநேரத்தை, மேலும் சுரண்டலுக்கு வழிசெய்யும் வகையில் திருத்த அனுமதிக்க கூடாது..

வரலாற்றில் இருந்தும், இந்திய ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும், உலகப் பொருளாதார பெருமந்தம், 1930 களில் உருவான போது, உலகப்போர் மூண்டது, போர் முடிவுக்கு வந்த போது, முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகள் பலவும் வேலைநேரத்தை குறைப்பது குறித்த அழுத்தத்திற்கு ஆளாகின. குறிப்பாக 1935, ஜூன்4 அன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) முன் மொழிந்த தீர்மானமான, வாரம் 40 மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது, முக்கிய பங்களிப்பைச் செய்தது. பொருளாதார பெருமந்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒன்று வேலையின்மை ஆகும். வேலை நேரத்தை குறைப்பதன் மூலம், வேலையின்மையை குறைக்க முடியும், பெருமந்தத்திற்கு தீர்வு காண முடியும், என்பதையும் தீர்மானம் தெளிவு படுத்துகிறது.

அதேபோல் 1962 ஜூனில், ஐ.எல்.ஓ மீண்டும் ஒரு தீர்மானத்தின் மூலம், மேலும் வேலை நேரத்தை ஒவ்வொரு நாடும் தற்போதைய நிலையில் இருந்து குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2000 ல் இருந்து, ஃபிரான்ஸ் வேலை நேரத்தை வாரத்திற்கு 35 மணி நேரமாக குறைத்தது. பல நாடுகள் இதை பின்பற்றின. ஆனால் இந்தியா, உலக வளர்ச்சியின் இந்த பாதையை, இருட்டடிப்பு செய்கிறது. இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இது குறித்து அவ்வப்போது, வலியுறுத்துகின்றன. ஆனால் இது பெரும் ஜனநாயக எழுச்சிக்கான குரலாக மாறவில்லை. இப்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் முயற்சியை எதிர்த்து அத்தகைய பெரும் குரல் எழுப்பப்படுவதும், வீச்சாக பரவுவதும் பற்றி எரிவதும் அவசியம். தொழிலாளர்களும், அவர் தம் குடும்பங்களும், வேலைக்காக போராடும் இளைஞர்களும் இந்த முழக்கத்தில் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *