அரக்கோணத்தில் விஜயராகவன் – யமுனா மருத்துவத் தம்பதியருக்குப்  பிறந்த மருத்துவர் பிரியா விஜயராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். தன்னுடைய பெற்றோர்களைப் போலவே மருத்துவத் துறையில் தன்னலமற்ற பணியில் பரிணமிக்கும் பிரியா பரந்த, ஆழமான வாசிப்பு அனுபவம் பெற்றவர். நாவல் முழுவதும் காணப்படும் தமிழ், ஆங்கில இலக்கியங்களிலிருந்தான மேற்கோள்கள் இவரின் தீவிர வாசிப்பின் சாட்சியங்களாகும். தமிழில் சங்க இலக்கியப் பாடல்கள் தொடங்கி நவீன புனைவிலக்கியங்கள் வரை பரிச்சயம் கொண்டுள்ள பிரியா ஆங்கில இலக்கியத்திலும் அதே அளவில்  வாசிப்பு அனுபவத்தைப் பெற்றுள்ளார். ஓவியம், இசை, சினிமா போன்ற கலைகளிலும் ஈடுபாடுகளுடன் விளங்குகிறார். பணி நிமித்தம்  பிரியா மேற்கொண்ட பயணங்கள் அவருக்கு உலகளாவிய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன. தன்னுடைய முதல் நாவல் ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ மூலம் புனைவிலக்கிய உலகில்  தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.

‘அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவல் ஆணாதிக்க உலகில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் எழுத்தோவியமாகத் தீட்டப்பட்டுள்ள மாபெரும் திரைச்சீலையாகும். வாழ்வைத் தேடி வெளிவரும் பெண்களின் வாழ்வு அலங்கோலமாவதை எழுநூறு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் காட்சிப்படுத்துகிறது. தொன்றுதொட்டு பெண்களின் அவலங்கள் இலக்கியங்களில் பதியப்பட்டு வந்தாலும் இன்னும் சொல்லித் தீராத கண்ணீர் கதைகள் நிறைய இருக்கின்றன என்பதையே பிரியாவின் நாவல் சுட்டிக் காட்டுகிறது. இன்னும் எத்தனை காலம் பெண்களின் வாழ்வு அற்றவைகளால் நிரம்பியிருக்கும் என்ற கேள்வியும், ஏக்கமும் நாவலைப் படிப்பவர் மனதில் எழுகிறது.

நாவலின் நாயகி அஞ்சனா எனும் மருத்துவர் தன்னிலை மொழியில் கதையைச் சொல்லிச் செல்கிறார். நாவலில் தன் வாழ்க்கை அனுபவங்களை நேர்கோட்டில் அல்லாமல் முன்னும் பின்னுமாக கதையின் நாயகி அஞ்சனா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சாதியப் பாகுபாடுடன் பாலியல் ரீதியான பாகுபாடுக்கும் ஆளாகும்  இந்தியப் பெண்களுக்கு வாழ்விடம் மேலும் மோசமாகிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு லண்டனில் மருத்துவப் பணி செய்திடும் வாய்ப்பிற்காக அஞ்சனா காத்திருப்பதில் நாவல் தொடங்குகிறது. இங்கிலாந்தில் மருத்துவராகப் பணியாற்றிட வேண்டும் என்பது அஞ்சனாவின் ஆசை என்பதைவிட அவளின் பாசமிகு தந்தையின் கனவை நிறைவேற்றுவது என்பதால் கடும் சிரமங்களைத் தாண்டி இறுதியில் வெற்றி பெறுகிறார்.

பிரமிடு வடிவிலான இந்திய சாதியக் கட்டுமானத்தில் சூத்திரர்களின் இடம் கீழ்மட்டத்தில் இருப்பதால் அவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்திக்கிறார்கள். நிழல் போல் தொடரும் சாதிய அடையாளத்தால் அவர்கள் அடையும் அவமானம் அநீதியின் உச்சமாகும். சாதிய ஒடுக்குமுறையினை உயர்த்திப் பிடிக்கும் சனாதன மதத்தையும், அரசியலையும் எதிர்த்துப் போராடும் இந்திய ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முன்பாக இன்றிருக்கும் மிகப் பெரிய சவால் தீண்டாமைக் கொடுமையாகும். நால்வர்ண சமூகத்தில் நான்காவது வர்ணமென ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வாழும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர் கதையின் நாயகி அஞ்சனா. தடைகளை எல்லாம் மீறிப் படித்து சமூகத்தளத்தில் மேலெழுந்த ஆதி திராவிடர்களில் சிலர் படிப்பும், பதவியும் தரும் அந்தஸ்தைக் கொண்டு தங்களின் சாதிய அடையாளத்தை மறைத்து வாழ விரும்புவதைக் காண்கிறோம்.  ‘அற்றவைகளினால் நிரம்பியவள்’ நாவலின் நாயகி அஞ்சனா தானொரு ஆதி திராவிடர், பட்டியல் இனத்தவர் என்று சொல்லிக் கொள்வதில் தயக்கம் காட்டாதவர்; பெருமை கொள்பவர். பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களால் ’கோட்டா (Quota) வழி வந்தவர்’ என்றழைக்கப்பட்ட வலியை எல்லாம் தாண்டி வந்தவர். தன்னம்பிக்கை, துணிச்சல், சுயமரியாதை ஆகியன இவரின் வெற்றிக்குக்  காரணமாகின்றன.

மொழி, இனம், மதம் கடந்து, பெண்களின் துயரம் எங்கும் நீக்கமற  நிறைந்திருப்பதை நாவல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குக் கரையை ஒட்டியுள்ள  சேய்ஷல்ஸ் (Seychelles) நாட்டில் மருத்துவராகப் பணியில் சேரும் அஞ்சனாவின் வாழ்வியல் அனுபவங்கள் அலாதியானவை. சேய்ஷல்ஸ், சோமாலியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈழம், எனப் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களை அங்கே சந்திக்கிறார். ஏழ்மை, புறக்கணிப்பு, பாலியல் வன்முறை என்று பல வழிகளிலும் துயரத்துக்குள்ளாகும் பெண்களின் வலியை அருகிலிருந்து கேட்டு அஞ்சனா ஆறுதல் அளிக்கிறார்.  சிறுவயதிலிருந்தே தந்தை கொடுத்த ஊக்கத்தினாலும், உற்சாகத்தினாலும் அஞ்சனா ஒரு புத்தகப் புழுவாகவே வளர்கிறார். பதின்பருவத்திலேயே தந்தையை இழந்த அஞ்சனா தந்தையிடமிருந்து பெற்ற அறக் கோட்பாடுகள், வாசிப்புப் பழக்கம், அஞ்சாமை, ஆகிய  நற்பண்புகளைப் பற்றிக் கொண்டு வெற்றிப் பெண்ணாக வலம் வருகிறார். இரண்டாம் தலைமுறை மருத்துவர் என்பதால் மருத்துவம் அஞ்சனாவுக்கு நெருக்கமானதாகக் கைகூடுகிறது. பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்களாக இருந்து கடைப்பிடித்த தொழில் நெறி அஞ்சனாவுக்கு நல்லதொரு வழிகாட்டுதலாக இருக்கிறது. மருத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறது.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஈஸ்வர் என்ற சீனியர் மாணவர் அஞ்சனாவிடம் நெருங்கிப் பழகுகிறார். கெட்டிக்கார மாணவரான ஈஸ்வர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்வைத் தொலைக்கிறார். ஈஸ்வரின் ஆழ்ந்த படிப்பறிவும், நற்குணங்களும் அஞ்சனாவிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மரணத்தின் வாயிலில் இருக்கும் ஈஸ்வருக்கு ஹவுஸ் சர்ஜனாக இருக்கின்ற அஞ்சனா அருகிலிருந்து பணிவிடைகள் செய்கிறார். ஈஸ்வரின் மரணம் அஞ்சனாவின் மனதில் அழியா வடுவாகி நிற்கிறது.

மருத்துவப் படிப்பை முடித்ததும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு  சேய்ஷல்ஸ் தீவிற்கு மருத்துவராகப் பணியாற்றச் செல்கிறார். இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கில் மடகாஸ்கருக்கு அருகில் இருக்கும் தீவுக் கூட்டங்கள் சேய்ஷல்ஸ் என்றழைக்கப்படுகின்றன. இயற்கை அழகு மிகுந்த சேய்ஷல்ஸ் தீவுக்கூட்டங்கள் அஞ்சனாவைப் பிரமிக்க வைக்கின்றன. பிரான்சின் காலனியாக இருந்த சேய்ஷல்ஸ் பல இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறது. ஆப்பிரிக்க இன மக்களின் உழைப்பு, இந்தியாவிலிருந்து கொத்தடிமைகளாகச் சென்ற தமிழ் மக்களின் உழைப்பு, சேய்ஷல்ஸ் தீவின் இயற்கை வளங்கள் அனைத்தையும்  பிரான்சு ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொழுத்த வரலாறு உலகறிந்ததே. சேய்ஷல்ஸ் தீவில் வாழும் தமிழர்களும், ஆப்பிரிக்கர்களும் தங்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் மறந்து பிரெஞ்சு மொழியின் கொச்சை வடிவமான கிரியோல் எனும் மொழி பேசியும், பிரான்சு நாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றியும் வாழ்கின்றனர்.

போதைப் பொருள் வர்த்தகத்தின் மையமாகத் திகழும் சேய்ஷல்ஸ் வன்முறைகள் மலிந்த நாடாகக் காணப்படுகிறது. ஆண்களும், பெண்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அல்லல்படுவது கண்டு அஞ்சனா சஞ்சலப்படுகிறார். போதை தரும் மயக்கத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் பெண்கள் ஆசைப்பட்டு தங்களின் வாழ்வைச் சீரழித்துக் கொள்வது கண்டு வருந்துகிறார். அவர்களுக்கு மருத்துவ உதவிகளுடன் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுகிறார். தீவில் நிலவும் யதேச்சதிகார அரசியலுக்கு  எதிராகப் போராடும் டேமியன், குடும்ப வன்முறைக்கு ஆளாகி தன்னுடைய குழந்தைமையைத் தொலைத்த ஜெஃப் ஆகிய இருவரும் அஞ்சனாவுடன் வாஞ்சையுடனும் ஆழ்ந்த நட்புடனும் பழகுகிறார்கள். அஞ்சனாவை மணந்து கொள்ள இருவரும் முன்வந்த போதிலும் அஞ்சனா அவர்களின் நட்பை மட்டும் ஏற்றுக் கொண்டு திருமண பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் விலகி விடுகிறார்.

சேய்ஷல்ஸ் நாடு 170 தீவுகளைக் கொண்ட நாடு. இவற்றில் மனிதர்கள் வாழ்ந்திடாத தீவுகள் நிறைய உள்ளன. நாட்டின் ஆட்சியாளர்கள் பல தீவுகளையும் உலகின் பணக்காரர்களுக்கு விற்றுப் பணம் சேர்த்துள்ளனர். ப்ராலின் தீவில் மருத்துவப் பணியாற்றும் அஞ்சனா, தனது நண்பர்களுடன் லாடிக் தீவுக்கு சுற்றுலா செல்கிறார். ஜெஃப், டேமியன் இருவரும் ஏற்பாடு செய்யும் இன்பச் சுற்றுலாவில் அஞ்சனாவும் கலந்து கொள்கிறார். ஒரு காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீவில் அனாதைகளாக விடப்பட்டனர். தீவில் கிடைக்கும் காய், கனிகளைத் தின்று தங்கள் வாழ்வின் இறுதி நாட்களைக் கழித்து மடிந்துள்ளனர். இந்நோயாளிகள் லாடிக் தீவில்  வாழ்ந்து மடிந்ததன் அடையாளமாக சில சின்னங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

இன்பச் சுற்றுலா வந்த நண்பர்கள் எல்லாம் இரவு முழுவதும் மதுவருந்தி பாட்டு ஆட்டமெனக் கழித்துவிட்டு மறுநாள் அயர்ந்து தூங்குகின்றனர். அதிகாலையில் எழுந்து தீவைச் சுற்றிப் பார்க்கும் அஞ்சனா மிகப் பெரிய அதிசயங்களைக் காண்கிறார். தீவில் நோயாளிகளாக விடப்பட்ட தமிழர்கள் தங்களின் பெயர்களை வட்டெழுத்துக்களில் பொறித்திருப்பதைக் காண்கிறார். தமிழ்க் கடவுள் முருகனின் அடையாளமான ’வேல்’ சின்னமும் ஆங்காங்கே பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியப்பின் விளிம்பில் ஆழ்கிறார். உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கள் எவ்வாறான துயரங்களுக்கெல்லாம் ஆளாகியுள்ளனர் என்பதறிந்து அஞ்சனாவின் மனம் கலங்குகிறது. சற்றும் எதிர்பாராது மேற்கொண்ட இப்பயணம் அஞ்சனா வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாகிறது.

இங்கிலாந்து செல்ல வேண்டும் என்ற ஆசை அஞ்சனாவை உந்தித் தள்ள விசா பெறுவதற்கு இங்கிலாந்து தூதரகம் இருக்கும் மொரிசியஸ் செல்கிறார். விசா கிடைப்பதில் தாமதமாகியதால் கையில் இருந்த பணமெல்லாம் காலியாகி என்ன செய்வதென்று தெரியாது தவிக்கும் போது நண்பன் டேமியன் விரைந்து வந்து உதவுகிறான். இருவரும் லண்டன் நகர் வந்தடைந்ததும் டேமியனை லண்டன் நகர் போலீஸ் கைது செய்து சேய்ஷல்ஸ் நாட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது. டேமியனைப் பழிவாங்கத் துடிக்கும் சேய்ஷல்ஸ் ஆட்சியாளர்கள் அவனின் விசாவை ரத்து செய்கின்றனர். கைது செய்யப்பட்ட டேமியனிடமிருந்து பெற்ற சிறு தொகையைக் கொண்டு அஞ்சனா லண்டனில் தன்னுடைய வாழ்வைத் தொடங்குகிறார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் என்று தெற்காசியாவின் பல நாடுகளிலிருந்தும் நிறைய டாக்டர்கள்  வேலைக்கு மனு போட்டு லண்டன் நகரில் காத்திருப்பதை அறிந்து அஞ்சனா அதிர்ச்சி அடைகிறார்.

லண்டன் நகரில் ஏழை எளிய மக்கள் வாழும் ஈஸ்ட ஹாம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் குடியேறி வேலை வாய்ப்புக்காக அஞ்சனா காத்திருக்கிறார். அவ்வப்போது தமிழகத்தில் இருக்கும் அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து தான் எந்தச் சிரமமின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்.

ஆனால் உண்மையில் லண்டன் நகரில் அஞ்சனாவின் வாழ்வு கடும் நெருக்கடிகளுக்கிடையில் தொடங்குகிறது. குறைந்த வாடகையில் கிடைக்கும் ஒரு பெண்கள் விடுதியில் அஞ்சனா தங்குகிறார். விடுதியில் தங்கும் பெண்கள் அனைவரும் பல நாடுகளில் இருந்தும் வாழ்வைத் தேடி லண்டன் வந்தடைந்த அபலைப் பெண்கள்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோகத்தைச் சுமந்த வண்ணம் நடமாடுகிறார்கள். டேமியன் கொடுத்திருந்த பணமெல்லாம் தீர்ந்து போனதும் அஞ்சனா மருத்துவர் வேலை கிடைக்கும் வரை ஏதேனும் ஒரு வேலையைத் தேடிக் கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார். அம்மாவிடம் நிலைமையைச் சொல்லி பணம் கேட்பதற்கு மனமின்றி இரவு நேர கேளிக்கை ஹோட்டலில் கீழ்நிலைப் பணியாளராகச் சேர்கிறார். அங்கு மாறன் என்ற தமிழ் இளைஞனின் நட்பு கிடைக்கிறது. அஞ்சனாவுக்கு செல்லுமிடமெல்லாம் நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரமே. டேமியன், ஜெஃப் போல் மாறனும் அஞ்சனாவின் காதலுக்காக ஏங்குகிறான்.

விடுதியில் தங்கும் பெண்கள் அனைவருக்கும் அஞ்சனா நல்ல சிநேகிதியாக விளங்குகிறாள். அதில் இரு பெண்கள் ஓரினச் சேர்க்கையில் இன்பம் தேடும் லெஸ்பியன்களாக இருப்பது கண்டு அஞ்சனா வியக்கிறாள். இலங்கையில் சிங்கள இனவெறி அரசியலால் பாதிக்கப்பட்ட அமிர்தினியின் சோகத்தைக் கேட்டு அனைத்துப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றனர். இரான் நாட்டு இஸ்லாமிய மதவாதம் பெண்களுக்கிழைக்கும் கொடுமைகளை ரோக்ஸானா அழுத வண்ணம் விளக்குகிறார். சோமாலியா நாட்டைச் சேர்ந்த டஹானா  தங்கள் நாட்டில் பெண்களின் பிறப்புறுப்பின் சில பாகங்களை கொடூரமான முறையில் வெட்டி எடுக்கின்ற (Female Genital Mutilation) மூடப் பழக்கத்தை கண்ணீர் மல்க விளக்குகிறார். இந்த அவலத்தைக் கேட்ட அனைவரின் நெஞ்சமும் பதறுகிறது. ரஷ்யப் பெண் வோல்கா சிறு வயதில் விபச்சார விடுதியில் அனுபவித்த கொடுமைகளைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆக மொத்தம் உலகெங்கிலும் பெண்களின் வாழ்வு அற்றவைகளால் நிரம்பியவைகளாகவே இருப்பது கண்டு அஞ்சனா திகைக்கிறார்.

பல மாதங்கள் காத்திருப்புக்குப் பின் அஞ்சனாவுக்கு லண்டனில் டாக்டர் வேலை கிடைக்கிறது. மாறனும் அவளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள். மாறனின் காதலை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அஞ்சனா இருக்கும் போது மாறனின் மனதில் மித்ரா எனும் பெண் குடிபுகுகிறாள். திருமணம் எனும் சிறையில் அகப்பட்டுக் கொள்ளாமல் மீண்டும் அஞ்சனா தப்பிக்கிறார். அஞ்சனாவின் மானசீக நண்பனாக மாறன் என்றென்றும் விளங்குகிறான். டேமியன், ஜெஃப் இருவரையும் பல முறை முயற்சி செய்தும் அஞ்சனாவால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மனித வாழ்வில் சில நெருங்கிய நண்பர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் விலகிச் செல்வது தவிர்க்க முடியாத துயரமாகவே விளங்குகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் அம்மாவின் அன்பில் திளைக்க அஞ்சனா தாயகம் திரும்புகிறார். மருத்துவமனையில் விடுமுறை பெற்று இந்தியாவுக்குச் செல்லும் அஞ்சனாவை வழியனுப்பி வைக்கிறான் மாறன். லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில் இந்தியா செல்லும் விமானத்திற்குக் காத்திருக்கும் அஞ்சனாவிடம் வயதான இந்தியப் பெண்மணி ஒருவர் பேச்சுக் கொடுக்கிறார். பேசத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அஞ்சனாவிடம் ”நீ எந்த சாதி?” என்று கேட்டதும் அஞ்சனா வியப்பேதுமின்றி சிரிப்பு மேலிட “நான் பட்டியிலினத்தைச் சேர்ந்த ஆதி திராவிடப் பெண்” என்று முகம் மலரக் கூறுகிறார். இந்தியர்கள் எந்த நிலையிலும் சாதியை மறந்தவர்கள் இல்லையே!

’அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவல் தமிழ் புனைவிலக்கியத்தில் இதுவரை அதிகம் பதிவு பெறாத குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக் காட்சிப்படுத்துகிறது. ஜெஃப் சிறுவனாக இருந்தபோது அனுபவிக்கும் பாலியல் வன்முறைக் கொடுமை படிப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும். இந்திய ஆங்கில படைப்புகள் சிலவற்றில் மட்டுமே இக்கொடுமை சித்தரிக்கப்பட்டுள்ளது. ’சிறிய விஷயங்களின் கடவுள்’ (The God of Small Things) நாவலில் அருந்ததி ராய் குழந்தைகள் மீது இழைக்கப்படும் பாலியல் வன்முறையைச் சித்தரித்துள்ளார். அதுபோல் பின்ங்கி விராணி எழுதிய ‘கசப்பான சாக்லெட்டுகள்” (Bitter Chocolates), நீல் கமல் ஜா எழுதிய ‘நீல நிற படுக்கைவிரிப்பு’, (The Blue Bedspread) ஆகிய நாவல்களிலும் காமுகர்களின் பாலியல் வக்கிரங்களுக்கு சிறுவர்கள் பலியாகும் அவலத்தைக் காண்கிறோம்.

நாவல் முழுவதும் மரணம் குறித்த பதிவுகளும், விவாதங்களும், தத்துவார்த்த விசாரணைகளும் இடம் பெறுகின்றன. நாவலாசிரியர் மருத்துவர் என்பதால் மரணம் குறித்த அறிவியல் பூர்வமான செய்திகளும் அடங்கியுள்ளன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியனவற்றில் உள்ள மரணம் பற்றிய பாடல்களை அப்படியே வழங்கியுள்ளார். மருத்துவம் தொடர்பான பல விஷயங்களையும் பிரியா நாவலில் கொட்டியுள்ளார். ஒரு அத்தியாயம் முழுவதும் மருத்துவர் பிரபாவதி நடத்தும் போஸ்ட்மார்ட்டம் வகுப்பு அப்படியே சித்தரிக்கப்படுகிறது.

நாவலாசிரியருக்கு ஆங்கில இலக்கியத்தில் இருக்கும் புலமையும், நெருக்கமும் பளிச்சென்று புலப்படுகிறது. ஆங்கிலக் கவிஞர் டி.எஸ்.இலியட் கவிதை உட்பட பல ஆங்கில நாவல்கள், கட்டுரைகள். நூல்கள் பற்றிய செய்திகளை நாவல் முழுவதும் அள்ளித் தெளித்துள்ளார். கற்றறிந்த அனைத்தையும் நாவலில் வெளிப்படுத்த வேண்டும் எனும் உற்சாகம் மேலிடுவது வாசிப்பு அனுபவத்தின் போது சற்று உறுத்தலாகவே இருக்கிறது. ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவல் சாதிவெறி, ஆணாதிக்கம், பாலியல் வன்முறைகள் குறித்தெல்லாம் தமிழ் சமூகத்தைச் சற்றுத் தீவிரமாகவே சிந்திக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை.

பெ.விஜயகுமார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *