அப்பட்டமாக உண்மைகளைப் பேசும் கவிதைகள் பலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் சமூகத்திற்குத் தெரிவதில்லை. அப்படி எழுதியவர்கள் பேருக்காக எழுதியவர்கள் அல்லர். அதனால்தான் எழுதியவர் பெயர் இல்லாமல் உலவி வருகிற கவிதைகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. பெயர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிற பிற கவிஞர்களால் எழுத முடியாத கவிதைகளை பெயர் பற்றிய பிரக்ஞை இல்லாத கவிஞர்கள்தான் எழுதுகிறார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஏதோ ஒரு வகையில் அவை உக்கிரமான உண்மைகளைச் சுமந்து வருகின்றன.

\\யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.//

இந்தக் கவிதை பேசும் உண்மை மகத்தானது அல்லவா?

Reema Kaur Ahluwalia #SocialDistancing on Twitter: "Indian History ...

இந்திய விடுதலைப் போரில் தன் இன்னுயிர் தந்தவர் குதிராம் போஸ். இவர் ஆங்கிலேய ஆட்சியால் 1905 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இது பற்றிய ஒரு பிரபலமான கவிதை ஒன்றினை எல்லோரும் அறிவார்கள்.

பத்து மாதங்கள் பத்து நாள்கள் நகரட்டும்
நான் மீண்டும் பிறப்பேன் அம்மா,
சிற்றன்னையின் வீட்டில்.
என்னை உன்னால் அடையாளம்
கண்டுபிடிக்க முடியாவிடில்
அம்மா
என் கழுத்தில் தூக்குக் கயிற்றின்
அடையாளத்தைத் தேடு.

இந்தக் கவிதையை யார் இயற்றினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பெயர் தெரியாத நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் குதிராம் போஸ் பாடுவதுபோலப் பாடியிருக்கிறார்.

“நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்துக்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.
…..
நாங்கள் கடவுளுக்கு
முன் பிறந்தவர்கள்.”

1994-95 இல் ஜார்க்கண்ட் பகுதியின் கோயல்- கேரோ அணைக்கட்டுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பாடப்பட்ட ஒரு பழங்குடிப் பாடல். எவ்வளவு பெரிய பேருண்மையை ஒரு பெயர் தெரியாத பாடகன்தான் பாடியிருக்கிறான்.

                                                                   Pashto Women

ஆஃப்கானிஸ்தானில் உள்ள பஷ்டு (Pashto) மொழி பேசும் பெண்களிடையே வழங்கிவரும் பாடியவர் பெயர் தெரியாத ஒரு நாட்டுப்புறப் பாடல்.

“புனிதத் துறவிகள் மண்ணைப் பார்க்கின்றனர்
மண் பொன்னாகிறது.
எனது காதலனோ வித்தியாசமானவன்
அவன் என்னைப் பொன்னே என்கிறான்
ஆனால் அவனது பார்வையோ
என்னைச் சாம்பலாக்குகிறது.”

எவ்வளவு கூர்மை?

நைஜீரியாவின் யொருபா பழங்குடிப் பாடல் ஒன்று
“மரம் வளைந்திருக்கிறது என
நாம் ஏன் முணுமுணுக்க வேண்டும்?
நமது தெருக்களில் வளைந்திருக்கும் மனிதர்களே
சிலர் காணப்படும் போது?

பெயரில்லாத கவிதைகள் பெருகுகிறபோது மேலும் மேலும் பல உண்மைகள் பேசப்படுமோ?
உதவிய நூல்கள்- 1,குறுந்தொகை 2. இந்திரனின் ’கடவுளுக்கு முன்பிறந்தவர்கள்’ கவிதைத் தொகுப்பு. 3. வ,கீதா, எஸ்.வி.இராஜதுரை மொழிபெயர்ப்பில் ‘கடைசி வானத்துக்கு அப்பால்’ கவிதைத் தொகுப்பு.

– நா.வே.அருள்

2 thoughts on “பெயர் தெரியாத கவிஞர்களின் பிரபலமான கவிதைகள் – நா.வே.அருள்”
  1. ஆசிரியர் குழுவுக்கும் தோழர் சுரேஷ் இசக்கி பாண்டி அவர்களுக்கும் மிகந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *