திரும்பிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, தொடரின் 25வது வாரம் இதுவாழ்க்கையின் இசையும், இசையின் வாழ்க்கையுமாக ஒரு சேர நிகழும் ஒரு பயணம். அலுப்பும் சலிப்புமற்ற வாசிப்பு அனுபவமாக உள்ளதா என்பதை சக பயணிகள் சொல்லவேண்டும்வாய்ப்பை வழங்கிய பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன், இசையை எழுத வைத்த சஹஸ், சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சுரேஷ், ஜெயசீலி தோழர்கள், எண்ணற்ற வாசகர்கள், அன்புள்ளம் கொண்ட படைப்பாளிகள் எல்லோர்க்கும் நன்றி சொல்லி மகிழ்கிறேன்.

கடந்த வாரத்தில் சொந்த உறவினர் மூவர் பிரிவின் துயரத்தில் தெறித்த வாக்கியங்களில் நுட்பமாக ஆழ்ந்து துயரத்தில் பங்கேற்ற அன்பர்களுக்கு உளமார்ந்த நன்றி. ‘நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று, இரண்டு மனம் வேண்டும்என்று கேட்ட கண்ணதாசன் எப்பேற்பட்ட கவிகே வி மகாதேவன் அவர்கள் இசையமைப்பில் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை. திரை இதழ் ஒன்றில் அந்தப் படத்தின் கதாநாயகி அளித்த நேர்காணலில், பாடல்கள் பற்றி சுவாரசியமற்ற பதில் ஏதோ சொன்னதாக, காப்பிப் பொடி அரைக்கப்போன இடத்தில் (பேசும் படம், பொம்மை, பிலிமாலயா எல்லாம் படிக்கவென்றே !), வாசித்துக் கசந்து போய் அண்ணன் ரங்கராஜனோடு பேசியது நினைவில் இருக்கிறது

கொடுக்கும் ட்யூனை சிதைக்காமல், இயக்குநர் விரும்பிய விஷயத்தையும் நழுவ விடாமல், மிக எளிய சொற்களில் நினைத்த மாத்திரத்தில் பாடல் எழுத, அவருக்கு ஈடு யாரும் கிடையாது என்று கண்ணதாசன் அவர்களைப் பற்றி இளையராஜா கொண்டாடும் பதிவு சுவாரசியமானது. வசந்த மாளிகையின், இந்த சோகப்பாடலை, டி எம் சவுந்திரராஜன், தொடக்க வாக்கியங்களில் இருந்தே (குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம், அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால் குடித்து விடலாம், ஆனால், இருப்பதோ ஒரு மனது, நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்…..) சிவாஜி என்ன பாவங்களைக் காட்டுவார் என்ற கற்பனையோடு பாடி இருப்பார். சிவாஜி ரசிகர்கள் ஏதோ மனப்பாடப் பகுதி மாதிரி சொல்லிக் கொண்டிருந்த காலம் அது.(எளியேனும் ஒருவன் அதில்).





முதல் சரணத்தில், ‘உடலில் என்றால் மருந்து போதும்என்ற வரியை விட, அடுத்த வரியில், ‘உள்ளம் பாவம் என்ன செய்யும்என்ற இடத்தில் தெறிக்கிறது கவிதை. அடுத்த சரணத்தில், பிரிக்க முடியாத இணை அம்சங்களாக ஒரு பட்டியல் வரும். இரவும் பகலும் இரண்டானால் என்று உம்மைகள், அடுத்த வரியில் சந்தம் தப்பாதிருக்க இன்பம் துன்பம் இரண்டானால் என்று உம்மைத் தொகையாக விழும். உறவும் பிரிவும் இரண்டானால் என்று என்ற இடத்தில் நியாயம் கோரும் ஏக்கக் குரல் கேட்பவரையும் சோகத்தில் ஆழ்த்தும், அங்கே ஒரு விரக்தி சிரிப்பு. உள்ளம் ஒன்று போதாதே என்ற கடைசி அடியில் எத்தனை வேதனையை ஒரு கேவலாக ஒலிக்கிறார் டி எம் எஸ்கடைசி சரணம், கவிஞருக்குப் பிடித்தமான விளையாட்டு, கடவுளை வம்புக்கு இழுப்பது, அதை நோக்கிய படிக்கட்டுகளை அவரால் இலகுவாக அமைத்துக் கொள்ள முடியும். கண்களின் தண்டனை காட்சி வழி. காட்சியின் தண்டனை காதல் வழி, காதலின் தண்டனை கடவுள் வழி, கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்று கணிதத்தில் தேர்ச்சியான மாணவர் போல் இறுதிப் படியை வந்தடைந்து விடுகிறார் கண்ணதாசன். அதன் உயிரோட்டமான உணர்வுகளை உருக்கி வார்த்துவிடுகிறார் டி எம் எஸ்.  ‘என்ன வழி‘ என்பதில் எத்தனை சங்கதிகள்

துயரத்தை ஆற்றுப் படுத்துவதில் இசைக்குப் பெரும்பங்கு உண்டு. துக்கத்தைத் தணிக்கும் ஆற்றல் உணவுக்கும் உண்டு. ரேமண்ட் கார்வர் அவர்களது அற்புதமான சிறுகதையான, ஒரு சிறிய, நல்ல காரியம் குறித்துத் தமது கட்டுரை ஒன்றில் சிறப்பாக விவாதித்திருப்பார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். (ஆங்கிலக் கதையை நீங்கள் இந்த இணைப்பில் வாசிக்கலாம்: http://creativewriting.qwriting.qc.cuny.edu/files/2012/01/46_2006_carver.pdf ). 

பிறந்த நாள் கேக் ஆர்டர் செய்துவிட்டுப் போனவர்கள் வரவில்லை என்று ஓயாது அவர்கள் இல்லத்திற்குத் தொலைபேசியில் அழைத்துக் கொண்டே இருப்பார்  பேக்கரிக்காரர்; குழந்தை ஏமாந்துவிடக் கூடாதே என்ற கவலை அவருடையது. ஆனால், பிறந்த நாள் கொண்டாட வேண்டிய சிறுவன் சைக்கிளில் செல்கையில் பெரிய வாகனம் மோதி, கடுமையான காயங்களோடு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பான். பேச்சு மூச்சின்றி மருத்துவமனையில் கிடக்கும் மகனை நினைத்தபடி ஊனுறக்கம் இல்லாது பரிதவித்துக் கிடப்பாள் தாய் ஆனிதந்தை ஹாவர்ட் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கிடக்கையில், ஒவ்வொருமுறையும் வரும் இன்னார் என்று தெரியாமல் வரும் தொலைபேசி அழைப்பில் வெறுத்து கோபத்தில் கத்துவார். அன்றைய பாழிரவு கடக்கும் பொழுதில், இனியொரு போதும் கண் திறக்க மாட்டான் மகன், எல்லாம் முடிந்தது என்று சொல்லும் மருத்துவர், காலை நேரமெடுத்துத் திரும்புமாறு சொல்லி, அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லி விடுகிறார்.

விடிய வெகுநேரம் இருக்கும் பொழுதில் வீட்டைத் திறக்கும் அந்த அகாலத்திலும் அவர்கள் வீட்டுத் தொலைபேசி ஒலிக்கிறது. அவன் தான், எடுக்காதே, எடுக்காதே என்று இரைகிற கணவன் சொல்லை விடுத்து ஆனி அதற்குப் பதில் சொல்லி, யார் அடுத்த முனையில் என்று கேட்கிறாள். தெரிந்தபின், இருவரும் கோபமாக அந்த பேக்கரிக்குப் போய் நின்று சத்தம் போட்டு அவரைக் கடிந்து கொள்வார்கள். விவரம் அறியும் அவர், அதிர்ச்சி தான் அடைவார், ஆத்திரம் கொள்வதில்லை. மெல்லிய குரலில் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறார். ‘நகரின் பேக்கரிக்காரன், நள்ளிரவு நேரத்திலும் கடையை அடைக்க முடியாது, யாருக்கு வேண்டுமானாலும் தமது சேவை தேவைப்படலாம், தவிரவும், பிறந்த நாள் கேக் வாங்கப்படாமல் இருக்கும்வரை, தன்னால் எப்படி நிம்மதியோடு இயங்க முடியும்என்று தமது அவஸ்தையைச் சொல்லியபடி, அவர்களை இருக்கையில் அமரச் செய்து, தேநீரும், பழுப்பு நிறத்திலிருக்கும் ரொட்டித் துண்டுகளும் வழங்கி, இப்போது, ஒரு சிறிய நல்ல காரியம் தான் துக்கத்தை ஆற்றும், நீங்கள் சாப்பிடத் தான் வேண்டும் என்பார். தமக்குக் ,குழந்தைகள் இல்லை என்பதால் தம்மால் உணர முடியவில்லை என்ற அவரது வார்த்தை யாரையும் கண்ணீர் உகுக்க வைக்கும், விடிய விடிய அவரோடு பேசிக் கொண்டிருப்பார்கள் சிறுவனின் பெற்றோர். அங்கிருந்து புறப்படத் தோன்றவே இல்லை என்பது கடைசி வரிஎத்தனை அற்புதமான கதை !



இந்தச் சிறிய நல்ல காரியத்தை, இசை ஓயாது செய்து கொண்டிருக்கிறது. திரையில் பின்னணி இசை ஆற்றும் பங்கை உற்றுக் கேட்டால் புரியும். எந்த நிகழ்விலும், ஒரு மேண்டலின், நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல்….இப்படி எத்தனையோ கருவிகளின் இசை உள்ளே நுழையும் மனிதர்களின் உள்ளே புகுந்து அந்தத் தருணத்திற்குத் தக்க மனநிலைக்கு அவர்களை ஆட்கொள்ளப் பார்க்கிறது

போங்கோ கருவி குறித்து அண்மையில் வாசிக்க நேர்ந்தது. அதற்கு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராஜன் பாபுவுக்கு நன்றி சொல்லவேண்டும். அதை அறிய அவர் ஒரு கருவி, அவர் பேசியது கருவியைக் குறித்து அல்ல. இந்தச் செய்தியில் உள்ள சுவாரசியம் இதை எழுதும்போதுதான் பிடிபடுகிறது. பாபுவை திடீர் என்று அழைத்ததுநவம்பர் எட்டாம் தேதி, ஒரு நிகழ்வு இருக்கிறது, வரவேண்டும் ஒரு மாலைப் பொழுது என்று தான்! இணைய தளத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தது மட்டுமல்ல, அன்று முகிழ்த்த முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வங்கி அரங்கக் கிளைக்குத் தலைவர் பொறுப்பை ஏற்கவும் இசைந்தார். நிகழ்வுக்கு மறுநாள் அழைத்துப் பேசுகையில்எல் ஆர் ஈஸ்வரியின்வரவேண்டும் ஒரு பொழுதுகேட்டதுண்டா, நிச்சயம் கேட்டிருக்க மாட்டீர்கள், கேளுங்கள் என்றார் ஒரே மூச்சில்.

தங்க ரதம் வந்த அதே வீதியின் வேறொரு கலைக்கோயில் கீதம் அது. மெல்லிசை மன்னர்கள் மேற்கத்திய முறையில் தமிழ்த்திரைக்கு வழங்கிய பாடல்களின் வரிசையில் முக்கியமான பாடலான இது அதிகம் கேள்விப்படாதது வியப்புக்குரியது

நள்ளிரவு நேரத்தில் எதிரியின் கோட்டையில் நுழைய கயிற்றைச் சுழற்றிச் சுழற்றி லாவகமாக வீசுகிறான் போர் வீரன், பின்னர் முடிச்சு சரியாக விழுந்ததா என்று இழுத்து சரிபார்த்துவிட்டு, அரவமில்லாமல், பிசகாமல், உறுதியாக மேலேறி நின்று நிதானித்து ஒரு நோட்டம் விட்டு அடுத்த பகுதிக்குப் பதுங்கிப் போய் பாய்ந்து தாவி ஒரு மரக்கிளையை இலேசாக சலனப்படுத்தி ஒயிலாகக் கீழிறங்கி நடக்கத்தொடங்குகையில் பளீர் என அடிக்கும் நிலவொளியில் என்ன கம்பீர நடை அவனுக்கு





அப்படியாக, பியானோ ஒலிக்கத் தொடங்க, டிரம்பெட் அதை வாங்கிக்கொள்ள, டிரம் செட் துணைக் கருவிகளோடு காலடித் தடம் போட்டுக் கொடுக்க, எல் ஆர் ஈஸ்வரி, அரவமற்ற ரகசிய குரலெடுத்து அகிலமே கிறங்கிப்போகும்படிவரவேண்டும் ஒரு பொழுதுஎன்று பாடத் தொடங்கும் இடம், ஆஹாஆஹாஅதுவும், ‘பொழுது’வின் உள்ளே ஒலிக்கும் உகரம் சிகரம்.  

முதல் சரணத்தில்தராமலே நானும்‘ என்பதையும் சரி, இரண்டாவது சரணத்தில்நிலாவிலே வாழும்என்ற இடத்தையும் சரி, ஈஸ்வரி அசாத்திய  ஒயிலாக இசைக்கிறார். முதல் சரணத்தின் முடிவில், அவர் பல்லவிக்குத் திரும்புவதில்லை, கோட்டையைப் பிடிக்க இன்னும் முன்னேற வேண்டி இருக்கிறது, இப்போது திரும்பிப் பார்க்க அவகாசம் கிடையாது. டிரம்பெட் அந்த இடத்தில் ஏந்தி இரண்டாவது சரணத்தில் கொண்டு இறக்கி விடுகிறது. இரண்டாம் சரணம், கூடுதல் கிறக்கம் ! ‘பாடாமல் பாட கூடாமல் கூட’ என்ற வரியில் ஒரு பாடகரின் கற்பனையின் பரிமாணங்களை விளக்குகிறது. ‘இதோ மாது இதோ மது மனம் எங்கே என்ற இடத்தில் இசைக் கருவிகள் அவரைக் கொண்டாடி ஒலித்து நன்றி பாராட்டிப் பல்லவிக்கு அழைத்துச் சென்று விடை கொடுத்து நிறைவு செய்கின்றன

ஈஸ்வரி, ஆஹாஎத்தனை அபூர்வ இசை ஞானமும், குரலும், கற்பனையும் வெளிப்படுத்தும் பாடகி! பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து சொற்களை கவிஞர் கண்ணதாசன் எடுத்துக் கோத்த அற்புதப் பாடல்

இந்தப் பாடலைப் பேசும் பதிவு ஒன்றைத் தொடவும், ஆழமான  விவரங்கள் அடங்கிய நிலவறைக்குக் கொண்டு சேர்த்ததுஜாஸ் முறை பாடல்களையும், குறிப்பாக போங்கோ இசைக்கருவியை எம் எஸ் வி வெவ்வேறு விதமான உணர்ச்சிகளுக்குரிய பாடல்களுக்குப் பயன்படுத்திய அருமையான செய்திகளையும் பேசும் ராம் என் ராமகிருஷ்ணன் கட்டுரை இசை ரசிகர்களுக்கு இன்பமான வாசிப்பு அனுபவத்தைத் தரும். (http://www.mellisaimannar.in/community/orchestration-conducting-genres/the-tone-of-msvs-bongo/ ).  ஃபிராங்க் டூபியர் எனும் திறமை வாய்ந்த ஜாஸ் டிரம்பெட் கலைஞர், டிரம்பெட் தாமஸ் என எத்தனையோ இசைக்கலைஞர்கள் மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யத்தில் மகத்தான பங்களிப்பைச் செய்திருப்பதையும் வேறு சில செய்திகளில் பார்க்க முடிந்தது



டந்த வாரக் கட்டுரையை, மருத்துவரும் இசை கொண்டாடியும் எழுத்தாளருமான நண்பர் டாக்டர் ஜெ பாஸ்கரன் ரசித்து வாசித்திருந்தார். திரு சஞ்சய் சுப்பிரமணியன் அவர்களது மின்னஞ்சல் முகவரி அவரிடம் கேட்டுப்பெற்று, ‘இன்பம் நேர்கையில்என தலைப்பிட்டு அனுப்பி வைக்க, அந்த அற்புத பாடகர் அதை மிகவும் ரசித்து வாசித்தது ஓர் உற்சாக செய்தி. தொடர்ந்து இசையுலகில் எண்ணற்ற ரசிகர்கள் விவரிப்புக்கு அப்பாற்பட்ட அங்கீகாரத்தை சபைகளில் உரக்க ஒலித்துக் கேட்டபின்னும், ஓர் எளிய கொண்டாட்டத்தைப் பெருமிதத்தோடு ஏற்றுக் கொள்ளும் குழந்தைமை நெஞ்சமும், தன்னடக்கமும் அவரது இசையை மேலும் சிறப்பிக்கிறது. எப்படி நன்றி சொல்ல ?

நண்பர் குழலிசை கலைஞர் லிங்கராசு அவர்கள், தமிழிசை இன்பத் தேன் ஒரு சொட்டு ருசித்து, நேசித்து எழுதியுள்ள மின்னஞ்சலில் இருந்து சில துளிகள் வாசியுங்கள்: “கர்நாடக இசைக்கு தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி மூவர் எவ்வளவு முக்கியமோ, அது போல முத்துத்தாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை மூவர் தமிழ் இசைக்கு முக்கியமானவர்கள். பல்லவி,அநுபல்லவி, சரணத்தை எடுப்பு,தொடுப்பு, முடிப்பு என்பர்தமிழ் இசையில் என்னவொரு சொல்லாக்கம் பாருங்கள்

தலைமைச் செயலக அன்பர் வாசுகுமார் கட்டுரையில் கொடுத்த இணைப்பில் தொடுத்துப் போய் சஞ்சய் அவர்களது தமிழிசை பண்கள் வேறு சிலவும், வேறு பாடகர்கள் பாடி இருப்பனவும் இணையக் கலசத்தில் இருந்து அள்ளிப் பருகிய ஆனந்தத்தை என்ன சொல்ல

சித் ஸ்ரீராம் குரலைக் கொண்டாடிக் கேட்கிறோம் என்று மூத்த குடிமக்கள் சிலர் உடனே பதில் போட்டிருந்தனர். இளைய உள்ளங்களுக்கு நெருக்கமான இதயங்கள் அவைஇசைக்கான விஸ்வாசம் எங்கே இருந்தாலும், அது பாராட்டைப் பெறுவதில் வியப்பு இருக்க முடியாது

காலை நேரங்களில் சமையலறையில் 93.5 பண்பலை ஒலிப்பது குறித்துத் தனியே விரிவாக எழுத வேண்டும். புதிய வரிசை பாடல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒலித்தவற்றில், ‘கண்ணான கண்ணேமுக்கியமானது. நெருக்கத்தின் உருக்கம் சிறக்கும் குரலாக சித் பாடுவது யூ டியூபில் அந்தப் பாடலுக்கான ரசிகர் வருகை எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டிருப்பது. தோழர் பார்த்தசாரதி எழுதி இருந்ததைப் போல, அருமையான பாடலாசிரியர் தாமரை





என் மீது சாய வாஎன்பதற்கான இயைபு வரியாகபூ(ப்) போல நீவ வாஎன்று எழுதுவது எத்தனை இதமான தமிழ்! ‘என் ஏக்கம் தீருமா‘, ‘என் மின்னல் தோன்றுமாஎன பல்லவி முழுவதுமே மணக்கும் தமிழில், ‘தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும்என்ற இடத்திலிருந்துகற்கண்டாய் மாறுமாஎன்ற இடத்தை எப்படிச் சென்றடைகிறார் ஒரு கவி?   இப்படி பரிதவிக்கும் மனத்தின் வெடிப்பைத் தணித்து உரையாடல் வளர்க்கவோ, தாலாட்டின் ஆலாபனையில் ஆசுவாசம் எடுத்துக் கொள்கிறது பாடல்

உறக்கம் வராதவர்கள் அடுத்தவரைத் தூங்க வைக்கும் இசைக்கும் தாலாட்டில் எதிரொலிக்கும் தங்கள் ஏக்கத்தைக் கருப்பொருள் ஆக்கிக் கொள்ளும் பாடல், அடுத்தடுத்த சரணங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டே இருக்கும் தந்தையின் இதயம், குழந்தையிடம் இன்னும் இன்னும் இன்னும் பேசவே துடிப்பதை, ‘எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில்  பேசணும்என்று  சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிவது அற்புதம்

சித் ஸ்ரீராம், பாடலைத் தாம் பாடினாலும், அதன் உணர்ச்சியைக் கேட்பவர்களுக்கு எளிதில் கடத்த சாத்தியமான குரலில் உரிய அலைவரிசையில் உள்ளத்தினுள் போய் நின்று இசைக்கிறார். குழந்தையின் கைப்பிடித்துச் சுழற்றிச் சுழற்றி ஸ்கேட்டிங் போவது போலவோ, குழந்தையை ரங்கராட்டினத்தில் சுழலவிட்டுத் தானும் வெளியே சுற்றிக்கொண்டிருப்பது போலவோ ஒலிக்கும் அவரது குரல், தலைமுறைகள் தாண்டிச் சென்று சேர்வது இயல்பானது

இந்தப் பாடலுக்கான விருது பெற்ற  விழா ஒன்றில் பேசுகையில், கவிஞர் தாமரை, “தாலாட்டுப் பாடல்கள் அரிதாகி விட்டன, இப்படியான வாய்ப்பு கிடைத்தது, தாலாட்டுப் பாடல்கள் குறிப்பிட்ட கதைக்கான பாடலாக அந்தப் படத்தோடு நின்றுவிடாது காலங்கள் கடந்து கொண்டாடப்படும்என்று சொல்லி, மலர்ந்தும் மலராத, காலமிது காலமிது, கண்ணான பூ மகனே, கண்ணே கலைமானே பாடல்களைக்  குறிப்பிட்டு, அந்த எண்ணங்களோடு எழுதியது என்றார் டி இமான் இசையமைப்பில் விளைந்த அருமையான பாடல்களில் ஒன்று இது.

ரவுப் பாடல்கள் உண்மையில் உள்ளத்தோடான உறவுப் பாடல்கள். எப்படியெப்படியோ செலவழிக்க நினைத்த அன்றைய பொழுது வேறு எப்படி எப்படியோ கழிந்து போன கசப்போ, இனிப்போ ஏதானாலும், புழுதி களையும் வண்ணம் ஒரு முழுக்குளியலை மனத்திற்கு வழங்கும் சாத்தியம் இசைக்கு இருக்கிறது. இசை அப்படி நீராட்டுகிறது. தூய்மையை இன்னும் தூய்மையாக்குகிறது. மாசிருந்தால் துடைத்து விட்டு பளு இறக்குகிறது. மனத்தைக் கழுவிய நீர் கண்கள் வழி வெளியேறுவதற்கான பாதையை, இசைப் பாடல்கள் செய்து கொண்டே இருக்கின்றன கால காலமாய்

(இசைத்தட்டு சுழலும்……)



தொடர் 1 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – வாசிக்க

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – வாசிக்க

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/



தொடர் 9 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/

தொடர் 16 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-16-venugopalan-sv/

தொடர் 17 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-17-venugopalan-sv/



தொடர் 18 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-18-venugopalan-sv/

தொடர் 19 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-19-venugopalan-sv/

தொடர் 20 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-20-venugopalan-sv/

தொடர் 21 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-21-venugopalan-sv/

தொடர் 22 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-22-venugopalan-sv/

தொடர் 23 – வாசிக்க..

https://bookday.in/isai-vazhkai-23-isai-vandhu-theendum-bodhu-enna-inbamo-by-s-v-venugopalan/

தொடர் 24 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-24-venugopalan-sv/



6 thoughts on “இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. கவிதை விவரித்து இசைக்கருவிகளை கூறி…துக்கம் தொட்டு பாடல்களையும் உணர்வுகளையும் அலசி…..
    அடடா நீங்கள் எழுதுவதை படிப்பதே இனிய அனுபவம்‌.

  2. வெள்ளி விழா சிறப்பு மிக்க 25 வது தொடர் அருமை. ஆராரி ராரோ ராரோ ஆராரி ராரோ… வரை முணுமுணுத்து விட்டுதான் அடுத்த பத்தி படிக்க முடிந்தது. இரண்டு மனம் வேண்டும்..பாடுக்கு உங்கள் ஆலாபனை அற்புதம். சமையலறை காலை ரேடியோ வும் நானும்.. எனும் பெண்களால் பக்தி பாடைலையும் நவீன திரை இசை பாடலையும் சமமாக ரசிக்க முடியும். நன்றி.

  3. இசை சிலருக்கு தூக்கத்திற்கு தூண்டுகோலாகவும் மற்றும் சிலருக்கோ துக்கத்தை துடைத்தெறியம் திறவுகோலகவும் அமைகின்றது. உன் இசை தட்டு சுழலும் இன்ப வெள்ளத்தில் நான் நீந்த தயார். தொடரட்டும்..

  4. இரவுப் பாடல்கள் உண்மையில் உள்ளத்தோடான உறவுப் பாடல்கள். எப்படியெப்படியோ செலவழிக்க நினைத்த அன்றைய பொழுது வேறு எப்படி எப்படியோ கழிந்து போன கசப்போ, இனிப்போ ஏதானாலும், புழுதி களையும் வண்ணம் ஒரு முழுக்குளியலை மனத்திற்கு வழங்கும் சாத்தியம் இசைக்கு இருக்கிறது.
    உண்மை ஐயா
    அனுபவித்திருக்கிறேன்

  5. It is a 25th series of musical life. Silver jubilee but this is 5th comment.
    World has become very much materialistic and highly commercial. Arts have taken a back seat.
    Your commitment, love , consistency and untired efforts to deliver the best really impress.

  6. இந்த வாரமும் இனிய வாரமாய்
    இசைத் தட்டு சுழன்றது.
    இருபத்தைந்தாவது வாரம்
    நூறாவது வாரத்தைக் தொட
    வாழ்த்துக்கள்.எழுதுவது உங்களின் வரம்.அதனை வாசிப்பது எங்களின் சுகமான தவம்.
    அன்புடன் மும்மொழிக் கவிஞர்
    கு.பசுபதி. ஈரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *