#Bookday
நெல்லை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம் விரலால் சிந்திப்பவர்கள். புத்தகம் பேசுது இதழில் தொடராக படித்திருந்தாலும் ஒரே புத்தகத்தில் பல எழுத்தாளர்களை பற்றி படிப்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு. பம்மல், சாவி, சி.சு.செல்லப்பா, நா.பா, ஆர்தர் கானன் டாயில், பாலோ கொய்லோ, வேதநாயகம்பிள்ளை, லூயி கரோல், இயான் பிளெமிங், ஆறுமுகநாவலர், ஹருகி முரகாமி , துர்கனேவ், டூமாஸ், டிக்கன்ஸ், வாசுதேவன்நாயர் என பல ஆளுமைகளை குறித்து விரிவாக அறிந்திட உதவியது.

புத்தகத்தின் தலைப்பே வாசிக்க தூண்டிடும் வகையில் இருக்கிறது. பாலோ கொய்லோ பற்றி எழுதியதில் “எனது உலகத்தில் நான் புத்தகங்களோடு இருந்தேன்”, வாசிப்பின் அடுத்த கட்டம் எழுத்து என்ற வரிகளும் முடிவில் பில் கிளின்டனிலிருந்து ஷரோன் ஸ்டோன் லிருந்து, நாசர் அராபத்திலிருந்து சுப்பாராவ் வரை இன்றும் உலகின் அனைத்து கோடிகளிலும் அவருக்கு வாசகர்கள் உண்டு…..என முடிப்பது சுவாரசியமானது. எழுத்தாளர் சாவி குறித்து பல அரிய தகவல்களை தருகிறது. குறிப்பாக அவரது வாஷிங்டன்னில் திருமணம் தொடர், பெரியாரோடு அவரது நட்பு.

முரகாமி பற்றி எழுதுகையில் மனிதர்கள் வாழ்வில் நிறைய விஷயங்கள் மிகவும் தற்செயலாகவே நடக்கின்றன. என்ற வரிகளும் அற்புதமானவை. ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதும் விதம், நின்று கொண்டே எழுதுவது, பகலில் தொடர்ந்து எழுதுவது, எழுதிய பின் பல மைல் நடப்பது, என விரலால் அவர்கள் சிந்தித்து உலகுக்கு நூலை கொடையாக வழங்கியதை என்னவென்று சொல்வது. அற்புதமான உலகை கண்முன் விரிக்கிறது இப் புத்தகம்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *