நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

 

 

 

நண்பர் கூடல் தாரிக் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பான ‘’ நிலவென்னும் நல்லாள் ‘’ நம் கைகளில் புரளும் நேரம் , நிலவின் குளிர்ச்சியை நம் கைகள் உணர்கின்றன. சங்கத் தமிழ் கவிதையின் தொடர்ச்சியாக இயற்கையைப் பாடும் இனிய கவிதைகளை படைத்திருக்கும் நண்பர் கூடல் காரிக் அவர்களுக்கு முதலில் நாம் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும்

இயற்கையைப் பாடும் கவிதைகளால் தான் இந்தப் பூமியில் மனித நேயம் இன்னும் ஒரு பூவைப் போல மலர்ந்து கொண்டே இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயற்கையை கொண்டாடும் இந்தக் கவிதைகளை வாசிக்கும் எவரும் சக மனிதனை நேசிக்கவே செய்வார்கள் என்பது உண்மை.

இயற்கை தான் மனித குலத்திற்கு அன்பு செலுத்துவது எப்படி என்பதை சொல்லித் தருகிறது. இத் தொகுப்பில் கடல், பூ மற்றும் பறவை மழை, நிலா என நான்கு பாடுபொருள்களில் ஐம்பூதங்களின் ஐக்கியத்தையும் உருவாக்கும் விதமாக கவிதைகளை இயற்றி உள்ளார் நண்பர் தாரிக் அவர்கள்.

சில நேரங்களில் அவர் கவிதையை ஒரு ஓவியத்தைப் போல சொற்களால் தீட்டிச் செல்வது நம்மை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது . அதே நேரம் ஒரு நுண்ணிய கவிதை ரசனையை இந்த வாசிப்பின் மூலம் நாம் வளர்த்தெடுக்கவும் வழிவகை செய்கிறது.

இவரின் மிக எளிய சொற்பதங்கள் நம்மை எந்தவித சிரமத்திற்கும் ஆளாக்காமல் , ஒரு கவித்துவத்தின் அனுபவத்தை நம் இதயத்தில் கொடுத்து விட்டுச் செல்கிறது.

இப்படியாக கவிஞரின் எண்ணம் அனேகமாக நிறைய கவிதைகளில் இத் தொகுப்பில் நிறைவேறி உள்ளது என்றும் சொல்லலாம். இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த சில கவிதைகளை பகிர்ந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

‘’ மீனைத் தான்
விற்றுக் கொண்டிருக்கிறாள்
எனக்கென்னவோ கடலே
வீதிக்கு வந்தது
போலிருக்கிறது ‘’
என்ற கவிதை நவீனத்துவத்தின் மொழியில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது .

மீன் வீதிக்குள் வரும்போது அது நீந்திய கடலும் நம் வீதிக்கு வந்து விடுகிறது என்பது தான் கவிஞனின் பார்வை .

இயற்கையை கொண்டாடும் மனது இப்படித்தான் ஒன்றோடு ஒன்றை இணைத்து பிணைத்து அடையாளப்படுத்திக் கொள்ளும் . கடல் மட்டுமா வீதிக்கு வருகிறது ? கடலில் மீனைப் பிடிக்கும்

மீனவர்களின் வாழ்க்கையும் பல சமயங்களில் வீதிக்குத் தானே வந்துவிடுகிறது . இன்னும் கூர்ந்து பார்த்தால் இப்படியும் பொருள் விளங்கிக் கொள்ள நம்மால் முடியும்

‘’ எங்கு பார்த்தாலும்
கடல் குறித்த பேச்சாகவே
இருப்பது போலவே
தோன்றுகிறது மனதுக்குள் ‘’
இப்படி ஆரம்பிக்கும் கவிதை அலையென வளர்ந்து வளர்ந்து கடலை விதவிதமாக வரைந்து நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது . கவிஞரின் ஆவலோ பேராவலாக விரிந்து கொண்டே செல்கிறது.

‘’ இந்தக் கடலை
இன்றோ பிறிதொரு நாளோ
எப்படியாகினும் என்னுடன்
அழைத்துச் சென்றிட வேண்டும் ‘’ என்கிறார்.

அது மட்டுமல்ல கடலாகவே
அவர் தன்னை உருவாக்கிக் கொள்ளும் வரிகளும் வருகின்றன.

‘’ கடல் மேல்
பறந்து செல்லும்
சின்னதொரு பறவைக்கு
எப்படி எனது சாயல்
வந்திருக்கும் ‘’
என்று ஆச்சரியப்படுகிறார்.

இது பாரதி பாடிய காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா என்ற வரிகளை ஞாபகப்படுத்துகிறது –
நீங்கள் கடலை முழுவதும் பார்வையிட விரும்பினால் ஒரு பறவையாக மாறினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

கடலின் மகத்துவத்தை உச்சத்தில் வைத்து கொண்டாடும் வரிகள் இந்த கவிதைகள் முழுவதும் நிறையவே உண்டு. உதாரணமாக
‘’ முத்துக் குளிப்பவர்கள்
வானத்தில் மூழ்கித்தான்
முத்தோடு திரும்புகிறார்கள் ‘’

‘ தாவிக் குதித்து
நீச்சலடித்துச் செல்பவன்
மேனி முழுவதும்
வானத்தைத் தான்
பூசி கொள்கிறான் ‘’

இப்படியே அடுக்கடுக்காக கற்பனைகள் விரிந்து செல்கின்றன.
‘’ கரையில் நடக்கும்
சாம்பல் நிறப் பூனை
வானத்தைக் கொஞ்சம்
ருசித்துப் பார்க்கிறது ‘’

முடிவில் முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

‘’ கடல் என்பது
இன்னொரு
வானமன்றி
வேறென்ன ? ‘’

கவிதையை கொண்டாடும் மனம் இப்படித்தான் இயற்கையில் பித்துக் கொள்கிறது.

‘’ கடல் என்பது
நீல நிறம் கொண்ட
பிரம்மாண்டம் ‘’ என்கிறார்.

இதற்கு மேல் நாம் கடலைப் பற்றி என்ன சொல்வது ?

அடுத்ததாக
‘’ நீல நிறப் பறவையொன்று
பறப்பதைப் பார்க்க
வேண்டும் போலிருக்கிறது
கடலுக்கு
இறக்கை முளைத்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் ‘’ ?

கவிஞனின் மனம் மட்டும் தான் கடலை பறவையாக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கொள்ளும் . அப்படியே தொடரும் இந்தக் கவிதை மனிதர்களை கடலோடு இணைத்துப் பார்க்கும் போது தான் நம் உணர்வுகளுக்குள் ஊடுருவி சென்று உட்கார்ந்து விடுகிறது.

‘’ எல்லாருக்கும்
ஆறுதல் சொல்லியபடி
மனதுக்குள் அழும்
அப்பாவுக்குள்
அமைதியாக
ஓடிக்கொண்டிருக்கிறது
துயரமென்னும் பெருங்கடல் ‘’

கடல் எவ்வாறு மனிதர்களுடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை அனாயாசமாக சொல்லிச் செல்கின்றன இந்த வரிகள்..

‘’ தனது இரண்டு கண்களால்
கடல் முழுவதையும்
இரசித்துத் திரும்பியதாய்
அவள் சொல்வதனை
சந்தேகிக்க என்ன இருக்கிறது ‘’
என்று கேட்கிறார்.

எவ்வாறு , எப்படி சொன்னாலும் கடல் மீது கொண்ட ஆச்சரியம் அவரை விட்டு நீங்கவே இல்லை.
‘’ அப்படி என்னதான்
சொல்ல நினைக்கிறது
அலை ததும்ப ததும்ப
பேசத் துடிக்கும் கடல் ‘’ என்று முடிக்கிறார்.

அடுத்த நொடியிலிருந்து கடல் நமது மன வெளியில் விரிந்து கொண்டே செல்கிறது.
கடலை அடுத்து நதியைப் பற்றி பேசும் கவிதைகளும் இத் தொகுப்பில் அற்புதமாக அமைந்துள்ளன.

‘’நதிக்கரையில் அமர்தலென்பது
மீன்பிடித்தலுக்காக
இல்லையென
நீங்கள் நினைப்பதைத் தான்
வழிமொழிகிறது
இந்தக் கவிதையும் ‘’

பொதுப் புத்தியில் நதிக்கரையில் அமர்ந்திருப்பது மீன்பிடித்தலுக்காக என்றுதான் எழுதப்பட்டு இருக்கிறது.
இதில் எனக்குப் பிடித்த கவித்துவமான வரிகள் பல உண்டு.

‘’புன்னகைத்தபடியே
கடந்து செல்லும்
மழலையொன்றின்
சின்னஞ்சிறு உதடு
ரோஜா மலரே தான் ‘’
‘’ செடியில் மட்டும் தான்
பூக்கள் பூக்குமெனச் சொன்னது தான்
யாரெனத் தெரியவில்லை
இதுவரையில் ‘’

இப்படியெல்லாம் கவிஞருக்கு யோசிக்க தோன்றுவது அவருக்கு கிடைத்திருக்கும் கவி உள்ளத்தின் காரணமாகத்தான் இருக்கும். வேறென்ன ?
‘’ நமக்குத்தான்
கள்ளிச்செடி
பாலை நிலத்துக்கு
அதுதான் ரோஜா ‘’

‘’ செம்பருத்தி பூ என்னும்
சொல்லின் மீது ஈர்ப்பு வந்தது
எந்த தருணத்திலென்பது தான்
நினைவில் இல்லை ‘’

அப்படி ஈர்ப்பு வந்ததால் தான் அவர் கவிஞராக இருக்கிறார்.
‘’ நீந்துவது போலவே
பறந்து செல்லும்
இந்தப் பறவைக்கு
ஆகாயமென்பது நதி’’

நீங்கள் கண்மூடி கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆகாய நதியில் நீங்களும் நீந்தி வரலாம். பனியைப் பற்றிய கவிதையை பாடும்போது கடைசியில் கவிஞர் இவ்வாறு முடிக்கிறார்.

‘’ உருகுவதற்கு
வழி எதுவும் இல்லாமல்
உறைந்து போன சொற்களை
நினைத்துக் கவலையுறுகிறான்
எங்கோ ஒரு கவிஞன் ‘’

‘’ யாக்கும் தெரியாமல்
இரகசியமாகப் பூவை
பறித்து செல்பவன் மீது
எந்தக் கோபமுமில்லை
சூடிக்கொள்ளத் தானே பூ ‘’

இப்படி இந்தத் தொகுதி முழுவதையும் கவிதைகளால் நிரப்பியிருக்கிறார் கவிஞர் தாரிக் அவர்கள். தடுக்கி விழுந்தால் நீங்கள் கவிதையின் மீது தான் விழ வேண்டும்.

‘’ நீரருந்திக் கொண்டிருக்கும்
வனவிலங்குகளுக்கு
வழி விட்ட பின்
நீரருந்தி திரும்புகிறாள்
வனத்தைக் காப்பவள்
அவள் தேவதையான
அந்த தருணத்தில் தான்
மரகதக் கல்லுக்கு வாய்த்திருந்தது
வனத்தின் நிறம் ‘’

இப்படி அருமையான மனிதர்களும் வனத்தில் இருக்கிறார்கள் .அவர்களை கவிஞர்களை விட அற்புதமான பெரும் கவிஞர்கள் என்றே சொல்ல வேண்டும்.

சில கவிதைகள் பொதுவாக இயற்கையைப் பாடினாலும் அதை வாசிக்கின்ற மனங்களுக்கு வாழ்க்கையின் வடிவமாய் தோன்றுகிறது.

உதாரணமாக
‘’ கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கென
எல்லாத் திசைகளிலும்
மாறி மாறி அமர்ந்தபடி
கூவுகிறது குயில்
எங்கமர்ந்து கூவினாலென்ன
திசையா முக்கியம் ‘’ என்று கேட்கிறார்

மழையைப் பற்றி கவிஞர் பாடும் போது

‘’ அவரவர் கரங்களில்
குடைகள் பூத்துக் குலுங்குவதை
இரசிப்பதற்காக வேனும்
பொழிய வேண்டும்
ஒரு மழை ‘’

என்று ஆசைப்படுகிறார். இப்படி எல்லாம் கவிஞனை தவிர வேறு யார் ஆசைப்பட முடியும் ?

இந்தக் கவிதைகளில் தேநீர் அருந்துபவர்கள் நம் இதயத்திற்கு சட்டென்று நெருக்கமானவர்களாகி விடுகிறார்கள் . பேரன்பினை வெளிப்படுத்த நினைத்த தருணமாக தேனீர் அருந்தும் தருணங்களை அவர்கள் கருதுகிறார்கள்.

‘’ தேநீரைப் பருகுவதைப்
போலத்தான் இருக்கிறது
பொழியும் மழையில்
நனைந்து மகிழ்தலும் ‘’
உற்சாகமாகிவிட்ட இதயத்திற்கு மழையும் தேநீரும் ஒன்று தானே ?
இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் தான்

‘’ ஒரு கோப்பையைத்தான்
வரைந்தேன்
காகிதம் முழுவதும்
தேநீர் வாசம் ‘’

‘’ ஒரு மழைக்கும்
இன்னொரு மழைக்குமிடையில்
தன்னை
உலர்த்திச் செல்கிறது
வெயில் ‘

இப்படி அற்புதமான கற்பனை ஓவியங்களை வார்த்தைகள் கொண்டு வரைந்திருக்கிறார் கவிஞர் தாரிக்.

‘’ பெரு மரத்தை இரட்சிக்கத்
தரை இறங்குகிறது
சோவெனப்
பொழியத் துவங்கும் மழை ‘’

நிலவின் மீது அபரிதமான அன்பு கவிஞருக்கு
நிலவைப் பற்றி பாடும் போது மட்டும் கவிஞர்களுக்கு எப்படியோ அத்தனை இறக்கைகள் முளைத்து விடுகின்றன
.
‘’அப்படியென்ன பிடிவாதம்
இந்த நிலாவுக்கு
ஒரே ஒரு முறையேனும்
பகலில்
வந்து போனாலென்ன ‘’
என்று கேட்கிறார்.

ஆனால் நிலவென்னவோ அங்கேயே தான் இருக்கிறது

‘’ புல்லாங்குழலை
வாசித்தபடியே செல்பவன்
இந்த நிலவை
எங்கழைத்துச் செல்கிறான் ‘’
என்று கேட்கும் போது நமக்குள் புல்லாங்குழல் ஓசை கேட்கிறது.

‘’ யுகங்கள் பல கடந்த பின்பும்
பழைய நிலா என்னும்
சொல்லினைக் கேட்டதுண்டா
நம்மில் யாரேனும் ‘’

‘’ சங்க காலம் முதல்
கணினி வரை
அவனுக்கு
சந்திரன் தான்
அவளின் முகம் ‘’

காலம் மாறினாலும் சந்திராயனுக்கே நாம் ராக்கெட் அனுப்பினாலும் நமது கற்பனையை அனுப்புவது போல் அவ்வளவு சுகமாக இல்லை அது.

‘’ பூத்துக் கிடக்கும் நிலவினை
யாருக்கும் தெரியாமல்
பறித்து விட நினைக்கிறாள்
இளம் பெண்ணொருத்தி ‘’

‘’அவளின் நெற்றிக்கு
பிறையைத் தவிர
வேறெந்த ஊவமையையும் இன்னும்
கண்டறியப்படவில்லை ‘’

அதனால் தான் நாம் நிலவை பெண்களின் உருவகமாக ஆக்கிவிட்டோம்

‘’ ஒற்றை முலையில்
நிலா கருணை சுரப்பது
இவர்கள்
எல்லாருக்குமாகத்தான் ‘’

‘’ ஐந்து விரல்களை
குவித்து விரிப்பவன்
பூவொன்றைப் பார்த்திருப்பான் என
நினைக்கத் தோன்றுகிறது ‘’

இப்படி இந்த தொகுப்பு முழுவதும் அபாரமான கவிதைகள் கொட்டி கிடக்கின்றன.

அழகியலை முன்னெடுத்துப் பாடிய கவிஞர் , எங்கே சாமானியனின் குரலை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவாரோ என்று நினைத்திருந்தேன்

கவிதை புத்தகத்தின் கடைசி வரிகளில் மானிடத்தின் ஆகப் பெரும் சாபத்தை நிலவின் வழியாக காட்சிப் படுத்தி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார்..

‘’எப்பொழுது பார்த்தாலும்
அழகான ரொட்டி துண்டென
கற்பனை கொள்கிறான்
பசியில் துடித்தழுபவன் ‘’
என்ற வரிகளில் நாம் காண்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்புவியில் மனிதர்கள் அல்லலுறும் பசி என்னும் பெருந்துக்கம் கவிதையாகிறது.

மேலும்

‘’ பெருந் துக்கத்தை
சுமந்தலைபவர்கள்
அதிலிருந்து தன்னை
விடுவிக்கும் பொருட்டு
நீண்ட நேரம்
பிரார்த்தனைகளில்
ஈடுபடத் துவங்குகிறார்கள் ‘’

‘’ நகர்ந்து செல்லும்
முழு நிலாவோடு
உரையாடிக் கொள்கிறேன் நான் ‘’

என்று முடித்திருக்கிறார்.
‘’ சமாதானப் புறாக்களின்
சிறகுகளை பிய்த்தெறிந்து
தீக்கிரையாக்கி விட்டார்கள்
வன்மத்தை விரும்புபவர்கள் ‘’

‘’ ருசி மிகுந்ததான
பூமிக்கனி
அழுகிப் போய்விட்டது
இப்பொழுது ‘’

‘’ காற்றில்லாமல் இருந்தாலென்ன
நிலாவில் குடியேறுவோம் வா ‘’
என்று கடைசி வரையிலும் கவித்துவம் நிரம்பி வழிகிறது இந்த தொகுப்பு முழுவதும்.

அன்பையும் ,அழகையும் இனிய உறவையும் இயற்கையை விரும்பும் ஒரு கவிஞன் இந்த மாசடைந்த பூமியில் வாழ , வசிக்கப் பிடிக்காமல் இப்படியான எதிர் நிலைப்பாடு கொள்வது உண்மையே. , உலகெங்கும் உள்ள கலைஞர்களின் குரலாகவே ஒலிக்கிறது இந்தக் குரல்.

அதுவே இந்த கவிதையின் ஊடாகவும் தெரிகிறது. இதை வாசிக்கும் உள்ளங்கள் இயற்கையை ரசித்து போற்றி அதன் மீது அபரிதமான காதல் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இப்படியான அற்புதமான இயற்கையை கொண்டாடும் கவிதைகளைப் படைத்த தோழர் தாரிக் அவர்களுக்கு , மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
தங்கேஸ்

நூலின் பெயர் :”நிலவென்னும் நல்லாள்” [கவிதை தொகுப்பு]
ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக்
பதிப்பகம் :தட்டான் பதிப்பகம்
விலை :ரூ 85/

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *