கவிதை உலா 5 – நா.வே.அருள்கவிஞர்களின் கவிதைகள் காலத்தை ஒரு கண்ணாடி ஷோ கேஸில் வைத்து மனிதர்களின் லட்சணங்களை அடையாளம் காட்டிவிடுகின்றன.  சிறிய கவிதைகள் என்று சொல்லிவிட முடியாது. நெருஞ்சி முள் சின்னதுதான்.  எவ்வளவு பெரிய விளையாட்டு வீரர்களாலும் அதில் வெறுங்காலுடன் ஓட முடியுமா?  இப்படி நம் கண்களைக் குத்தவும் மனசை உறுத்தவுமான கவிதைகளை எழுதுகிறார்கள் கவிஞர்கள்.

மனிதகுலத்தின் மாபெரும் விரோதி சாதி. சாதிக்கு எதிரான போரில் தொடர்ந்து முன்னிலை வகிப்பவர்கள் கவிஞர்கள். அதை எதிர்ப்பதற்கு கவிஞன் இயற்கையின் துணையைத் தேடுகிறான். ஜாதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறது ஒரு ஜாதி மல்லிகை!

“பெயரை மாற்றச்சொல்லி

கொடிபிடித்து நிற்கிறது

ஜாதி மல்லி”

….கா.ந.கல்யாணசுந்தரம்

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்கடவுள் எப்படிப்பட்டவர் என்று சந்தேகம் வந்துவிடுகிறது கவிஞனுக்கு.  கடவுள்களை அன்பானவர்கள் என்கிறார்களே…. யார் சிறந்தவர்கள் ? கொடுப்பவர்களா? பெறுபவர்களா? கவிதையில் ஒரு கவிஞன் நடத்தும் கவித்துவப் பகுப்பாய்வு இந்தக் கவிதை.  அறிவியல்தனமான பார்வையால்தான் உலகத்தின் முன்னேற்றம் நிகழ்ந்திருக்கிறது.  இந்த விதத்தில் விஞ்ஞானியுடன் கைகோர்க்கிறான் கவிஞன்.

“ஏழை முதல்

பணக்காரன் வரை

தான் பட்டினி கிடந்தாலும்

அவருக்கு கொடுத்துவிடுகின்றனர்

அவ்வளவு மிரட்டி

வைத்திருக்கிறார் கடவுள்

ஆனால் ஊருக்குள்

கடவுள்களை அன்பானவர்கள்

என்கின்றனர்

எனக்கு

ஒன்று மட்டும்

விளங்கவே இல்லை

தானம் கொடுப்பவர்கள்

கடவுளா?

தானம்பெறுபவர்கள் கடவுளா?

இதில் கடவுள்

எந்த ரகத்தைச் சேர்ந்தவர்

தெரிந்தவர்கள்

சொல்லுங்கள்.”

    –கவிஞர் கோவை சசிகுமார்

நல்ல புத்தகத்தைவிடச் சிறந்தவன் ஒரு கெட்ட மனிதன் என்பார் மாக்சிம் கார்க்கி.  மனிதன் ஒரு மகா சல்லிப் பயல் என்பார் ஜி.நாகராஜன். சிகரத்திலும் மனிதன்.  அதல பாதாளத்திலும் மனிதன்.  உண்மையில் அவன் யார்?  மனிதன் என்கிற ஒரு விஷயம் காலம் காலமாக எழுதித் தீர்க்கப்படாத கவிதை என்பதில் சந்தேகமில்லை.  மனிதன் என்கிற பிம்பத்தைக் கவித்துவமாகச் சிதைத்துவிடுகிறான் இந்தக் கவிஞன்.

“மனிதன்

சிங்கம் புலியாய் வாழ பேராசை…..

ஆனால்

ஒரு பூனைக் குட்டி கூட

மனிதனாய் வாழ

ஆசைப்பட்டதாய்த் தெரியவில்லை….”

        –பொள்ளாச்சி முருகானந்தம்ஒரு விளம்பரம்… “கலாச்சாரம் ரொம்ப முக்கியமானது.  கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதில் பண்டிகைகள் முக்கிய பங்காற்றுகின்றன…. அதிலும் முக்கியமானது தீபாவளி….”  அவரவர் விருப்பத்திற்கு விளம்பர வாசகங்கள் அமைத்துக் கொள்ளலாம்.  விளம்பரங்களின் வழியே அல்ல கவிதைகளின் வழியேதான் ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பார்க்க வேண்டும். அந்த வகையில் பண்டிகைகள் மீதான நமது பார்வையைக் கலங்கடித்துவிடுகிறது இந்தக் கவிதை.

“ஆத்தாவுக்கு கைத்தறி சேலை

அம்மாவுக்கு பூ நிறைந்த சேலை

அக்காவிற்கு தாவணி

அண்ணனுக்கு பிடித்த ஜீன்சும் சட்டையும்

எனக்கு குர்தாவென பண்டிகைக்கான

அத்தனை துணிகளும்

அந்த கடையில் இருந்தது

டேய் எங்க வேடிக்கை பாக்குற

இந்தா பிடி என்ற அப்பாவின் குரலுக்கு

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்

பொருளோடு கடக்கிறேன்

இப்போது மட்டுமல்ல எப்போதும்

எங்களை பண்டிகைகளுக்கு பிடிப்பதில்லை……”.

       –கதிரவன் வீதொடர் 1 :  கவி உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்