ஜே கே சார் - J K Sir | கௌதமன்

ஜே கே சார், கௌதமன் மற்றும் நான்

கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக ரசித்துக் கொண்டிருக்கிறோம். வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வட்டமடிக்கின்றன. இயற்கையின் ரம்மியத்தில் ஒரு சொர்க்கமே காட்சியாய் விரிகிறது.
கட்… செய்து கனவு வேறொரு இடத்தில் ஓபன் ஆகிறது…

ஒரு பெரிய பூஞ்சோலைப் பூங்கா. ஒரு ஓரமாக ஒரு வீட்டில் தாழ்வாரத்தில் நானும் கௌதமனும் நடுவில் இன்னொருவரும் நீட்டிப்படுத்துப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். வெற்று மார்பில் லுங்கியை ஏற்றிக் கட்டியபடி ஜெயகாந்தன் ஏதோ எங்கள் இருவரிடமும் பேசிவிட்டு இன்னும் கொஞ்சம் உள்பக்கமாகப் படுத்தபடி செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருக்கிறார். பூங்காவின் ஓரமாக இருந்த ஒரு முரட்டு ஆள் கௌதமனும் நானும் படுத்திருந்த பக்கம் வந்து பயமுறுத்தியபடி ஏதோ நீண்ட பேச்சினை நிகழ்த்துகிறார். திடீரென தன் வலது கை சுட்டுவிரல் மோதிரவிரல் இரண்டிலும் மாட்டியிருந்த புலி நகத்தை என் முன் நீட்டி கண்ணைக் குத்த வருவதுமாதிரி சைகை செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுகிறார்…
கட்… விழித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு சதவிகிதம் படித்த ஒரு புத்தகத்தை முடிக்க மனமின்றி (முடித்துவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியமே முடிந்துவிடுவதுபோன்ற பாவனையில்) தினமும் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் படித்து மகிழ்ச்சியில் தூங்கிப் போகிற வழக்கத்தை ஒரு வாரமாகக் கடைப்பிடித்து வந்தேன். இதற்கு மேலும் பொறுமையில்லை. 07.04.2024 அதிகாலை மூன்று மணிக்கு ஆரம்பித்து மீதிப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களையும் முடித்துவிட்டு மறுபடியும் தூங்கிப் போனேன். விடிகிறபோது ஒரு கனவு மனசை உலுக்கிவிட்டது. அந்தக் கனவுதான் நான் மேலே சொன்னது.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கௌதமனின் நட்பு பிராப்தம் வாய்க்காத நபர்தான் நான். கோவையில் முதல் சந்திப்பு. சந்திப்பு முடிந்ததுமே இருவருமே மறந்துபோனோம். “ நா.வே.அருள் படைப்புகளும் பார்வைகளும்” நூல் வெளியீட்டைச் சாக்கு வைத்து இந்திரன் சாரையும் பார்த்துவிட்டு விழாவில் பார்வையாளராய் முன்வரிசையில் அமர்ந்திருந்து ரசித்துச் சென்றார்.. அப்புறமும் பேசவில்லை.

ஒரு மாதத்தில் அவர் எழுதிய ‘ஜே கே சார்’…தோழர் வேடியப்பன் அனுப்பியிருந்தார்; தண்டியாக ஒரு புத்தகம். திறந்தேன்.
“ஜெயகாந்தன் நால்வருணக் கோட்பாட்டை, காந்தியைப் போலவே விரும்பி ஏற்றவர். இருவருமே அதிலுள்ளவை என்று அவர்கள் நினைக்கிற, சில்லறை ரிப்பேர்களை, சரி செய்வது சாத்தியம் என்றே நம்பியவர்கள். ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து சாதிகளைப் பாதுகாப்பது, இந்தியச் சமூக அமைப்பின் சிறப்பெனக் கருதியவர்கள். சாதியைப் பீடித்த நோயின் ஒரே பிரச்சினை தீண்டாமைதான் என்று அலசி ஆராய்ந்து, கண்டுபிடித்து, அதை மட்டும் ஒழித்துவிட்டால், சாதியால் ஒரு பிரச்சினையும் இல்லையென்று மனதார நம்பியவர்கள்.

இருவருமே ஆர் எஸ் எஸ் ஐ எதிர்த்தார்கள், சனாதனத்தை நேசித்தார்கள்.”
கௌதமன் தனது ‘ஜேகே சார்’ நூலின் முன்னுரையில் இப்படி எழுதும் அதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்கிறார்…
“… அவர் (ஜே கே) எந்த நிலையிலும், பிழைப்பு வாதியாகவோ, சந்தர்ப்பவாதியாகவோ, காரியவாதியாகவோ, ஊழல் வாதியாகவோ மாறாமல் வாழ்ந்த அந்தப் பண்புதான், அவரது அரசியலின் நேரெதிர் நிலைப்பாட்டுக்கு நான் மாறியபின்பும், அவரைப் பற்றிப் புத்தகம் எழுதத் தூண்டியது.”
எவ்வளவு போலித்தனமான இலக்கிய உலகில் எவ்வளவு நேர்மையான எழுத்து! அசந்துபோனேன்…. இன்னும் என்னென்ன ஆச்சரியங்களோ?… அவசியம் படிக்க வேண்டிய நூல்.

புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன், மேலே சொன்னது போல, நான் முகநூலில் பதிவிட்டது எத்துணை உண்மையானது என்று எண்ணி ஆச்சரியப்படுகிறேன். உண்மையில் புத்தகத்தில் பல ஆச்சரியங்கள் உள்ளன.

படைப்பாளி என்கிற பிரம்மை ஜே கே வுக்குமே இல்லை. தமிழ்நாட்டை அதிரச் செய்த ஒரு படைப்பாளியும் வாசகனாகக் கூட தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத ஒரு சாதாரண மனிதனும் சேர்ந்து மதுக்கோப்பைகளில் ஓல்டு மாங்கையோ, ரம்மையோ, வோட்காவையோ ஊற்றிக் கொண்டாட்டமாகக் குடிக்கிறார்கள். ஜே கே என்ற படைப்பாளி பற்றி நாம் கட்டி வைத்திருக்கும் மாய பிம்பங்களை இருவரும் சேர்ந்து சுக்கு நூறாக்கிவிடுகிறார்கள்.

ஜே கே வை ஒரு படைப்பாளியாகவே பார்த்துப் பிரமித்திருந்த நமக்கு அவரைப் பக்கத்துவீட்டுக்காரராக்கிவிட்டார் கௌதமன். புளித்த மாவின் மூலமாகக் கூட பெரிய பெரிய இலக்கிய இட்டிலிகள் சுட முடியுமா என்று பிரம்மப் பிரயத்தனம் செய்கிற இன்றைய காலகட்டத்தில் தானாகவே சேர்ந்த பிம்பங்களை நொறுக்கித் தள்ளுவது கற்பனைக்கப்பாற்பட்ட காரியம்.

இருபது வருடங்கள் இருக்கலாம். சென்னை அண்ணாசாலையில் புக் லேண்ட்ஸ் மாடியில் ஒரு கூட்டத்தில் தங்களைப் பிரபலம் ஆக்கிக் கொள்ள விரும்பிய இருவர் பேசி முடித்தபின் ஜே கே பேச ஆரம்பித்தார். படைப்பை மர்மப்படுத்தல் பற்றிய தன் அதிருப்தியைப் பதிவு செய்தது என் நினைவில் என்றென்றுமாகத் தங்கிவிட்டது. அப்படியான ஒரு படைப்பு வாசகனை உள்ளே நுழைய விடாமல் தன் கதவுகளையும் சன்னல்களையும் படார், படார் என்று சாத்திக்கொள்கிறது என்றார். மேலதிகமாக நினைவுகளைச் சேமிக்காமல் விட்டுவிட்டேனே என்று இன்றும் வருந்துகிறேன்.

அறையில் நான்கைந்து பேர்கள் கூடி மதுக்கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் கூட்டத்தில் வந்து சேர்ந்திருந்த (பிறரை ஒப்பிடுகையில்) புதிய ஒருவருக்காகத் தன் நெருங்கிய நண்பரைப் பார்த்துக் கத்துகிறார் ஜே.கே….
… அவர எதுக்குடாப் போச் சொல்றே…?
….நீ … போடா…
ஜே கே யின் இந்த நேர்மை எனக்குப் பிடித்திருந்தது. கௌதமனின் இதயத்தை இப்படித்தான் ஜே.கே. கட்டிப் போட ஆரம்பித்திருக்கிறார். அதன் பின் அவரே விடுவித்த பின்பு கூட கௌதமனால் வெளியில் வர முடியவில்லை.

ஜே கே முரண்களை அடுக்கிச் சிந்தனையை அணுகுகிற போக்கினைக் கைக்கொண்டிருக்கிறார். அதனால்தான் பல நேரங்களில் அவர் முரண்களின் மூட்டையாகக் கூடக் காட்சியளிக்கிறார். ஆனால் அதுபற்றிக் கவலையே இல்லை. அதனாலேயே விமர்சனங்களை வீறுகொண்டு எதிர்கொண்டிருக்கிறார்.

உன் நண்பரைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றி நான் சொல்கிறன் என்பார்கள். ஜே கே பற்றிச் சொன்னால், கௌதமனைப் பற்றியும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும், குருவின் குறைகளை சிஷ்யன் சுட்டிக் காட்டுகிறார். இந்தி அவசியம் என்கிற புரிதலில் தனக்கு ஏற்பட்ட சிந்தனைகளுக்குக் காந்தியும், ஜே கே வும் தான் காரணம் என்று குறை கூறுகிறார். “எதிரெதிர் நிலைகொண்ட புத்தரையும் சங்கரரையும் ஒரு செடியில் பூத்த இரு மலர்களாக ஜெயகாந்தன் வர்ணிக்கும் விதம் பெரும் மோசடியாகவே எனக்குத் தெரிந்தது” என்கிறார்.

‘இமயத்துக்கு அப்பால்’ என்கிற ஜே கே யின் புத்தகத்தில் சரியாகக் கட்டமைக்கப்படாத டால்ஸ்டாயின் பிம்பம் பற்றிச் சலித்துக் கொள்கிறார்.
அதே நேரத்தில், ஜே கே அடித்த எழுத்துகளின் மாஸ்டர் ஸ்ட்ரோக்குகளை எடுத்துக் காட்டத் தவறவில்லை…
“ஆபாசம் என்பது நிர்வாணமா? அல்லது அரை நிர்வாணமா? அல்லது பால் உணர்ச்சியைத் தூண்டிவிடும் எந்தக் காரியமும் ஆபாசம் ஆகிவிடுமா?… நிர்வாணம் ஆபாசமெனில் எனக்கு நானே ஆபாசம்தான். மகாவீரரின் சிலை கூட ஆபாசம்தான். பழனி ஆண்டியின் திருக்கோலங்கூட ஆபாசம்தான்.”
உலகத் திரைப்பட வரலாற்றில் மாற்று சினிமா எடுத்ததில் ஜே.கே.வுக்குத் தன்னிகரற்ற இடத்தைத் தருகிறார். ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தை சத்யஜித் ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ படத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது என்கிறார்.

ஜே கே திடீர் திடீரென சிந்தனைத் தெறிப்புகளை எதிர்பாராத விதமாக எதிர்பாராத கோணத்தில் சொல்லி அசத்திவிடுவார். நான் என் அனுபவத்தில் கண்ட ஒரு நிகழ்வு: ஜே.கே. விருது பெற்றிருந்த சமயம். அவரைப் பாராட்டும் விதமாக தமுஎகசவிலிருந்து செல்வதாக ஏற்பாடு. நான் கே கே நகரில் அவரது வீடு போய்ச் சேர நேரமாகிவிட்டது. எல்லோரும் வெளியில் வர இருக்கிறார்கள். வேகு வேகுவென்று ஓடி நான் வாங்கிவந்த பொன்னாடையைப் பிரிக்கிறேன். ‘’தோழர், நாங்கள் வாங்கிவந்த சால்வையைக் கூட ஜே கே மறுத்துவிட்டார். பிரிக்காதீர்கள்” சொன்னவர் தோழர் இரா.தெ.முத்து. உடனே ஜே கே,“எனக்குத்தான் வேண்டாமென்று சொன்னேன். அவருக்கு நான் போடலாமல்லவா?” என்று அந்த சால்வையை எனக்குப் போர்த்திவிட்டார். இன்னும் என்னிடம் இருக்கிறது அந்த விலைமதிப்பற்ற சால்வை.” இதுதான் ஜே கே இப்படி அசத்தலான நிகழ்வுகளும் உரையாடல்களும் நிறையவே உள்ளன.

ஒன்றுமே இல்லாத வாசகன் ஒருவனுக்காக ஓர் எழுத்துலகச் சக்கரவர்த்தி வாசகனின் வீடு தேடி வந்த பெருந்தன்மையைப் பேசுகிறார்.

வெறுமனே, இவர் ஜே கே வை வேடிக்கை பார்த்தவராகச் சொல்லிவிட முடியாது. பல தீர்க்கமான இலக்கிய விமர்சனங்களைக் கறாராக வைக்கிறார். பெரிய பெரிய மூன்று படைப்பாளிகள் எப்படித் தங்கள் கதாநாயகிகளைச் சாகடித்துவிடுகிறார்கள் என்று ஏகடியம் செய்கிறார்…
“டால்ஸ்டாய்க்கு ரயில்,
புதுமைப் பித்தனுக்குக் கிணறு,
ஜே கே வுக்கு நதி.
ஆம்! ஜெயகாந்தன் தனது ‘கங்கா’வை காசிக்கு அழைத்துச் சென்று, உயிரோடு கங்கை நதியில்தான் கரைத்துவிடுவார்” இது அவரது இலக்கிய விமரிசனம்.

இந்த நூலில் ஜே கே மற்றும் கௌதமன் மட்டும்தான் இருக்கிறார்களா?
அன்றைக்குப் பிரபலமாயிருந்த பல ஆளுமைகளை அறிமுகப்படுத்தி விடுகிறார். சினிமாக்கள் பற்றிச் சிலாகிக்கிறார். இசையைப் பற்றி வகுப்பெடுக்கிறார். பின் திரையாய்ச் சென்னையின் வரைபடத்தைத் தீட்டிவிடுகிறார். சென்னை மட்டுமல்ல… திருப்பத்தூர், திருச்சி ஆகிய நகரங்களும் இருக்கின்றன.

தாம்பரத்திலிருந்து ஆட்டுக்கால் பாயா வாங்குவதற்காக வரிசை வரிசையாக வாடிக்கையாளர்கள் வந்து போன யானைக் கவுனி ‘கோல்டன் கபே’ பற்றியச் சித்திரத்தைக் கூடப் பார்க்க முடிகிறது.

கௌதமனுக்கு எப்படியோர் வெற்றிகரமான எழுத்து வாய்த்தது? அவர் ஏணியில் ஏறிக்கொண்டேயிருக்கிறார். அண்ணாந்து பார்த்தபோது மேலே தெரிந்த ஏணிப்படிகள் ஏறி மேலே போனபின், அதே படிகள், கீழே தெரிவதில் வியப்பில்லையல்லவா? அவர் எழுத்துகளிலேயே பார்க்கலாம்…
“பதினாறு வயதில் படித்தபோது என்னைப் பைத்தியமாக்கிய பொன்னியின் செல்வன், முப்பது வயதில் முகம் சுளிக்க வைத்தது”

தெளிவை அடைந்து விடுவதல்ல, தெளிவை நோக்கிய பயணமே வாழ்க்கை என்ற கௌதமனின் தீர்க்கமான படைப்புமனம்தான் ஜே கே சார்’ நூலினை அல் புனைவில் ஓர் அற்புதமான நூலாக ஆக்கிவிடுகிறது.

 

நூலின் தகவல்கள் 

நூல் : ஜே கே சார்

ஆசிரியர் : கௌதமன்

விலை : ரூ.500./-

பக்கம் :  442 பக்கங்கள்

பதிப்பகம் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
                         எண் 9, பிளாட் எண்-1080 ஏ,ரோஹிணி பிளாட்ஸ்
                            முனுசாமி சாலை, கே கே நகர் மேற்கு
                            சென்னை 600078

அலைபேசி 9940446650

 

எழுதியவர் 

கவிதை: எனது வசியம் - நா.வே.அருள் - Book Day

 

 

 

 

 

 

 

 

நா.வே.அருள்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *