அரசியல் நிர்ணயசபையில் சில உறுப்பினர்கள் இந்தியாவை பாரத் என்று பெயரிட வேண்டும் என்று கோரியபோது அதை மறுத்து இந்தியாவை நிலைநிறுத்திய நம் நிறுவன மாதாக்களுக்கும் பிதாக்களுக்கும் என்றென்றும் நன்றி கூறுவோம். உண்மையில் இன்றையதினம் பாஜகவினர் “பாரத் மாதா கி ஜே’’ என்று கோஷமிட வேண்டும் என்று கோருவது அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில் நாட்டுப்பற்றைக் காட்டும் சோதனை அல்ல, மாறாக அதனை அழித்து ஒழிப்பதற்கான ஒன்றேயாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 69ஆம் ஆண்டில், 2016 மார்ச் 20 அன்று நடைபெற்ற பாஜக தன்னுடைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு பிரகடனம் செய்கிறது:
“தேசியவாதம், தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்பவை பாஜகவின் நம்பிக்கையுடன் உள்ள பொருளாகும். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பாரத் என்று – ‘பாரத் மாதா கி ஜே’ என்று – கூவ மறுப்பது, ஏற்கமுடியாததாகும். நமது அரசமைப்புச் சட்டம் இந்தியாவை பாரதம் என்றும் சித்தரிக்கிறது. பாரத்துக்கு வெற்றி என்று கூவ மறுப்பது, அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதற்கு நிகரானதாகும். … ‘பாரத் மாதா கி ஜே’ என்பது ஒரு கோஷம் மட்டும் அல்ல. … இன்றைய தினம் கோடிக்கணக்கான மக்களின் இதயத்துடிப்பு ஆகும்.
நாட்டின் குடிமக்களாக நம் அரசமைப்புச் சட்டத்தின் கடப்பாடுகளை அதன் உன்னதமான நிலையை திரும்பத்திரும்ப வற்புறுத்திக் கூறுவதேயாகும். பாரத் அவமதிக்கப் படுவதற்காக மற்றும் அதன் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப் படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் எவ்விதமான முயற்சியும் உறுதியுடன் எதிர்க்கப்படும் என்று தெளிவுபடுத்திட பாஜக விரும்புகிறது.’’
தேசியவாதத்தின் ருசி நாவில் தடவப்பட்டு அதன் போதைக்கு ஆளாகி இருக்கும் ஒரு கட்சிக்குக்கூட, இது ஒரு வியக்கத்தக்க விஷயமாகும்.
முதலில், பாரத் மாதா என்று கூற மறுப்பது, “பாரத் வாழ்க என்று கூற மறுப்பதாக’’ ஆகிவிடாது. அரசமைப்புச் சட்டத்தில், இந்தியா என்பது பாரத் மாதா என்றோ, அல்லது அவரைக் கொண்டாட வேண்டும் என்றோ, பாரத் மாதா கி ஜே என்று கூற மறுப்பதானது “அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதையே’’ காட்டும் என்றோ எந்தவொரு இடத்திலும் கூறப்படவில்லை. “குடிமக்கள் என்ற முறையில் நம் அரசமைப்புச்சட்டக் கடமைகள்’’ எவை எவை என்பது 51-ஏ பிரிவின் கீழான 11 அடிப்படைக் கடமைகளில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இதில் எதுவுமே இந்தியர்கள் இந்த கோஷத்தைக் கூற வேண்டும் என்றோ அல்லது “இதன் குருபீடத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டும்’’ (“uphold its primacy”) என்றோ கேட்கவில்லை. வாயால் இந்த கோஷத்தை சொல்லவில்லை என்றால் அது “பாரதத்தை அவமதித்ததாகும்’’ என்று கூறுவதும் மற்றும் அது நம்முடைய “ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்திவிடும்’’ என்று கூறுவதும் பகுத்தறிவற்ற அபத்தமாகும். பாஜக கூட நாடு மிகவும் எளிதில் உடையக்கூடிய விதத்தில் வலுவற்று இருப்பதாக நினைக்க முடியாது. உண்மையில் பாஜகவின் இந்த அறைகூவல், அரசமைப்புச்சட்டத்தை உயர்த்திப்பிடிப்பதற்கானது அல்ல, மாறாக அதனை அழிப்பதற்கே ஆகும்.
பாஜக, அரசமைப்புச் சட்டத்தை தன்னுடைய இந்துத்துவாவின் வேலைக்காரியாக மாற்ற முயற்சித்து வருவதால், அரசியல் நிர்ணயசபையில் இது தொடர்பாக சில காங்கிரஸ்காரர்கள் மேற்கொண்ட முயற்சி எப்படி தோல்வி அடைந்தது என்பதை நினைவுகூர்தல் நலம் பயக்கும்.
அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவே, “இந்தியா, அதாவது பாரத்,’’ என்றுதான் கூறுகிறது. ஆரம்பத்தில் அது இந்தியா என்றுதான் இருந்தது. ஆனால் அரசியல் நிர்ணயசபையில் பல உறுப்பினர்கள், இந்தியா என்பது ஓர் அயற் பெயர் என்றும், அது பாரத் என்று மாற்றப்பட வேண்டும் என்றும், அப்படித்தான் நம் நாட்டின் சாஸ்திரங்கள் எல்லாம் கூறுகின்றன என்றும் வாதங்களை முன்வைத்தார்கள். இவ்வாறு குரல் எழுப்பிய அதே அரசியல்வாதிகள்தான் பசு வதை தடைசெய்யப்பட வேண்டும் என்றும் அது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
1949 செப்டம்பர் 18 அன்று அரசியல் நிர்ணயசபையில் பேசிய கமல்பாதி திரிபாதி பாரத் குறித்து கூறியதாவது: “நாம் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போது, நம்முடைய மகரிஷிகள் ரிக் வேத மந்திரங்களை உச்சரித்ததே நினைவுக்கு வருகின்றன. … உபநிஷத்துகளில் கூறப்பட்ட போற்றத்தக்க அந்த வார்த்தைகள் மனிதகுலம் விழித்தெழவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. … இவற்றின் மூலம் கிருஷ்ண பரமாத்மா நாட்டு மக்களுக்கு நடைமுறை சித்தாந்தத்தை சொல்லித்தந்தார். …’’
பின்னர் புத்தர் குறித்து ஒருசில வார்த்தைகளைக் கூறிவிட்டு அவர் மேலும் கூறியதாவது: “நாம் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போது, உலகத்திற்குப் புதிய பார்வையைக் கொடுத்த சங்கராச்சார்யார் நமக்கு நினைவுக்கு வருகிறார். … பகவான் ராமனால் தன் வலுவான கரங்களிலிருந்த வில்லினால் ஏவப்பட்ட அம்பின் ஒலி, இமயமலைத் தொடர்களிலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல்களிலும், விண்ணுலகங்களிலும் எதிரொலிக்கின்றன. … கிருஷ்ண பகவானின் சக்கரமும் ….’’
இந்த சமயத்தில் மிகவும் எரிச்சலடைந்த பி.ஆர். அம்பேத்கர் உண்மையில் இவை அனைத்தும் இங்கே அவசியம்தானா என்று தலைவரைப் பார்த்துக் கேட்டார். ஆனால், ஹர்கோவிந்த் பந்த் மேலும் வெளிப்படையாகக் கூறியதாவது:
“பாரத்’’ என்னும் வார்த்தை அல்லது “பாரத் வர்ஷா’’ என்பது நாள்தோறும் நாம் நம் மதாச்சார்யக் கடமைகளைச் செய்யும்போது நம்மால் உச்சரிக்கப்படும் சங்கல்பமாகும். நாம் குளிக்கும் போது கூட, ஜம்போ துவிபே, பாரத் வர்ஷே, பாரத் கண்டே, ஆர்ய வார்த்தே போன்ற சமஸ்கிருதச் சொற்களைக் கூறுகிறோம். நான் வட இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறேன். இங்கேதான் பத்ரிநாத், கேதார்நாத், பாகேஷ்வர், மானசரோவர் போன்ற புனித ஸ்தலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதி மக்களின் ஆசிர்வாதங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
நம் நாட்டின் பெயர் “பாரத் வர்ஷா’’ என்றுதான் இருக்க வேண்டுமே யொழிய, வேறேதாகவும் இருக்கக் கூடாது.’’
இவ்வாறு இந்த கோரிக்கை என்பது எவ்வித நாணமோ கூச்சமோ இன்றி முன் வைக்கப்பட்டது. மிகவும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் அவர்களின் தேசம் என்பது பெயரில் மட்டும் இந்துஸ்தான் அல்ல, சாராம்சத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால், இந்தியாவை பாரத் என்று மாற்றுவதற்கு மறுத்திட்ட இந்திய அரசியல்நிர்ணயசபைக்கு என்றென்றும் நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
பின்னர், பாரத் என்ற பெயருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் நாட்டின் பெயர், “பாரத், அல்லது, ஆங்கில மொழியில், இந்தியா’’ என்று இன்றைக்கு பாஜக பாரத் என்ற வார்த்தைக்கு தலைமை ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்று கோருவதுபோல் அன்றையதினம் கேட்டார்கள். இந்தக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்று, 38க்கு 51 என்ற முறையில் அது தோற்கடிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை மீது அம்பேத்கர் முன்வைத்த வடிவம், அதாவது இப்போது அரசமைப்புச் சட்டத்தில் இருப்பது போல், “இந்தியா, அதாவது பாரத்’’ என்ற வடிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு இந்தியா என்பதுதான் முதலில் வருகிறது, பாரத் என்பது பொருள் விளக்கம் கூறுகிற ஒரு மாற்றாக இருக்கிறது.
உண்மை வரலாறு இவ்வாறு இருக்கக்கூடிய சூழலில்தான் பாஜக, பாரத் என்னும் வார்த்தையைத் தழுவிக்கொள்ள விரும்புகிறது. நாட்டு மக்களுக்கு வரலாறு தெரியாது அல்லது மறந்திருப்பார்கள் அல்லது வரலாற்றை உதாசீனம் செய்வார்கள் என்று பாஜக நினைக்குமானால் அது முட்டாள்தனமாகும். இவ்வாறு அரசியல் நிர்ணயசபை நிராகரித்த அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் வர்ணத்தையும் இப்போது கொடுப்பதற்கு பாஜக விரும்புகிறது. இவ்வாறு பாஜகவின் அறைகூவல் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப்பிடிப்பதற்கானது அல்ல, மாறாக அதனை அழித்து ஒழிப்பதற்கானதேயாகும்.
நாட்டு மக்கள் கும்பிட வேண்டும் என்று கூறும் பாரத் எப்படிப்பட்டது என்று பாஜக கூறுகிறது? ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய “பாரத் தீர்த்தா’’ (பாரத் நோக்கி ஒரு யாத்திரை) என்னும் கவிதையில்,
“ஆர்யர்களையும், ஆர்யர் அல்லாதவர்களையும், இந்து முசல்மான்களையும், ஆங்கிலேயர்களையும், கிறித்துவர்களையும் வரவேற்ற நாடு என்றும், இங்கேதான் ஆர்யர்களும் ஆர்யர் அல்லாதவர்களும், திராவிடர்களும், சீனர்களும், சித்தியக் குடியினரும் (Sakas), ஊணர்களும் (Huns), பட்டாணியர்களும் (Pathans), மொகலாயர்களும் என அனைவரும் கலந்து ஒரே உடலாக ஒன்றாகிப்போனார்கள் என்றும் கூறி அத்தகைய நாட்டை வணங்குவோம்’’ என்கிறார்.
தாகூருடைய தேசம் இங்கே வாழும் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் என்று வடிவமைக்கிறது. இது இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் கூறப்படும் பாரத மாதாவிற்கு நேரெதிரானதாகும். பாரத மாதா என்னும் தெய்வத்தை வணங்குவதன் மூலமாகத்தான் நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அதனை முன்னெடுப்போர் கூறுகிறார்கள். உண்மையில் இந்தக் கோரிக்கையானது, பாசிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றை விட மோசமானதாகும். அவையும் தனிநபரைவிட தேசம்தான் உயர்ந்தது என்று கூறின. ஆனால் இவர்களோ தேசத்திற்கும் மேலாக மதத்தை முன் வைக்கிறார்கள். நாட்டைத் தொழுவது ஒரு மதக் கடமை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் கோரிக்கையாகும். ஒரு ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற கோரிக்கைக்கு இடம் கிடையாது.
இந்த வரையறை மூலமாக இவர்கள் நாட்டில் மொத்தம் உள்ள 120 கோடி மக்களில் 20 கோடி மக்களை ஒதுக்குகிறார்கள். ஏனெனில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்துக்கள் அல்லாதவர்கள் 20 கோடி பேர்களாகும். பாஜகவின் அரசியல் தீர்மானத்தை மீண்டும் படிக்கவும். அதில் பாரத் மாதா கி ஜே என்பது “இன்றையதினம் நாட்டிலுள்ள 100 கோடி மக்களின் இதயத் துடிப்பு ஆகும்,’’ என்று கூறிக்கொண்டிருக்கிறது. அதாவது 100 கோடிதான். நாட்டிலுள்ள 120 கோடி மக்கள் அல்ல.
வீதிகளில் நின்று பாஜகவின் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருப்போர், “பாரத் மாதா கி ஜே’’ என்று கூறாதவர்கள் எல்லாம் “நான் ஒரு தேச விரோதி’’ என்ற பதாகையை அணிந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதை இந்தப் பின்னணியில் பரிசீலித்தோமானால் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
இது ஒன்றும் எந்த உருவ வழிபாட்டையும் மேற்கொள்ளாத முஸ்லீம்களுக்கு அல்லது இதரர்களுக்கு எதிரான ஒரு கோரிக்கை மட்டும் அல்ல. கன்னையா குமார் நமக்கு நினைவூட்டியதுபோன்று, இது ஒன்றும் படாடோபமாய் புடவை கட்டிய ஒரு பெண்ணை பாரத் மாதா என்று முன்னிறுத்தும் பிரச்சனை மட்டும் அல்ல.
நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் பழங்குடி யினர், இந்துத்துவாவின் சித்தாந்தங்களின்படி அதனைத் தொட முடியாது. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அதற்கு ஒரு வீச்சு இருந்தது. அதனை ஏன் இப்போது ஒரு பிரச்சனையாக ஆக்குகிறார்கள்? விடுதலைப் போராட்டத்தை வென்றெடுத்த மக்கள் இன்றைக்கும் நாள்தோறும் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களை இன்றைய நிலைமைகளை மறந்துவிட்டு பழையதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் இவர்கள் விரும்புகிறார்கள். அதன்மூலம் பாரத் மாதாவின் இன்றைய பிள்ளைகளைக் கிண்டல் செய்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் ஏமாளிகள் அல்ல.
அடுத்து, “பாரத் மாதா கி ஜே’’ என்று கூற மறுப்பதாலேயே அவர்கள் தேச விரோதிகளும் அல்ல. இது தொடர்பாக என் முஸ்லீம் சக ஊழியர் ஒருவர் கூறியபோது, இதனைக் கூறுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை, ஆனால் ஒருவரின் நாட்டுப்பற்றை சோதிக்கும் சொற்களாக இதனைக் கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன் என்றார்.
சமீபத்தில் உலக டி20 கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்துக்கொண்டிந்த நாம் அனைவரும் வங்க தேச விளையாட்டுவீரர்கள் அவர்களின் தேசிய கீதத்தைப் பாடியதைக் கேட்டோம். அதிலும் அவர்கள் அடிக்கடி “மா’’ என்ற சொல்லைக் கூறினார்கள். வங்க தேச முஸ்லீம்கள் தங்கள் நாட்டை ஒரு தாயாகத்தான் வணங்கி வேண்டிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களின் அந்தப் பாடல் அவர்கள் நாட்டின் இயற்கை அழகை ஆராதிப்பது தானேயொழிய, அவர்கள் நாட்டின்மீது அன்பை செலுத்துவதுதானேயொழிய, பூஜிப்பது அல்ல.
“பாரத் மாதா கி ஜே’’ என்று கூற மறுப்பதை “ஏற்க முடியாது’’ என்று பாஜக கூறுவதன் பொருள் என்ன? அது நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அதன் கட்டளைகள் அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றப்படும். வீதிகளில் நின்று பாஜகவின் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருப்போர், “பாரத் மாதா கி ஜே’’ என்று கூறாதவர்கள் எல்லாம் “நான் ஒரு தேச விரோதி’’ என்ற பதாகையை அணிந்துகொள்ள வேண்டும் என்று இப்போது கூறத் தொடங்கி இருப்பது, உணர்ச்சியைத் தூண்டும் ஒருவிதமான வேடிக்கை நாடகமாகத் தோன்றினாலும், அது ஓர் அரக்கத்தனமான மற்றும் வெறித்தனமான தேசியவாதமாகும். நவீன சமூகத்தில் இத்தகைய வெறித்தனங்களுக்கு இடமில்லை.
ஜெர்மனியின் ஃபெடரல் குடியரசின் தலைவராக இருந்த ஜோஹன்ஸ் ராவ் (Johannes Rau), தன் நாட்டு மக்களுக்கு ஒருமுறை கூறியதை நாம் நினைவுகூர்வது அவசியம். “நாட்டுப்பற்று என்பது இனவாதத்துக்கும் தேசியவாதத்துக்கும் இடமில்லாத போதுமட்டுமே தழைத்தோங்க முடியும். நாம் எந்த சமயத்திலும் நாட்டுப்பற்றை, தேசியவாதத்துடன் இணைத்து தவறு செய்யக்கூடாது.’’ (“Patriotism can flourish only where racism and nationalism are given no quarter. We should never mistake patriotism for nationalism.”) இந்த சொற்றொடரை நாம் நம் நெஞ்சில் பதித்துக்கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர், இந்திய அரசின் சார்பாக , பாகிஸ்தான் ஹை கமிஷனராகவும், மனித உரிமைகள் தேசிய ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.)
நன்றி: தி ஒயர், இணைய இதழ்.