இந்த மதிப்புரை என்பது தோழர் ஜமதக்னி மொழியாக்கம் செய்த மூலதனத்தைப் பற்றியது அல்ல. அதனை மதிப்பிடக்கூடிய அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது- மாறாக, தோழர் ஜமதக்னியைப் பற்றியதாகும்.

இதை எழுதுவதற்கு என்னை நிர்ப்பந்தித்த அம்சம், அச்சில் சுமார் 3600 பக்கங்கள் உள்ள நூலை, எழுத்தில் பத்தாயிரம் பக்கங்கள் வந்த நூலை அவர் எழுதிய வயதும், உறுதியும்தான் இதனைப் பதிவு செய்வதற்கு என்னை உந்தித்தள்ளியது.

தோழர் ஜமதக்னி, மூலதனம் நூலை மொழியாக்கம் செய்து கொண்டிருந்தபோது, 25.03.80இல் ஒரு கடிதம் அவருடைய நண்பருக்கு எழுதியிருக்கிறார். அதனையும் இந்த நூலைப் பதிப்பித்த அவருடைய மருமகனும், மகளுமான பேராசிரியர்கள் மு.நாகநாதன் மற்றும் சாந்தி, இந்த நூலில் இணைத்திருக்கிறார்கள். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு.

“அன்புள்ள ஷண்முகத்திற்கு,

நீ பெரிய குடும்பத் தலைவனாகிவிட்டாய் என்பதை உன் கடிதம் மூலம் கண்டேன். சுதந்திரப் போராட்டக் காலத்தில், உன்னை என் உடன் பிறப்பாக அன்பு செலுத்தினேன். வாழ்க்கைப் போராட்டச் சூழலில் அகப்பட்டு உன்னுடன் கூடவே இருக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். உன் நலம், மனையாட்டி நலம், குழந்தைகள் நலம் அறிய ஆவல் உடையேன்.

அரசியலில் உழன்று 9 ஆண்டுகள் சிறைப்பட்டேன். குடும்பத்தைப் பராமரிக்கலாமே என்றுதான் உன்னோடு அரசியலில் புகவில்லை. அப்படிப் புகுந்திருந்தால் நான் CPI-Mஇல்தான் இருந்திருப்பேன். அது உனக்கு எதிராக இருந்திருக்குமல்லவா!
இரண்டு கட்சிக்கும், இலட்சியம் ஒன்று. வழியில்தானே வேற்றுமை. நீங்கள் காங்கிரசை ஆதரித்தீர், சர்வாதிகார ஆட்சியிலே இந்திரா காந்தியுடன் ஒத்துழைத்தீர், அவர் ஒத்துழைக்கவில்லை. ஆனால், போராடவில்லை. வழியில் சில்லறை வேற்றுமையே. இப்போது இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாகப் பாடுபட முனைந்துள்ளன. நல்லதே. டாங்கே கொள்கையிலிருந்து பிரிந்தீர்கள். நல்லதே. இனி, இரண்டும் ஒன்றுபட்டால்தான் நாட்டிற்கே நலம்.

நான் நாட்டிற்கு 1947இல் இருந்து ஒரு தொண்டும் புரியவில்லை என்று சொல்லற்க. தமிழிற்குச் செய்த தொண்டு நாட்டிற்கு நன்மையல்லவா! உடம்பு உழைப்பை கம்யூனிசத்திற்குக் கொடுக்கவில்லை. உண்மைதான். உடம்பும் வளையாதது ஒரு காரணம். ஆனால், மார்க்ஸிய இலக்கியங்களைப் பயிலாமல் இல்லை. அதன் பயன்தான் மூலதனம் 6 புத்தகங்கள், 3600 பக்கங்கள், 600 பக்கம் இன்னும் பாக்கி.

இதற்கிடையே முதற் புத்தகத்தைச் செம்மைப்படுத்தி பெயர்த்து எழுதி வருகிறேன். என் மருமகன் Dr. PhD. பொருளாதாரம், பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அவர் அதனைப் பிரசுரம் செய்யவுள்ளார். என் மகள் பொருளாதாரம் M.A. எதிராஜ் கல்லூரியில் பேராசிரியை.

ஒரு நொடியும் வீணாக்காமல் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இது தமிழ்நாட்டில் எவரும் செய்யாத தொண்டு. இந்த ஏப்ரல் 14 வந்தால் 78ஆம் வயதில் காலை வைக்கின்றேன். இன்றைக்கிருந்தாரை நாளைக்கு இருப்பர் என்றென்னவோ திடமில்லையே என்ற பெரியார் சொல்லை நம் கம்யூனிசம் பொய்யாக்காதே. காரல் மார்க்ஸ் சொன்னார் அழகாக. ஒவ்வொரு நாளும் மனிதன் இடுகாட்டை நோக்கிச் செய்யும் பயணத்தில் 24 மணிகளைக் குறைத்திடுகின்றது.

Photo Courtesy: Dinamani

உன்னையும் உன் திருமனையாட்டியையும், குழந்தையையும் ஒருமுறை காண வேண்டும். நான் வாலாஜாபேட்டைக்கு ஓய்வூதியம் பெற ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் வருவது வழக்கம். இக்கடிதம் கண்டதும் உடனே விடை எழுதினால், 3, 4, 5 தேதிகளில் ஆரணி வந்து உன்னுடன் 1 நாள் தங்கி சென்னை திரும்பலாம். என்னை வருமாறு கடிதம் போட்டாயாகில் நான் மூலதனப் பெயர்ப்பு முகவுரையாக எழுதிய முரண்பாடுகளில் மோதுதலால் ஏற்படும் பொருள் உலகமாறுதல் Dialectical Materialism உடன் கொணர்கின்றேன். அதுபற்றி நண்பர்களுக்கும் உரையாற்றுவேன்.
உடனே பதில்.
ஜமதக்னி.”

அன்பார்ந்த தோழர்களே, காரல் மார்க்ஸின் மூலதனம் மற்றும் மிகை மதிப்பு நூல்களின் (ஆறு பகுதிகள்), 75 வயதுக்குப் பின்னர், அல்லும் பகலும் அயராது தொடர்ந்து உழைத்து,  நான்கு ஆண்டு காலத்திற்குள் பத்தாயிரம் பக்கங்கள் எழுதி, தமிழாக்கத்தை நிறைவு செய்ததைக் கண்டு, இனிய அதிர்ச்சிகொண்டு, என் முகநூல்பக்கத்தில், “என்னைப்போன்று வயதானவர்களுக்கு, உந்துசக்தியாக தோழரின் கடிதம் மிளிர்வதால், பதிவேற்றம் செய்திருக்கிறேன்” என்ற குறிப்புடன் பதிவேற்றம் செய்திருந்தேன். இதற்கு நூற்றுக்கும் மேலான நண்பர்கள் ‘விருப்பம்’ என்பதைப் பதிவு செய்திருந்தார்கள். பல தோழர்கள் பகிர்ந்திருந்தார்கள்.

முதுபெரும் தோழர் என். சங்கரய்யா அவர்களிடம் இதனை அவர் மகன் படித்தக்காட்டியபோது, மிகவும் நெகிழ்ந்து, கடகடவென பழைய நினைவுகளை கொட்டி விட்டார். ஜமதக்னி அவர்களை மாபெரும் மார்க்சிய அறிஞர் என்றும், 1941இல் வேலூர் சிறையில் அவர்கள் எடுத்த மார்க்சிய வகுப்புகளை நினைவு கூர்ந்தும், தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர் என்று புகழாரம் சூட்டியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் மிகவும் வயதான காலத்தில் வயதுக்கு மீறிய தீவிரத்துடன் மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், மருத்துவர்களும், நண்பர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு, மெதுவாகச் செய்யலாமே என்று கூறும்போது, அவர், “விடுதலைப் போராட்டத்தில் பல காலம் சிறையில் கழித்தேன். இந்தியா விடுதலை பெற்றது.

அப்போராட்டத்தில், சிறை புகுந்தபோது,  பொதுவுடைமைச் சிற்பியான சிங்காரவேலுவைச் சந்தித்தேன். முதுமைப் பருவத்தில், காச நோயால் அவதியுற்ற சிங்காரவேலருக்குச் சிறையில் எல்லாப் பணிகளையும் செய்தேன். அப்போது காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள், “சிங்காரவேலுவிடம் பேசாதே, உனக்கு (பொதுவுடைமை நெறி என்னும்) விஷத்தை ஊட்டிவிடுவார்” என்று கூறுவார்கள். பொதுவுடைமைச் சிற்பியோ சிறையில் தனக்குத் தரப்பட்ட மாமிச உணவை எனக்கு அன்புடன் அளித்தார். அறிவுப்பசிக்கு மார்க்சிய உணவை ஊட்டினார். எனவே, என் வாழ்நாள் முடிவதற்குள் காரல் மார்க்சின் மூலதனத்தைத் தமிழ்கூறும் நல்லுகத்திற்குத் தருவது தலையாய கடமையாகும்,” என்று கூறிவிடுவாராம்.

தோழர் ஜமதக்னியைக் குறித்து, முதலமைச்சராக இருந்த கலைஞர்,

அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: சோசலிச ...

மார்க்சீய அறிஞர் க.ரா.ஜமதக்னி அவர்கள் தியாகத் தீயில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கமாக ஒளிவிட்டவர். பிறநாட்டு நல்லறிஞர் சரித்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும், என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்தும் வண்ணம் பொதுவுடைமை சிற்பி காரல் மார்க்ஸ் படைத்திட்ட ‘மூலதனம்’ மற்றும் ‘மிகைமதிப்பு’ நூல்களை, இந்திய மொழிகளிலேயே முழுமையாகத் தமிழ் மொழியில் வழங்கியுள்ளது கண்டு பேருவதை கொள்கின்றேன்.

சமூக அறிவியலின் பலதுறைகளில் ஆய்வு நூல்களை – ஆவணங்களை, பல ஆண்டுகள் பயின்று, உணர்ந்து, தெளிந்து உருவாக்கிய காரல் மார்க்சின் படைப்புகள் அறிவின் எல்லைக் கோட்டை எட்டிப்பிடித்த வாழ்வியல் களஞ்சியங்களாகும். நாட்டின் விடுதலைப் போரில் குடும்பத்தையே ஈடுபடுத்திக்கொண்டு பல ஆண்டு சிறையிலேயே பெரியவர் ஜமதக்னி அவர்கள் அறிவித்திறன் – மொழிப்பற்று – தியாக உள்ளம் இவற்றின் காரணமாக தன் பெயரை, புகழை நட்டவர்.

அவர் தந்துள்ள இந்த மொழிபெயர்ப்புக் கருவூலம் தமிழர்க்குக் கிடைத்துள்ள புதையல். இப்பணி சிறந்திட அவருக்குத் துணையாக இருந்த பதிப்பாசிரியர்கள் டாக்டர் மு. நாகநாதன், டாக்டர் சாந்தி ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

இந்திய சுதந்திரப் பொன் விழா ஆண்டில் இந்நூல் வெளிவருவது மேலும் ஒரு சிறப்பாகும், அன்புள்ள, மு.கருணாநிதி, 5.4.1998,” என்று தன் கைப்பட எழுதி வாழ்த்தியிருக்கிறார்.

தோழர் ஜமதக்னி 1981இல் மறைந்துவிட்டார். அதன்பின் அவரின் உற்ற தோழராக விளங்கிய அவரது மருமகன் மு.நாகநாதன் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக மூலதனம் அச்சேறி வெளியாகியது.

எனினும், அதன் முதல் பதிப்பு அநேகமாக விற்றுத்தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறையினர் பலருக்கு இவ்வாறு ஒரு மொழிபெயர்ப்பு இருப்பதே தெரியவில்லை. எனவே இதனை மீண்டும் மறுபதிப்பு செய்து வெளிக்கொணர வேண்டும் என்கிற என் அவாவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *