1.புன்னகை

சுத்தமான காற்று

முப்பதடி ஆழத்தில் நிலத்தடிநீர்

நல்ல தண்ணீர் வசதி

அருகிலேயே மருத்துவமனை

பள்ளி கல்லூரிகள்

அகலமான தார்ச்சாலை வசதி

சிறுவர் விளையாட பூங்கா

நீச்சல்குளம் உடற்பயிற்சிக்கூடம்

இருபத்தி நாலுமணி நேரமும்

காவலாளிகள்

சுற்றிலும் கண்காணிப்பு கேமராவென

சகலவசதிகளும்

ஒற்றை ஆவணத்தில்

எளிய தவணைமுறையில்

அரங்கேற

ஆயிரம் உறவுகளால்

அன்பினைக் கொண்டாடிய

ஊரைவிட்டு

வனத்தில் முளைத்த

வீட்டுமனையின்

கான்கிரீட் கனவு இல்ல

சுவர்களுக்குள்ளேயே

அடைபட்டுக் கிடக்கும்

ஈரமில்லா இதயங்களின்

திறக்காத கதவுகளுக்கு முன்நின்று

வழியெங்கும் ஆவலோடு

சிறுபிள்ளையாய்த் தேடுகிறேன்

மதிப்புக்கூட்டப்பட்ட

நவீன வாழ்வில்

எந்திரமாகவே வாழும்

எல்லோரிடமும் காணக் கிடைக்காத

சிறுபுன்னகையை….

 

2.நெகிழி

***********

நாளுக்கு நாள் வளரும்

நவீன நாகரீகம்

அத்தியாவசியமென்று

இருப்பதை யெல்லாம்

விழுங்கி ஏப்பமிடும்

மாற்றுப் பொருள்கள் கவர்ச்சிகரமாய்

உலகச் சந்தையில்….

உண்ணும் இலைகளிலிருந்து

தாகம் போக்கும்

நீரினைப் பரிமாறும்

குடுவைகள் வரை

அனைத்துமே

நெகிழிகள் வசம்….

இத்தனை வருடங்களாய்

நெகிழியை

எதிர்த்துப் போராடிய

சட்டங்களெல்லாம்

அடக்கு முறையில் அடிபட்ட

சாமானியனைப் போல்

எங்கள் கிராம வயல்களின்

வரப்போரங்களில் நெகிழிகளாகவே

சரிந்து விழுந்து கிடக்கின்றன…

மழை துளியுமின்றி

வறண்ட பாலைவன

பனைமர நிழல்களில்

கசியும் மதுக்கோப்பைகள்

கவிழ்ந்ததும்

கையிலும் பையிலும்

இருந்ததையெல்லாம்

வேண்டாப் பொருளென

தூக்கியெறிந்து

விட்டுச் செல்வதே வாடிக்கையாகிறது

வாணிபக் கழக

வாடிக்கையாளர்களுக்கு…

 

கேட்பாரற்றுக் கிடக்கும்

நெகிழிகள் உணவா

உயிர்க் கொல்லியாவென்று

அறியாது தின்னும்

ஐந்தறிவு ஜீவன்களின் வயிற்றில்

செரிமான மண்டலமும் செயலிழந்து மரணிப்பதால்

தாய்ப்பாலில்லா சேய்களின்

நிலையும் என்னவாகுமோ?

 

3.இட ஒதுக்கீடு

*********************

முற்பகல் வேளையில்

முற்றத்துக் கொடியில்

உலர்ந்திடும் வேட்டிசட்டையின்

வேடிக்கையெல்லாம்…

பக்கத்து வீட்டு

வடக்கு பார்த்த

சன்னல் வழியே அனுமதியின்றி

அறைக்குள் அத்துமீறும்

காற்றைத் துண்டித்து

வண்ணமயத்தில் ஊஞ்சலாடும்

உள்ளாடைகள்

நாடாவில் தூக்கிட்டுத் தொங்கும்

பாவடைகளென

ஒட்டு மொத்த இடத்தையும் ஆக்கிரமித்து

பெண் பிம்பங்களாகவே ஆளும்

சன்னல் கம்பிகளுக்குள்

ஊடுருவும் வெளிச்சத்தில் தேடுகிறது….

ஏதாவதொரு சன்னலில்

ஆண்களின்

வேட்டி சட்டைக்கென்று

ஒரு விழுக்காடு இடமாவது

பக்கத்து வீட்டில்

ஒதுக்கீடு செய்யப்பட்டு

இருக்கிறதாவென்று….

 

எழுதியவர் 

கோவை ஆனந்தன்

கோவை மாவட்டம் சேர்த்த இவர்  கொழுசு, கவிதை உறவு, தன்னம்பிக்கை,புக்டே, கவிச்சூரியன், அகரமுதல, சுவாசம், நுட்பம், பதாகை, வாசகசாலை, வானவில், வான்மதி இன்னும் பிற) அச்சு மற்றும் மின்னிதழ்களென பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார். கடந்தாண்டு பதாகை இணைய இதழில் இவரெழுதி வெளியான கதைகளில் “கோல்டு செயின்”எனும் கதை பரவலாக பேசப்பட்டதோடு வாசகசாலையின் கலந்துரையாடல் நிகழ்விலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு இணையவழி கவியரங்குகளிலும், நேரடி கவியரங்கிலும்,வானொலி கவியரங்கிலும், பங்கு பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட மின் சான்றிதழ்களும், விருதுகளும் பெற்றுள்ளார். கவிச்சுடர், பெண்ணுரிமைப் பாவலர், கவிச்சிற்பி,  இன்பக்கவி, புதுமைக்கவி, தமிழ்க்கனல்,போன்ற விருதுகளும்,வெள்ளலூர் இலக்கிய மன்றத்தின் கவித் தமிழ்மணி விருதும், தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அசோகமித்ரன் படைப்பூக்க விருதும் இவற்றுள் அடங்கும். இவரது சிறுகதைகளை பாஸ்டன் நகரிலிருந்து ஒலிபரப்பாகும் “சொல்வனம் யூ டி யூப் சேனலில்” ஒலிவடிவமாகவும் பதிவேற்றம் செய்துள்ளனர். 

கவித்தூரிகை என்ற  தொகுப்பு நூலில் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக விவசாயத்தை பாடு பொருளாக கொண்டு எழுதப்பட்ட “வேர்களின் உயிர்”

கவிதைத்தொகுப்பு இவரது முதல் கவிதைத் தொகுப்பாகும். மேலும் விரைவில் ஒரு ஹைக்கூ தொகுப்பொன்றும், சிறுகதை தொகுப்பொன்றும் விரைவில் வெளிவர உள்ளது. 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *