Election2024- Modi -unemployment | மோடி அரசு - வேலையின்மை

பரப்புரை எண்: 3

2024 நாடாளுமன்றத் தேர்தல்

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்

வேலையின்மை

சொன்னது

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என மோடி உறுதிமொழி அளித்தார்.

2019 ஏப்ரல் 27 அன்று தொலைக்காட்சியின் பேசும்போது, “ கிட்டத்தட்ட 2. 5 கோடி வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் உருவாகி வருவதை ஊழியர் ஈட்டுறுதி அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக” மோடி கூறியிருந்தார்.

உண்மை நடப்பு

2016-17ஆம் ஆண்டில் விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைத்துறை என பல்வேறு துறைகளிலும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமாக நாடு முழுவதிலும் 41.27 கோடி பேர் பணியில் இருந்தனர். 2022-23ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 40.57 கோடியாகச் சுருங்கியது. அதாவது 70 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வேலைவாய்ப்புகள் இழப்பிற்கு ஆளாகியுள்ளன.

நாட்டின் வேலையின்மை எந்த அளவிற்குத் தீவிரமாக இருக்கிறது என்பதையும், வேலை இல்லாத இளைஞர்களின் அதீத முயற்சி எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு சம்பவம் வெளிப்படுத்துகிறது. கடந்த பிப்ரவரி மாத நடுப்பகுதியில் 60,000 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு அறிவித்தது. இத்தேர்வில் பங்கேற்க 48 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம் பெண்களும் தேர்வு மையங்களில் வந்து குவிந்தனர். அதற்கு முன்பாக, அவர்கள் கூட்டம் நிரம்பி வழியும் ரயில்களிலும், பஸ்களிலும் முண்டியடித்துப் பயணம் செய்து, ரயில்வே நிலைய நடை மேடைகளில் உறங்கிவிட்டு, தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர். எப்படியோ தேர்வு எழுதி விடலாம் என்று அவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்தபோதுதான், அந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி விட்டதாகத் தெரிய வந்தது. அதே தேர்வினை மீண்டும் நடத்துவோம் என்று மாநில அரசு அறிவிக்க வேண்டிய நிலைக்கு தொடர்ந்து பல நாட்கள் அவர்கள் போராடினர். இந்த முயற்சியில் அந்த இளைஞர்களும் இளம் பெண்களும் எதிர்கொண்ட துயரத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

வேலைசெய்வதற்கான வயதை எட்டியதும் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் வேலைக்கான பட்டாளத்தில் சேருகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வேலையில் உள்ளோரின் மொத்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் அதேநேரத்தில், வேலைக்கான பட்டாளத்தில் புதிதாக இணைவோர் வேலையற்றோர் கணக்கில் சேருகின்றனர்.

2022-23ஆம் ஆண்டில் வேலையின்மை என்பது 7.6 சதவீதமாக இருந்தது. அதாவது சுமார் 3 கோடி பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பேரழிவு இதில் சேர்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் வேலையற்றோரின் அளவு 25 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.

இந்தத் தோல்வியை மறைப்பதற்காகவே, மோடியும் அவரது அமைச்சர்களும் புதிதாக வேலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று காண்பிப்பதற்காக தவறான புள்ளிவிவரங்களை தருவதோடு, அறிக்கைகளையும் வெளியிடுகின்றனர். உதாரணமாக, இவர்கள் சுட்டிக் காட்டும் தொழிலாளர் ஈட்டுறுதி நிதித்திட்டம் ஆகும். இது கணிசமாக அதிகரித்து வருவதும் பதிவாகியுள்ளது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல; ஏனெனில், இத்திட்டத்திற்கென முதலாளிகளுக்கு நிதிச் சலுகைகளை அரசு வழங்கத் தொடங்கியதும் , இத்திட்டத்தின் கீழ் அவர்களிடம் ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் கட்டாயமாக இத்திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பினை அடுத்தும் இந்த எண்ணிக்கை அதிகரித்தது.

மற்றொரு குருட்டுத்தனமான வாதம் என்பது 2015-16க்கும் 2022-23க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ் 4.1 கோடி பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்பதாகும். எனினும் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள சராசரி கடன் தொகை வெறும் ரூ. 55,622/- தான்! இந்தத் தொகையை கடனாக வாங்கும் ஒரு சிறிய வர்த்தகர் புதிய நபர்களை வேலைக்கு சேர்க்க இத்திட்டம் உதவுகிறது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றேயாகும்.

இதற்கும் மேலாக, தன் கொள்கைகளின் விளைவாக மக்கள் விவசாயத் தொழிலில் இருந்து மேலும் பாதுகாப்பான, நல்ல ஊதியம் வழங்கக்கூடிய உற்பத்தி அல்லது சேவைத் தொழிலுக்கு மாறுவார்கள் என்றும் மோடி உறுதியளித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உற்பத்தித் தொழிலின் பங்கு தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயரும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆனால் உண்மை என்னவெனில், 2020ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் தொழிலின் பங்களிப்பு வெறும் 13 சதவீதமாகச் சுருங்கி, இப்போதுதான் மீண்டும் பழைய 17 சதவீதத்தை எட்டிப் பிடித்துள்ளது.
வேலையின் மீதான இத்தகைய நெருக்கடி மக்களை மீண்டும் கிராமத்தை நோக்கிச் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளதோடு, ஏற்கனவே விழிபிதுங்கி, சரிந்துகொண்டிருக்கும் விவசாயத் தொழிலில் கிடைக்கின்ற வருமானத்தை மட்டுமே நம்பி வாழவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவில் உள்ள உழைக்கும் படையினரில் 46 சதவீதம் பேர் விவசாயம் அல்லது அது தொடர்பான வேலைகளில்தான் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்கள்களோ மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய வேண்டியுள்ளது. அதுவும்கூட தொடர்ச்சியாக இல்லாமல் பருவத்திற்கு ஏற்ற வகையில்தான் வேலை கிடைக்கிறது. எனினும் இவை அனைத்துமே அவர்களை ‘வேலையில் உள்ளவர்’களாகவே கணக்கில் கொள்ளச் செய்கிறது. உண்மையில் வேலையின்மை என்பதே இதன் பின்னால் ஆழமாகப் புதைந்து நிற்கிறது.

2014-15ஆம் ஆண்டில் சுமார் 5.8 கோடி பேர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த எண்ணிக்கை 2022-23ஆம் ஆண்டில் 8.8 பேராக அதிகரித்துள்ளது. சராசரியாக அவர்களுக்கு ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. அதுவும்கூட நாளொன்றுக்கு ரூ. 237/- என்ற விகிதத்தில்தான். மிகக் கடினமான, குறைந்த ஊதியத்தை வழங்கக்கூடிய இந்த வேலை உறுதித் திட்டத்தையே மக்கள் பெருமளவிற்கு நம்பியிருக்கிறார்கள் என்பது வேலையின் மீதான நெருக்கடி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கான சான்றே ஆகும். கணிசமான மக்களின் உயிரைக் காப்பாற்றும்படியான இத்திட்டமும் கூட போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமல் சுருக்கப்படுவதோடு, ஆதார் அட்டை அடிப்படையில் ஊதியத்தை வழங்குவது என்ற முறையை திணிப்பதன் மூலம் தொழிலாளர்களுக்க்கு வேலை கிடைப்பதை சுருக்குவதோடு, அவர்களின் ஊதியமும் உரிய நேரத்தில் பெற முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வேலையின்மைப் பிரச்சனையில் பெண்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் வேலையின்மை விகிதம் என்பது கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஆண்களை விட இரண்டு மடங்காகவும், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ஆண்களை விட மூன்று மடங்காகவும் உள்ளது. வேலைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது என சமீபத்தில் புள்ளிவிவரங்கள் வெளியாயின. ஆனால் அது வெறும் திசைதிருப்பலே ஆகும். ‘சுய வேலைவாய்ப்பு’, மற்றும் ‘ஊதியமற்ற’ வேலைகளில்தான் இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. விலைவாசி உச்சியில் இருக்கும் நிலையில், வேலைக்கான ஊதியம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், வேலை கிடைப்பதென்பது அரிதாக இருக்கும் நிலையில், தாமும் தங்கள் குடும்பமும் எப்படியாவது உண்பதற்கு என பெண்கள் பல்வேறு வகையான வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

காவல் படையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, மருத்துவமனை – நீதித்துறை ஆகியவற்றிலிருந்து வங்கிகள் வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றில் ஆட்சேர்ப்பு என்பதே நடப்பதில்லை. இந்த நிலைமையை மூடி மறைக்க ஒரு சிலருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வுகளை பிரதமர் சமீபத்தில் நடத்தி வைத்தார். இது எவ்வித பொருளும் அற்றதொரு நடவடிக்கையே ஆகும்.

மாநில அரசுகளில் உள்ள 1.04 லட்சம் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றபோது, 41 முறை இவற்றுக்கான வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியான சம்பவங்கள் நிகழ்ந்தன என்றும், இதன் விளைவாக, 1.4 கோடி இளைஞர்களும் இளம் பெண்களும் பாதிக்கப்பட்டனர் என்றும் சமீபத்தில் வெளியான ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்தச் செயல்முறையை நிறைவு செய்ய அவர்களில் பெரும்பாலோர் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கேரள மாநிலத்தைத் தவிர, மற்ற மாநில அரசுகள் காலியிடங்களை நிரப்புவதே இல்லை.

கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு இதர சேவைகளை தனியார் மயமாக்குவதற்கான மோடியின் முயற்சியும், அதனோடு கூடவே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதும் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன என்பதோடு, சலுகைகள் ஏதுமற்ற, குறைந்த ஊதியம் மட்டுமே தருகின்ற, தற்காலிக பணி நியமனங்களை கொண்ட ஒப்பந்த முறையிலான வேலைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

பொது முதலீட்டை அரசு அதிகரிக்க வேண்டும். கீழ்கண்டவற்றும் அது உதவி செய்ய வேண்டும்:

  • விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.
  • பணிப்பாதுகாப்பு உடைய வேலைகள் மற்றும் நல்ல ஊதியம் ஆகியவற்றின் மூலம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.
  • உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஊதியம் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.
  • தொழில்துறை வேலைவாய்ப்பில் 65 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்குகின்ற சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவுவதோடு, பொதுத்துறையையும் அரசு பாதுகாக்க வேண்டும்.
  • வெளிநாட்டு, உள்நாட்டு பெருநிறுவன ஏகபோகங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • தனியார் மயமாக்கல் கொள்கையை அரசு கைவிட வேண்டும்.

மக்களின் பிரச்சனைகளுக்கு தனியார் துறையினால் எவ்விதத் தீர்வையும் வழங்க இயலாது. இஸ்ரேல் நாட்டில் தற்போது யுத்தம் நடைபெற்று வரும் பகுதியில் கட்டுமானப் பணிகளில் வேலை செய்வதற்கென கடந்த பிப்ரவரி நடுப்பகுதியில் இந்தியாவிலிருந்து 10,000 கட்டுமானத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு நடைபெற்றுள்ளது. இது வேலையற்றோரின் கையறுநிலை மற்றும் இந்திய அரசின் அலட்சியப் போக்கு ஆகியவற்றை வெளிப்படுத்துவதே ஆகும். இவ்வகையில் தங்கள் உயிரையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாய நிலை குறித்து இத்தொழிலாளிகள் வெளிப்படையாகவே கூறியிருந்தனர். அரசாங்கமோ, தன் பங்கிற்கு அவர்களின் உயிருக்கான காப்பீட்டு வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு கூட இன்றி செயலற்றுக் கிடக்கிறது. பாஜக ஆட்சி புரிந்து வரும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் இந்த ஆட்சேர்ப்பு நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரவு ஆதாரங்கள்: சிஎம் ஐ ஈ; 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; பிஎல் எஃப் எஸ் 2022-23; எம் ஓ எஸ் பி ஐ; முத்ரா யோஜனா, எம் எஸ் எம் ஈ அமைச்சகம்; இபி எஃப் ஓ; நாடாளுமன்றக் கேள்விகள்; இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

வேலையின்மையை எதிர்த்துப் போராடுவோம்!

பாஜகவை தோற்கடிப்போம்!!

 

Communist Party of India (Marxist)

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *