ஞாபகமாக..

பசும் புல்லைப் போல
வளர்ந்து செழித்திருக்கிறது நம் நேசம்

இதே நிலவை மீண்டும் பார்க்க
ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம்

நாம் அப்போது பறவைகளாக மாறியிருப்போம்
அல்லது பேசும் நட்சத்திரங்களாக

இப்போது நம் நேசத்தை கருவுற்றிருக்கும்
அப்போது இருக்குமோ என்னவோ?
ஒரு மனது இல்லை என்றால்
நேசம் எப்படி உயிர்க்கும் ?

அலகுகளால் தீண்டலில்
சிறகுகளின் உரசலில்
ஆயிரம் ஆண்டுகள் ஞாபகத்திற்கு வரலாம்
சிறு உரையாடலில்
பூமி ஒரு சொல்லாக கூட
உயிர்த்தெழலாம்

கோடி மழைத் தாரைகளில்
ஒரே ஒர் துளி தேடி வந்து
நம் தலை மீது விழும் போது தானே
நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
மழை மேகமாய் இருந்தது
நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது

வானத்திலிருந்து வானத்திற்கு..

உன் உக்கிர பிம்பத்தை
முழுமையாய் பிரதிபலிக்க இயலாததொரு
பலவீனமான ஆடி நான்

ஆயிரம் மழைத்தாரைகள்
ஒரே நொடியில்
ஒரு சின்னஞ்சிறு இலையை
கருணையற்று தீண்டும் போது
செம்பருத்தி மரத்தில்
ஒரு அறியாச் சிறுமி
வானத்திடம் கையேந்தி நிற்கிறாள்

நான் என் கைகளை
மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு
உன்னை எதிர்பார்க்கும் நேரம்
உள்ளதிரும் அணுக்களின் மீது
நீ நடந்து வருவது தெரிகிறது

வானத்திலிருந்து வானத்திற்கு பறக்கும் பறவை வெற்றிடம் தேடி
வானத்திலேயே மறைகிறது

சொற்களால் அசுத்தமான
இந்தக் கவிதையையும்
மெளன செதிலசைத்து நீந்தி வரும் மீனொன்று
பரிசுத்தமாக்குதலின் பொருட்டு
ஆழ்கடலுக்குள் இழுத்துச்
சென்று கொண்டிருக்கிறது

மெளனம்..

உன்னை நினைக்கும்
போதெல்லாம்
உன் முகம் ஞாபகத்திற்கு வருவதில்லை
சொற்கள் தான்

ஒலிகளால் நிரம்பியது தான்
வாழ்க்கை என்றிருந்தாய்

மெளனம் கடைசி வரையிலும்
உன்னிடம் பேசிவிட
ஒரு பூனைக்குட்டியைப் போல்
உரசி உரசி வந்தது

நீ யாரை சந்தித்தாலும்
சோழி உருண்டைகளைப் போல
வார்த்தைகளைத்தான்
தந்து சென்று கொண்டிருந்தாய்

நான் உன்னை சந்தித்த போது
ஒசையில்லாமல் மலர்ந்த
ஒற்றை மலரை
உன் கையில் தந்தேன்

இரண்டு சொற்களுக்கு
இடையில் கிடந்த
பெரும் மௌனத்தில்
நீ அதை விட்டெறிந்தாய்

அது ஒரு புழுப் போல்
ஊர்ந்து செல்வதை பார்த்து விட்டு
நான் விடைபெற்றேன்

காலம்..

நல்ல உ றகத்தில் சங்கிலி
என் கனவினில் வந்து
இரண்டு ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் தண்ணீரும் கொடு என்றது

மறுபேச்சின்றி
குளிர் சாதனப்பெட்டியிலிருந்து
இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தேன்

அங்கே எனக்காகவே காத்திருந்தது போல் வந்து தாவி
என் கைகளிலிருந்து பறித்து தின்ன ஆரம்பித்து விட்டது

இரண்டு ரொட்டத் துண்டுகளும்
கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் தான்
வாழ்க்கையா என்றேன்

என்ன செய்வது நாய்கள்
காலத்தை ரொட்டித் துண்டுகளாய் தின்ன முடிவதில்லையே என்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *