mathiraj kavithai மதிராஜ் கவிதை

மதிராஜ் கவிதை

ஒரு மரத்தை வளர்ப்பதால்.... ஒரு கோடை முடிந்து பூத்துக் காய்க்கும் போது இந்த வேப்ப முத்துக்களை பொறுக்கி அந்த மூதாட்டியால் தன் வாழ்க்கையை கடத்த முடியும் வடை சுட நேரிடுகையில் அந்த பூவரசு இலைகள் உள்ளங்கையில் உபயோகப்படுத்தப்படலாம் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க…
சரகு கவிதைகள்

சரகு கவிதைகள்




தீயாக்கல்
***************
பிணைத்துக் கொண்ட மேகங்கள் ..
வெள்ளிப் பாலாய்க்
கொட்டிய மழை..
அடங்காத அன்பின் ஊற்றால்..
ஆகாசந்தொட்ட நெடுமரங்கள்..
பச்சைக்குப் பட்டா?!..
பட்டுக்குப் பச்சையா?!..
பிதுங்கி நின்றன
வியப்பின் விழிகள்..

ஓசோனின் சேலை வைத்து..
மனிதர்கள் சூதாட ..
துரியோதனன்கள் சபை கூட..
துச்சாதனன்கள் உருவத் தொடங்க..
காட்டின் வயிறு எரிகிறது..

அணைக்க முயல்க…

பணமாக்கல்
***************
ஏழையின் வீட்டில் ..
வயிறு எரியாமல் ..
விறகு எறிந்தால் ..
பணக்காரன் பதறுவது … ஏன்?

– சரகு

மு. சரவணக்குமார்,
ஈரோடை.
9488076070.

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




பறந்து வந்து
மரத்தின் கீழ் கிளையில்
அமர்ந்த அந்த பறவையிடம்
உன்னை ஏன் எல்லோரும்
பறவையென
அழைக்கிறார்கள் யென்றேன்
அக்கிளையிலிருந்து
பறந்து வேறு
ஒரு மேல் கிளையில்
அமர பறந்து போனது
அந்த பறவை
நானும் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்
நீ பறப்பதனால் தான் உன்னை எல்லோரும் பறவையென்கிறார்களென்று,

கவிஞர் ச.சக்தி

இருபத்திநாலு மணிநேர பகல் கவிதை – ஜேசு ஞானராஜ்

இருபத்திநாலு மணிநேர பகல் கவிதை – ஜேசு ஞானராஜ்




வாகை மரத்தடியில் தூக்கம்
சோகமாய் அமர்ந்திருந்தது!

தூரத்தில் இரவு
செத்துக் கிடந்தது!

தாகம் தேடிய தண்ணீர்
அழுது சோர்ந்த நிலவுக்கு
ஆதரவுக் கரம் நீட்டியது!

மல்லிகை மணமும்
ஜல் ஜல் ஒலியும்
சுதந்திரம் போனதாய் அரற்றின!

அரவான்களும் கோட்டான்களும்
பசியைத் தின்று கொண்டிருந்தன!

சோகம் நிரந்தரமாய்
இரவு காவலாளியிடம்
ஒட்டிக்கொண்டது!

மோகமும் விரக தாபமும்
இச்சையிடம்
கால நீட்டிப்புக் கேட்டன!

இருபத்திநாலு மணிநேரமும்
வேலைசெய்ய மறுத்து
கடவுளிடம் முறையிட்டது பகல்!

கடவுள் என்னைப் பார்த்தார்!
கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறேன் நான்!

– ஜேசு ஞானராஜ், ஜெர்மனி

நூல் அறிமுகம்: அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்

நூல் அறிமுகம்: அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்




ஒரு ஊரில் மாறன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கதை கேட்காமல் தூக்கம் வராது.
ஒரு நாள் அவங்க அம்மா தூங்கிட்டதால அப்பா தான் கதை சொன்னார். அப்போ ஒரு கேள்வி கேட்டார்.
அவர் என்ன கேள்வி கேட்டார்ன்னா, அவங்க வீட்டு ஹால்ல ஒரு பெரியார் போட்டோ இருந்தது. அதைப் பத்தி கதை சொன்னார்.

அவர், பெரியார் பத்தி விசயங்களை சொன்னார். என்னவென்றால் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ஹால்ல ஒரு நிழல் தெரிந்தது.
பெரியார் நிழல் தான்.
அப்போ அதைப் பார்த்து அங்கே போனான்..
ஐ.. பெரியார்..! அப்பா, இங்கே பாருங்க, பெரியார் தாத்தா..!

அவரும் வந்து பார்த்தார்.. அட, ஆமா.. பெரியார் தாத்தா தான்..
மாறன் அவங்க அப்பாவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது.

பெரியார் தாத்தா சொன்னார், பேரா, ஏங்கூட வா.. சில விசயங்கள் சொல்றேன் என்றார். அப்போ அவர் கையில் ஒரு தடி வைத்திருந்தார்.. அதை வைத்து ஒரு மினி ஜெட் உருவானது.. அதில் ஏறிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தில் மக்கள் எல்லோரும் கேஸ் எரிக்க பணம் கட்ட முடியாமல் மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி விறகு எரித்தனர். மரத்தையெல்லாம் வீணாக்கி விட்டார்கள்..

இத எல்லாத்தையும் மாறனிடம் சொல்லிக் கொண்டே வீடு போய் சேர்ந்தனர். பெரியார் தாத்தா எப்படியாவது மக்களுக்கு புத்தி வர வைக்கணும் என்று ஒரு திட்டம் போட்டார்.

மாறனைக் கூப்பிட்டு நான் ஒன்று தருகிறேன்.. அதைக் கொண்டு போய் கிராமத்தின் எல்லையில் நட்டு வை என்றார்..

குங்கும பொட்டு வச்சவர் சொன்னார், நாங்களே வாழ முடியாமல் இருக்கிறோம்.. நீ செடியை வேற நட்டு வைக்கிற.. இதுக்கு யார் தண்ணீர் ஊத்துவா?

அதைப் பாத்த பெரியார் தாத்தா, இவங்கல்லாம் திருத்தவே முடியாது. மாறன் வீட்டுக்குப் போயி தாத்தாவிடம் அங்க நடந்தத சொன்னான்..

கிராமத்துக்கு நடுவுல்ல ஒரு ஆலமரம் இருந்தது. அது யாராவது அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை உடச்சா கூட, அந்த ஆலமரம் வேரோடு எழுந்து வந்து அடிச்சு தொவக்யும்..

மாறன் கிளையை உடைத்தா மட்டும் ஆலமரம் அவனை ஒன்னும் செய்யாது.. ஏனென்றால் ( அதை கதை முடியும் போது கூறுகிறேன்)

மாறன் நட்டு வைத்த செடி வளர்ந்தது. அதைப் பார்த்து வாயைப் பொலந்தார்கள்.. இதை யார் நட்டு வைக்கச் சொன்னது என்று கேட்டார்கள்.. பெரியார் தாத்தா தான் நட்டு வைக்கச் சொன்னார் என்றான்..

பெரியார் தாத்தா வந்தார். கிராமத்து மக்களிடம், நீங்களும் செடிகளை நட்டு வையுங்க.. எதற்காக என்றால் இயற்கையைப் பாதுகாக்கத்தான் சொல்கிறேன்..

இடையில் மாறன் கிளையை உடைத்தால் மட்டும் ஏன் ஆலமரம் அவனை அடிக்காது என்று சொன்னேன்ல.. ஏன் என்றால் தாத்தா எல்லாத்தையும் கண்ட்ரோல் ரூமில் இருந்து கண்ட்ரோல் செய்தார்..

இதில் இருந்து என்ன புரியிது என்றால் இயற்கையை அழிக்கக் கூடாது. இயற்கையை இன்னும் அதிகரிக்கணும்..

நூல் : பெரியார் தாத்தா
ஆசிரியர் : அருண் மோ
விலை : ரூ.₹350
வெளியீடு : மகிழ் பதிப்பகம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

சு.டார்வின், நான்காம் வகுப்பு
10.11.22

ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்

ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்




சன்மானம்
**************
தவில்காரனின் நடைக்கும்
நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி

பபூனை சோடியிட்டு
குலுங்கி ஆடுகிறாள்
குஜிலியம்பாறை ஆட்டக்காரி

செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம்
இந்நேரம் இருந்திருந்தால்
அள்ளி அணைத்து
குத்தியிருப்பார்
ஐநூத்தி ஒன்னு.

அரட்டல்
***********
சென்ற வருடம்
நாண்டுகொண்ட சின்னம்மா

வயதுக்கு வந்த தன் மகளை
அன்றாடம் அரட்டுவதாக
என்னிடம் குமைகிறாள்
அத்தை

அப்புராணி சின்னம்மா
அப்படி அரட்டுவதாயிருந்தால

கூத்தியாள்பேச்சைக்கேட்டு
கொடுமைப்படுத்திய
குடிகார சித்தப்பனை அல்லவா
அரட்டியிருக்கவேண்டும்?

நிழல்
********
வெயிலில் காய்கிறார்
வீரனார்

வீச்சரிவாள் மீது கவிகிறது
வேம்பின் நிழல்

தேஜஸ்
*********
பௌர்ணமி இரவில்
மினுங்கும் அரசிலைகளுக்கு

புத்தனின் தேஜஸ்

கிளை
********
பழங் கட்டிடத்தில் வேர் பிடித்து நிற்கும்
மரமொன்றின் சிறு கிளைக்கு

பறவையொன்றின்
பாதத்தோற்றம்

– ஸ்ரீதர்பாரதி

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




ஒரு வேப்ப மரத்தின் சிரிப்பு
*******************************
இலை துளிர்காலம்
வசந்தகாலம்….
வனப்பில் துள்ளின
வேம்பின் இலைகள்
பசேலென….

அந்தச் சாலை ஓரத்தில்
கம்பீரமாக….
மழை வரும்போதுகூட
அறியாமையில்
அண்டிச்செல்லும் மனிதர்கள்!

கோடை வெயிலென்றால்
குடும்பமே நடத்துகின்றார்!

ஒரு இலை நிழலுக்கு
ஒரு மனிதனென
சுகமென புகழும்
புகழுரைகள்!

எறும்புகளின்
எகத்தாளங்கள்
கன்று காளைகளின்
அண்டல்கள்!

சும்மா கிடைத்து விடும்
சுகபோகமென்ற
சோம்பேறிகளின்
சொர்க்க புரியாகிறது
வேப்ப மர நிழல்!

ஓய்வை விரும்பி நின்றபோதும்
காமம் கொண்டு தழுவும்
காற்று;

காமக் காற்றின்
சுகம் உணரும்
சோம்பல் கூட்டம்!

உடலுக்கு நல்லதென
ஒய்யாரக் கூட்டம்;

கிளை அமர்ந்து
இல்லமாக்கும்
சின்னக் குருவிகள்!

இராக கீதமிசைத்து
எச்சமிட்டு
நாளை பறப்பதற்கான
ஆசுவாசம் கொள்ளும்
அடைக்கலம்!

சின்னக் குருவிகளின்
எச்சங்கள்
கனவுலகில் சஞ்சரிக்கும்
மரத்தடி மரண உறக்கக்காரர்களின்
திறந்த வாயில்…. !

உறக்கமற்ற சில
சோம்பேறிகளின்
காட்டுக் கூச்சல்….

எச்சமிட்ட சின்னக் குருவிகளை
வார்த்தைக் கற்கள் வீசி… விரட்டும் சோகம்!

முளைப்பதற்கு விதைபோடாதக் கூட்டம்;
உரிமை கொண்டாடி;
முளைப்பதற்கு விதைபோட்டக்
குருவியின் வாரிசுக்கு
அண்ட இடமின்றி
அடித்து விரட்டும் சோகம்!

உரிமைக்குக் குரல் கொடுக்கத் தெரியாத
சின்னக் குருவிகளின்
கூட்டம்!

யாரோ போட்ட விதையில்
சுகமாக குறட்டை விடும்
கூட்டம்;

சிரித்துக் கொள்வதைத் தவிர….
வேறென்ன செய்யும் மரம்?!

மண்ணானக் கற்பனை
***************************
கற்பனை என்ற
கடிவாளமற்றக் குதிரை
ஒவ்வொரு
மனிதனிடமும் உண்டு!

கற்பனைகளால்தான்
மனிதன் மேம்பட்டான்
என்பதனை விட,
கற்பனையில் மிதந்து
பறந்து, நீந்தி….
வாழ்க்கையை
கற்பனையிலேயே
கறைத்துக் கொண்டான்
மனிதன்!

ஒரு மனிதனின்
கற்பனைதான்
இன்று
உலகையே உலுக்கிக்
கொண்டிருக்கிறது!

பேய்க் கற்பனை!
ஏதோ…
நாட்டுக்கு நாடு
பெரியவன் சிறியவன்
என்ற
வீராப்பு…
வெட்டி வீராப்பு….

கடைசியில்
உழைப்பாளர் நிறைந்த
ஒரு
அழகியக் குட்டி நாட்டை
சுடுகாடாக்கிப் பார்த்ததுதான்
அந்த
ஒருவனின்
பேய்க் கற்பனை!

கற்பனையைப்பற்றி
கதைப்போமானால்
அது
கரையின்றி
கதைத்துக் கொண்டேயிருக்கலாம்!

எட்டாதக் கற்பனை
எவனுக்குத் தோன்றியதோ?

அந்தக்
கல்லையும் கரையவைத்த
கற்பனை
எவனுடையதோ?
மண்ணாய்ப்போக!

மலையை
மண்ணாக்கியக் கற்பனையை
நாளை
மன்னிக்காது
எங்கள்
மழலையர் உலகம்!

மலையை
வரலாறாக மட்டுமே…
ஏட்டுக் கல்வியில்
படித்தால்
சபிக்கவும் செய்யும்;

சாப விமோசனமே
இல்லை… இல்லை..
மலையை
மண்ணாக்கச் சொல்லி
கற்பனை செய்து
நிஜப்படுத்தியவனுக்கு!

– பாங்கைத் தமிழன்

கவிதைச் சந்நதம் தொடர் 27 : கவிதை  சோலை.பழநி – நா.வே. அருள்

கவிதைச் சந்நதம் தொடர் 27 : கவிதை சோலை.பழநி – நா.வே. அருள்




கால மரம்
************
மனிதனை விட மரங்களுக்கு ஆயுள் அதிகம். பல நிகழ்வுகளைப் பார்த்த மரங்கள் மௌன சாட்சியாக நின்றிருக்கின்றன. சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை” ஒரு ஊருக்கே சாட்சியாக நின்றிருக்கிறது. உண்மையில் சு.ரா. தனது ஊரில் கண்டது வேப்ப மரம். நாவலுக்காக வேப்பமரம் புளிய மரமாகிவிட்டது என்று சு.ரா அவர்களே சொன்னதாக நினைவு.. இந்தக் கவிதையில் வருகிற ஆலமரம் உண்மையில் காலமரம்; பல காட்சிகளின் சாட்சியம். காலம் என்னும் சதுரங்கத்தில் மனிதன் நகர்த்தப்படும் காய்… அவ்வளவுதான். காலத்தின் வேர்களைக் கண்டுபிடிக்க அறிவியல் இன்னும் அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டேயிருக்கிறது.

கவிஞனிடம் காலம் வேறு வகையில் பயன்படுகிறது. கால மரம் தன் நினைவுகளைத் தானே அகழ்ந்தெடுக்கிறது. அகழ்ந்தெடுக்க அகழ்ந்தெடுக்க ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் காலத்தின் கதை. அறிவியலில் அகப்படாத காலத்தின் சூட்சுமத்தை வரலாற்றில் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.
“நான்
வயதான ஆலமரம்
நூறு கால் மண்டபமாய்.

என் வேர் எதுவென்று
நிறைய பேர்
ஆராய்ச்சி செய்தார்கள்
காணத்தான் முடியவில்லை.”

கால மரம் கவனித்துக் கொண்டேயிருக்கப் பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த மண்ணையும் மனிதர்களையும் புரட்டிப் போட்ட மகாத்மா முதல் பாட்டுக்களாலேயே வையத்தைப் பாலித்திட வந்த பாரதி வரை கால மரத்தின் நிழலில் நிற்காதவர்களே இல்லை.
“எங்களூருக்கு
மகாத்மா வந்தபோது
என்னடியில்தான் கூட்டம்.

மரக்கிளைகளில் எல்லாம்
மனிதர்கள்
காய்த்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதி ஒருமுறை
என் நிழலின் கீழிருந்துதான்
கனகலிங்கத்திற்கு
பூணூல் மாட்டி காயத்ரி மந்திரம்
ஜெபிக்கச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்”.

காலம் தனது வரவு செலவு கணக்கை மனிதர்களை வைத்துத்தான் சரி பார்த்துக் கொள்கிறது. காலம் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. காலம் யாருக்கும் வஞ்சனை செய்வதுமில்லை. காலம் என்பது தயவு தாட்சண்யமோ, ஓர வஞ்சனையோ பார்க்காத இயற்கையின் அறம்.
காலமெல்லாம் ருசிக்க அமுதக் கனிகளாகக் காய்த்தவர்கள் பெரியார், ஜீவா, காமராஜர் என்கிறது கால மரம். வரலாறு வரிகளாக ஆகியிருக்கின்றன. மறந்து போகக் கூடிய மனிதர்களுக்கு மருந்தாகியிருக்கிறது கவிதை. சில நேரங்களில் கசப்பு மருந்தாக….
“பெரியார்
இளைஞர்களுக்கு
அறிவாயுதம் கொடுத்ததெல்லாம்
என் மடியில்தான்.

முள் குத்திக் கொள்ளாமல்
சுட்ட கருவாட்டை
பிய்ச்சி எடுத்து ஊட்டுவதுபோல்
கஞ்சிக்கிலாக் காரணம் கூறி
தீப்பொறியைப் பற்றவைத்த
தோழர் ஜீவா
இரவெல்லாம் படுத்துக் கிடந்ததும்
என் வேரில்தான்.

ஆல மரத்தடியை
ஆரம்பப் பள்ளியாக்கி
மாடு மேய்த்த பிள்ளைகளை
மாணவர்களாக்கி மகிழ்ந்த
காமராசருக்கு
நிழல் கொடுத்து நின்றதும் நான்.”

1967 இல் திராவிடத்தின் திருவிளையாடல் தொடங்குகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களை நினைவுகூர்கிறது. சுவற்றில் ஒரு வெடிப்பு போல காட்சி தந்தது காலப் போக்கில் சுவரே இடிந்து விழுந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வு போலத் தோற்றம் தந்த ஒன்று பெரிய பிளவாக மாறியதைக் காலம் கூறாமல் கூறி குமைகிறது.

என் உச்சி முடியில் கொடிகட்டும்
தம்பிகளின்
மன சிம்மாசனத்தில் இருந்து
அழகு தமிழ்பேசி
அன்பால் அரசாண்ட
அண்ணாவின்
அடுக்கு மொழிக்கு மேடையும் நான்.

அரசு கட்டிலானாலும்
முரசு கட்டிலானாலும்
வார்த்தை ஜால வித்தைக்காரர்
கலைஞருக்கு
கோடையிலே இளைப்பாற
நிழல்கொடுத்த குளிர் தருவும் நான்.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவியென
எத்தனையோ தலைவர்கள்
என்னடியில் கூட்டமிட்டு
எழுச்சியைக் காட்டுவார்கள்.

அப்போதெல்லாம்
நான்
அகம் மகிழ்ந்து
குளிர்ந்த காற்றெடுத்து
கூட்டத்தார் மேனியெலாம் பூசி
மகிழ்வித்திருக்கிறேன்.

குளிர்காலம், மழை காலம், இளவேனிற் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், வசந்த காலம் என்று பருவ காலங்களைப் பார்ப்பதுதான் ஆலமரம். பல அரசியல் காலங்களைப் பார்ப்பது கால மரம். எப்படி எப்படியான அரசியல் முழக்கங்கள், கொள்கைக் கூட்டங்கள், பிளவுகள், பிரிவினைகள்…. ஆனால் மனிதநேயமே அடிப்படையாய் இருந்தது. மனித நேய நூல்களாலான அரசியல் இழைகள். இழைகள் அத்தனையையும் இணைத்துச் சேலைகள் நெய்வதே ஆட்சியதிகாரம். இப்போதெல்லாம் மதம், சாதி, இனம் என்று பிரிவினை பேசும் பிற்போக்கு ஆணவங்கள். அம்மணமே ஆடையாகும் அவலநிலை. நினைவுகளைச் சுமந்த மரம் நிர்க்கதியாக நிற்கிறது. இலைகளை உதிர்த்து எதிர்ப்பைச் சொன்ன மரம் நிழலையும் உதிர்க்க நினைக்கிறதோ?
“மனிதர் நோக மனிதர் சாக
மகுடி ஊதும்
மதவெறிக் கூட்டமின்று
என் நிழலில்
கூடாரம் அடிப்பதைக் கண்டு
தடுக்க முடியாமல்
ஓர் இலைகூட இல்லாமல்
உதிர்த்துவிட்டேன்
இனி
சூரியன்தான் சுட வேண்டும்.”

– சோலை பழநி

நான்
வயதான ஆலமரம்
நூறு கால் மண்டபமாய்.

என் வேர் எதுவென்று
நிறைய பேர்
ஆராய்ச்சி செய்தார்கள்
காணத்தான் முடியவில்லை

எங்களூருக்கு
மகாத்மா வந்தபோது
என்னடியில்தான் கூட்டம்.

மரக்கிளைகளில் எல்லாம்
மனிதர்கள்
காய்த்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதி ஒருமுறை
என் நிழலின் கீழிருந்துதான்
கனகலிங்கத்திற்கு
பூணூல் மாட்டி காயத்ரி மந்திரம்
ஜெபிக்கச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

பெரியார்
இளைஞர்களுக்கு
அறிவாயுதம் கொடுத்ததெல்லாம்
என் மடியில்தான்.

முள் குத்திக் கொள்ளாமல்
சுட்ட கருவாட்டை
பிய்ச்சி எடுத்து ஊட்டுவதுபோல்
கஞ்சிக்கிலாக் காரணம் கூறி
தீப்பொறியைப் பற்றவைத்த
தோழர் ஜீவா
இரவெல்லாம் படுத்துக் கிடந்ததும்
என் வேரில்தான்.

ஆல மரத்தடியை
ஆரம்பப் பள்ளியாக்கி
மாடு மேய்த்த பிள்ளைகளை
மாணவர்களாக்கி மகிழ்ந்த
காமராசருக்கு
நிழல் கொடுத்து நின்றதும் நான்.

என் உச்சி முடியில் கொடிகட்டும்
தம்பிகளின்
மன சிம்மாசனத்தில் ருந்து
அழக தமிழ்பேசி
அன்பால் அரசாண்ட
அண்ணாவின்
அடுக்கு மொழிக்கு மேடையும் நான்.

அரசு கட்டிலானாலும்
முரசு கட்டிலானாலும்
வார்த்தை ஜால வித்தைக்காரர்
கலைஞருக்கு
கோடையிலே இளைப்பாற
நிழல்கொடுத்த குளிர் தருவும் நான்.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவியென
எத்தனையோ தலைவர்கள்
என்னடியில் கூட்டமிட்டு
எழுச்சியைக் காட்டுவார்கள்.

அப்போதெல்லாம்
நான்
அகம் மகிழ்ந்து
குளிர்ந்த காற்றெடுத்து
கூட்டத்தார் மேனியெலாம் பூசி
மகிழ்வித்திருக்கிறேன்.

மனிதர் நோக மனிதர் சாக
மகுடி ஊதும்
மதவெறிக் கூட்டமின்று
என் நிழலில்
கூடாரம் அடிப்பதைக் கண்டு
தடுக்க முடியாமல்
ஓர் இலைகூட இல்லாமல்
உதிர்த்துவிட்டேன்
இனி
சூரியன்தான் சுட வேண்டும்.

– சோலை பழநி

ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்

ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்




ஒரு பூ
ஓர் ஆணிற்குப் பெண்ணின் நினைவாய்
ஒரு பெண்ணிற்கு ஆணின் நினைவில்

தெய்வங்கள் சூடிக்கொள்ளும்
மறதியின் ஒரு பூ
யாருக்குமே கிடைக்காது
மண்ணோடு மண்ணாகி
மறைகிறது ஒரு பூ

இங்கு எனக்குக் கிடைத்திருக்கும்
ஒரு பூ
ஒரேயொரு ஒற்றை இலவம் பூ
சிவந்தவிழ்ந்த இதழ்களும்
நடுவே காத்து நிற்கும் மகரந்தக் கூட்டமும்


எனக்கெனவும் ஒரு பூ இங்கு மலரத்தான் செய்கிறது

*************************************************************

ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பெயர் உண்டு நம்மிடம்
மரங்களுக்கோ அவை ஏற்றுள்ள பெயர்கள்
நிச்சயம் வேறொன்றாகத்தான் இருக்கும்

அவை நமக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கும்
அந்த பெயரில் நம்மை நினைவு கூறும்
ஒவ்வொரு கனியிலும் பூவிலும் இலையிலுமென
அவற்றின் நினைவுகள் படர்ந்து நிற்பதாய் தோன்றுகிறது

நம் பெயரின் நினைவிலும் ஒரு பூ மலர்ந்திருக்கும்
ஒரு கனி காய்த்திருக்கும்
ஓர் இலை துளிர்த்திருக்கும்
உதிர்வதற்கு

விக்னேஷ்குமார்,
காஞ்சிபுரம்.