Kaala Paani Novel By M Rajendran Novelreview By S Subbarao. நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி - ச.சுப்பாராவ்



காலா பாணி

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த  2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம்.

சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார்.  நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான்.  ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான்.  இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது.

காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார்.  19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு.  படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின்  ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல.  உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார்.  கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல,  அன்றைய  உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். 

துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும்,  கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும்,  கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்….

அன்றாடம் நான்  பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே,  இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப
வெளியீடு: அகநி வெளியீடு
விலை: ரூ650.00
பக்கம்: 536

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *