kavithai : chandhirayan kadhal - pudhiyamadhavi கவிதை: சந்திராயன் காதல் -புதியமாதவிkavithai : chandhirayan kadhal - pudhiyamadhavi கவிதை: சந்திராயன் காதல் -புதியமாதவி

பூமியின் ஈர்ப்பு விசை

நான்

நிலவின் ஈர்ப்பு விசை

நீ.

 

நீ கடல்

நான் கடற்கரை.

யாரை யார் ஈர்ப்பது?

யாரை யார் அணைப்பது?

யாருக்குள் யார் கரைவது?

நிலவிலிருந்து 62,630 கி.மீ தொலைவில்

இருக்கிறதாம் அந்தப் புள்ளி.

ஈர்ப்புவிசை சம நிலையில்

மிதக்கும் பால்வெளி.

இஸ்ரோ அறிந்தக் கணக்கு.

சந்திராயனின் இலக்கு.

பித்துப்பிடித்த கடல் அலைகள்

வெறி கொண்டு மோதுகின்றன.

நிலவு வருகிறது

போகிறது.

வளர்கிறது

மறைகிறது.

கண்ணாமூச்சி ஆட்டம்.

சந்திராயன் அந்தப் புள்ளியைத்

தீண்டும் நாளில்

பூமிக்கு நிலவும் வசப்படும்.

என் அன்பே..

எந்தப் புள்ளியில் நீயும் நானும்

சம நிலையில்!

அந்தப் புள்ளியை கண்டுப்பிடிக்கப்

போவது யார்?

நீயா…

இல்லை வழக்கம்போல நானா?

ஈர்ப்புவிசைகள்

பிரபஞ்சவிதிகள்.

சந்திக்கும் அந்த இடம்

நாம்

காணாமல் போய்விடுவோம்.

கரைக்கவும் தொலைக்கவும்

காத்திருக்கிறது

நம்மைப்போலவே

நம் பிரபஞ்சம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *