தனது சொந்த கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பெற்று, அதில் பங்கேற்க வருகிற பிரபல விஞ்ஞானியும், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், தத்துவவியல் துறைத்தலைவருமான அல்தினாய் என்னும் பெண்மணி விழாவிலிருந்து திடீரென குழப்பமும், சோகமும், தடுமாற்றமும் மிக்க மனநிலையுடன் வெளியேறிப் போய் நகரத்திற்கு செல்ல ரயிலேறி விடுகிறார். அதே விழாவிற்கு வந்திருந்த அந்த கிராமத்தை சார்ந்த பிரபல ஓவிய ஆசிரியரும்,  இலக்கியப் படைப்பாளியுமான இளைஞர் ஒருவர், அல்தினாயின் அத்தகைய செயலுக்கான காரணத்தை அறிய முயற்சித்து, அல்தினாய் இரயில் ஏறப்போகும் அந்த வேளையில் அவரிடம் தனது கேள்விகளை கேட்க, அதற்கு பொருத்தமான பதிலேதும் சொல்லாமல் சமாளித்து விடைபெறுகிறார் அவர்.

நகரத்திற்குத் திரும்பிச் சென்ற சில நாட்களில் அவர் இந்த ஓவியருக்கு எழுதுகிற  கடிதத்தின் வழியாக தனது “முதல் ஆசிரியர்” குறித்தும், தனது “முதல் பள்ளிக்கூடம்” குறித்தும் அவர் சொல்லும் தனது கதையாக ”முதல் ஆசிரியர்” என்னும் குறுநாவல் நிகழ்காலத்தில் துவங்கி, கடந்தகால நினைவுகளுக்குள் பயணம் மேற்கோண்டு, எதிர்கால ஆசைகளை, கனவுகளை சொல்லி முடிவடைகிறது.

நாவலின் துவக்கத்தில், வரைந்து முடிக்கப்படாத, நிச்சயமற்ற தனது ஓவியம் குறித்து பேசத்துவங்கும் ஓவியர், இவற்றையெல்லாம் விவரிக்கும் ஒரு ஓவியத்தை தான் வரையமுடியாமல் கடைசிவரைக்கும் தவித்துகொண்டே இருக்கிறார். அவர் எதைப்பற்றி வரைய முனைகிறார் என்பது தான் கதை.

Image

இரண்டு பாப்ளர் மரங்கள்…

அது சோவியத் சோசலிச புரட்சி வெற்றிபெற்று, பாட்டாளி வர்கத்தின் தலைமையில் சோவியத் ஒன்றியம் மகத்தான வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம். ரஷ்ய ஜார் மன்னர் ஆட்சியின்கீழ் அடிமைத்தனத்திலும், ஏழ்மையிலும், கல்வியுரிமை மறுக்கப்பட்டு அறியாமையிலும் மூழ்கித்தினறி, அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருந்த மக்களை விடுவித்த கையோடு அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது சோவியத் சோசலிச அரசு.

1924ம் ஆண்டு அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கிர்க்கீஸிய நாட்டில், ஸ்டெப்பி குன்றுகளின் அடிவாரதில் பரந்து விரிந்த புல்வெளிகளைக்கொண்ட குக்கிராமம் குர்க்குரவு. பல்வேறு பகுதிகளைச்  சார்ந்த்த நாடோடி குடும்பங்கள் வாசித்துவந்த அந்த கிராமத்திற்கு நகரத்திலிருந்து இளம் கம்யூனிஸ்ட் சங்கமான “கம்சமோல்” உறுப்பினரான தூய்ஷன் என்பவர் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பபட்டு வந்து சேர்கிறார். அறியாமையில் மூழ்கி கிடந்த மக்களுக்கு சோவியத் அரசின் உத்தரவை எடுத்துக்கூறி, அந்த கிராமத்தில் உள்ள ஒரு குன்றின் மீது இருந்த பாழடைந்த குதிரைக் கொட்டிலை சரி செய்து பள்ளிக்கூடமாக்குவதற்கான அனுமதியை பெறுகிறார் அவர்.

புரட்சிக்கு முன்பு நிலப்பிரபுக்கள் ஆண்டு அனுபவித்த குதிரைக் கொட்டில் அது. புரட்சிக்கு பின்பு அவர்கள் விட்டு சென்றுவிட்டதால் பராமரிப்பிலாமல் கிடந்த இடத்தை இரவும் பகலுமாக சிரமப்படு, ஒருவழியாக குழந்தைகள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு தயார் செய்கிறார். வீடு வீடாக சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துக் கொண்டிருக்கும்போது, அல்தினாய் சுலைமானவ்னா வீட்டிற்கும் செல்கிறார். தாய்-தந்தை இல்லாத அக்குழந்தை தனது சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிறாள். அவளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் அவளது சித்தியிடம்  பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து மற்ற பிள்ளைகளோடு, அவளையும் பள்ளிக்கு அழைத்து வருகிறார்.

What Caused the Russian Revolution? | The Nation

ரஷ்ய புரட்சி ஓவியம்

இதற்குமுன் வயலுக்குத் தேவையான சாணத்தைப் பொறுக்குவதற்காக ஸ்டெப்பிப் புல்வெளிகளில் அலைந்து திரிந்த அக்குழந்தைகள் துய்ஷேனின் வருகையால் புத்துலகைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர். தங்கள் பள்ளிக்கூடம் அமைத்துள்ள குன்றின் மீது நின்று அவர்கள் இதுவரை கண்டிராத உலகத்தை காண துவங்கினர். குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தரும் அளவிற்கு கல்வியறிவு பெற்றவரல்ல தூய்ஷன். ஆரம்பக் கல்வியைக்கூட முறையாக கற்க்காத அவர்  ராணுவத்தில் இருந்தபோது எழுத படிக்க கற்றுக்கொண்டதோடு சரி. ஆனால் தனக்கு தெரிந்தவரையில் அனைத்தையும் கற்றுத்தருவதாக குழந்தைகளிடம் வாக்களித்தார்.

தூய்ஷன் டீச்சரின் அன்பும், அரவணைப்பும், குழந்தைகளின் எதிர்காலம் மீதான அவரது பிரதிபலனற்ற அக்கறையும் அந்த குழந்தைகளுக்கு அவர் மீது அளவற்ற நேசத்தையும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் உருவாக்கின. அவர் அக்குழந்தைகளுக்கு  எழுதுகோல் பிடிப்பதிலிருந்து அனைத்தும் கற்றுக் கொடுத்தார்.

கதையினூடே வரும்

“நாங்கள் ஒவ்வொருவராக எழுத்துகளைப் படித்து ‘அம்மா’, ’அப்பா’ என்று எழுதக் கற்றுகொள்ளும் முன்னரே, ‘லெனின்’ என்று காகிதத்தில் எழுதினோம். எங்களுடைய அரசியல் அகராதியில் ‘நிலப்பிரபு’, ‘கொத்தடிமை’, ‘சோவியத்துகள்’ போன்ற வார்த்தைகள் அடங்கியிருந்தன. ஒரு வருடம் கழித்து ‘புரட்சி’ என்ற சொல்லை எழுதச் சொல்லித் தருவதாக துய்ஷேன் வாக்களித்தார்.

எனும் வரிகள், “கல்வி என்பது மாணவர்களுக்கு சமூக அரசியலையும் சேர்த்து பயிற்றுவிப்பதாக இருக்கவேண்டும்” என்பதை உணர்த்தி செல்லும்.

பள்ளியின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த லெனின் படம் அந்த மாணவர்களுடன் தினசரி உரையாடுவதாக அவர்கள் உணர்ந்தனர். குழந்தைகளே! உங்களுக்கு எவ்வளவு அற்புதமான ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது தெரியுமா?” என அவ்வப்போது லெனின் கேட்பது போல இருந்தது அவரது பார்வை. லெனின் இறந்துவிட்டபோது உலகமே சோகத்தில் உரைந்திருந்த அந்த வேளையில், அந்த சின்னஞ்சிறு பள்ளிக்குள் தங்கள் தலைவனுக்கு, தாங்கள் படிப்பதற்கு காரணமான அந்த மாமனிதருக்கு தங்களின் தூய்ஷன் டீச்சருடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகின்ற அந்த நிமிடங்கள் வாசிக்கும் அனைவரையும் நிச்சயம் உணர்ச்சிவயப்பட வைக்கும்.

Image லெனின் படம்

நாட்கள் இப்படியே உருண்டு ஓட, தூய்ஷனுக்கு மிகவும் பிடித்தமான மாணவியாக மாறிப்போகிறாள் அல்தினாய். அங்கு இருப்பவர்களிலேயே அவள் தான் வயதில் மூத்தவள். கற்றுக்கொள்வதின் மீது அவளுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும், அவளது ஆற்றலையும் கண்டு உணர்ந்ததிலிருந்து, அவளை நகரத்திற்கு அனுப்பி படிக்க வைப்பது குறித்தும், ஒரு ஆசிரியராகவோ, விஞ்ஞானியாகவோ ஆக்க வேண்டும் என்று கனவு காண்கின்றார் தூய்ஷன்.ஆனால், அநாதை சிறுமி இவளுக்கு எதற்கு படிப்பு என, ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறாள் அவளது சித்தி. இதனால் அதிர்ச்சியுற்ற அல்தினாய்க்குஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாத்தார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே வந்து அவளது சித்தி தூய்ஷனை  கடுமையாக அடித்து உதைத்து, அவரது கைகளை முறித்து, குற்றுயிரும் குலையுயிருமாக்கிவிட்டு அவளை தூக்கிச் செல்கின்றனர்.

இரண்டு சோவியத் செஞ்சேனை வீரர்களுடன் சென்று அந்த வயதானவனிடமிருந்து அல்தினாயை மீட்டு வந்து, அவளது பாதுகாப்பு கருதியும், மேல் படிப்பிற்காகவும், நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார் தூய்ஷன். சொல்வதற்கு ஆயிரமாயிரம் வார்த்தைகள் இருப்பினும், எதையுமே சொல்ல முடியாத நிலையில் இரயில் ஏற்றி தனது மாணவியை அனுப்பி வைக்கிறார் அவர். அவளோ, தனது முதல் ஆசிரியரை, தனது முதல் பள்ளிக்கூடத்தை, தனது கனவுகளோடு சேர்த்து தன்னாலும், தனது ஆசிரியராலும் ஊன்றப்பட்ட அந்த இரண்டு பாப்ளர் மரங்களை பிரிந்துசெல்வதை நினைத்து, வருந்தியபடி விடைபெறுகிறாள்.

Russian revolution 1917: reading guide

சோவியத் செஞ்சேனை வீரர்கள்

தனது முதல் ஆசிரியரின் விருப்பப்படியே, மிகவும் சிரமப்பட்டு படித்து ஆய்வுக் கட்டுரைகளையெல்லயாம் சமர்ப்பித்து, பிரபலமான விஞ்ஞானியாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கும் அல்தினாய் தான், இப்போது தனது சொந்த கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பெற்று, வருகிறாள். இவ்வளவு வருடங்களில் எவ்வளவோ மாறிவிட்டன, தனது கிராமம் பெரிய அளவில் மாறிவிட்டதை கண்டு மகிழ்கிறாள். அந்த விழாவில் நடைபெற்ற விருந்தின்போது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் வாழ்த்து கடிதங்களை தந்துவிட்டுபோன தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சு  எழுகிறது. திடுக்கிட்டு உறைந்துபோகிறார் அல்தினாய். ஆம், தான் அடைந்திருக்கும் இந்த நிலைக்கு முழுமுதற்காரணமான , தனது முதல் ஆசிரியர் தூய்ஷன் தான் அது என உறுதிப்படுத்திய அந்த நொடியில் கலங்கிப்போகிறார் அல்தினாய்.

The Challenges of the Russian Revolution and Women's Rights | Left ...

இத்தனைக் காலம் தான் தேடிக்கொண்டிருந்த தனது முதல் ஆசிரியர் தூய்ஷன்… அந்த கிராமத்தின் முதல் கம்யூனிஸ்ட் தூய்ஷன்… சில வருடங்களுக்கு முன்பு தான் தேடி வந்தபோது, இரண்டாம் உலக யுத்தத்தில் சண்டையிட செஞ்சேனை வீரராக சென்றுவிட்டார் என்று சொல்லப்பட்ட தூய்ஷன்… போருக்கு பிறகு காணாமல் போய்விட்டதாக சொல்லப்பட்ட தூய்ஷன்… யாரிடமும் சொல்லப்படாத, இனம் புரியத உணர்வாய் உருவெடுத்த தனது முதல் காதலுக்கு உரியவரான தூய்ஷன்…  தனது ஊர் அடைந்திருக்கும் இத்தகைய வளர்ச்சிக்கு ஏதோஒரு வகையில் ஊற்றுக்கண்ணாய் இருந்த  தூய்ஷன்… அவருக்கு தானே இந்த பெயரும், புகழும், மரியாதையும், கிடைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இந்த கிராமத்தில் முதல் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய அவர் பெயரை தானே இந்தப் பள்ளிக்கூடத்திற்கு  வைத்து அவரை கவுரவப்படுத்தி கொண்டாடி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து வருந்திதான்  அந்த விழாவிலிருந்து உடனடியாக புறப்பட்டு நகரத்திற்கு செல்கிறார்  அல்தினாய்.

“நான் நிச்சயமாக ஓரிரு மாதங்களில் ஊருக்கு திரும்பி வந்து எனது முதல் ஆசிரியர் தூய்ஷனை நிச்சயம் சந்திப்பேன். என் அன்பான ஆசிரியரின்  நரைத்த தாடியில் முத்தமிடப்போகும் அந்த நாளை தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று தனது எண்ண ஒட்டங்களை சொல்லி முடியும் அக்கடிதத்தின் வாயிலாக, தனது கதையை நமக்கு சொல்லி முடிக்கிறார் அல்தினாய்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்கள் மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பையும், அரவணைப்பையும், அக்கரையையும், அந்த குழந்தைகள் தங்கள் ஆசிரியர் மீது கொண்டுள்ள அளவுகடந்த நம்பிக்கையையும், நேசத்தையும் நமக்கு சொல்லும் கதை இது.

சோசலிச கல்வி முறையின் மகத்துவத்தை, சோசலிச அரசின் சாதனைகளை, சமூக அரசியல் கல்வியின் தேவையை நமக்கு உணர்த்தும் கதை இது.

முதல் ஆசிரியர் - நூல் அறிமுகம் | Read ...

ரஸ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்தமாத்தவ்

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் சிக்குண்டு கிடக்கும் இன்றைய கல்வி முறையில், வணிகமே நோக்கம் என்றாகிப்போன இந்த கல்வி சூழலில், கொலைக்களமாக, வன்முறையின் கூடாரமாக மாறிப்போன ஒவ்வொரு வகுப்பறைகளிலும் சர்வநிச்சயமாக சொல்லப்பட வேண்டிய கதை இது.

எப்போதும் காற்றில் மெல்ல அசைந்தாடிக்கொண்டே இருக்கும் அந்த இரண்டு பாப்ளர் மரங்கள், தங்களின் முதல் ஆசிரியர் தூய்ஷன், தங்களின் முதல் பள்ளிக்கூடம்,  சோவியத் சோசலிச புரட்சி, மாமேதை லெனின், இரண்டாம் உலகப்போர், புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூடம் என்பனவற்றின்லவழியாக அல்தினாய் நமக்கு சொல்லும் செய்திகள், நமக்குள் கடத்தும் உணர்வுகள் எவ்வளவோ காத்திருக்கறது. சீக்கிரம் சென்று கேளுங்கள்… உணருங்கள்…

 

 

Image may contain: K.V. Sribath

தோழமையுடன்…

க.வி.ஸ்ரீபத்,

இந்திய மாணவர் சங்கம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்.

 

புத்தகத்தின் பெயர்: முதல் ஆசிரியர் (குறுநாவல்)

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்

தமிழாக்கம்: பூ.சோமசுந்தரம்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பக்கம்: 80 பக்கங்கள்

விலை: ரூ. 50

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/muthal-aasiriyar-3221/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *