Karkaviyin Kavithaigal 12 கார்கவியின் கவிதைகள் 12

வயது தடையில்லை
*************************
முகம் மறைத்த
வெண்நறையை
இதழ் பிதுக்கி
ஊதிய நொடிகளில்
விட்டுப்போன
நம்பிக்கையும்
கடந்து போன நேற்றும்
காற்றோடு பறந்து விடுகிறது…..!

நடைபாதை வழியெல்லாம்
உன் இழப்புகளை
எல்லைக்கல்லாய்
செருகி வைக்க
ஏதாவது ஒன்றின்
மேல் அமர்ந்து பூர்த்தி செய்கிறது
வயதின் விடாமுயற்சி பயணம் தனை……!

நீர் நிறைந்த குளத்தில்
நீந்தியாட துடிக்கும்
வயதிற்கு
கைத்தாங்கலாக கொடுக்கப்பட்டது தடி
எடுத்தெறிந்து வா
இயல்பாக வாழ
வயது தடையில்லை…….!

இளமையோடு
போட்டியிடும்
நாளையது வயதினில்
புது கதவினை திறந்திடலாம் உலகை -என்றும்
வயது தடையில்லை…

எத்தனை நாம்
******************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்து செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்ரம்…………………
எத்துணை
திருப்பங்கள் இருப்பினும்
கைக்கோர்த்து
நடைபோடுகிறது
நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

மண்ணும் மங்கையரும்
****************************
நீ நமிர்ந்த பார்த்த தருணத்தில்
நிச்சயம் கொட்டும் வான்மழை
நீ வளர்த்த சிறு பூச்செடிக்கு
சாரலை கொடுக்கும் அந்த மர சன்னல்

உழவாடும் வயல் வெளிகள் தாகம் சுரந்தது
நீ ஊற்றிய நீர் இனிப்பாய்
வரப்புகளுக்கு எடையேற்றிய உன் நடை
நீ குனிந்து பறித்த அந்த இயற்கை

பாதங்களை விட்டுச்செல்லும் உன் பாலை
நண்டுகளின் வரிசையில் உன் நெய்தல்
வரப்போரம் சாகுபடியில்
உன் மருதம்
ஓங்கிய அழகாய்
உன் முல்லை
சூடிக்கொள்ள நீ ஏற்கும் குறிஞ்சி

ஆறடியில் அழகை ஏற்க காத்திருக்கும் மண்
அடையாத ஏக்கத்தில் காலம் முடிக்கும் பெண்
வழியில்லை வழியுண்டு மண்ணில் பிறந்த மங்கையற்கு

சிந்தனை 1000
******************
நீ
சரியென்றாலும்
தலையாட்டும்
தவறென்றாலும்
தலையாட்டும்
நீ நம்பகமானவனாக இருந்தால்
இன்று தோளில்
உயர்த்தப்பட்ட
நீ
நாளை காலின்கீழ்
வைக்கப்பட வெகு நாள்
இல்லை

உன்குறைகளை பேசும்
அவர்
அவர் குறைகளை மட்டும்
கண்ணைக்கட்டிக் கொண்டு
வரையறுப்பதுதான் சிரிப்பு

உன் புரிதலில்லாத
மனதிற்கு நான்
சரி என்று
ஏற்றுக்கொள்ளும்
தவறைவிட
உன்னை நான் எப்படி
திருப்தி செய்துவிட முடியும்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *