இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

 

வாழ்க்கை முழுக்க இசையாலே நிரம்பித் ததும்பி மகிழ்ந்து நெகிழ்ந்த மகத்தான பாடகர் பாலு மறைந்துவிட்டார். தாங்க மாட்டாது உடனேஅப்படியாஎன்று நம்ப மறுத்துக் கேட்கின்றது ரசிக உலகம். இத்தனைக்கும் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மிகவும் சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த உள்ளங்கள், அவ்வப்பொழுது கேள்விப்படும் செய்திகளைக் கொண்டு ஆறுதல் அடைந்தும்,  தங்கள் சுவாசத்தை அவரது நுரையீரலுக்கு மாற்றியாவது அவர் எழுந்துவந்து முன்போல் பாடிவிட மாட்டாரா என்று ஏங்கியும் நகர்ந்து கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் சட்டென்று இப்படியான ஒரு முடிவை அவரது வாழ்க்கைக் கதையில் ஏற்க முடியாது திண்டாடுகின்றனர் எண்ணற்றோர்.

His soulful voice will remain in our hearts': Sports fraternity mourns  death of SP Balasubrahmanyam | Sports News,The Indian Express

74 வயதிலும் உடையாத குரல் மட்டுமல்ல சிதையாத குணமும் தான் அவர்பால் இத்தனை அன்பை மக்கள் பொழிவதற்குக் காரணமாகத் தோன்றுகிறது. தனக்கான பாடல்களை வழங்கிவிட்டுப் போகத்தான் இப்படி ஒரு மனிதர் பிறந்தார் என்று நினைத்து உருகியவர்கள் அவர்கள். குழந்தைகள், ‘எனக்கே எனக்குஎன்று அடுத்த குழந்தையிடம் பொம்மைகளை அல்லது தின்பண்டத்தைக் காட்டிக் காட்டி மறைத்துக் கொள்வதுபோல் மானசீகமாகத் தமக்காகத் தான் குறிப்பிட்ட பாடல்களைப்   பாடினார் என்று நம்பிக் கொண்டிருக்கும் இதயங்கள் கணக்கற்றவை.    

கனவுகளைப் பாடினார். காதலில் நெக்குருகச் செய்தார். கலைந்து போன காதலில் தொலைந்து போனவளை எண்ணிக் கதற வைத்தார். தாம் இன்புறுவது மட்டுமல்ல கதாநாயகனுக்காகத் துன்பத்தில் உருகுவது கூட உலகு உருகக் கண்டு காமுறும் அசாத்திய ரசனைப் பாடகராகத் திகழ்ந்தார் எஸ் பி பி. என்ன தான் பாடவில்லை அவர்நட்பு, துரோகம், அன்பு வற்றாமை, பிரிவின் ஆற்றாமை, ஆடல், ஊடல், கூடல், தேடல் எல்லா ரசங்களையும் பிழிந்து நம் உள்ளக்கோப்பைகளில் நிரப்பிக் கொண்டே இருந்த மனிதர் நிரந்தர ஓய்வு எடுத்து விட்டார்.

ஒரு செல்லச் சிணுங்கல், கொஞ்சல் பாவங்களைக் குரலில் கொணர்ந்து நெஞ்சத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தவர், விசும்பல், கேவல், குமுறலை எல்லாம் சேர்த்துப் பின்னிக் கொடுத்திருந்தவர், உயிர்க் காற்றின் ஒலியை புறக் காற்றில் கலக்கும் வேதியல் அறிந்திருந்தவர் ஓசையடங்கி விட்டார், ஆனாலும்இசையடங்காது ஒலித்துக் கொண்டே இருக்கிறது எல்லா திசைகளிலும்!

குழைப்பவருக்கேற்ப வண்ணங்கள் விளைவதுபோல், ராகங்களை அவர் இழைப்பதற்கேற்ப ஒரு தனி சுகம் கிடைப்பதை இன்னும் காதுகளை அவரது பாடல்கள்வசம் ஒப்புவித்து உட்கார்ந்திருப்பவர்கள் சொல்வார்கள். இரவு நேரங்களை அவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு சிற்றூரின் கயிற்றுக் கட்டிலில் அல்லது குறுநகரத்தின் மொட்டை மாடியின் துணிவிரிப்பில் அல்லது மாநகரத்தின் தலையணை விரிப்பில் உச் உச் உச் கொட்டிக்கொண்டே கிறங்கிக் கிடப்பவர்கள் இன்னும் வாரக் கணக்கில் அவர் நினைவில் கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பார்கள்.

The Legend Of SPB: Beyond Languages, Genres And Generations

எங்க வீட்டு பாத்திரம் ஒண்ணு ஏதோ கொடுத்து அனுப்பியது, இன்னும் திரும்ப வரலையே என்று கேட்டுவரும் பக்கத்து வீட்டு வாண்டு மாதிரி, பாடல்களின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் எதையோ தொலைத்தது மாதிரி அமர்ந்திருக்கின்றனர். அழைத்து அழைத்துச் சொல்லிச் சொல்லிப் பேசிப்பேசி மீண்டும் அவருக்குப் பதிலாக அவரது பாடல்களிடமே மீண்டும் சரண் அடைந்திருப்போர் ஆறுதலை அவரிடமே தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆயிரம் நிலவே வாபாடலை ஒரு புதுப்பாடகன் பாடினார் என்று யார் நம்புவார்கள்? எத்தனை தன்னம்பிக்கையோடு தெறிக்கும் சங்கதிகளும், ஆலாபனையும், குழைவும் அதில்! ‘சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ‘ என்பதற்காகவே அதை எத்தனை மென்மையாக உருட்டிப் பாடினார் ! பொட்டு வைத்த முகமோ மட்டும் என்னவாம், கட்டி வைத்த குழலோ என்ற இழைப்பே வேறு தளத்தில் அல்லவா ஒலிக்கும்?

சீட்டுக்கட்டு ஆடுமிடத்தில், சிலர் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுக் கலந்து பிரித்து விதவிதமான ஜாலங்களோடு தட்டிக்கொட்டி சேர்த்துப் பின்னர் ஒவ்வொருவருக்காய் போட்டுவருவார்கள். பாடல்களின் சொற்கள் ஒருவேளை அவரிடம் தவம் கிடந்திருக்கக் கூடும் அதே மாதிரியான அழகியல் பரவசம் தங்களுக்கு வாய்க்கட்டும் என்று

எல் ஆர் ஈஸ்வரியோடு இணைந்து அவர் பாடிய டூயட் பாடல்களில் ததும்பும் காதல், இசைத்தட்டு சுழன்று முடிந்தபின்னும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும். ஆரம்பம் இன்றே ஆகட்டும் (காவியத் தலைவி), மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு (அத்தையா மாமியா), அங்கம் புதுவிதம் (வீட்டுக்கு வீடு) ….எந்தப்பாடலை எடுங்கள், ஆலாபனையும், கெஞ்சலும், கொஞ்சலும் போட்டி போட்டுப் பறக்கும்!

அந்தி மழை பொழிகிறது‘ (ராஜ பார்வை) பாடலின் சரணங்களில் (டி வி கோபாலகிருஷ்ணன் அவர்களது ஆலாபனை ருசி ஒரு புறம்), தாளக்கட்டுக்குள் பொங்கி எழும் அவரது குரலில் ஒலிக்கும்  தாபம் அபாரமானது. எஸ் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய பாடல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் எப்போது முடிக்க

மலரே மௌனமே (கர்ணா) ஒன்றின் அழகை விவரித்தாலே நாள் காணாது! பாதி ஜீவன் கொண்டு வாழ்ந்த தேகம் மீதி ஜீவனைத் தேடும் அந்தக் காதல் தருணங்களை என்னமாக மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு போவார்கள் இருவரும். அந்த மலரே என்ற இழைப்பே நம் ஜீவனையும் சேர்த்து அல்லவா பாடலோடு கட்டி இழுத்துப் போகும்! சரணங்களில் நீராடும் தென்றல் குரல்கள், ஊருக்குத் தெரியாமல் நிகழும் காதலைப் போலவே யாருக்கும் மூச்சு விடாது பற்றி இழுத்து மீண்டும் பல்லவியைத் தொடும் வரை குழைக்கும் நீட்சியை விட காதலுக்கு என்ன சாட்சி தேவைப்படும்! பாலு, எங்கே கிடைக்கும் அந்த கொம்புத் தேன் குரல் இனி!

சுந்தரி கண்ணால் ஒரு சேதி‘ (தளபதி) வேறு ஒரு தளம். அங்கே காதல் ஒரு போர்க்களம். தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை என்ற ஏக்கத்தின் குரலுக்கு, வானிலவை நீ கேளு, கூறும் என் வேதனை என்ற மறுமொழியில் எத்தனை எத்தனை சங்கதிகளும் சேதிகளும் ! கெஞ்சுவதும், மிஞ்சுவதும், மீண்டும் கொஞ்சுவதுமான காதல் இலக்கணம் அல்லவா இந்தப் பாடல்!

SPB Vani Jayaram
SPB And Vani Jayaram

எஸ் பி பிவாணி ஜெயராம் இணைக்குரல்களின் காலம் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்த (இளமை ஊஞ்சலாடுகிறது) காலம்! நினைத்தாலே இனிக்கும் அந்தப் பாடல்களில்பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மாஏரியில் தத்தித் தத்திப் போகும் மிதவைகளின் சுகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த தபலாக் கட்டுக்கு ஏற்ப உருளும் பாடகரின் குரல்களும்

ரொம்ப கஷ்டமா இருக்கு, எல்லோரும் மனதை திடமாக வச்சுக்குங்க - பி.சுசீலா -  Dinamalar Tamil Cinema News
எஸ் பி பி – பி சுசீலா

எஸ் பி பிபி சுசீலா குரல்களில் ஒலித்த பாடல்கள் வேறொரு பதத்தில் கொண்டாட வைப்பவை. நதியோரம் நாணல் ஒன்று (அன்னை ஓர் ஆலயம்), மங்கையரில் மகராணி  (அவளுக்கென்று ஒரு மனம்), இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்)….முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்) பாட்டில், வெட்கத்துல சேல என்ற இடத்தில் சிதறும் புன்னகையும், வாக்கப்பட்டு வந்த வாச மலரே என்ற இழைப்பும் ஆஹா..ஆஹா

எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே சென்றால் என்ன, இன்றைய பொழுதில் இனி அவர் இல்லை என்ற ஏக்கத்திற்கு விடை இல்லை

இந்தப் பாடல்களுக்கு உள்ளே மட்டுமா இருந்தார் எஸ் பி பி? இவற்றுக்கு வெளியே இன்னும் வாழ்கிறார் காலகாலத்திற்கும் !

தன்னினும் இளையோர் பாடுவதைக் கேட்டு, உளம் நிறைந்த சொற்களால் அவர்களை அத்துணை பாராட்டி அவர்கள் முன்னேற்றத்தைத் தமது உயர்வாகக் கருதும் ஒப்பற்ற குணம் இருந்தது அவரிடத்து! இசைக் கருவிகள் வாசிக்கும் கலைஞர்களைக் கொண்டாடிக் கொண்டே இருந்தது அவரது உள்ளம்

கோடியில் ஒருவர் பாடும் நிலா பாலு .. வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்.. |  SPBalasubraniyam Life history - The Subeditor Tamil

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் மிருதுளா எனும் சிறுமி, ‘பளிங்கினால் ஒரு மாளிகை‘ பாடலைப் பாடி முடிக்கவும், பாராட்டியதோடு நிற்காமல், வயலின் கருவியில் வில் பயன்படுத்தாமல் விரல்கள் மீட்டி ஒலியெழுப்பும் பிஸ்ஸிகாட் முறையை ஒரு வகுப்பு போல நடத்தி விளக்குகிறார். இசைக் கருவிகளைக் கொண்டாடுங்கள், எல்லாம் கீ போர்டு தேடி அலையாதீர்கள் என்கிறார். இசைக்கலைஞர்கள் பலருக்கும் மாறிவரும் சூழலில் வேலையோ, ஊதியமோ கிடைப்பதில்லை, எலெக்ரானிக் கருவிகளை விடவும் பாரம்பரிய கருவிகள் பயன்படுத்த இசைக் கலைஞர்கள் தொழிற்சங்க ரீதியாக சண்டை போடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறார்

இளைய தலைமுறையைப் பார்த்து, ‘நிறைய சம்பாதிக்கணும் என்று இசை பயிலாதீர்கள், கலையைக் கற்று கருவிகளின் ஆயுளை நீட்டித்து உண்மையான இசையை வாழவையுங்கள்என்கிறார். இசை அமைப்பாளர் பெயர் மட்டும் வந்தால் போதாது, எதிர்காலத்தில் டைட்டிலில் இசைக்கருவி வாசிப்போர் பெயர்களும் வரவேண்டும் என்று குரல் கொடுக்கிறார். தான் உண்டு, தனது பிழைப்பும், வருமானமும் உண்டு என்று வேடிக்கை மனிதரைப் போல் வீழ விரும்பாத மனிதரின் மறைவுச் செய்தி அதனால் தான் எண்ணற்ற மக்களைக் கண்ணீர் சிந்த வைக்கிறது.  

தனது பாடல் திறனுக்கு மிகப் பெரிய அவையில் கிடைக்கும் மரியாதையை உடனே இசை அமைப்பாளருக்கும், சக கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் பணிவன்போடு சேர்ப்பித்து விட்டு மனத்தை இலேசாக்கிக்கொண்டு புன்னகையோடு நிற்க முடிந்தது அவருக்கு! அப்போதைக்கப்போது தென்படும் மனிதர்களைக் கொண்டாடிக்கொண்டு, பழைய காலங்களை இருட்டறையில் தள்ளிவிடாது, தனக்கு முந்தைய தலைமுறைகளின் பாடகர்களை, இசையமைத்த ஜாம்பவான்களை, கவிஞர்களைக் குறித்த உற்சாக விஷயங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமது நினைவடுக்குகளில் இருந்து எடுத்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார் பாலு

SP Balasubrahmanyam dies | 'Devastated', says AR Rahman, as tributes pour  in for legendary singer SPB

தமது பிசகுகளை, ஆர்வத்தில் செய்துவிட்ட சின்னஞ்சிறு பிழைகளை வேறு யாரும் எப்போதும் சொல்லப்போவதில்லை என்றாலும் தமது நியாய உணர்விலிருந்தும், நேர்மையான மனத்தின் குரலாகவும் பதிவு செய்துவிட்டுப் போனவர் பாலு. தன்னை நேசிப்பவனை நாய் நேசிக்கும், வெறுப்பவனை நேசிக்க வேண்டாமா என்றார் மகாகவி. தமது அன்றாட பிரார்த்தனையில், தமது சுற்றமும், நட்பும் மட்டுமல்ல, நட்புறவில் பிரிந்து போனவர்களுக்கும் சேர்த்தே வேண்டுதல் முன்வைப்பேன் என்பதாக இருந்தது அவரது ஆன்மீகக் கோட்பாடு

அதனால் தான், ஒரு பாடலின் பாவத்தில் தமது உயிரை உருக்கி வார்த்து அதைக் கேட்போரையும் அதே உணர்ச்சிக்குள் கொண்டு சேர்க்க அவருக்கு சாத்தியமாகி இருந்தது. ‘என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்என்றடூயட்படத்தின் பாடலில், சாக்ஸபோன் வேறு, அவர் வேறாகத் தெரியாத அளவு ரஹ்மான் உருவாக்கி இருந்த இசையமைப்பில் இதயங்களைக் கதறி அழ வைத்தது அவர் குரல்! அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா என்ற இடத்தை அவர் குரலுக்குள் தங்கள் குரல் ஒலிப்பதாக எத்தனை எத்தனை பேர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்!

SPB: A Mellifluous Voice That Moved Generations

ஒரு கதாநாயகனைப் பார்க்கத் துடிப்பது போல், ரசிகர்கள் நேரில் காணத் துடித்த பாடகராக அவர் இருந்திருக்கிறார். பல முறை முயற்சி செய்தும் அவரைப் பார்க்க முடியாத தொடர் சோகத்தை, அவர் மறைந்த அன்று துயரம் சொட்டச் சொட்ட சொல்லிக் கொண்டிருந்தார், எலெக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை செய்யும் நண்பர் ஆறுமுகம். அசாத்திய ரசனையும், தேர்ச்சியான வாசிப்பும் மிக்க அவர், பல ஆண்டுகளுக்குமுன் எஸ் பி பியை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்ற தமது ஆசையை அறிந்த தமது அண்ணன் ஒரு நாள் அழைத்து உடனே வா, ஒரு பாடல் பதிவில் இருக்கிறார், பார்த்து விடலாம் என்று சொல்லவும் இருபது கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் வேகவேகமாகக் கடந்து நுழைகையில், வேலையை முடித்துக் கொண்டு காரில் வெளியே போய்க் கொண்டிருந்தாராம் பாலு. அதற்குப் பிறகும் எத்தனையோ முறை. அப்புறம் பாடல்களில் பார்த்துக் கொண்டே இருந்த அவர் முகத்தை, இதோ, இனி பார்க்கவே முடியாது என்று காம்தார் நகரில் அவர் வீட்டில் போய்ச் சலனம் அற்ற அவர் முகத்தைப் பார்த்து விட்டு வந்து கொண்டிருக்கிறேன் சார் என்றார்.

இசையோடு கேட்பது இருக்கட்டும் சார், எந்த இசைக்கருவியும் உடன் ஒலிக்காமல், ‘தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே‘ (வறுமையின் நிறம் சிவப்பு) பாடல் போதுமே சார், கேளடி கண்மணி படத்தில் அஞ்சுவிடம் கற்பூர பொம்மை ஒன்று பாடலைப் பாடுவார் பாருங்கள், அவருக்கு மட்டுமா, பார்க்கும் கண்கள் எல்லாமே அல்லவா சார் பொழிந்து கொண்டிருக்கும்!” என்று ஆறுமுகம் லயித்து லயித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

எத்தனையோ ஆறுமுகங்களை இப்படி உணர்ச்சி ததும்பச் செய்துவிட்ட அவரது இருப்பும் சரி, மறைவும் சரி எண்ணற்ற மக்களை ஈர்த்துக் கொண்டாட வைத்தது அவரது அசாத்திய எளிமையும், இணையற்ற நேயமும் தான். ”என்னோடு பாட்டுப் பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்‘ என்கிற குரல் அவரது. ‘நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்என்று வாழ்த்திக் கொண்டிருக்கிற குரல் அவரது. ‘அன்பில் வந்த ராகம் அன்னை தந்த கீதமே என்றும் உன்னைப் பாடுவேன்என்று கொஞ்சிக் கொஞ்சி அலைகளாக அடிக்கும் நினைவலைகள் அவரது

SPB's funeral tomorrow at his house in Chennai's Red Hills - The Week

உயிர்க்காற்றில் பிறக்கும் பாடல், காற்று வழி வேறு உயிர்களையும் சென்று சேர்ந்து சிலிர்க்கவைக்கிறது. காற்றில் இழைந்து பரவிக் கொண்டிருக்கும் பாடல்கள் காற்றின் இறவாமையைத் தழுவிக் கொண்டு விட்டன. அவை, கால காலத்திற்குமான உயிர்ப்பைத் தங்களது பிறப்பிலேயே கருக்கொண்டு புறப்பட்டு வந்தவை. புன்னகை பூத்த முகமும், நகைச்சுவை இழையப் பேசும் பேச்சும், சக மனிதர்களை மதிக்கும் உன்னத பண்பும், அன்பும் அந்தப் பாடலின் இசையாகவே மாறிவிட்டன. பாடல்கள் அல்ல, பாலுவின் உருவகமாக உருப்பெற்றுவிட்ட உள்ளத்தின் கீதங்கள் அவை

இசை என்பது புகழ் மட்டுமல்ல, ஓர் ஒழுங்கமைதியும் கூட

 

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – ஐ வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/

தொடர் 16 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-16-venugopalan-sv/

தொடர் 17 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-17-venugopalan-sv/

தொடர் 18 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-18-venugopalan-sv/