ராகுல் சாங்கிருத்யாயனின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் “ஊர் சுற்றிப் புராணம்”.

“இந்த புத்தகத்த படிச்சிட்டு, வாழ்க்கையில எல்லாத்தயும் தூக்கி போட்டுட்டு, ஊர், ஊரா திரிஞ்சவன் ஏகப்பட்ட பேர்… எதுக்கும் அத மனசுல வச்சிட்டு படிங்க…” என்ற நண்பர்களின் எச்சரிக்கையுடன் தான், அந்த புத்தகம் என்னை வந்தடைந்தது. பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சார, பண்பாட்டு வாழ்வியல் குறித்த அற்புதமான வாசிப்பாய் அமைந்த அப்புத்தகம், ஊர் சுற்றுவதற்கான பெரிய தாக்கத்தை ஏனோ என்னுள் அப்போதைய சூழலில் நிகழ்த்தவில்லை.

ஆனால், சமீபத்தில் படித்த “அற்றவைகளால் நிரம்பியவள்” பல ஆண்டுகள் கழித்து, அத்தகைய தாக்கத்தினை, ஊர் சுற்றும் தாகத்தினை, கொழுந்து விட்டெரியும் தீயாய் கிளர்த்தி விட்டது. கொரோனா ஊரடங்கில் இந்தப் புத்தகத்தினை நான் கையிலெடுத்தது, என் குடும்பத்தினர் செய்த பாக்கியமாய் இருக்கக் கூடும்.

கூட்டைவிட்டு வெளியே வா பெருங்காடு ...

தமிழ்நாட்டின் சிறு நகரமொன்றில் புள்ளியாய் துவங்கி, நம் வாழ்நாளில் கேள்விப்படுவதற்கும் வாய்ப்பில்லாத தீவுக்கூட்டங்கள், ஒட்டுமொத்த உலகையும் ஈர்க்கும் தூர தேசத்தின் பெரு நகரங்கள், அற்புதங்களைத் தாங்கி நிற்கும் நிலப்பரப்புகள் என நீண்டு, விரிந்து,  பயணிக்கும் வாழ்க்கை அனுபவங்களால் புனையப்பட்டுள்ளது இந்த நாவல்.

மருத்துவரான நாவலாசிரியர் பிரியா விஜயராகவன், தனது வாழ்வியல் அனுபவங்களை, பெண்களின் பெருந் துயரங்களை, முற்றுப் புள்ளியின்றி விரியும் பயணங்கள் தொட்டுச் செல்லும் மனிதர்களின் குணாதியங்களை, புவிப்பரப்பின் மீது வண்ணங்கள் குழைத்து இயற்கை வரைந்து செல்லும் பேரதிசயங்களை, தடுமாறும் கணங்களின் தத்துவார்த்த பற்றுதல்களை, ‘அஞ்சனா’வின் வாழ்க்கையாக வடித்துள்ளார்.

முடிவுறா பயணங்கள்… மகத்தான மனிதர்கள்… நெகிழ்த்தும் பெண்கள்… விலைமதிப்பில்லா அனுபவங்கள்… தித்திக்கும் முத்தங்கள்… துரத்தும் காதல்கள்… பற்றிக் கொள்ளும் வழிபாடுகள்… எட்டி உதறும் சாதி… கொடூரமான சுரண்டல்கள்… உறையவைக்கும்  வன்கொடுமைகள்… பொசுக்கும் துயரங்கள்… முண்டியடிக்கும் சவால்கள்… தொடரும் போராட்டங்கள்… தொலைந்து போகா நம்பிக்கைகள்… என எத்தருணத்திலும் தேங்கி நிற்காத நீரோட்டமாய், நிரம்பி வழிந்தோடும் வாழ்க்கை வாய்க்கப் பெற்ற அஞ்சனா, உண்மையில் “முடிவு அற்றவைகளால் நிரம்பியவள்”.

நாவலாசிரியரின் முதல் படைப்பான இந்நாவல், சுயசரிதை, புனைவு, பயணக்கதை என பல்வேறு வடிவங்களின் கலவையாக, நேர்த்தியாய் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் படைப்புலகில், பெண்களின் பாலியல் தேர்வு குறித்த திடமான கருத்துக்களை, காத்திரமாக முன்னெடுக்கும் பெண்ணெழுத்தாக, ஆகப்பெரும் பங்களிப்பினை செய்துள்ளது இந்த நாவல்.

கூட்டைவிட்டு வெளியே வா பெருங்காடு ...

ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவின் அருகே, பூகோள வரைபடத்தில் புள்ளிகளாய் சிதறிக் கிடக்கும் செஷல்ஸ் தீவுக்கூட்டத்தில் துவங்கும் நாவல், நிகழ்காலத்து சம்பவங்களை, கடந்த காலத்து நிகழ்வுகளோடும், நினைவுகளோடும் பின்னிக் கோர்த்துக் கொண்டே நகர்கிறது. பல்வேறு தளங்களில் பயணிக்கும் இந்நாவலின் குவிமையம் பெண்ணுடல் மீதான வன்முறைகள் மற்றும் சாதியாதிக்கத்தின் அரசியலாக அமைந்துள்ளது.

மருத்துவம் படித்து, கண்டம் விட்டு, கண்டம் பயணிக்கும் அஞ்சனா எதிர்கொள்ளும் எல்லா நிகழ்வுகளும், ஒரு பெண்ணாக, அதிலும் தலித் பெண்ணாக அடையாளப்படுத்தப் படுவதிலேயே மையம் கொள்கின்றன. தான் பிறந்து, வளர்ந்த ஊரின் செல்வாக்கு மிக்க மருத்துவக் குடும்பப் பிண்ணனி, சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் கால்வைக்கும் போது, கோட்டாவில் வந்தவள் என்றே நிலைத்துப் போகிறது.

உள்ளூரிலோ அல்லது குடும்ப மருத்துவமனையிலோ வேலை செய்து வாழ்க்கையை ஓட்டும் பாதுகாப்பான வட்டத்திற்குள் நத்தையாய் சுருங்கிக் கொள்ளாமல், சென்னை, கேரளா, செஷல்ஸ் தீவுக்கூட்டம், இறந்து போன அப்பாவின் கனவை நிறைவேற்றும் பொருட்டு லண்டன் என தொழில் நிமித்தம் பயணப்படுகிறாள் அஞ்சனா.

தன்னைக் கடந்து செல்லும் முன்பின் தெரியாத ஆண்கள் எல்லோரும் சொல்லிவைத்தாற் போல் படுக்கைக்கு அழைக்கும், ஆனால் விருப்பமில்லாவிட்டால் தொந்தரவு செய்யாத வித்தியாசமான கலாச்சாரப் பிண்ணனி கொண்டது செஷல்ஸ் தீவு. இந்திய வம்சாவளி மக்கள் நிறைந்திருக்கும் அத்தீவின் மக்களிடம் நெருங்கிப் பழகும் தருணத்திலும் “நீங்க என்ன ஆளுங்க…” என்று நீளும் கேள்வி, அந்த சிறிய தீவுக் கூட்டத்தின் மூலை முடுக்குகள் எங்கும் பரவி, வியாபித்து துரத்துகிறது. இறுதியில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பும் போதும், சக விமானப் பயணியிடமிருந்து “மீரு ஏம் கேஸ்ட்மா…” என்று தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, தன் பசிய கோரப் பற்கள் தெரிய பல்லிளித்துக் கொண்டே.

பெண் நூலகம்: அன்பால் நிரம்பியவள் ...

தனது கடின உழைப்பால் குடும்பத்தை தூக்கி நிறுத்திய அஞ்சனாவின் பாட்டி – ‘என்னால முடிஞ்சா, உன்னை மறுபடியும் என் வயித்துக்குள்ள வச்சு பத்திரமா பார்த்துப்பேன்மா…’ என எப்போதும் மற்றவர்களுக்காய் உருகும் அம்மா – வாழ்க்கையை வண்ணமயமாக்கிய சக தோழிகள் – ஐசியு வார்டின் செவிலியர்கள் – செஷல்ஸ் தீவின் ஒரு மலையுச்சியில் பாறையைக் குடைந்து தனது வீட்டை கட்டியெழுப்பிய பெண் உழைப்பாளி – காதல் கணவன் கைவிட, முடங்கி விடாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு வாழ்க்கையை ஜெயிக்கும் செஷல்ஸ் தீவின் தமிழ்ப்பெண் – போதைப் பிடியில் சிக்கி, சிதைக்கப்பட்டு, மீளத் துடிக்கும் செஷல்ஸ் சகோதரிகள் – லண்டனின் ஈஸ்ட் ஹாமின் இருண்ட குடியிருப்பு ஒன்றில் அறிமுகமாகும் வெவ்வேறு தேசத்துப் பெண்கள் – லண்டனின் இந்துக் கோவில்களில், ஒருவேளை அன்னதானத்தில் பசியாறிக் கொண்டு, வேலை தேடிக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவர்கள் என ஏராளமான பெண்களோடு பயணிக்கிறாள் அஞ்சனா. அவர்களில் ஏதோ ஒரு பெண்ணோடு, ஏதோ ஒரு புள்ளியில், வாசகர்களாகிய நாமும் பொருந்திப் போவது நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம்.

நாவலைத் தாங்கி நிற்கும் இந்தப் பெண்கள், புவிப் பந்தின் வெவ்வேறு முனைகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, அஞ்சனாவின் பாதையில் இணைந்து கொண்டவர்கள். சமூக ஒடுக்குமுறைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் தமது உடலை தின்னக் கொடுத்தவர்கள். எஞ்சி நிற்கும் நம்பிக்கையை பற்றி எழுந்து, ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள். தேசம், மொழி, பண்பாடு என பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர்தம் துயர்மிகு பாடுகளும், வாழ்க்கை மீதான பிடிப்பும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.

ஈஸ்ட் ஹாமின் ஒரு நிசப்தமான இரவுப் பொழுதில், ஒவ்வொன்றாய் வெடித்துச் சிதறும் கண்ணீர் கதைகள், லண்டனின் குளிரினும் மோசமாய், இரத்தத்தை உறையச் செய்கின்றன. சிறு சத்தத்திற்கும், வாரிச் சுருட்டி கெதியா ஓடத் தயாராகிப் போகும் இலங்கைத் தமிழ்ப் பெண்கள் அமிர்தினி, வான்மதியின் தழும்புகள் நிறைந்த வரைபடமாய், நூற்றுக்கணக்கான தீப்புண்களைத் தாங்கி நிற்கும் உடல்கள் மூச்சடைக்கச் செய்கின்றன. பாலியல் பிண்டங்களாய் தனது சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, ஒருவருக்கொருவர் ஆதாரமாய், ஏதோ ஒன்றை பற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ரஷ்ய, ஈரானிய, பாகிஸ்தானி, பிலிப்பினோ பெண்களின் துயரக் கதைகள் மனதை உருக்குகின்றன.

‘இனி வலியில்லை மகள்களே… நீங்கள் சுத்தப்படுத்தப்பட்டீர்கள்…’ என தனது தேசத்துப் பெண்களின் பாடலைப் பாடிக்கொண்டே, சோமாலியாவின் ‘டீ’ விவரிக்கும் கெட்டாவின் துருவேறிய ஆக்ஸா ப்ளேட், யோனியை அடைத்துச் செருகப்பட்ட மரத்துண்டு, பீய்ச்சியடிக்கும் ரத்தத்தின் மீது அப்பிவிடப்பட்ட ஆப்பிரிக்க மண், தழும்பாகி வாழ்நாள் முழுதும் சுமக்கும் பிறப்புறுப்பின் பெருவலி உருவாக்கும் அதிர்வலைகள், நிலைகுலையச் செய்துவிடுகின்றன.

தனது நிர்வாண உடலை மறைக்க, ஏதாவது ஆடையைத் தேடி, பதறி விழிக்கும் கனவுகள் அஞ்சனாவை விடாது துரத்துகின்றன. ஆனால், தனது உடல் மற்றும் காதல் குறித்த அந்தரங்க உணர்வுகளை எந்தவித ஒளிவு, மறைவுமின்றி நேர்மையாக முன்வைக்கிறாள் அஞ்சனா. எதன் பொருட்டும் அவற்றை மறைக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ அவள் சற்றும் மெனக்கெடுவதில்லை.

தன்னுடல் குறித்த பெண்ணெழுத்து, தமிழ் கூறும் நல்லுலகில் பெரிதான வரவேற்பை பெறுவதில்லை. மாறாக, அருவருப்பு சாயம் பூசி, ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்கப்படுகிறது. பெண்களின் வாழ்க்கைப் பாதையும், ஆண்களின் வாழ்க்கைப் பாதையும் ஒன்றா? என அஞ்சனா எழுப்பும் கேள்வியை, நமது இலக்கியவாதிகளின் இடையே, நாம் வலுவாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பெண்ணுடல் குறித்த எழுத்தின் இலக்கணத்தை, இங்கு ஆண்களே வரையறுத்து வைத்துள்ளனர். அவர்களால் வேயப்பட்ட வெளிகளின் எல்லை தாண்டி, பெண்ணெழுத்துக்கள் பயணப்படும் போதெல்லாம், கொடூரமாக நசுக்கப்படுகின்றன. ஆனால்,  இந்த விதிகளையெல்லாம் தூள், தூளாய் உடைத்தெறியும் ஆயுதங்களோடு அவதரித்துள்ளாள் அஞ்சனா.

பெண் நூலகம்: அன்பால் நிரம்பியவள் ...

அவளுடன் பயணிக்க வேண்டுமெனில், முதலில் உங்கள் கலாச்சார சாட்டைகளை சுருட்டி, அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டியணைத்து அழுத்தமாய் முத்தமிடும் ஆண்கள், அவள் வாழ்க்கையெங்கும் உடன் வருகிறார்கள். தமிழ் எழுத்திற்கு உறுத்தக் கூடுமென எந்தவித சமரசத்திற்கும் உட்படாமல், அஞ்சனா சொல்லிச் செல்லும் காதல்கள், நியாயத் தராசுகள் நிர்ணயிக்கும் அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டவை.

அஞ்சனாவைப் பொறுத்த மட்டில், அவளது காதல்கள் நெகிழச் செய்யும் நினைவுகளை விட்டுச் செல்லும் வாழ்க்கைத் தடங்கள். இறுகக் கரம் பற்றி, தோள் சாய்க்கும் ஆத்மார்த்தமான நட்பும், ஆற்றுப்படுத்தும் அரவணைப்பும் கொண்டவை.

பல தருணங்களில், அறுதியிட்டுச் சொல்ல முடியாத அவளது உணர்வுச் சிக்கலில், அவை இழையறுந்துப் போகின்றன. மீண்டு உயிர்ப்பித்துக் கொண்டாலும், வாழ்க்கையோட்டத்தில் தொடர்பறுந்த துண்டுகளாய் தூக்கியெறியப்படுகின்றன வெவ்வேறு திசைகளில். தமிழ் சினிமாக்களின், தூர தேசத்தில் காதலியை தேடிக் கண்டடையும் காதல்கள், அஞ்சனாவின் வாழ்க்கையில் வாய்க்கப் பெறவில்லை.

ஈடு செய்ய இயலாத இழப்புகள் ஒருபுறம், லண்டனில் மருத்துவர் வேலை தேடிக் கொண்டே கேளிக்கை விடுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்ய நேர்வது போன்ற துயரங்கள் மறுபுறம், அஞ்சனாவின் வாழ்க்கையை நெருக்கிக் கொண்டேயிருக்கின்றன. எத்தருணத்திலும் துவண்டு தேங்கி விடாமல், பயணித்துக் கொண்டேயிருக்கிறாள் அஞ்சனா, எவரோ வரைந்து வைத்த நேர்கோட்டுப் பாதையை விட்டு வெகுதூரம் விலகி, புதிய நிலப்பரப்புகளின் கிறங்கச் செய்யும் மண்வாசனையையும், மலைமுகடுகளையும் நுகர்ந்தபடியே.

செஷல்ஸ் தீவின் தெளிந்த கடல்நீரின்  வழி தென்படும் ஆழ்கடல் அற்புதங்களாய், நாவல் முழுதும் கொண்டாடப்பட வேண்டிய சிறப்பம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

Amazon.in: Buy Atravaikalaal Nirambiyaval அற்றவைகளால் ...

உடல் சார்ந்த மருத்துவ தகவல்கள் ஏராளமானவை, மருத்துவத் துறைக்கேயுரிய பிரத்யேகச் சொற்களுடன், எளிய மொழியில் சுவாரசியமாய் சொல்லிச் செல்கிறார் நாவலாசிரியர். தனது பரந்துபட்ட, ஆழ்ந்த வாசிப்பின் துளிகளை ஆங்காங்கே சிந்திச் செல்லும் பாங்கு, உண்மையில் மலைக்கச் செய்கிறது. எழுதுகோல் ஒரு கையிலும், தூரிகை மறு கையிலுமாய், நாவலாசிரியரின் கருத்துச்செறிவான ஓவியங்கள் கூடுதல் அழுத்தம் சேர்க்கின்றன.

சந்திக்கும் பெண்கள் எல்லோரிடமும் அன்பையே பொழியும் அக்மார்க் அணுகுமுறை எப்படி சாத்தியமாகிறது எனும் கேள்வி சிறு உறுத்தலாய் நெருடுகிறது. இருந்து விட்டுப் போகட்டுமே… சதா சர்வகாலமும் கண்களை உருட்டி மிரட்டியபடியே, சக பெண்களை  வஞ்சித்துக் கொண்டிருக்கும் சீரியல் வில்லிகளையும், தியாகச் சொரூபங்களாய் அழுது வடிந்து கொண்டிருக்கும் கதாநாயகிகளையும் எந்த உறுத்தலும் இல்லாமல் தானே ஏற்றுக் கொள்கிறோம்.

அஞ்சனா அடிக்கடி குறிப்பிடும் 21 புள்ளிகளைக் கொண்ட சிக்குக் கோலங்கள், நான் சிறுவயதில் கற்றுக் கொண்ட முதல் சிக்குக்  கோலத்தை நினைவுபடுத்துகின்றன. குறுக்கு, நெடுக்காக, வளைந்து, நீண்ட அதன் முடிச்சுகளில் அடிக்கடி சிக்கி, திணறிக் கொண்டிருந்தேன். எதிரெதிர் முனைகளில் உள்ளும், புறமுமாய் துவங்க வேண்டிய அதன் சூட்சுமத்தை, பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்ட பின், சிக்குகள் சித்திரமாய் பரிணமிக்கத் துவங்கி விட்டன.

பெண் நூலகம்: அன்பால் நிரம்பியவள் ...

சிக்குக் கோலங்களில் ஒளிந்து கிடக்கும் சூட்சுமங்களைப் போல், வாழ்க்கையின் சூட்சுமம் அதன் சிக்கல்களிலேயே ஒளிந்து கிடக்கின்றது.  ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ அடிக்கோடிட்டு சுட்டும் வாழ்க்கைப் பாடம் இதுதான். ஆனால், அந்த சூட்சுமம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதை அங்கீகரிப்பது தான் நாவலின் நிறைவான சிறப்பம்சம்.

– எஸ்.பிரேமலதா

One thought on “அற்றவைகளால் நிரம்பியவள் – பிரியா விஜயராகவன் | மதிப்புரை எஸ்.பிரேமலதா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *