கடந்து வந்த தடங்களைத் திரும்பிப் பார்க்க வைப்பது வரலாறு. கடக்கும் பாதையின் திருப்பங்களில் கவனத்தை ஈர்ப்பது செய்தி. கடக்க வேண்டிய இலக்குகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுவது கனவு. இந்த மூன்றுமே இணைந்தது கலை இலக்கியம்.
கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள். விகடன் இதழில் ஹாசிஃப் கான் வரைந்த அந்த ஓவியத்தின் கற்பனையிலும் கலைநயத்திலும் மனதை ஒப்படைக்கிறபோது அதன் கருத்துச் செரிவுக்குள் நுழையாமல் இருக்க முடியுமா? மூன்று மேதைகளும் எதற்காகத் தங்கள் வாழ்நாளெல்லாம் போராடினார்கள் என்ற நேற்றைய வரலாறு நினைவுக்கு வரும்.
இன்றைய அரசியல்/சமுதாயப் போராட்டச் செய்திகளில் அவர்களின் பொருத்தப்பாடு பற்றிய சிந்தனை எழும். நாளை தொடர்ந்து போராடி நிலைநாட்டியாக வேண்டிய சமத்துவ லட்சியங்கள் நமது கனவாகவும் உறையும். மாற்றத்திற்கான ஒவ்வொரு கலைப் படைப்பிலும், ஒவ்வொரு இலக்கிய ஆக்கத்திலும் இதே விளைவுகளை ஏற்படுத்தும் உயிர்ப்பாற்றல் இருக்கிறது.
இந்த நூற்றாண்டின், இந்த ஆண்டின், இந்த நாளின் முதன்மைச் செய்தி கொரோனாக்கிருமி படையெடுப்பும் அதை முறியடிப்பதற்கான உலகப்போரும்தான். குறிப்பிடத்தக்க மாறுபட்ட நிகழ்வுகள் தவிர எல்லா நாளேடுகளின் எல்லாப் பக்கங்களிலும் பெரும்பாலான நாடுகளின் கொரோனா நிலைமைகள் தொடர்பான தகவல்களே பெருமளவு இடத்தைப் பிடிக்கின்றன.
அதன் பாதிப்புகள், அதை வெற்றிகொள்வதற்கான மருத்துவ ஆராய்ச்சிகள், அதன் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு நடைமுறைகள், ஆங்காங்கே ஆணவத்தோடும் அலட்சியத்தோடும் அறியாமையோடும் நிகழும் அத்துமீறல்கள், வேறு வழியின்றி வெளியே வந்து போராடும் எளியோர்தம் கூக்குரல்கள், அறிவியலை அவமானப்படுத்தும் வகையில் “மற்றவர்கள்” மீது பழிபோடும் அரசியல் சிறுமைகள், சில அரசுகள் கையாண்ட வெற்றிகரமான வழிமுறைகள் என்ற செய்திகளே விரவிக்கிடக்கின்றன. தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள் என அனைத்து வகை ஊடகங்களிலும் இதுவே காட்சி.
இன்றைய உலக நிலவரம் குறித்த இத்தகைய செய்திகள் கொரோனாவை வீழ்த்திவிட்டோமென்று ஆனந்தப் பள்ளுப்பாடுகிற நாளைய உலகின் உடனடி விடியலுக்கான கனவை வலுப்படுத்துகின்றன. அதற்கு நேற்றைய உலகம் சந்தித்த வெற்றிகளின் நெடும்பயணக் கதைகள் தேவைப்படுகின்றன. கதை என்றாலே இலக்கியம்தானே?
வாசிப்புப் பெருக்கம்!
கொரோனா கோரத்தாண்டவமாடும் இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் முற்காலக் கொள்ளை நோய்கள் பற்றிய இலக்கியப் பதிவுகளைத் தேடிப் படிக்கிற முனைப்பு பெருகியிருக்கிறதாம். இது பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளேடு இவ்வாறு கூறுகிறது: “இந்தக் காலக்கட்டத்தில் கொள்ளைநோய் தொடர்பான புத்தகங்களை அதிகம் வாசிக்கிறார்களாம். ஆல்பெர் காம்யுவின் ‘பிளேக்’ நாவலின் விற்பனை எகிறியிருக்கிறது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’வும் அதிகமானவர்களால் விரும்பி வாசிக்கப்படுகிறது.
ஜொவான்னி பொக்காச்சோவின் ‘டெக்கமரான்’, சரமாகோவின் ‘பிளைண்ட்னெஸ்’ நூல்களையும் நிறையப் பேர் வாசிக்கிறார்கள். நம் ஊரில் இதோடு சேர்த்து யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் அதிகம் வாசிக்கப்படுகிறது. ஏற்கெனவே வாசித்தவர்களும் மீள்வாசிப்பு செய்கிறார்கள். என்ன காரணம்? ஒன்று, கொள்ளைநோயைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அடுத்ததாக, கொள்ளைநோயை ஒரு சமூகம் எப்படியெல்லாம் எதிர்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வாசிக்கிறார்கள். நமக்கு ஏற்பட்ட இந்த அனுபவமானது கடந்த கால இடர்களை வேறொரு கண் கொண்டு பார்க்க உதவுகிறது என்பது பல்வேறு வாசகர்களின் எண்ணமாக இருக்கிறது. நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள்?”
செய்தியில் குறிப்பிடப்படும் ‘சம்ஸ்காரா’ இந்தியாவில் பிளேக் தாக்கியதையும் அதனால் ஏற்பட்ட வேதனைகளையும் இழப்புகளையும் உலகத்தின் கவனத்திற்கு இலக்கியமாகக் கொண்டு சென்றது. இது மட்டுமே அதன் பெருமையல்ல. இங்கே அந்தக் கொள்ளைநோயைவிடவும் கொடூரமானதாக, எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாததாகப் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கொடுமை பற்றியும் உலக இலக்கிய மேடையில் எடுத்துவைத்தது அனந்தமூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய அந்த நாவல். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கொண்டுவரப்பட்ட அந்த நாவல், குறிப்பாக பிராமணிய அகங்காரத்தையும், அதன் போலித்தனத்தையும் பிராணேசாச்சாரியார், நாரணப்பா, சந்திரி மற்றும் அக்ரஹாரக் கதாபாத்திரங்களைக் கொண்டு எடுத்துக்காட்டி, இயல்பான மனித உறவுகளே உண்மையான வாழ்க்கை ஆதாரம் என்று நிறுவுகிறது. சம்ஸ்காரா என்றால் புனிதநெறி.
தூண்டப்பட்ட படைப்பாளிகள்
அந்நாட்களில் இந்தியாவில் பரவலான வெறியாட்டங்களை நடத்திய பிளேக், பெரியம்மை, நச்சுக்காய்ச்சல், காலரா போன்ற கொடுந்தொற்றுகள் லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து, குடும்பங்களைச் சிதைத்து, வளங்களைச் சூறையாடின. அவற்றின் தாக்கம் அன்றைய பல படைப்பாளிகளைத் தூண்டிவிட்டு, வருங்காலத் தலைமுறையினருக்காக ஆழமான எழுத்தாக்கங்களை வழங்க வைத்ததைக் கூறுகிறார் பத்திரிகையாளர் அவ்ஜித் கோஷ் (டைம்ஸ் ஆஃப் இந்தியா).
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘புராதன் பிரித்யா’ (வயதான வேலைக்காரர்) என்ற நீண்ட கவிதை, ஒரு வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்த வேலைக்காரர், தனது எசமானரின் உடல் நலன் காக்கும் பணிகளைச் செய்துவந்த நிலையில் பெரியம்மைக்குப் பலியாகிவிடும் சோகத்தைச் சொல்கிறது. இருபதாம் நூற்றாண்டில் உலகில் சுமார் 30 கோடிப் பேர் பெரியம்மையால் மாண்டார்கள்.

1918ம் ஆண்டில் வெடித்த ஸ்பானிஷ் ஃபுளூ என்ற நச்சுக்காய்ச்சல் உலகம் முழுவதும் சுமார் 5 கோடி முதல் 10 கோடி வரையில் கல்லறைக்கு அனுப்பியது. இந்தியாவிலும் ஒன்றரைக் கோடி மக்களை மரிக்கச் செய்த அந்தக் காய்ச்சலை மையமாக வைத்து ’தி ட்விலைட் இன் டெல்லி’ (தில்லியில் அந்தி ஒளி) என்றொரு நாவலை எழுதினார் அஹமத் அலி (பிற்காலத்தில் பாகிஸ்தானில் குடியேறியவர்). அந்த உயிர்ப்பதைப்பு நேரத்திலும் பலர் எப்படி சுயநலமாகவும் பொறுப்பின்றியும் நடந்துகொண்டார்கள் என்று அந்த நாவல் காட்டியது.
அதே நச்சுக் காய்ச்சலால் தனது குடும்பத்தில் பாதியைப் பறிகொடுத்தவர் ‘நிராலா’ என்ற புனைப்பெயரில் எழுதியவரான கவிஞர் சூர்யகாந்த திரிபாதி. பலியானோர் சடலங்களால் கங்கை நதி திணறியதையும், பிணங்களை எரிப்பதற்கு விறகுகள் கிடைக்காமல் மக்கள் தவித்ததையும் எழுதினார் அவர்.

பிரேம்சந்த் எழுதிய ‘எடிகா’ என்ற சிறுகதை, காலராவால் மரணமடைகிற ஒருவரது 5 வயது மகன் எதிர்கொள்ளும் சவால் பற்றிப் பேசுகிறது. இந்தி இலக்கிய மேடைகளிலும், களப்போராட்டங்களிலும் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டப்பட்ட கதை அது.
ஒடியா இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஃபக்கீர் மோகன் சேனாபதி எழுதிய ‘ரெபேதி’ என்ற நாவல், காலராவால் ஒரு சமூகமே உருக்குலைக்கப்பட்டதன் வேதனையைப் பகிர்கிறது.
மலையாள இலக்கிய அன்பர்களின் மன சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரான தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய ‘தோட்டியோடே மகன்’ (தோட்டியின் மகன்), ஒரு பேரழிவுத் தொற்றுநோய் மூர்க்கத்தோடு எளிய மனிதர்களை வீசியெறிந்த இடங்களுக்கு இட்டுச் செல்கிறது. மற்றொரு மலையாள எழுத்தாளர் காக்கநாடன் எழுதிய ‘வசூரி’ (பெரியம்மை) என்ற நாவல், ஒரு கிராமத்தின் தத்தளிப்பை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறது.
தமிழ்ப் படைப்புகள்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சம்ஸ்காரா’ போல தமிழிலேயே நேரடியாக எழுதப்பட்டு பெருந்தொற்றுத் தாக்குதல்கள் பற்றி விரிவாகச் சொல்கிற படைப்புகள் வந்திருக்கின்றனவா? உடனடியாகத் தெரியவரவில்லை. ஆயினும் அத்தகைய தமிழ்ப்படைப்புகள் வந்திருக்கும் என்றே கருதுகிறேன். இலக்கிய ஆய்வாளர்கள் இது தொடர்பான தரவுகள் தங்களிடம் இருப்பின் இந்நேரத்தில் பகிர்ந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
பண்டைய தமிழ் மண்ணில் இயற்கை தனது அசைவுகளால் ஏற்படுத்திய ஆழிப்பேரலை (சுனாமி), நிலநடுக்கம், புயல் ஆகிய தாக்குதல்கள், அவற்றால் ஏற்பட்ட இழப்புகள், கிடைத்த படிப்பினையால் அன்றைய தமிழர்கள் உருவாக்கிய கடற்கரைச் சோலைகள், வெள்ளத் தடுப்பு அணைகள் போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி சங்க இலக்கியப் பதிவுகள் உள்ளன. ‘மணிமேகலை’ காப்பியத்தில் வருகிற பிரளயம் அப்போது ஏற்பட்ட சுனாமிதான் என்கிறார் ஆய்வாளர் குஷாலா ராஜேந்திரன் (பிபிசி தமிழ்).

நற்றினை, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றில் கடலோரச் சோலைகள் பற்றிப் பேசப்படுகிறது. புண்ணை, தாழை, அடப்பங்கொடி போன்ற மரங்களும் கொடிகளும் வளர்க்கப்பட்ட அந்தச் சோலைகள் ஆழிப்பேரலைத் தடுப்பு நடவடிக்கைகளே என்கிறார் காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.சிதம்பரம். கடல்நீல் ஊருக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் உப்பங்கழிகள் உள்ளிட்ட இயற்கையோடு இணைந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததற்கான சான்றுப் பாடல்கள் கலித்தொகை, பரிபாடல், பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சமகாலப் படைப்புகளில் ஜோ.டீ. குரூஸ் எழுதிய ‘ஆழி சூல் உலகு’ நாவல், நீண்ட கடற்பயணத்திற்குப் பிறகு திரும்புகிறவர்கள் கரை வரையில் வந்திருந்த நிலையில், கடல் உள்ளிழுத்துக்கொள்கிற அதிர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது.
தமிழ் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ‘கயல்’ என்றொரு படம், சாதியோடு சேர்ந்துகொண்டு புயலும் ஒரு இளம் காதல் இணையைப் பிரிக்க முயன்ற கதையைச் சொன்னது. கமல்ஹாசனில் ‘தசாவதாராம்’ ஒரு காட்சியில் சுனாமியை வரவழைத்து, சாதிபேதம் பார்க்காத மனசுடன் தியாகம் செய்யும் ஒரு தலித் போராளியை மூழ்கடித்து முன்னிறுத்தியது.
உலக இலக்கிய அரங்கில் நுழைந்து இன்று தேடப்படுகிற, கொள்ளைநோய் உள்ளிட்ட பெருந்தொற்றுப் பேரிடர்ப் பின்னணி கொண்ட எழுத்தாக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகிற அந்தப் படைப்புகள் பற்றி அடுத்த சந்திப்பில்.
—
அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com
இக்கால சூழலுக்கு ஏற்ற கட்டுரை தோழர்.நிகழ்கால சூழலுக்கு ஏற்ற கட்டுரைகளை தொகுத்து வழங்கி வரும் உங்களுக்கு நன்றியும் ப்ரியமும்.
தமிழ் இலக்கியத்தில் தொற்றுநோய் பற்றிய நாவல்கள் சிறுகதைகளை தேட வைத்தமைக்கு நன்றி தோழர்.நிறைய மேற்கோள்கள் காட்டியுள்ளீர்கள்.தொடரட்டும் தங்களின் நிகழ்கால கட்டுரை தொகுப்பு பணி