Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Dr. Era. Savitri. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O முனைவர் இரா. சாவித்திரி



கற்றல் என்பது யாதெனில்
(கல்வி 4.0)
ஆசிரியர்: ஆயிஷா இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம் 
பக்: 296.
விலை: ரூ.270
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

கற்றல் என்பது யாது என்ற வினாவிற்கு விடை 296 பக்கங்களில் விரிகிறது .இந்த வினா எவ்வளவு பரந்த எல்லைஉடையது எவ்வளவு கால எல்லை கொண்டது, இதனுடைய ஆழம் எவ்வளவு என்பதை க்கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற விடையை ஒரு நூலாக ஆக்கி உள்ளார் ஆசிரியர் ஆயிஷா. இரா .நடராசன். இன்றைய மனிதனிடமிருந்து பிரிக்க முடியாதது கைபேசி .எல்லா வேற்றுமையையும் கடந்து இன்றைய மனிதனிடம் நீக்கமற இணைந்திருப்பது கைபேசி. இது தனிமனிதச்சிக்கலா, சமூகச்சிக்கலா, தொழில்நுட்ப வளர்ச்சிச் சிக்கலா என்ற குழப்பத்திற்கு அப்பால் சமூக அக்கறையுடன், பொறுப்புணர்வுடன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் அருமை, அது இன்றைய அவசர யுகத்தில் எந்த அளவுக்குப் பயன்படுகிறது, அதை எப்படி யார் எத்தருணத்தில் கண்டுபிடித்தார்கள் என்பதையும் வரலாற்றுப் பின்னணியில் புள்ளி விவரங்களோடு
புனை கதை போல் சுவைபடஆக்கியுள்ளார் இரா .நடராசன். இந்நூலை தக்க சமயத்தில் அனைவருக்கும் பயன் தரும்படி வெளியிட்ட பாரதி புத்தகாலயம் இதற்காகப் பெருமைப்பட வேண்டும்.

” மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்” என்ற நூல் எலியின் மற்றும் யா.ஸெகால் இணைந்து எழுதியது .மனிதனை உலகின் பேராற்றல் மிக்கவனாக ஆக்கிய ஒரு அம்சத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமானால் அது கல்விதான் என்கிறது அந்த அற்புத மனிதவள வரலாற்று நூல் என்று கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுவதை இந் நூலுக்கு நல்ல தொடக்கமாக்கி ஏ.ஜி.குட். மற்றும் ஜெ.டி.டெல்லர் ஆகியோர் இணைந்து எழுதிய உலகக்கல்வி வரலாறு என்பதில் தொடர்கிறது இந்நூல்.கிளாஸ் ஷ்வாப் நாலாவது தொழிற்புரட்சி என்ற நூலை எழுதியுள்ளார் .தொழிற்புரட்சி கால கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் செயற்கைநுண்ணறிவு ,கணினித் தொழில்நுட்பங்களை அடிப்படை ஆக்கி இந்நூலை விரிவாக்கியுள்ளார்.

கல்வியின் நான்கு கட்டங்களை வகைப்படுத்துதல் அடுத்து வருவது.

1. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் காட்டு விலங்குகளைத்தன் கட்டுக்குள் கொண்டுவர எப்படியும் வளைந்து கொடுக்கும் மிக தந்திரமான உயிரியாக மனிதன் எப்படி உருவெடுக்கிறான் என்பது முதல் கட்டம்

2.எழுத்து வடிவ அறிமுகம்/ எண் வடிவங்கள் கற்பிக்கப்படுகிறது கணக்காயர்களாதல் கல்வியின் நோக்கமாக இருந்தது இரண்டாவது கட்டம்

3. மத அடிப்படைவாதக்கல்வி. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் தோன்றின. கல்வி ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே என்ற எழுதப்படாத சட்டத்தை அனைத்து மதங்களும் கடைப்பிடித்தன. ஆசிரியர் என்பவர் உருவாகியிருந்தார்

4 . அச்சுயந்திரம் அறிமுகமான 1436 முதல் நான்காம் கல்வி காலகட்டம். கணிதம் வேதியியல், உயிரியல் என்று தனித்தனி துறைகள் தோன்றி கல்வி அதிவேகப் பாய்ச்சலாய் உருவெடுத்த காலம். 1453 இல்தொடங்கிய அறிவுத்தேடல் புதிய அறிவை, மனிதனின் புரிதலை இணைத்தல் என்று உரு மாற்றிய பொற்காலம். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் பட்டியல் தொடர்கிறது கலிலியோவின் 16 கண்டுபிடிப்புகள் தொலைநோக்கியை வான் நோக்கித் திருப்பியது. நியூட்டனின் பிரின்சிபியா எனும்ஒரு படை 32 புதிய புதையல்களை அறிவுத் தளத்திற்கு வழங்கிய ஆண்டு 1687 தனிமங்கள் துறையை ஆன்லைன் லவாய்சியர் வேதியியல் துறையாக மாற்றிய ஆண்டு. 1789 கல்வியின் முகத்தை மாற்றிய அடுத்த மாமனிதர் பிரான்சிஸ் பேக்கன். கல்வியில் எதிர்கால நோக்கம் என்பதைச்சேர்த்தவர் (1625 )கருவி யுகத்தில் எட்மண்ட் குண்டர் கண்டுபிடித்த (குண்டர் ஸ்கேல்) முதல் கணக்கீட்டுக்கருவி (1617) பிளெயிஸ் பாஸ்கல் தானியங்கி கணக்கீட்டுஇயந்திரத்தைக் கண்டுபிடித்து (1642 )செயற்கை நுண்ணறிவை பள்ளி கல்லூரி வளாகத்தில் அடி எடுத்து வைக்க உதவுகிறார். பாஸ்கலின் கண்டுபிடிப்பை அரித்மோ மீட்டராக மாற்றி கூட்டல், கழித்தல், பெருக்கல் இவற்றோடு வகுத்தலையும் சேர்த்தார் லீப்னிஸ். (1685 )வகுப்பறைகள்
உருவாகின. பாடவேளைகள் வகுக்கப்பட்டன.

30 மாணவர்கள், ஒரு ஆசிரியர் அதற்கான சான்றிதழ்கள், பட்டங்கள் உருவாகின. இந்தியாவில்பொதுக் கல்வி 1834இல் அறிமுகம் செய்யப்பட்டது. வில்லியம் ஹண்டா தலைமையிலான கல்விக்குழு பெண் கல்வியை ஆதரித்தது . 1845 இல் ஐ.நா சபையில் அதே ஆண்டு உருவாக்கிய கல்விக்கான அமைப்பு யுனெஸ்கோ. 1964 இல் அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக் குழு அளித்த நலத்திட்ட அம்சங்கள் 1984இல் கல்வியைத் தொழில்நுட்பம் ஆக்கி கணினியைப் பள்ளிகளுக்கு வரவழைத்த மைய அரசின் கல்விக்கொள்கை ஆகியன திருப்புமுனைகள். 2000 ஆண்டின் யஷ்பால் கல்விக்குழுவும் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. இனி தொழிற்புரட்சியின் நான்கு கட்டங்களாக ஆசிரியர் குறிப்பிடுவது.
முதல் தொழில் புரட்சி கைகளால் செய்வதை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் முறைக்கு மாறியது. இரண்டாம் தொழிற்புரட்சி. மின் உற்பத்தி/ ஆண்டுக்கு ஒரு வகுப்பு /தேர்வு முறை/ ஆசிரியர் பயிற்சிநிலையங்கள், பாடப்பகுதி மைய வகுப்பறைகள் வந்தன மூன்றாம் தொழிற்புரட்சி மின்னணு யுகம், அணுகுண்டு யுகம், செயற்கைக்கோள் யுகம் இந்த காலகட்டம் (1948 முதல் 1969 வரை ) தொலைக்காட்சி, டிரான்சிஸ்டர் வருகை எலக்ட்ரானிக் யுகத்தைப்புரட்சியாக மாற்றிய ஒருவர் அக்கியோ மோரிடா.

ஜப்பான் தனது சோனி நிறுவனத்தின் மூலம் குட்டி ரேடியோ, வாக்மேன் என்று மின்னணு சாதனங்கள் செய்வதை குடிசைத்தொழில் ஆக்கியிருந்தார் என்பது உச்சகட்டம் இரண்டாம் யுகம் (1970 முதல் 1989 முடிய) மைக்ரோ சிப்ஸ் பயன்பாடு /டிஜிட்டல் கேமரா /ரிமோட்’ ஒயர்லெஸ் அறிமுகம் கணினி யுகம் தொடங்கியது. மூன்றாம் யுகம்( 1989 முதல் 1999) மேசைக் கணினி அமெரிக்காவில் அறிமுகம்/ கணினிவழி கடிதப்போக்குவரத்து /அலுவலகம் ,வங்கிகள் கணினி மயமாதல் .

நான்காம் தொழிற்புரட்சி. இந்த யுகம் இணைய யுகம் கூகுள் யுகம் கம்பியில்லா ஐந்தாம் சந்ததி தொழில்நுட்பம் தான் இன்று திறன்பேசி ஆகி நான்காம் கல்விப் புரட்சிக்கு வித்திடுகிறது நானோ தொழில்நுட்பம். நமது கைபேசியை 18 கருவிகளின் சங்கமம் ஆக்கி இருக்கிறது தானியங்கி தொழில்நுட்பம் /ஏடிஎம் /டிஜிட்டல் பண பரிவர்த்தனை என வங்கிகளை உருமாற்றி விட்டது. நான்காம் தொழில் புரட்சியின் விளைவுகள் அறிவு பரவலாக்கம் /கல்வியை உலகமயமாக்கல். ஆயிரம் ஆண்டுகளில் ஏற்படாத மாற்றங்கள் அண்மைக்காலத்தில் வேகவேகமாக ஏற்பட்டுள்ளன. இத்தனை வேகத்தில் உலகை மாற்றிய அந்த ஆளுமைகளை அறிமுகம் செய்து வைக்கும் அழகு அருமை .

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Ku. Sentamil Selvan. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O - கு. செந்தமிழ் செல்வன்உலகை மாற்றிய பத்து ஆளுமைகள் என்கிற மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரையின் சாராம்சம் இந்நூலின் மற்றுமொரு சிறப்பு .

டிம் பெர்னர்ஸ் லீ (1955 ) 1989இல் ஹைப்பர் டெக்ஸ்ட் என்ற வகை மென்பொருளை கணினியில் புகுத்தி ENQUIRE என்னும் அமைப்பை உருவாக்கினார். உலகெங்கும் இருந்த 6000 விஞ்ஞானிகளையும் இணைத்து அடுத்த கட்ட நகர்வு W.W.W.World Wide Web. என்னும் இணையத்தைத் தோற்றுவித்தது. உலகின் முதல் துழாவி (Browser) அவர் கொடுத்ததுதான். கல்வி 4.0வின் இதயம் இணையம்.

செர்ஜி பிரின் (1973) ஸாரி பேஜ் என்பவருடன் இணைந்து செய்த முனைவர் பட்ட ஆய்வின் விளைவாக நேரடி கணினியாக்கச் செயல்பாடாக பேஜ்ராங்க் அல்காரிதம் தேடி (Search engine) வந்தது . தேடியின் பெயர் கூகுள். கல்வி 4.0வின் உயிர்நாடி கூகுள்.

ஜிம்மி வேல்ஸ் (சான் பிரான்சிஸ்கோ) ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தைத் தேடியவர். நண்பர் லேரி சாஸ்கரைச்சந்தித்தார் நியூ மீடியா என்னும் தகவல் களஞ்சியம் தொடங்கி பல முயற்சிகளுக்குப் பின் 2001இல் உருவானது விக்கிபீடியா.

கிரிஸ் ஹ்யூஸ்( 1983) டிஜிட்டல் வித்தகர். இவருடைய ஸ்பைடர் வலை என்னும் கிளப்பிங் மென்பொருளைப் பயன்படுத்தி 2008 இல் உருவாக்கப்பட்டது ஃபேஸ்புக் என்னும் முகநூல் .

ஜெப்ரிபெர்ஸ்டன்(1964) இன்று உலகில் எந்த புத்தகமோ, பொருளோ ஆன்லைனில் பெறுவதற்கு உதவும் அமேசான் இவருடைய அறிவுத்தேடல் கண்டுபிடிப்பு. ஜெரான் லானியா (1960) (நியூயார்க்) அடுத்தவர் நினைவை பதிவு செய்யும் அற்புதம் பென்சீவ் (ஹாரிபாட்டர் நாவலில் வரும்) மெய்மை எதார்த்தம். Artificial Intelligenceஎன்கிற செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் 1980களில் சாதித்துக்காட்டினார்.

நான்சி நோல்டான் (கனடா)தொடுதிரை தொழில்நுட்பத்தில் வல்லுநர். அத்தொழில் நுட்பத்தை வகுப்பறையில் பெரிய கரும்பலகையில் பொருத்திப் பார்த்து ரிமோட்டை இணைத்து திரைக்கு மேலே கேமராவைப்பொருத்தி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியவர்.

நரீந்தர்சிங் கபானி பஞ்சாப் (1926) ஒளியிழை என்றழைக்கப்படும் பைபர் ஆப்டிகன் இழைகளை உருவாக்கி நான்காம் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். இணையப்புரட்சிக்கு முக்கிய காரணி- நமது டவர்களின் உயிர் நாடி . அஜய் பாட் (இந்தியா ) பென் டிரைவ் .இன்று 132 கணினி தொடர்பான கண்டுபிடிப்புகளின் உரிமங்கள் பெற்ற சாதனை மனிதர். வெறும் இணைப்பான் ஆக அறிமுகமான பென்டிரைவில் நிறைய பைல்களைச்சேகரித்து வைக்க முடியும் என்னும் உபரி அம்சத்தைச் சேர்த்தவர். முக்கியமான கற்றல் உபகரணம் .

ஜார்ஜ் டிவால் (ரோபோ கண்டுபிடிப்பு) 1961இல் யுனிமேட் என்னும் தொழில்துறை ரோபோட்டை உருவாக்கிய மாமேதை. செயற்கை நுண்ணறிவின் மனிதத் தோழன் இவன். ஜப்பானில் 23 இன்ச் உள்ள குட்டி ரோபோட் ராபின் சக மாணவர்களுக்கு (எல்கேஜி) இரண்டாம் மொழியாக ஆங்கிலம் சொல்லித் தரப் பயன்படுத்தப்படுகிறது மேட்டுப்பாளையம் தமிழரசிகொடுத்த உலக மாமனிதர்களின் பட்டியல் எவ்வளவு தெளிவு என்று வியக்கும் ஆசிரியர் அப்போட்டித்தாளை இப்போதும் பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்கிறார். நாமும் பத்திரப்படுத்துவோம். மேலும் தொகு பெரும் தரவு, இணையச் செயலிகள் கல்வித் துறையில் ஆற்றும் பங்கு அளவிடற்கரியது..

கேம்லோட் என்னும் கணினியாக்கக் குழு நிறுவன துணைத் தலைவர் ஜான் வார்னாக்குடன் இணைந்து கண்டுபிடித்த பி.டி .எஃப் இன்றைய கல்வி4.0வின் முக்கிய ரத்தநாளம் ஆக வர்ணிக்கப்படுகிறது. டிஜிட்டல் தட்டச்சில் பிரம்மாண்ட திருப்புமுனை டெஸ்க்டாப் பப்ளிஷிங். உலகின் பெரும்பாலான அனைத்து நூல்களும் தினசரி, வார, மாத இதழ்கள் தொடங்கி வாட்ஸ்அப் டெக்ஸ்ட் வரை யாவுமே DTPயாக மாறிவிட்டது .

முறைசாரா கல்வி முறையான கல்விக்கு வழிகாட்டும் விந்தையை இந்நூல் கதைபோல் விவரிக்கிறது முறைசாரா க்கல்வியின் ஒப்பற்ற முன்னுதாரணங்கள் சுந்தர் பிச்சை, விசுவநாதன் ஆனந்த் ,கணிதமேதை சகுந்தலா, ஜிடி நாயுடு ஆகிய ஆளுமைகள் நிகழ்த்திய சாகசங்கள் சுவையானவை. முறையான கல்வி முறைசாராக் கல்வி இரண்டையும் ஒன்றிணைக்கும் வல்லமை கல்வி 4.0வுக்கே உண்டு என்பது இந்நூலில் விளக்கப்படுகிறது. “இந்த நூற்றாண்டின் அரிய பதிவு” என்று
இந்நூலுக்கு முதன்மை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய செறிவான முன்னுரை மிகச் சிறப்பு. கல்வி 4.0வின் அறிவியல், சமூகவியல், கல்வியியல் கூறுகளை இந்நூல் ஆழமாகப் பேசுகிறது என்பது இந்நூலின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கப் பதிவு. நோய்தொற்றுக் காலத்தில் ஊரடங்குக் காலத்தில் பிற நாடுகளில் எல்லாம் பள்ளிக்கு ச்செல்ல முடியாத நிலையில் கல்வியின் மாற்று வழி பற்றி எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்று உலகையே ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து குறிப்பிடும் செய்திகள் நம்மைச்சிந்திக்க வைக்கின்றன.

கல்வி 4.0. டிஜிட்டல் பள்ளி, கணினி வழி படிப்புகள் .செயலிகளின் பட்டியல் மற்றும் அனிமொட்டோ,குரோக்கடோ, ஸ்கூப்பி மற்றும் ஸ்லைடுஷேர் ,வெப் போஸ்டர் விசார்டு போன்ற கற்றல் உபகரணிகளின் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கின்றது. 4.0வும் இந்தியக் கல்வியும் பகுதியில் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச சுட்டும்போது அதிர்வடைகிறோம்.
வேதித்தொழிற்சாலை உள்ள இடங்களில் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பள்ளி கல்லூரி இரண்டிலும் பாடமாக நடத்தப்படவில்லை. பள்ளி என்னும் கட்டடம் மூடப்பட்டால் கல்வியை எப்படி குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது என்கிற மாற்றுவழி பற்றிய எந்த முன் தயாரிப்பும் நம்மிடம் இருக்கவில்லை இன்னும் இந்த மாதிரி எத்தனையோ விஷயங்கள் எனக்கு சொல்லப்படவில்லையோ எனும் அச்ச உணர்வு தவிர்க்கமுடியாதது. போகிற போக்கில் ஆசிரியர் கூறும் சில கருத்துக்கள் நம்மால் மறக்க முடியாதவை. மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வித் திட்டத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் வர்ணாசிரமக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதை மறுக்க இயலாது. எகிப்து முழுவதும் மதக் கல்வி இன்றி யாரும் எந்தப் பதவிக்கும் வர முடியாது. வருத்தத்தில் ஆழ்த்தும் செய்தி.

இணையத்தில் பூஜ்ஜியம் கல்வியாண்டு என்று கேட்டால் வரும் இந்தியா என்ற பதில். மனம் வலிக்கச் செய்யும் சில கசப்பான உண்மைகள். ஆன்லைன் கல்வியின் மிகப்பெரிய பக்கவிளைவு மாணவர்களின் பலர் வீடியோ கேம் வெறியர்கள் ஆகி அதில் போதை ஏறிய வர்களாக ஆகிவிட்ட அவலம்.

சுவையான தகவல்களில் ஒன்று. கல்பானா விமானநிலையத்தில் விக்கி விக்கி என்று டெர்மினல்களுக்கு இடையே ஓடிய அதிவேக பேருந்து (ஷட்டில் )அமைப்பின் பெயரையே தனது தகவல் களஞ்சியத்துக்கு விக்கிபீடியா என்று பெயர் வைத்தார். முரண் -எல்லா நாடுகளுமே விமான சேவையை ரத்து செய்துவிட்டன. அதேசமயம் சர்வதேச இணைய சேவை இணைய வழியே மூலை முடுக்குகளைக் கூட இணைத்திருக்கிறது. சொல்லின் பொருள் குறித்த சுவையான பதிவு.

கோத்தாரி குழு கல்வியை சேவை என்று அழைக்க கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை கல்வியை முதலீடு என்கிறது .இந்தியாவை சமூகம் என்று முன்னது குறிப்பிட பின்னது இந்தியாவை கல்விச் சந்தை என்று அழைத்தது. மறக்கமுடியாத புதிய வார்த்தைப் பயன்பாடு புதிய இயல்பு நிலை (New normal) இந்திய கல்வியில் உள்ள முரண்களின் பட்டியல் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. விலைக்கு கல்வி/ விலையில்லா கல்வி. முரணை நீக்க அனைத்து குழந்தைகளுக்கும் திறன்பேசியோ மடிக்கணினியோ வழங்கும் அவசர த்திட்டம் தேவை.

பள்ளித்தேர்வு /நுழைவுத் தேர்வு பயிற்சி. இம்முரணை நீக்க மாணவர்களுக்கு ஒரு ஆன்லைன் கோர்ஸ் கட்டாயமாக்கி அரசே செலவு செய்யலாம் மதிப்பெண்கள்/ திறன்கள் படைப்பாக்கம் ,புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் இடமாக பள்ளி செயல்படாது இணையக் கல்வி கவிதை ,ஓவியம் சதுரங்கம், சிக்கல் சவால், தீர்வுகள் என வாய்ப்புகளை அள்ளி வழங்குவதால் இணையக் கல்வி தேவையாகிறது உள்ளூர் அறிவு/ உலக அறிவு இறந்தகாலம் நிகழ்காலம் வருங்காலம் மூன்று கோடுகளும் இணையும் மையப் புள்ளியிலிருந்து ஞானம் பெற வைப்பது ஆன்லைன் கல்வி .

கும்பலாகக்கற்றல் /தனிக் கவனக் கற்றல் கல்வி உரிமைச் சட்டம் ன(2009) 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று வகுத்தது. அதைப் பின்பற்ற இந்தியா திணறுகிறது. எனவே மானிட்டரில் ஆசிரியரைக் கண்டு தேவையாயின் திரும்பப்போட்டு கற்கும் ஆன்-லைன் கணினி வழி வகுப்பு சரியான தீர்வாகும் .

மாநிலக் கல்வி/ சர்வதேச கல்வி மெட்ரிக் ,ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சிஎன்று ஐந்து ரகமான கல்வி முறை .நமது கல்வியை ஆன்லைன் கல்வியாக மாற்றும்போது அது மாநிலக் கல்வி ,தேசிய கல்வி, மற்றும் சர்வதேச கல்வி என்ற மூன்றாகவும் ஆகிவிடுகிறது.

வயது அடிப்படை கல்வி/சுதந்திரக்கற்றல் இணையவழி கற்றல் மிகச் சரியான பாதை சீனிவாச ராமானுஜம் கல்லூரி மாணவர்களுக்கு கணக்குப் போட்டுக்கொடுத்தாலும் ஆறாம் வகுப்பு ஓராண்டு முடித்தால்தான் ஏழாம் வகுப்பு வரமுடியும். அனைத்துப்பாட தேர்ச்சி/ ஒரு துறையில் நிபுணத்துவம் .

ஒரு பாடத்தில் அதிக திறன் பெற்றிருந்தாலும் மற்ற பாடங்களை முடிக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. பாடப்புத்தகம் /பொது வாசிப்பு.

பாடம் எனும் சுமை அழுத்தும் போது பொது வாசிப்புக்குத் தடையாகிறது .பொதுவாசிப்பை மேம்படுத்தாத கல்வியால் பயனில்லை.

கல்வி 4.0 கல்வி முறையின் முக்கிய அடித்தளமாக இணையத் தொழில் நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும் புதிய அவதாரம் ஆகும் .

கல்வி 4.0வும் குழந்தைகள் நலமும் பகுதி எடுத்துரைக்கும் சிந்தனைகள் யாவுமே முக்கியமானவை .

இணையக் கல்வி ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உரைப்பது மிகவும் கவனத்துக்கு உரியது மாணவர்களுக்கு மிக தேவையானது அரசாணை எண் 6.5 (பக்கம் 275)

இது பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இராணுவ சேவை போல் மிக முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கருதி பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். பின் விளைவுகள் பற்றிய எச்சரிக்கை இருப்பதால் பொறுப்புணர்வுடன் பெற்றோர் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அச்சுறுத்தல்கள் சுகாதாரக் கேடுகள் எவ்வளவு ஏற்பட்டாலும் அதற்கு அஞ்சி இணையக் கல்வியை விட்டுவிடாமல் தொடர ஆசிரியர்நேர்மறை உளப்பாங்குடன் கூறும் வழிகாட்டுதல்களும் பாராட்டுக்குரியவை. இந்நூலின் பிற்பகுதியில் 3. 4 வயதில் ஐ.டி.ஐ லாவகமாக அறிந்து அப்பாவின் கைபேசியை இயக்கும் ஒரு சந்ததிக்கு நாம் தரும் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று கோத்தாரிக்குழு அறிமுகம் செய்த நோக்கங்கள் ஆன்லைன் கல்விக்கும் பொருந்துவதை ச்சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் .

அன்றாட வாழ்வில் போராட்டங்களை ச்சமாளிக்க வேண்டும். சுய கட்டுப்பாடு மிக்க மதச்சார்பற்ற தன்மையுடன் பொதுநல பண்புகளை வளர்த்து, கல்வி ஆர்வத்தை மனதில் விதைத்து எதிர்காலத்தில் நாம் அறியாத புதிய வகை சவால்களை எதிர்கொள்ளும் வலிமையை ஏற்படுத்தக்கூடியதாக கல்வி இருக்க வேண்டும்( பக்.267 )

பிற்சேர்க்கை 1 கணினித்தமிழ்ச் சொல்லாக்க அறிமுகம் தமிழுக்கு அரும்பணி கற்பவருக்குப் பயனளிக்கும் பெரும்பணி. பிற்சேர்க்கை 2 கற்றல் சார்ந்த முக்கிய செயலிகள் 72 இன் தொகுப்புப் பட்டியல் அனைவருக்கும் பயன் தரும் பொக்கிஷம். மொத்தத்தில் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் கடும் உழைப்பு தெரிகிறது. ஆங்கிலச்சொற்களை அப்படியே தமிழில் எழுதுதல்நெருடலாக உள்ளது.

தகவல் களஞ்சியமாய் விளங்கும் இந்நூல் ஸ்ரீ திலிப் கூறுவதுபோல் கணினிக் கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நுணுக்கங்களை அள்ளித்தரும் அமுதசுரபியாய் விளங்குகிறது .

ஆசிரியர் ஆயிஷா. இரா .நடராசன் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல நல்ல படிப்பாளியும்கூட என்பதை துணைநூற்பட்டியல் நமக்குஉணர்த்தும். ஆசிரியரின் வாழ்நாள் சாதனை இந்நூல் என்று பாராட்டியிருந்தார் கு.செந்தமிழ்ச்செல்வன். இன்னும் இது போல பல சிறந்த நூல்களை அவர் உருவாக்குவார் என்பதையே இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆசிரியரின்சமூகப் பணிக்கு அன்பு நல்வாழ்த்துக்கள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *