கிறிஸ்தோஃப் ஜாஃப்ரில்லா எனும் பிரெஞ்சு நாட்டு ஆய்வாளர் எழுதி கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள புத்தகம் “அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்”. பூ.கோ.சரவணன் அவர்கள் எளிய தமிழில் அழகாக மொழி பெயர்த்துள்ளார்.
இந்நூலுக்கான தலைப்பு அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் என்று ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. சாதி ஒழிப்பு குறித்து மட்டும் இந்நூல் பேசப் போவதாக இந்நூலின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது. ஆனால், அண்ணல் அம்பேத்கரின் வாழ்வின் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் குறித்து எல்லாம் விமர்சனப்பூர்வமாக இந்நூல் பேசுகிறது. அதில் சாதி குறித்த ஆய்வும் ஒன்று அவ்வளவு தான்.
இந்தியாவின் மிக முக்கிய ஆளுமையான அண்ணல் அம்பேத்கர் குறித்த எழுத்துகள் 1990கள் வரை முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது; மறைக்கப்பட்ட ஆளுமையாகவே அம்பேத்கர் இருந்தார்; தற்பொழுதும் கூட அவர் குறித்து குறைந்த அளவிலான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவும் அம்பேத்கர் குறித்த இந்த ஆய்வு நூலை தான் எழுதக் காரணம் என்று கூறி தான் ஆசிரியர் துவங்குகிறார். அப்பொழுது மதம் மீதான அம்பேத்கரின் கருத்துகளும் மார்க்சின் கருத்துகளும் ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளன என்றும், மேலும் அம்பேத்கரின் ஒட்டு மொத்த கருத்துகளையும் செயல்பாடுகளையும் மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையோடு மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அம்பேத்கரின் எழுத்துகளை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த மிக முக்கியமான மார்க்சியவாதி கூறியது நினைவுக்கு வந்தது.
இன்றைய அரசியல் செயற்பாட்டாளர்கள் பாபாசாகேப் அவர்களின் பல்வேறு கோட்பாடுகளை, நிலைப்பாடுகளை புரிந்துக் கொள்ள உதவுகின்ற மிக முக்கியமான நூல் இது. குறிப்பாக அண்ணல் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக தான் பெற்ற கல்வி, அதன் மூலம் அடைந்த அசாத்தியமான அறிவு, பெற்ற ஆற்றல் ஆகியவற்றினை பயன்படுத்தி மேற்கொண்ட முன் முயற்சிகள் குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல். அப்பயணத்தில் உருக்குலையாத நெஞ்சுரத்துடன் அவருக்கே உரிய தனித்துவமான இயல்புகளுடன் அவர் நடத்திய போராட்டங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது.
முதல் அத்தியாயம் அம்பேத்கர் பிறப்பதற்கு முன் மராத்தியத்தில் நிலவிய சூழல் குறித்து அலசுகிறது. அம்பேத்கரின் தனிப்பட்ட ஆளுமைகள் வெளிபடுவதற்கான புவியியல், வரலாற்று மற்றும் சமூக சூழல் என்ன? குறிப்பாக பிராமணர்களுக்கு எதிரான போராட்டங்கள் தோன்றிய மண்ணாக தமிழகமும் மராத்தியமும் மட்டுமே இந்தியாவில் இருந்துள்ளன. சிவாஜிக்கு பிறகு அரசு அதிகாரங்களை கைப்பற்றிய சித்பவன பிராமணர்கள், அதன் தொடர்ச்சியாக ஆங்கில அரசாங்கத்திலும் பெரிய பெரிய பதவிகளை ஆக்ரமித்து இருந்தனர். இது சாதிய அடுக்கில் பிராமணர்களுக்கு அடுத்து இருந்தவர்களும், ஏற்கனவே தங்கள் ஆட்சி அதிகாரத்தை சித்பவன பிராமணர்களிடம் இழந்து இருந்தவர்களுமான மராத்தியர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இப்பின்னனியில் பூலே உள்ளிட்ட பல தலைவர்களின் நடவடிக்கைகளும், கிறிஸ்த்தவ மிஷினரிகள் அமைத்த பள்ளிகளும், மேற்கத்திய சிந்தனைகளும் சமூக நீதிக்கான களத்தை மராத்தியத்தில் உருவாக்கியிருந்தன. தமிழகத்தின் நீதிக் கட்சி போன்று மராட்டியத்தில் புலே அவர்கள் சத்யசோதக் சமாஜம் என்ற அமைப்பை துவக்கினார். இதில் ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் அணி திரட்டப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் இந்த அமைப்பும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அமைப்பாகவே மாறிப் போனது.
பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் இணைப்பு என்பது இந்தியாவில் கானல் நீராகவே மாறிப் போனது. இதற்கு மிக முக்கிய காரணம் வெறும் சாதி என்ற அடையாளத்துடன் மட்டும் அணி திரட்ட முயலும் போது அதற்குள் அம்பேத்கரின் மிக முக்கிய கண்டுப்பிடிப்பான படித்தர சமத்துவமின்மை என்ற கருத்தாக்கமும் உயிர்ப்புடன் வினையாற்றுகிறது. விளைவு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுமே என்ற அளவிலான உழைக்கும் மக்களின் இணைப்பு சாத்தியமில்லாததாகி விடுகிறது.
அடுத்து, சாதியை திறம்பட அழித்தொழிக்க அதை பகுப்பாய்ந்து இந்திய இனக்குழு சார்ந்ததாக ஆக்குதல் எனும் தலைப்பிலான பகுதி மிக முக்கியமானது.
சாதியமைப்பு குறித்து பல அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். கோவிந்த் சதாசிவ் சூரி, லூயிஸ் டுமாண்ட், எம்.என்.ஸ்ரீனிவாஸ், எமில் செனார்ட், ஹெச்.ஹெச்.ரிஸ்லே போன்ற பலர் ஆய்வு செய்திருந்தாலும், இவர்களின் ஆய்வுகளுக்கு எல்லாம் முன்னோடியாக அம்பேத்கரின் ஆய்வு இருந்தது. அது மட்டுமல்ல, இந்த அறிஞர்களின் சாதியமைப்பு குறித்த மிகச் சிறந்த கருத்தாக்கங்களை எல்லாம் அம்பேத்கர் மிக சர்வ சாதாரணமாக தன்னுடைய ஆய்வில் இவர்களுக்கு முன்னரே கண்டடைந்துள்ளார். மேலும் ஏற்றுக் கொள்வற்கு சிரமப்பட வேண்டிய வாதங்களை எல்லாம் தன்னுடைய உண்மையான அறிவாற்றலுடன் அம்பேத்கர் முன் வைக்கிறார்.
அகமணமுறை, படித்தர அசமத்துவம் (Graded inequality), போலச் செய்தல், மூடிக் கொண்ட வர்க்கம், உடைந்து போன மக்கள், சமஸ்கிருதமயமாக்கல் போன்ற சொல்லாடல்களை/கருத்தாக்கங்களை முன் வைக்கிறார் அம்பேத்கர். குறிப்பாக படித்தர அசமத்துவத்தை ஏறு வரிசையில் இயங்கும் பயபக்தி / இறங்கு வரிசையில் இயங்கும் இகழ்ச்சியான பார்வை என்ற கூற்றுகளின் மூலம் விளக்குகிறார். பின்பு அதனை ஏறு வரிசையில் இயங்கும் வெறுப்பு என்று பிற்காலத்தில் மாற்றிக் கொள்கிறார். தொடர்ந்து தனது எழுத்துகளை கூட நுட்பமாக காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி தன்னை அம்பேத்கர் தகவமைத்துக் கொள்வதாக நூலாசிரியர் மதிப்பீடு செய்கிறார்.
1917 ல் ‘இந்தியாவில் சாதிகள் – அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம் மற்றும் வளர்ச்சி’
1936 ல் சாதியை அழித்தொழித்தல்
1947 ல் ‘யார் சூத்திரர்கள்?’
1948 ல் ‘தீண்டப்படாதோர்: யார் அவர்கள்? ஏன் அவர்கள் தீண்டப்படாதோர் ஆனார்கள்’
1957 ல் அவரது மறைவுக்கு பிறகு வெளி வந்த ‘புத்தமும் தம்மமும்’
ஆகிய நூல்கள் எல்லாம் சாதி குறித்தும் அதற்கு எதிரான அம்பேத்கரின் போராட்டங்களையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அடுத்து அரசியல் களத்தில் அம்பேத்கர் நடத்திய பல்வேறு அரசியல் போராட்டங்கள் குறித்து ஆசிரியர் மதிப்பீடு செய்கிறார். முதலில் தேசியவாதத்திற்கு உள்ளாகியிருந்த அம்பேத்கர், பிரிட்டிஷாரோடு இணைந்து இயங்க ஆரம்பித்தது, ஒரு கட்டத்தில் முஸ்லீம் லீக் உடன் இணைந்து பணியாற்றியது, 1950 களில் காங்கிரசிடம் ஒத்துழைத்தது, இறுதியாக காங்கிரசிற்கு எதிராக அவர் செயலாற்றியது ஆகியன் குறித்து பொதுவாக அம்பேத்கர் தனது பதவிக்காக சமரசங்களை மேற்கொண்டார் என பலர் மதிப்பீடு செய்கிறார்கள். இம்மதிப்பீட்டை ஆணித்தரமாக மறுக்கிறார் நூலாசிரியர்.
அம்பேத்கர் எப்பொழுதுமே பதவிகளுக்காகவோ, தன் சுய நலன்களுக்காகவோ செயல்பட வில்லை. தன்னுடைய அரசியலை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, தன்னுடைய பதவிகளை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை வளர்தெடுக்கவே முனைந்தார் என்பதனை பல்வேறு தரவுகளோடு ஆசிரியர் நிறுவுகிறார். அதே நேரத்தில் அம்பேத்கர் மீது நூலாசிரியர் முன் வைக்கின்ற ஒரு குற்ற சாட்டு மிக முக்கியமானது. தனது அரசியல், சமூக நிலைப்பாடுகளை முன்னெடுக்கும் விதமாக ஒரு ஸ்தாபன ஏற்பாட்டை உருவாக்க தவறி விட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.
அவரின் கவனம் முழுக்க அறிவுத் தளத்தில் இருந்ததும் அவருக்கு இணையாக பணியாற்றக் கூடிய பிற தலைவர்கள் உருவாகததும், பிற தலித் தலைவர்கள் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்ற தவறியதும் கூட அமைப்பினை உருவாக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அனைத்து பணிகளும் அம்பேத்கர் அவர்களின் தோளிலேயே சுமத்தப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இறுதியாக அம்பேத்கரின் தேவையும் தாக்கமும் என்ற இறுதி பகுதி மிகவும் முக்கியமானது. இந்துத்துவா ஒரு பக்கம் சாதியம் குறித்த அம்பேத்கரின் எந்த கருத்தாக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமலும் அதே வேளையில் சாதியத்தை வளர்த்தெடுத்துக் கொண்டே அவரைப் போற்றி புகழ்கிறது. மற்றொரு பக்கம் அவர் மீதான தாக்குதலையும் தனக்கு ஒத்துழைக்காத அம்பேத்கரிஸ்ட்கள் மீதான தாக்குதலையும் மிகவும் நுட்பமாக முன்னெடுக்கிறது.
இம்முரண்பாட்டை இந்நூல் பேசுகிறது. குறிப்பாக அருண் ஷோரி எழுதி ‘Worshipping False Gods: Ambedkar, and the Facts which Have Been Erased’ வெளிவந்துள்ள இப்புத்தகத்தில் கடுமையான தாக்குதலை தொடுத்தது குறித்து இந்நூல் பேசுகிறது. அப்படி எனில் இந்திய அரசியல் கட்சிகள் தலித் கட்சிகள் உள்ளிட்டு எப்படிப்பட்ட சவாலை எதிர்க் கொண்டுள்ளன என்பதை தெளிவாக்குகிறது.
– கோவிந்தராஜன், மதுரை