சாதி- சாமிகள் | Thanges - Poem | தங்கேஸ் கவிதைகள்
1. சாதி நிழல்கள் 
நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி
தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம்
வளைந்து குனிந்து குறுகி
வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர்
புளகாங்கிதத்தில் அவரின்
சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன
வாழ்க கோஷத்தோடு
மகிழ்ச்சியாக  விடைபெறுகிறது
அவர் வாகனம்
அது விட்டுச்சென்ற சக்கரத்தின் தடங்கள் மட்டும்
நீங்காத வடுவாக தார்ச்சாலையில்
பதிந்து கிடக்க
அவ்விடம் தாமதமாக வந்து சேர்ந்த
துணை நிழல்கள்
அவசர அவசரமாக பய பக்தியோடு
கன்னத்தில் இரண்டு போட்டுக்கொள்கின்றன

2. சுமை

ஒரு சிறிய புன்னகையைக் கூட
உதட்டில் ஏந்திக் கொள்ள முடியவில்லை நம்மால்
அத்தனை கனமாக இருக்கிறது அது
இருளின் விற்பனைப் பிரதி நிதி அவள்
கருங்கல் போல கனக்கும்
தன்  உடலை எப்போதும்
சுமந்து கொண்டு தான்திரிகிறாள்
பிராத்தல்  நடத்தி
பிழைக்கும் ஒருவன்
தேர்ந்தெடுத்த
வசீகரமான சொற்களை
எப்போதும் இதயத்தில்
ஏந்திக்  கொண்டு அலைகிறான்
சிக்னலில் கை தட்டிக் காசு கேட்கும்
திருநங்கையும்
கார்க் கதவைத் தட்டியபடி
பிச்சை கேட்கும்
கண்ணற்றவனும்
தட்டு நிறைய அவமானங்களைச்
3.சுமந்து கொண்டு தான் திரிகிறார்கள்
ஒரு காலத்தில் இனிமையான
காதலைச் சுமந்து கொண்டிருந்த
யுவனும் யுவதியும் இப்போது
தேனீக்களைப் போல
இதயத்தை குடையும்
நினைவுகளைச் சுமந்து கொண்டு
அலைகிறார்கள்
காலையில் வேலைக்குச்  சென்று
மாலையில்  வீடு திரும்பும்
ஆண்களும் பெண்களும்
அலுவலகத்தின் கசப்பை
நாளெல்லாம் சுமந்து கொண்டு
நடமாடுகிறார்கள்
உறவுகளால் கைவிடப்பட்டு
குப்பைத் தொட்டியைச் சுற்றி
நாய்களுக்கருகில் படுத்துறங்கும்
கிழவர்களும்  கிழவிகளும்
எஞ்சிய நாட்களை
பெருஞ் சுமையென
சுமந்து  கொண்டு தான் திரிகிறார்கள்
இவைகள் யாவற்றையும்
 கண்ணுற்றுக் கொண்டு
அமைதியாக வீற்றிருக்கும் கடவுள்கள்
தங்கள்  இருப்பையே
பெருஞ் சுமையென எண்ணி எண்ணி
கையறு நிலையில்
உலகத்தை  பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்
4. சாமிகள்
கோவிலில் சாமிகள் குடியிருக்கின்றனவோ என்னவோ
வௌவால்களோடு சேர்த்து
அத்தனை சாதிகளும் குடியிருக்கின்றன
சாதி இரண்டொழிய என்று பாடிய மூதாட்டி இன்றிருந்திருந்தால்
சாதி இரண்டாயிரமொழிய வேறில்லை
என்று பாடியிருப்பாள்
உயிர்  மெய் பகுதிகளில் ஆரம்பித்து
ர்… ன் … என முடியும் விகுதிகளில்
இருக்கும் அத்தனை ஆர்ப்பட்டங்கள்
இதில் ஏதாவது ஒன்றில் தான்
கடவுளும் இருப்பார் என்று எண்ணத் தோன்றும்
கடவுளே அப்படி என்றால்
ஆழ்வார்கள் நாயன்மார்கள்
மன்னர்கள் ஜமீன்கள் புரவலர்கள்
நாட்டாமைகள் பக்த சிரோன்மணிகள்
இவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை
அவர்களுக்கு உரிய
இடஒதுக்கீட்டின் படி
அங்கங்கே அருள் பாலித்துக்கொண்டும்
கோவில் பிரகாரங்களில்
நவக்கிரங்களில்
கல் மண்டபங்களில்
புறா எச்சங்களோடு
முன்புறம் கோபுரங்களில்
ராசராசன் கல்வெட்டுப்போல சொலிக்கும்
கொட்டை எழுத்துக்களில்
மின் விளக்குகளில்
ஆசி வழங்கிக் கொண்டும்
சகல சாதி மரியாதையோடுதான்
 வாழ்கிறார்கள்
அர்ச்சகர் ஒரு முறை மந்திரம் சொல்லி முடிப்பதற்குள்
சுற்றி வலம் வரும் கண்கள்
எப்படியும் கண்டுவிடும் தன் சாதிப் பெயரை
நந்தனாரின் குருதி படாத பிரகாரங்களே ஏதுமில்லை
என்றாலும்
இன்னும்வெளியிலேயே
காத்து நிற்கும்
ஆயிரம் ஆயிரம் நந்தனார்களை
மனதார உள்ளே அழைக்கவில்லை
எந்த தெய்வங்களும்
தங்கேஸ்
தமுஎகச
தேனி




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *