நாம் அறிய வேண்டிய காந்தி – எஸ் வி வேணுகோபாலன்
தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே
இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே… – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக… – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 89 : பண்ணோடும் நீ தான் வா- எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 71 : எங்கே தேக்குவேன் இசையை… – எஸ்.வி.வேணுகோபாலன்
எங்கே தேக்குவேன் இசையை…
எஸ் வி வேணுகோபாலன்
அன்புத் தோழர் வ ராமு அவர்களுக்கான புகழஞ்சலியாக அமைந்த கடந்த வாரக் கட்டுரை வாசித்து உருக்கமான மறுமொழி அனுப்பி வரும் அன்பர்களுக்கு உள்ளார்ந்த நன்றி. அவருடைய அன்பு மகள் மகாலட்சுமி நன்றி தெரிவித்திருந்தது நெகிழ வைத்தது.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போதே, இசை வாழ்க்கை என்ற தலைப்பில் புக் டே இணையத்தில் இருந்து கட்டுரை ஒன்றிற்கான இணைப்பு வாட்ஸ் அப்பில் இணையதள ஒருங்கிணைப்பாளர் தோழர் நரேஷ் அனுப்பி இருந்தார்… உற்றுப் பார்த்தால், நூல் விமர்சனம் என்று போட்டிருந்தது. இசை வாழ்க்கை இன்னும் நூலாக்கம் பெறவில்லையே அதற்குள் விமர்சனமா என்று பார்த்தால், லிங்கராசு என்று பெயர் போட்டிருந்தது. ஆஹா… கோவை நண்பர் இசைக்கலைஞர் வேலைதான் இது என்று பிடிபட்டது. புத்தகமாக வந்தால் தான் மதிப்புரை எழுத வேண்டும் என்று சட்டமா என்று தொடங்கும் அவரது உரிமைக் குரல், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களது அறிவுறுத்தலோடு அணைந்து கொண்டு புத்தகம் வரவேண்டும் என்ற தூண்டுதலைச் செய்திருக்கிறார். இசை இருக்கும்வரை தான் இந்த உலகம் என்ற அவரது முத்தாய்ப்பு சுவையானது. அவருக்கு எப்படி நன்றி சொல்ல…
இசை ஞானமிக்க அருமையான இதழாளர் ப கோலப்பன் அவர்கள், ‘எலந்த பழம் பாடல் பழைய நினைவுகளைக் கிளறியது. கடையநல்லூர் சண்முகசுந்தரம் என்ற நையாண்டி மேள நாகசுரக் கலைஞர் இருந்தார். அவரை எல்லோரும் ஞானப்பழம் புகழ் சண்முகசுந்தரம் என்றே அழைப்பார்கள். அந்த விருத்தத்தை நாகசுரத்தில் வாசித்து, முடிக்கையில் நிலவும் அமைதியை உடைத்து முத்தைத் தருபத்தித் திருநகை….’ என திருப்புகழில் புயலாய்க் கிளம்பி மீண்டும் முடிப்பார். கலைஞர்களுக்கே உரித்தான எல்லாப் பழக்கமும் உண்டு. ஆள் அழகன். எல்லோருக்கும் இளநீர் கொடுக்கையில், அவருக்கு மட்டும் இளநீரை வெளியேற்றி விட்டு அவருக்கான திரவம் நிரப்பப்படும். அதை முடித்ததும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து விட்டு, “எலந்தப் பழம் போடு” என்று நாகசுரத்தில் பொறி பறக்க தவிலும் பம்பை முரசும் ஒலித்த காலம் இருந்தது. எல்லாம் நினைவுகளாய்ப் புகையாய்…..’ என்று பதில் அனுப்பி இருந்தார்.
ஆங்கில இந்து நாளிதழில் இசை தொடர்பான பல அருமையான செய்திக்கட்டுரைகள் பல ஆண்டுகளாக எழுதி வரும் கோலப்பன் அவர்கள், சட்டநாதன் கமிஷன் என்ற பிற்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய முக்கிய ஆய்வறிக்கை வழங்கிய திரு சட்டநாதன் அவர்களது சுயசரிதை நூல், தமிழ் சமூகத்தில் இசைக்குப் பங்களிப்பு செய்திருக்கும் சமூகங்கள் பற்றிய மிக சுவாரசியமான தரவுகளை உள்ளடக்கியது என்று Plain Speaking, a Sudra’s story நூலை அறிமுகம் செய்து எட்டு ஆண்டுகளுக்குமுன் எழுதி இருந்த கட்டுரை இணையத்தில் வாசிக்கையில் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
நாதஸ்வர கலைஞர்கள் பலரது பெயர்கள், நையாண்டி மேளத்திற்கான புகழ் பெற்ற கலைஞர்கள் பற்றிய குறிப்புகள்…. பூதப்பாண்டி அருணாச்சல அன்னாவி அவர்கள் நாகர்கோயிலில் மிருதங்கம், வாய்ப்பாட்டு கற்பிக்கும் இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர், மலையாளத் திரை உலகின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சிதம்பரநாதனின் தந்தை, திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களது ஆசானும் ஆவார். தென்னகத்தில் கொடிகட்டிப் பறந்த பல்வேறு இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து எங்கோ தொலைவில் இருந்ததால் குன்றில் எரியும் தீபமாக அல்லாமல் குடத்தில் இட்ட விளக்காக அமைந்துபோனது அவர்கள் வாழ்வு என்று ஓர் ஆதங்கத்தை அதில் ஒரு கலைஞரது வாரிசு பேசும் குரலும் ஒலிக்கிறது. இடம் மட்டுமல்ல சமூகக் காரணங்களும் முக்கியமானது என்பதை நாம் எளிதில் கடந்துவிட முடியாது.
வேறொரு நாள், தி இந்து நாளிதழின் வேறொரு கட்டுரையில் இன்னும் சுவாரசியமான இன்ப அதிர்ச்சிச் செய்தி வழங்கி இருக்கிறார் கோலப்பன்.
https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-century-old-ivory-nagaswaram/article38048246.ece
இங்கே ஒரு நாதஸ்வரம் பாருங்கள்: தந்த நாதஸ்வரம், அதாவது அனுசு எனப்படும் கீழ்ப்பாகத்திலும் மேல் பகுதியிலும் தந்தம் பயன்படுத்திய நாதஸ்வரம், யார் தந்த நாதஸ்வரம் இது தெரியுமா, இதை யார் வாசித்தது தெரியுமா, அவர் இதை வாசித்தது யாருடைய திருமணத்தில் தெரியுமா ?
மைசூர் மகாராஜா பரிசளித்தது இது. தமது சமஸ்தானத்தில் வந்து வாசிக்கும் புகழ் பெற்ற நெல்லை மாவட்ட சுந்தரபாண்டியபுரத்தின் மகத்தான நாதஸ்வர கலைஞர் சித்திரை நாயகருக்கு அவர் வழங்கியது! இந்த வித்வான் தனது மகளுக்குத் தந்த நாதஸ்வரம், இப்போது அவருடைய மகள் வழக்கறிஞர் ரமணி நடராஜனிடம் பத்திரமாக உள்ளது. திமிரி வகையைச் சார்ந்த இந்த நாதஸ்வரத்தை வாசித்த சித்திரை நாயகர் மிக பிரபல வித்வான்கள் கூட ஆண்டு வருமானம் 750 ரூபாய்க்கு மேல் ஈட்டாத அந்தக் காலத்திலேயேரூ. 2,000/-ல் தொடங்கி ரூ. 4,000 வரை வருவாய் பெற்றவர், தேதி கேட்டுப் பெற்று அழைத்தால் போய் வாசிக்கும் அளவு செல்வாக்கு பெற்றிருந்தவர், 1925ல் மறைந்தார்.
ரமணி நடராஜனின் தந்தை, நாம் சற்றுமுன் பார்த்த சட்டநாதன் அவர்கள். ஆம், சட்டநாதன் அவர்களது மாமனார் தான் சித்திரை நாயகர். அவரைப் பற்றியும் தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்று சொல்லும் கோலப்பன் சொல்லும் முக்கிய தகவல், இந்த நூற்றாண்டு கண்ட இசைக்கருவியைத் தன்னகத்தே பாதுகாத்துவரும் ரமணி நடராஜன் சொன்னது, அவருடைய பாட்டனார் சித்திரை நாயகர் வாசித்தது யாரது திருமணத்தில் தெரியுமா, மகாகவி சுப்பிரமணிய பாரதி – செல்லம்மா திருமணத்தில் தான்….ஆஹா, சிலிர்க்கிறது அல்லவா!
பாரதியை இசை வழி தரிசிப்பது போல் உணர முடிகிறது அல்லவா, ஒரு கணம்! சித்திரை நாயகரிடம் என்ன பேசி இருப்பார் மகாகவி, அந்த இளம் வயதில் என்று எண்ணங்கள் பறக்கின்றன….. இசையில்லாத இடம் எங்கே?
கடந்த சனிக்கிழமை மாலையில் மகன் நந்தாவோடு ராஜியும் நானும் காந்தி சிலையருகே (தேவி பிரசாத் ராய் அவர்களது அற்புத சிற்பம்) மெரினா கடற்கரை சென்று வந்தோம்.
ஜூலை மாதிரியாகவா இருக்கிறது வானிலை, எண்ணெய்க்குடம் போல் மிரட்டிக் கொண்டிருந்தது மாலையில்….அந்தி கருக்கலில், கடல் அலைகள் பளீர் என்று கண்ணாடியை காகிதத் தாள் மாதிரி ஆக்கிச் சுருட்டுவது போல் ஒளி ஊடுருவிக் காட்டியபடி கால்களை நோக்கி வந்து கடலுக்கு மீண்டு கொண்டிருக்க, நுரை பொங்கியெழுந்த ஓசை இசையாக ஒலித்துக் கொண்டிருந்தது. எதிரே வானொலி நிலையத்திற்கான இசையை இங்கிருந்து தான் மொண்டெடுத்துச் செல்கின்றனரோ என்று தோன்றியது.
கரையேறி வந்தபிறகும் இசையேறி உடன் வந்துகொண்டிருந்தது. வீடு திரும்புகையில் ஆட்டோ ஓட்டுநர் தனது அலைபேசிக் களஞ்சியத்தில் இருந்து இசை விதைகள் தூவிக் கொண்டே வந்தார், அருமையான பழைய பாடல்கள் அத்தனையும் – இசை எங்கு தான் இல்லை !
கோவை திருமண மண்டபத்து உரையாடலில் இன்னொரு பாட்டு இன்னும் பேசப்படாதது நினைவில் உருண்டு கொண்டே இருந்தது. தோழர் மோகன சுப்பிரமணியனோடு பேசிக் கொண்டிருக்கையில், இசை பற்றிய உரையாடல் காதில் வாங்கிய அன்பர் ஒருவர், சஞ்சய் சுப்பிரமணியன் புகைப்படத்தைக் காட்டி, ‘இவரோட பாட்டெல்லாம் கேட்டு இருக்கீங்களா?’ என்றார்.
சில பாடல்களைச் சொல்லவும், அதெல்லாம் இல்லை, பணத்தைப் பற்றி ஒரு பாட்டு பாடி இருப்பார் சார்….முன்சீப் ஆக இருந்தாரே, பழைய காலத்தில், யாரு…என்னவோ பிள்ளை என்று வருமே என்றார்…ஆமாம், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றதும், ஆமாம்…ஆமாம். அவரோட பாட்டுத் தான் என்று சொன்னபடி எங்களுக்கு யூ டியூபில் அதைக் காட்ட எத்தனையோ முயற்சி செய்து சலித்து, இங்கே டவர் இல்லை, பாட்டை எடுக்க முடியவில்லை..என்று உச் கொட்டினார். எங்களுக்கும் அதே நிலைமை தான். அப்புறம் தேடியெடுத்துக் கேட்டுவிடுவேன் என்று சொல்லவும் தான் மனிதர் கொஞ்சம் சமாதானம் ஆனார்.
அருமையான தத்துவப் பாடல் அது…. ‘பணமே உன்னாலென்ன குணமே’ என்று தொடங்கும் பல்லவியின் அடுத்த வரி, ‘தண்டம் பண்ணினேன் (உன்னைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்!) சற்றுமென் கண்ணின் முன் நில்லாதே’ என்று என்று அமைக்கப்பட்டிருக்கிறது.
வேத நாயகம் பிள்ளையின் அந்தப் பாடலில் இருந்து இரண்டே இரண்டு சரணங்கள் எடுத்துக் கொண்டு சஞ்சய் சுப்பிரமணியன் அதன் கூர்மையான விமர்சன கருத்துகளில் ஆழ்ந்து ரசித்துத் திளைத்துப் பாடும் விதமே அபாரமாக இருக்கும்.
ஏதோ பணத்தைப் பற்றி ஆரம்பிக்கிறார், என்ன சொல்லப் போகிறார் என்று அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை, வேதநாயகம் பிள்ளையின் அசாத்திய அதிரடி வருணிப்பால் – அவற்றைத் தனது கற்பனை மிகுந்த இசைக் கோலத்தால் அசத்திக் கொண்டே செல்கிறார் சஞ்சய்.
‘மணமில்லா மதமோகம்…. குரோதம் ….துன்மார்க்கமும் ….மூர்க்கமும் யார்க்குமே போதிக்கும் – பணமே’ என்பது அனுபல்லவி. அதில் மணமில்லா மத மோகம் என்பதை அதன் அருவருப்பு வெடிக்கிற தோரணையில் எடுக்கிறார் சஞ்சய், அதோடு குரோதம் என்ற சொல்லை இணை சேர்க்கிறார். பாடலை இயற்றியவரின் சந்தச் சொற்களான ‘துன் மார்க்கமும் மூர்க்கமும் யார்க்குமே’ மூன்றையும் அவற்றின் பொருள் உணர்த்தும் வெறுப்பைச் சிந்தியபடி, பல்லவியைச் சென்று தொடுகிறார். அதிலும், ‘கண்ணின் முன் நில்லாதே, பணமே’ என்பதில், அய்யா போதுமடா சாமி ஆளை விடு என்கிற குறிப்பு தெறிக்கும்.
‘தேடியுனை வைத்து’ என்று தொடங்கும் சரணம் அட்டகாசம். காசு நிரம்ப சேர்த்து வைத்திருந்தால் முடியவே முடியாத ஆயுள் வாய்க்குமா என்பது முதல் கேள்வி. ‘எமன் வந்து அழைக்கும்போது பணம் வந்து தற்காத்து நிற்குமா?’ என்பது இரண்டாவது ! ‘தேடியுனை வைத்து மூடியவர்க்கு…’ என்கிற வரியை அத்தனை சங்கதிகள் போட்டு இழைத்து, ‘தீர்க்காயுசைத் தருவாயா’ என்ற கேள்வியில் கொண்டு வந்து நிறுத்துவதும், ‘நாடி யமன் வந்து சாடும்போது நீ நானென்று முன் வருவாயோ’ என்று அடுத்த கணை தொடுப்பதும், ‘கூடிய பேர்கள் குடியைக் கெடுப்பாயே’ என்ற அடுத்த வரியில் பிடிபடும் ஏசலும், ‘கொல்லச் சொல்லிப் பின்னும் காட்டிக் கொடுப்பாயே’ என்ற அடுத்த வரியில் பறக்கும் சாடலும் சஞ்சய் சுப்பிரமணியன் அத்தனை உயிர்ப்பாகக் கொண்டுவருகிறார்.
‘ஓடியோடி அற்பரைப் போய் அடுப்பாயே, உத்தமரைக் கண்டால் ஓட்டம் எடுப்பாயே’ என்று வரும் கடைசி இரண்டு அடிகள் அத்தனை அம்சமாக இசைப்பார் சஞ்சய். சரணத்தின் ஒவ்வோர் அடிக்கும் பார்வையாளரிடம் அத்தனை பரவசத்தை, சிலிர்ப்பை, பணத்தின் சித்து விளையாட்டு குறித்த சிந்தனைகளை சஞ்சய் கிளர்த்தும் விதம்தான் அறிமுகம் அற்ற அந்த அன்பரை இந்தப் பாடல் பரிந்துரைக்க வைத்திருப்பது.
மெல்லிசை மன்னர்கள் 1952இல் ஒன்றாக இணைந்து இசையமைத்த முதல் படம், ‘பணம்’ என்று சொல்லப்படுகிறது. கலைவாணர் இயக்கிய படத்தில் அவருக்குப் புகழ் ஈட்டித் தந்த பாடலும் பணத்தின் சித்து விளையாட்டு பற்றியது தான். கண்ணதாசன் புனைந்தது என்ற குறிப்பு இணையத்தில் இருக்கிறது.
பாடலை விளக்க வேண்டிய தேவையே இல்லை, ‘உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்’ என்ற பல்லவியிலேயே பணம் அதைத் தவிர மற்ற வேலைகளுக்கே அதிகம் வாய்க்கிறது என்று பொருளாகிறது. ‘அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை…’ என்ற பல்லவியின் கடைசி வரியில் எத்தனை எள்ளல், எத்தனை அங்கதம்! கறுப்பு மார்க்கெட், கஞ்சன், கிண்டி ரேஸ் ஒன்றையும் விடுவதில்லை முதல் சரணத்தில்! ‘அண்டிய பேரை ரெண்டும் செய்யும் பணத்தை எங்கே தேடுவேன்’ என்ற கடைசி வரியில், அப்பாவிகள் படும் பாடுகள் மீது எத்தனை அனுதாபங்கள் அவரது குரலில்!
‘புதையல் ஆனாயோ, நகைகளாகித் தொங்குகின்றாயோ, கோயில்களிலும் ஆசிரமங்களிலும் சரண் புகுந்தாயோ, நடிப்புத் துறவிகளோடு உலவுகின்றாயோ’ என்ற இரண்டாம் சரணம் இன்னும் ஈர்ப்பாகப் பாடி இருப்பார் என் எஸ் கே. புதையல் ஆனாயோ என்ற இடத்தில் தொடங்கும் நையாண்டியைச் சரணத்தின் கடைசி வரையிலும் படிப்படியாக ஏற்றிக்கொண்டே செல்வார் கலைவாணர்.
‘திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ’ என்கிற இடத்தை மட்டுமே பக்கம் பக்கமாக விரித்துரைக்க முடியும். ‘திருவண்ணாமலை குகை புகுந்தாயோ’ என்கிற வரி எப்படி தணிக்கையில் தப்பித்தது தெரியவில்லை. ‘இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ’ என்பதற்கு அடுத்து, ‘கண்டெயினர் லாரிகளில் கண் துயின்றாயோ’ என்று இப்போது சேர்க்கத் தோன்றுகிறது. மூன்றாம் சரணத்தின் கடைசி வரி மகத்தானது, ‘இரக்கம் உள்ளவரிடம் இருக்காத பணம்..’ என்று என்னமாக வந்து விழுந்திருக்கிறது!
நான்காவது சரணம், தேர்தல், உல்லாச வாழ்க்கை, பதுக்கல் என்று பணம் எங்கெல்லாம் போனதோ என்று வரிசைப்படுத்தி நிறைவாக சூடம் சாம்பிராணியாகப் புகைந்து போனாயோ என்று சந்தையையும் (ஆன்மீகச் சந்தையையும் சேர்த்து) ஒரு கலக்கு கலக்கிப் பல்லவிக்குப் போய் நிறைவு செய்வார் கலைவாணர். சமூக விழிப்புணர்வுப் படைப்பூக்கம் நிரம்பிய கலைஞர்களில் முக்கியமானவர் அவர்.
‘குடியரசு வேந்தர்’ என்ற தனது அருமையான படைப்பில், உலகப் புகழ் பெற்ற ருஷ்ய எழுத்தாளர் மக்சீம் கார்க்கி, அமெரிக்க விஜயத்தில் சந்திக்கும் கோடீஸ்வரன் ஒருவனை முன்னிறுத்தி, முதலாளித்துவ சமூக அமைப்பில் பணத்தின் அதிகாரத் திமிரை, ஆணவ வெறியாட்டத்தை, எளிய மக்கள் வாழ்க்கை மீதான அதன் அராஜக அத்து மீறலை மிகவும் காத்திரமாக வடித்திருப்பார்.
அன்பு, காதல், நட்பு, கலை, இலக்கியம் எல்லாவற்றையும் பணம் எப்படி விலைபேசி விடும், ஈவிரக்கமற்று சிதைக்கும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சும் கவித்துவமாகச் சொல்லி இருப்பார்கள். அண்மையில் மேற்கே ஒரு மாநிலத்தில் அரசியல் அதிகாரத்தை இரவோடு இரவாகப் பணம் கை மாற்றிவிட்டதை நாடு மௌனமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் தீனக் குரல் இப்படி அடிக்கடி பதற நேருவது பழகிப் போன ஒன்றாகி விட்டது சமூகத்திற்கு. ஜனநாயகம் தான் இசை, அதன் அத்து மீறல் நாராசம்.
இசையால் நிரப்புவோம் இதயங்களை, இரத்த ஓட்டம் சீராக இயங்கவும், மூச்சுக் காற்று இன்னும் தூய்மையாகவும்!
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: தமிழகத்தின் கல்வியை ’’முன்னுதாரணம்” ஆக்குவோம் – ஆசிரியர் குழு
♻️ முத்துக்கள் பத்து: நான் வாசித்தேன் நீங்கள்? – ஆயிஷா இரா. நடராசன்
♻️புத்தகக் காதல் 5: 13 எழுத்தாளர்கள் 28 கேள்விகள் – ச.சுப்பாராவ்
♻️நூல் அறிமுகம்: அறிவியலை இப்படியும் கற்பிக்கலாம் – வெ.பிரித்திகா
♻️நூல் அறிமுகம்: பணமதிப்பு நீக்கம் : இந்திய நாணயப்பரிசோதனை குறித்த பார்வை – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: இன்றைய தேவையை உணர்த்தும் இருநூல்கள் – சா. ஜார்ஜ்டேவிட்
♻️ நூல் அறிமுகம்: கைத்தறியிலிருந்து கணிப்பொறி – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிம்கம்: பெரம்பலூர் சான்றோர்கள் வளர்த்த ஆளுமை உ.வே.சா -ஆ. தினேஷ்குமார்
♻️நேர்காணல்: மாற்றம் – இளைஞர்கள் இதுவே என் நம்பிக்கை – அ. சவுந்தரராஜன்
♻️வாசிப்பு ரசனை வாழ்க்கை 18: வாசகரின் சொர்க்கம் – எஸ் வி வேணுகோபாலன்
♻️கட்டுரை: இளம்பெண்களின் இலக்கிய வாசிப்பு ஆர்வத்தை அதிகரித்த 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – வே.தூயவன்
♻️நூல் அறிமுகம்: அறிவுக்கு ஆயிரம் கண்கள்- மோகனப் பிரியா. G
♻️ கட்டுரை: சூழலியல் எழுத்து: நம்பிக்கை தரும் ஆழமான முயற்சிகள் – அமிதா
♻️நூல் அறிமுகம்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் – சு. அழகேஸ்வரன்