ரோமியோ , ஜூலியட் நாடகம்
காட்சி 1 

இடம் : வெரேனா வீதி
பொழுது – பகல்
பாத்திரங்கள்
கேபுலட் கேபுலட்டின் உறவினன் பாரிஸ்
மற்றும் கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர்
மற்றும் ரோமியோ பென் வாலியோ

( முதிய கேபுலட்டும் அவரது வருங்கால மருமகன் பாரிசும் வீதியில் பேசிக்கொண்டே
நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர் )

கேபுலட் :
நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியைத் தானே
மாண்டேக்கும் ஏற்றுக்கொண்டுள்ளான்.

அதை மீறுவானாகில் அவனுக்கும் அதே தண்டனை தானே.

என்னைப் போன்ற முதியவனான மாண்டேக்கிற்கு
அமைதியை காப்பது அத்தனை கடினமல்ல என்று தான் தோன்றுகிறது

பாரிஸ் :
நீங்கள் இருவருமே சம அந்தஸ்து உடையவர்கள் .
ஆனால் காலத்தின் கோலம் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கிறீர்கள்.

ஆனால் அது இருக்கட்டும் என்னுடைய கோரிக்கைக்கு
நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லையே ?

கேபுலட் :
நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னதை தான் இப்பொழுதும் சொல்கிறேன்.

என் மகள் இன்னும் பதினான்கு வயது கூட நிரம்பாத பெண் குழந்தை.

இன்னும் கூட இளமையை முழுமையாக எட்டாத இளம் பெண் அவள்.
இன்னும் இரண்டு கோடை காலங்கள் உருண்டோடினால் காலம் கனிந்து விடும்

அவளும் உனக்கேற்ற மணப் பெண்ணாக மலர்ந்திருப்பாள்

பாரிஸ் :

உங்கள் மகளை விட இளைய பெண்களெல்லாம் மணமுடித்து
இப்பொழுது தாயாக இருக்கிறார்கள் அல்லவா ?

கேபுலட் :

மிக விரைவாகத் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள்
விரைவிலேயே முதுமையை எட்டுகிறார்கள்

எனக்குப் பிறந்த குழந்தைகளில் இவளைத் தவிர
மற்ற குழந்தைகள் எல்லாம் இப்போது மண்ணுக்குள் உறங்குகிறார்கள்

அதனால் எனது எல்லா நம்பிக்கைகளையும்
அவள் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்.

பாரிஸ் நீ உன் அன்பை அவளிடம் வெளிப்படுத்து

அவளது இதயத்தில் இடம் பிடி

அவளது காதலை நீ பெற்று விட்டால்
அவளை மணமுடிப்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை

என்னுடைய ஆசீர்வாதம் எப்போதுமே உனக்குக் கிடைக்கும்

ஆனால் இளைஞனே கவனித்துக் கொள் !
அவள் உன்னை மணந்து கொள்ளச் சம்மதிக்க வேண்டும்.

அதன் பின் எனது வாழ்த்துக்கள் என்றுமே உனக்கு

இன்று இரவு என் வீட்டில் நான் ஒரு விருந்தளிக்கப் போகிறேன்.

அது வருடா வருடம் எப்போதும் நடப்பது தான்.

அந்த விருந்திற்கு நிறைய விருந்தினர்களையும்
நண்பர்களையும் நான் அழைத்திருக்கிறேன்.

ஆனாலும் இன்று என் இனிய சிறப்பு விருந்தினன் நீ தான்
உன்னை அன்போடு அந்த விருந்துக்கு அழைக்கிறேன் .

இன்று என் எளிய இல்லத்தில்
வானில் இருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களைப் போல
ஏராளமான இளம் பெண்களை நீ காணலாம்

அவர்கள் மண்ணில் தான் நடப்பார்கள்
ஆனால் விண்ணை ஒளி வீசச் செய்வார்கள்

ஆவல் அதிகம் கொண்ட எல்லா இளைஞர்களையும் போலவே
நீயும் அவர்களின் அருகாமையில் ஆனந்தத்தைக் காண்பாய்

ஏனென்றால் நீ அங்கே காணப்போவது
வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களை

அந்தக் கன்னி மலர்களையெல்லாம்
நீ கண்டு
உனக்கு உரியதாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்

அத்தனை கன்னியரையும் உன் கண்கள் காணும் போது
என் மகள் தான் அழகு என்ற எண்ணமே உனக்கு அங்கே எழாது.
வா செல்வோம்

( பணியாள் பீட்டரிடம் திரும்பி
அவனிடம் விருந்தினர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைத் தந்த படி

உத்தரவிடும் குரலில் )

வெரோனா நகரம் முழுவதும் சென்று வா
இந்தப் பட்டியலில் இருக்கும் அனைத்து விருந்தினர்களையும்
இன்றிரவு என் வீட்டில் நடக்கும் விருந்துக்கு நீ அழைத்து வரவேண்டும்

( கேபுலட் பாரிஸ் இருவரும் மறைகிறார்கள் )

தமிழாக்கம் : தங்கேஸ்
(தொடரும்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *