prabanjam alantha pengal | பிரபஞ்சம் அளந்த பெண்கள் (பெண் வானவியலாளர்கள்)

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்; பெண் விஞ்ஞானிகள் குறித்தும் பெண் கணிதவியலாளர்கள் குறித்தும் அதிக கட்டுரைகள் எழுதியவர்; பெண்களைப் பற்றிய நிறைய நூல்களை வெளியிட்டவர். 36 ஆண்டுகால விலங்கியல் துறை பேராசிரியராக பணியாற்றியவர்; கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய அறிவியல் கூட்டமைப்பில் செயற்குழு உறுப்பினராக உள்ளவர்; தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில செயற்குழு உறுப்பினர்; ஓய்வுக்குப் பிறகு துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் சிகை தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக பணிபுரிபவர் என பல்வேறு திறன்களுடன் செயல்படும் பேராசிரியர் சோ மோகனா அவர்களின் பெண் வானவியலாளர்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

உலகில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை அவனது பயணத்திற்கு வழித்துணையாக அமைவது வானமும் அதன் உப பொருட்களும் எனலாம். வானியல் துறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் நகர்வை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதில் உதவி செய்கின்றன. குகை மனிதன் தொடங்கி இன்று விண்வெளியை ஆராயும் அறிவியல் மனிதன் வரை வானவியல் ஆச்சரியத்தை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது.

விவசாயத்தைப் போலவே வானவியலும் மனிதனின் ஆதி காலம் தொட்டு அவனுக்கு உதவி செய்யும் ஒரு துறையாக விளங்கி வருகிறது. கோள்கள், நிலவு, நெபுலாக்கள், நட்சத்திரங்கள், வால் மீன்கள், விண்கற்கள், சிறு கோள்கள், குள்ளக்கோள்கள் என வானம் தனக்குள் லட்சக்கணக்கான புதையல்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆச்சரியங்களை நமக்கு அள்ளித் தருகிறது.

வானத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் நம் பூமியில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என்பதையும் நாம் இந்த வேலையில் அறிய வேண்டும். கடல் சீற்றம் கடல் உள்வாங்குதல் இயற்கைப் பேரிடர் பூமியின் தட்பவெட்பம் என நமது காலச்சூழல் மாற்றத்திற்கு வானிலையில் ஏற்படும் மாற்றங்களும் காரணங்களாக அமைகின்றன.

பண்டைய காலம்தொட்டு வானத்தை ஆராய்ச்சி செய்திட ஆண்களை விட பெண்களுக்கான ஆர்வம் அதிகம் இருந்தது என்பதை நிறையச் சான்றுகள் உறுதி செய்கின்றன. வானியலின் மீதான பெண்களின் ஈர்ப்பும் அத்துறையில் பெண்கள் செய்த சாதனைகளும் இன்றுவரை முழுமையாக தொகுக்கப்படவில்லை. பொதுவாகவே விஞ்ஞானிகள் என்றாலே ஆண்களை மட்டுமே அளவிடும் பொதுப்புத்தியில் பெண்களும் விஞ்ஞானிகளாக ஆய்வியல் அறிஞர்களாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களாக உலகில் சிறந்து விளங்கி இருக்கின்றனர் என்பதை ஆவணப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றோம்.

வானவியல் என்பது அறிவியலின் ஒரு தனித்துறையாக ஒளிர்ந்தாலும் அதை ஆராய்வதற்கு கணிதம் இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் ஆர்வமும் நிபுணத்துவமும் இருத்தல் அவசியம். அதைத் தாண்டி நீண்ட காலமான பொறுமையும் காத்திருக்கும் தரவுகளை தொகுத்து ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணியும் அதன் வழியே சகிப்புத்தன்மையும் அவசியம் கை கூட வேண்டும். ஓர் இரவில் வானத்தில் மாற்றங்கள் நடந்து விடுவதில்லை., ஒரு கோளோ ஒரு வால் மீனோ தனது நகர்வை ஒற்றை நொடியில் நிரூபிக்க முடிவதில்லை. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளும் நீண்டு தொடர்ச்சியான உற்றுநோக்கலை எதிர் நோக்குகின்றன. அந்த வகையில் இயல்பாகவே பொறுமையும் ஈடுபாடும் கொண்ட பெண்களும் இந்த துறையில் மிகப்பெரிய சாதனைகளை செய்திருப்பதை நம்மால் உணர முடிகிறது.

உலக அளவில் பெண் வானியலாளர்கள் என எண்ணற்ற விஞ்ஞானிகள் இருந்தாலும் அவர்களில் சிறப்பான சேவை புரிந்தமைக்கான 13 விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பில் பேராசிரியர் அவர்களைப் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாற்றையும் அதன் வழியே வானியலில் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும் பட்டியலிடுகிறார்.

அறிவியலும் மதமும் அன்றைய காலகட்டத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்ற நேரத்தில் அறிவியலின் வழியே வானத்தையும் உலகத்தையும் அதன் போக்கையும் அளந்து கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி இருக்கும் கணித மேதை ஹைபேஷா மீது மதமும் துறவிகளும் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகம் அவரது உயிரை எவ்வளவு கீழ்த்தரமாக பறித்தது என்பது பற்றிய முதல் கட்டுரையே நம்மை நடுங்க வைக்கிறது. உயிருடன் தோலை உரித்து கை கால்களை தனித்தனியே பிய்த்தெறிந்து கற்களைக் கொண்டு அவரை வீழ்த்திய மதவாதிகளின் ஆவேசம் அறிவியலின் மீது எறியப்பட்ட விரும்பத்தகாத ஆயுதம் என்பதை கட்டுரை கோடிட்டு காட்டுகிறது.

தனது வாழ்நாளில் எட்டு வால்மீன்களை கண்டறிந்தவர் பல நூறு ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஏராளமான நெபுலாக்களை கண்டுபிடித்து அவற்றை தொகுப்பித்தவர் முதல் முறையாக வால்மீனைக் கண்டறிந்த பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர் அரசாங்கத்தின் மூலம் முதன்முதலில் பணியும் ஊதியமும் பெற்ற முதல் விஞ்ஞானி என்ற பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான கரோலின் ஹெர்சல் தனது சகோதரருடன் இணைந்து பல நெபுலாக்களை தொகுத்து இருக்கிறார். ஒரு இசைக் கலைஞராகவும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர். இவர் 20 ஆண்டுகளில் 3400 வானவியல் பொருட்களை இனம் கண்டறிந்துள்ளார். சந்திரனில் உள்ள பள்ளம் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நெப்டியூன் கோளைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வைத்தவர் யுரேனஸின் நிலையை கணக்கிடுவதில் உள்ள சிரமங்களை கண்டறிந்து நெப்டியூன் கோளின் இருப்பை ஆராய்ச்சி செய்வதற்கு குறிப்புகள் எழுதியவர் இயற்பியலாளர் வேதியிலாளர் தொலைநோக்கு சிந்தனையாளர் என பல்வேறு திறமைகளைப் பெற்றவர் கணித வழி வானவியலாளர் மேரி சோமர்வில்லை.

அமெரிக்க கிளை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி; அறிவியல் முன்னேற்ற அமெரிக்க சங்கம், அமெரிக்க தத்துவவியல் சங்கம் ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட முதல் தொழில்முறை பெண்; அமெரிக்க கரையோர கணக்கெடுப்பு நடத்திய திட்டத்திற்கு கணக்கீடுகளை வழியமைத்துக் கொடுத்தவர், வால்மீன் கண்டுபிடிப்பிற்காக தங்கப் பதக்கம் பெற்றவர் என பல்வேறு சாதனை புரிந்த மரியா மிட்செல் பெண் மாணவர்களுக்கு வகுப்பு, வேலை மற்றும் வான் கண்காணிப்புகளுக்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பெண்களை கட்டுப்பெட்டியாக வைத்திருந்த சமூக மரபுகளை உடைத்தெறிந்தவர். பெண்கள் அதிக அளவில் வானியல் துறையில் ஈடுபடுவதற்கு பேருதவி புரிந்தவர்.

விண்மீன்களின் நிறமாலைகளின் வகைப்பாடு குறித்த பணியில் ஈடுபட்டு அவற்றிற்கான வடிவத்தையும் தொகுத்தவர் குதிரைத் தலை நெபுலா மற்றும் வெள்ளைக் குள்ளன் ஆகியவற்றைக் கண்டறிந்தவர், 30 நோவாக்கள் 539 வாயு நெபுலாக்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாறிலி விண்மீன்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டவர், விண்மீன்களின் இறுதி நிலையான வெள்ளைக் குள்ளர்கள் என்ற அமைப்பை கண்டறிந்தவர் என்று ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் வில்லியமினா பிளமிங். அவரது காலகட்டத்தில் அவரது சாதனைகள் அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டது. ஆண்களைத் தாண்டி பெண்கள் எவ்வளவு தான் அதிகமாக வேலை செய்தாலும் அவர்களுக்கான ஊதியம் ஆண்களை விட மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது என்பதைக் கண்டு போராடி சம ஊதியத்தை நிலை நாட்டியவர் இவர்.

விண்மீனில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் கூட்டுக் கலவையே விண்மீன் என்பதை தெளிவான தரவுகளுடன் கண்டறிந்து வெளியிட்டவர் சிசிலியா பெயின் கப்போஷ்கின். ஆனால் இவர் ஆரம்பத்தில் படித்த அறிவியல் பாடம் தாவரவியல் என்பது நம்மை வியப்படைய வைக்கிறது.

இந்த நூலில் கருந்துளை பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு நிறைய கட்டுரைகளும் நூல்களும் வெளியிட்ட இரண்டு இந்தியப் பெண் விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றிருப்பது நமக்கு பெருமை அளிக்கிறது. பிரஜ்வல் சாஸ்திரி மற்றும் பிரியம்வதா நடராஜன் இருவரும் இன்றும் வானியல் துறையில் ஏற்படும் மாற்றங்களை கணித்து அது தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பற்றிய கட்டுரையும் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அறிவியலின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

பிரபஞ்சம் அளந்த பெண்கள் நூலின் வழியாக வானியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு அடித்தளம் இட்டது பெண்களின் கடுமையான உழைப்பு என்பதை நம்மால் அறிய முடிகிறது. வானியல் ஆராய்ச்சியில் தமது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சுயநலத்தை துறந்து வானத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் பெண் விஞ்ஞானிகளின் பற்றிய இந்த நூல் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு செலுத்துதல் அவசியம்.

விண்மீன்கள் செயற்கைக்கோள்கள் மற்றும் சந்திர மண்டலத்தில் உள்ள பள்ளத்தாக்குகள் போன்ற பல இடங்களுக்கு பெண் வானவியலாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதை வளரும் தலைமுறை வாசிக்கும் போது அறிவியலின் மீதான ஆர்வமும் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகரும் திறமையும் அவர்களுக்குள் வளரும் என்பதே இந்த நூலை எழுதிய பேராசிரியரின் முக்கியமான நோக்கமாகும்.

சர்வதேச வானியல் கழகம் குறிப்பிட்டுள்ள 88 விண்மீன் திரள்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களை அடையாளம் காணும் திறன் பெற்றவர் தமிழகத்தில் இருக்கக்கூடிய மூன்று பெண் வானவியல் நோக்காளர்களில் ஒருவர் என்ற பல்வேறு சாதனைகளை புரிந்தும் எழுத்தின் வழியேயும் தனது செயல்பாடுகளின் வழியேயும் தினம் தினம் வானவியல் துறை தொடர்பான கட்டுரைகளை எழுதுவதன் வாயிலாகவும் வளரும் தலைமுறையினருக்கு புதுப்புது பாதைகளை அமைத்துத் தரும் பேராசிரியர் அவர்களின் பணி இந்த நூலின் வழியாக மேலும் நிறைய சாதனைகளை அவருக்கு கொண்டு சேர்க்கும் என்பது நிச்சயம்.

 

நூலின் தகவல் 

நூல் : பிரபஞ்சம் அளந்த பெண்கள் (பெண் வானவியலாளர்கள்)

ஆசிரியர் : பேராசிரியர் சோ. மோகனா

பக்கம் : 160

விலை : ரூ. 160

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

 

எழுதியவர் 

இளையவன் சிவா @ கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *