Election2024- Modi- Dalits | மோடி அரசு - தலித்துகள்

எண்: 10

மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்

தலித்துகள்

சொன்னது

‘அனைவரையும் இணைத்துக் கொள்வோம்’ (சப்கா சாத்), ‘அனைவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம்’ (சப்கா விகாஸ்) என்ற முழக்கத்தோடு, அனைத்து

தரப்பினரும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை நாட்டில் உருவாக்கியுள்ளதாக மோடி அரசு கூறியது.

எஸ்சி உட்கூறு திட்டத்திற்கான ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் 16.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உண்மை நடப்பு

உண்மையில், பழங்குடியினர் மற்றும் பெண்களுடன் சேர்ந்து தலித்துகளுக்கு எதிராக பாகுபாடு காட்டும் தனது மநுவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அட்டூழியங்கள்

2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (பி.ஓ.ஏ) கடுமையாக நீர்த்துப்போகச் செய்தது. இந்த தீர்ப்பை பாஜக அமைதியாக ஆதரித்துள்ளது. தலித் குழுக்கள் மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றி நாடு தழுவிய அளவில் ஒரு முழு அடைப்பினை ஏற்பாடு செய்தன. வட இந்தியாவின் பெரும்பகுதியில் இது மிகவும் வெற்றிகரமாக நடந்தது. உ.பி., ம.பி., ராஜஸ்தானில் பாஜக அரசுகள் பல இடங்களில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தின. 9க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் – தெரிந்த மற்றும் அடையாளம் காணப்பட்ட பாஜக ஊழியர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு உட்பட – அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மேலும் சிறார்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர். உச்ச நீதிமன்றம் செய்த மாற்றங்களை செல்லாததாக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு பாராளுமன்றம் கட்டாயப்படுத்தப்பட்டது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 40,401. இந்த எண்ணிக்கை 2020இல் 58,000 க்கும் அதிகமாக உயர்ந்தது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கூற்றுப்படி, 2021க்கும் 2022க்கும் இடையில் எஸ்.சி.க்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. 2018க்கும்

2022க்கும் இடையில், 49,613 வன்கொடுமை நிகழ்வுகள் மற்றும் தாக்குதல்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தலித்துகளுக்கு எதிராக அட்டூழியம் செய்தவர்களுக்கு பாஜக தலைமையிலான மாநில அரசின் வெளிப்படையான பாதுகாப்பு வழங்கப்பட்ட பல கொடூர சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ளது. உனா சம்பவம் (2016) மற்றும் ஹத்ராஸ் சம்பவம் (2020) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஐ.நா. அறிக்கையின்படி, தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் 2015க்கும் 2019க்கும் இடையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளன.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் சாதிப் பாகுபாடு, அவமானம் மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பொருளாதார நிலைமைகள்

கிராமப்புற தலித் வீடுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே பக்கா (செங்கல் வைத்துக் கட்டப்பட்ட) வீடு என்றும், நகர்ப்புறங்களில் சுமார் 16 சதவீத தலித் வீடுகள் சேரிகளில் உள்ளன என்றும் அரசாங்க வட்டாரங்கள் ஒப்புக்கொள்கின்றன. தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, தலித்துகளிடையே வறுமை விகிதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இது தேசிய சராசரியான 21 சதவீதத்தை விட அதிகமாகும். பலபரிமாண ஏழை மக்களில் ஆறு பேரில் ஐந்து பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க அரசு எஸ்.சி., எஸ்.டி., நலத்துறைக்கான செலவினங்களை கடுமையாக குறைத்து, ‘பொருளாதார பாகுபாட்டை’ தீவிரப்படுத்தியுள்ளது.

2017-18ஆம் ஆண்டில், மோடி அரசு, பட்டியல் சாதி துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்தை கைவிட்டதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தும் தலையீட்டிற்கான நெறிமுறையை மேலும் சீர்குலைத்தது. அதன் இரண்டாவது பதவிக்காலத்தில் (2019-20 முதல் 2023-24 வரை), எஸ்.சி.க்களுக்கான சராசரி ஒதுக்கீடு மத்திய அரசு மற்றும் மத்திய அரசுத்துறைகளின் நிதியுதவி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 11.06 சதவீதம் மட்டுமே. அரசு வழிகாட்டுதல்களின்படியே, இது 15 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். இதில் ஆதிதிராவிடர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 3.3 சதவீதம் மட்டுமே. மீதமுள்ளவை பொதுத் திட்டங்களுக்கு செலவிடப்படுகின்றன.

இட ஒதுக்கீடுகள்

சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்கான அரசியலமைப்பு விதிகளை மத்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவீனப்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டுக்குரிய பணியிடங்களில் நிலவும் இடைநிற்றலை இட்டு நிரப்புவதில் அதன் செயல்பாடு திகைக்க வைக்கிறது. மார்ச் 24, 2022 அன்று நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, மத்திய அரசின் ஒன்பது அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் (ரயில்வே, நிதி, அணுசக்தி, பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் உள்துறை போன்றவை) 82,022 காலியிடங்கள் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஓபிசிக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 42 சதவீத பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

பல்கலைக் கழகங்கள் மற்றும் சிறப்பு கல்வி நிறுவனங்களின் நிலையும் இதைவிட மேம்பட்டதல்ல. 45 மத்திய பல்கலைக்கழகங்கள் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு காலிப் பணியிடங்களில் 42 சதவீதத்தை நிரப்பவில்லை. இந்திய அறிவியல் கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களில் 80 சதவீதம் நிலுவையில் உள்ளது.

தனியார் மயமாக்கல்

மோடி அரசாங்கத்தின் கீழ், பொதுத்துறை தொழில்கள், பொதுச் சேவைகள் மற்றும் உயர்கல்வி ஆகியவற்றை தனியார்மயமாக்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆதிதிராவிடர் மற்றும் பிற பிரிவினருக்கு இந்தத் துறைகளில் வேலைகள் கிடைப்பதை கணிசமாகவும் மோசமாகவும் பாதகமான முறையிலும் சேதப்படுத்தியுள்ளது.

கல்வி

பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் ஃபெலோஷிப்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் கல்விக்குப் பிந்தைய காலத்திற்கான அம்பேத்கர் பெயரிலான கல்வி உதவித்தொகையில் சுமார் 80 பில்லியன் ரூபாயை உரிய நேரத்தில் விடுவிக்காததால், சுமார் 51 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் கல்லூரிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாஜக அரசின் கீழ் தலித்துகளுக்கான சிறப்பு திறன் மேம்பாடு மற்றும் கூட்டுக் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களைக் கூறி, மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்தியுள்ளது. பாஜக ஆளும் உ.பி., போன்ற மாநிலங்களில் தலித் மாணவர்களுக்கு அனைத்து கல்வி மட்டங்களிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா நிறுவன ரீதியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் போராட்டங்களைத் தூண்டிய ஒன்றாகும். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் தலித் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014க்கும் 2021க்கும் இடையில் நிகழ்ந்த 122 மாணவர் தற்கொலைகளில், 68 எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களால் நடந்ததாக அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கூடுதலாக, 2018 முதல் 13,000 க்கும் மேற்பட்ட எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கைகளால் கழிவுகளை அகற்றுதல்

அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவுக்குப் பிறகு, பிரதமர் பெண் துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் என்ற உண்மை இருந்தபோதிலும், கைகளால் மலம் அள்ளுவது நீதிமன்றங்களால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பாஜக ஆளும் பல மாநிலங்களில் இது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. மேலும் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவர்கள் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், இழிவான மற்றும் ஆபத்தான வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்த அல்லது வெளிநிறுவனங்களால் நியமிக்கப்பட்ட (அவுட்சோர்சிங்) தொழிலாளர்கள் என்பதால், இந்த மரணங்களுக்குப் பிறகு அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு முற்றிலும் மாறான வகையில், ‘இழப்பீடு’ என்பதன் மிகவும் பொதுவான வடிவம் என்னவென்றால், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அதே ஆபத்தான வேலையை அதே குடும்பத்தின் மற்றொரு குடும்ப உறுப்பினருக்கு வழங்குவதாகும்.

நாடு முழுவதிலும் 520 மாவட்டங்கள் கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் முறையிலிருந்து விடுபட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேசிய செயல் திட்டம் இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்காகத் தொடங்கப்பட்டிருந்தாலும், கள நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கேரளம் மட்டுமே இந்த மனிதாபிமானமற்ற பழக்கத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டு, அபாயகரமான துப்புரவு பணிகளுக்கு ரோபோக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிய ஒரே மாநிலமாகவும் உள்ளது.

பாஜகவின் உண்மையான நோக்கம் தலித்துகள் மற்றும் பிற அடித்தட்டு மக்களின் நலனைப் பூர்த்தி செய்வது அல்ல. நாடாளுமன்றத்தில் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என்று கேட்பதில் பாஜகவின் உண்மையான நோக்கம் அரசியலமைப்பை மாற்றுவதே என்று அதன் எம்.பி.க்களில் ஒருவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மநு ஸ்மிருதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாரபட்சமான நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பை மீண்டும் எழுதவே அது விரும்புகிறது.

தலித் உரிமைகளைப் பாதுகாப்போம்!

பாஜகவை தோற்கடிப்போம்!

 

Communist Party of India (Marxist)

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *