ஏங்கெல்ஸ் நினைவலைகள்

பிளகானோவ்விற்கு என் கணவர் செர்கெய் மிகைலோவிச்சை தெரியும். அடிக்கடி கடிதம் எழுதுவார். ஒரு முறை அப்படி எழுதிய கடிதத்தில், “நீங்கள் லண்டனில் வசிக்கிறீர்கள். அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஏங்கெல்ஸ் அங்குதான் வசிக்கிறார் என்பது தெரியுமா? அப்படிப்பட்ட மனிதர்கள் வெகு அபூர்வமாகத்தான் பிறக்கிறார்கள். அதனால்தான் நான் நீங்கள் அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வற்புறுததுகிறேன்.  அவரைச் சென்று பார்த்தபிறகு எனக்கு அதைப் பற்றி எழுத வேண்டும். நீங்கள் இன்னும் அவரைச் சென்று பார்க்கவில்லை என்பதே  பெரிய தவறு. நீங்கள் கண்டிப்பாகப் போய்ப் பார்த்து வர வேண்டும்,“ என்று எழுதியிருந்தார்.

ஏங்கெல்ஸின் வீடு பெரியது.  அவரைச் சந்திக்க வருபவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் அதன் கதவுகள் திறந்தே இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த பெரிய கூடத்தில், சோஷலிஸ்ட்டுகள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் புடைசூழ அவர் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவரைச் சந்திக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் அவருடைய வீட்டுக்குச் செல்லலாம்.

ஒரு ஞாயிறன்று நானும், என் கணவரும் மார்க்ஸின் மகள் எலினாருடன் ஏங்கெல்ஸ் வீட்டுக்குச் சென்றோம்.

அழகிய அந்தக் கிழவரைப் பார்த்ததுமே என் மனதில் அவர் குறித்து ஒரு நல்லபிப்ராயம் விழுந்தது. நான் மிகவும் கூச்சப்பட்டேன். என் சங்கடத்தைப் புரிந்து கொண்ட அவர், எனக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டார். நான் அவரோடு பேசுவதைத் தவிர்ப்பதற்காக, வேண்டுமென்றே மார்க்ஸின் மகளுடனேயே பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், மிக இனிய சுபாவம் உள்ள அவரோ, மிக இயல்பாக என்னுடன் உரையாடத் துவங்கினார். எனக்கு ரஷ்ய மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. எனவே, ஆளை விட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்தேன். ஏங்கெல்ஸோ, பிரஞ்சு, ஜெர்மனி, அங்கிலம் என்று பல மொழிகளில் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு, எல்லாவிதமான விஷயங்கள் குறித்தும், குறிப்பாக அரசியல் குறித்து போய்க் கொண்டிருந்தது.  வாதப்பிரதிவாதங்களும் நடந்தன.

அவரது வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்மணி மேஜையின் எதிர் மூலையில் அமர்ந்திருந்தார். யார் புதிதாய் வந்தாலும் அவருக்கு தாராளமாக இறைச்சியும், பச்சடியும் வழங்குவதும், அவர்களது கோப்பையில் வைன் குறையாமல் பார்த்துக் கொள்வதும்தான் அவரது பணி.

வந்திருந்தவர்களுக்கு இடையே ஏதோ கடுமையான வாக்குவாதம். எல்லோரும்  உணர்ச்சிவசப்பட்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏங்கெல்ஸ் அவர்களது கேள்விகளுக்கு பதில் தரவேண்டும் என்றார்கள்.

திடீரென ஏங்கெல்ஸ்  என் பக்கமாகத் திரும்பினார். எனக்கு வேறு எந்த மொழிகளும் தெரியாது என்பதால் ரஷ்ய மொழியில் பேசினார். மகாகவி புஷ்கினின் கவிதையை மனப்பாடமாகச் சொல்ல ஆரம்பித்தார்.



(மூலநூலில் இந்த இடத்தில் நாற்பது வரிகளுக்கு புஷ்கினின் ரஷ்யமொழிக் கவிதை ஒன்று தரப்பட்டுள்ளது.  எனக்கு ரஷ்யமொழி தெரியாததால், அதன் மொழியாக்கத்தைத் தர இயலவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும் – மொழிபெயர்ப்பாளர்)

 மிக அற்புதமான  ரஷ்யமொழியில் அந்தக் கவிதையை அவர் சொல்லி முடித்தார்.  அவர் சொல்லி முடித்ததும், நான் கைதட்டினேன். ” என்னமோ, எனக்கு இந்த அளவிற்குத் தான் ரஷ்ய மொழி தெரியும்,“ என்றார் அவர்.

அன்று அவர் பற்றி எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு என்றும் அழியாதது. மிகவும் அன்போடும், திறந்த மனதோடும் அவர் எங்களிடம் பழகினார். சில நாட்கள் கழித்து எங்களைச் சந்திக்க வந்தார். அதிக நேரம் எங்கள் வீட்டில் தங்கவில்லை. சும்மா, எங்களோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வந்தார் போலும். அதன் பிறகு நான் அவரை எந்தப் பெரிய கூட்டத்திலும் சந்திக்கவில்லை. என் கணவரும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். பல்வேறு அரசியல் விஷயங்களைப் பேசுவார்கள். சமயங்களில் பெரிய வாக்குவாதம் வந்துவிடும்.  கருத்து வேற்றுமைகள் வந்துவிடும்.

ஏங்கெல்ஸ் மீதான எனது அன்பு உணர்ச்சிபூர்வமானது. என் சினேகிதி வேரா ஜாசுலிச்சிற்கும் அப்படித்தான்.  அவளைச் சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் ஏங்கெல்ஸ் பற்றிப் பேசுவோம். அப்போதெல்லாம் எங்கள் கண்கள் கலங்கிவிடும். காரணம் அவர் அப்போது மிகவும் உடல்நலம் குன்றியிருந்தார்.

ஒருமுறை திருமதி.காட்ஸ்கி, தான் எங்கோ செல்ல வேண்டியிருப்பதால், ஒரு சில மணி நேரங்களுக்கு ஏங்கெல்ஸிற்கு நான் துணை இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று என்னை வேண்டினார். அப்போது நான் சுமார் மூன்று மணி நேரம் அவருடன் இருந்தேன். உடல்நலம் குன்றியிருந்த அவரைப் பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால் அவர் என்னைப் பார்த்தும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.  மார்க்ஸ் வழக்கமாக வந்து அமரும் நாற்காலியை எனக்குக் காண்பித்தார். மார்க்ஸ் தனக்கு எழுதிய கடிதங்கள், தனது புகைப்படங்கள், தன்னை வைத்து வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றை எனக்குக் காட்டினார்.  எல்லாவற்றையும் மிகுந்த பாசத்தோடு செய்தார். நானோ அவரது உடல்நிலையைப் பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் நான் முதன்முறையாக அவரைப் பார்க்கும் போது அவர் அத்தனை ஆரோக்கியமாக இருந்தார். இப்போதோ மிகவும் பலவீனமாக, உடல்நிலை மோசமாகி இருந்தார். அவருக்கு வந்திருந்த நோய் மிகவும் கொடியது. தொண்டையில் புற்றுநோய்.

Stepniak 2.jpg
Sergey Stepnyak Kravchinsky

எனினும், தனது இறுதி மூச்சு வரை அவர் அத்தனை விஷயங்களிலும் உற்சாகம் குறையாது ஆர்வம் காட்டி வந்தார். வேரா ஜாசுலிச் அவரை அடிக்கடி போய் பார்த்துவிட்டு வருவாள். அவரது உடல்நிலை பற்றி அவ்வப்போது எனக்கு தகவல் சொல்வாள். அவரை நேசித்த அனைவருமே அவரை அடிக்கடி சென்று பார்த்தார்கள்.  பல மணி நேரங்கள் அவருடனேயே கழித்தார்கள். அனால் எல்லோருக்குமே அவர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது தெரிந்தே இருந்தது…….

கட்டுரையாளர் லண்டனில் புலம்பெயர்ந்த ரஷ்யப் புரட்சியாளரான செர்கெய் ஸ்டெப்னியாக் க்ராவ்சின்ஸ்கியின் மனைவி. ஸ்டெப்னியாக் ரஷ்ய ரகசிய போலீசின் தலைவரை நடுத்தெருவில் கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பிச் சென்ற புரட்சியாளர்.



ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 2 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பிரெடரிக் லெஸ்னர் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம் லீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 4: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எலினார் மார்க்ஸ் ஆவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)
ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 5: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எட்வர்ட் அவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *