Green Cheeked Parakeet Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினிசென்ற வாரம் நம்ம ஊர் பச்சைக்கிளியைப் பற்றித் தெரிந்து கொண்டோம் அல்லவா, இந்தவாரம் அதே குடும்பத்தைச் சார்ந்த வெளிநாட்டுக் கிளியுடன் நாம் பயணிக்கலாம். ஏனெனில் நாம் வெளிநாட்டுக் கிளியையும் விட்டுவைக்காமல் கூண்டில் அடைத்து வைக்கின்றோம்.

கடந்த வருடம் கொரானா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட  ஊரடங்கினால் கள ஆராய்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் நான் எனது  சொந்த ஊருக்கு திரும்பி வந்தேன். அப்போது பக்கத்து வீட்டு அக்கா “நாங்கள் கிளி வளர்கிறோம், வந்து பாரேன்” என்று ஆர்வமாக என்னை அழைத்துச் சென்று கிளி அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டைக் காட்டினார்கள். ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

Green Cheeked Conure Fact Sheet & Bird Profile (Must Read!)
மனிர்களின் கையில் அமைதியாக கிளி

கண்களுக்குக் கீழே அடர் பச்சை நிறம்,  மந்தமான பழுப்புநிற நெற்றி, சாம்பல் கலந்த வெள்ளை நிற கழுத்து, வயிறு மற்றும் வால் பகுதிகளில்  மிதமான சிவப்பு நிறம்,  நீல நிற இறகுகள் இப்படிப் பல வண்ணங்களில் அது  அழகாக இருந்தது. கூண்டில் வைத்து வளர்க்கும் love birds போன்ற சிறு பறவைகளைப் பார்த்துள்ளேன். ஆனால் இதுபோன்ற  கிளியை முதன்முறையாகப் பார்ப்பதால் இதனைப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.  அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி.

நான் உடனடியாகச் சென்று அந்தப் புகைப்படங்களை வைத்து பல பறவைகள் பற்றிய புத்தகங்களிலும், வலைத்தளங்களிலும் தேட ஆரம்பித்தேன். ஆச்சரியமாக இருந்தது.

இதன் ஆங்கிலப் பெயர் – Green-cheeked parakeet என்று தெரிய வந்தது. மேலும் இந்த கிளி தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில் மற்றும் பராகுவே பகுதிகளில் 2000 மீட்டர் உயரமுள்ள இலையுதிர் காடுகளில் வாழ்பவை என்பதையும் அறிந்துகொண்டேன். தற்போது அதைப்பற்றிய விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இயற்கையாய் அதன் வாழ்விடங்களில் பறக்கும் கிளிகள்

மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான குளிர்காலத்தில் இக்கிளிகள் 2000 மீட்டர் உயரத்திலிருந்து கீழே இறங்குகின்றன. (இந்த தகவல்களைப் படித்தவுடன் அழகு, மென்மை என்று சொல்லிப் பாதுகாப்பு, கவுரவம், பெருமை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் அடைத்து வைத்து, சமூகம் சொல்வதை அப்படியே செயல்படுத்த வைப்பது மனித இனத்தில் உள்ள பெண்களை மட்டுமல்ல மற்ற அழகான உயிரினங்களையும் தான் என்று தோன்றியது) அதிலும் ஓரிடவாழ்வியான வெளிநாட்டுக் கிளியை, மாறுபட்ட சுற்றுச்சூழல் காரணிகள் கொண்டுள்ள நாட்டிற்குக் கடத்தி அவற்றை விற்பனை செய்வதும், அதனை மக்கள் விலை கொடுத்து வாங்கி வளர்ப்பதும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. மேலும் இதுபற்றிய  தரவுகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தேடினேன்.

இதன் அறிவியல் பெயர் Pyrrhura molinae.

Pyrrhura – Gr. purrhos flame-coloured, red; -ouros -tailed (oura tail).  கிரேக்க மொழியில் சிவப்பு நிற வால் என்று அர்த்தம்.

Molinae – Abate Juan Ignacio Molina அபேட் ஜுவான் இக்னாசியோ மோலினா (1740–1829)

Fr. Juan Ignacio Molina (June 24, 1740 September 12, 1829)

மோலினா என்ற இயற்கை ஆர்வலர், வரலாற்றாசிரியர், மொழிபெயர்ப்பாளர், புவியியலாளர், தாவரவியலாளர், பறவையியலாளர் மற்றும் மொழியியலாளர். மோலினா என்றவர்  டார்வினுக்கும் 44 ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களின் படிப்படியான பரிணாமக் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவராவர். டார்வின் அவர்களே, molinae  அவர்களை “தி தியரி ஆஃப் ஸ்பீசீஸ்” இல் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Massena & Souancé, 1854 என்பவர் இப்பெயரை வைத்துள்ளார் .

தற்போது கிளியைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம். இக் கிளிகளில் 6 வகையான துணை இனங்கள் (Sub-species) கண்டறியப்பட்டுள்ளன.

Sub-species

1.Pyrrhura molinae flavoptera

2.Pyrrhura molinae phoenicura

3.Pyrrhura molinae molinae

4.Pyrrhura molinae restricta

5.Pyrrhura molinae hypoxantha

6.Pyrrhura molinae australis

Green-cheeked parakeet பிப்ரவரி மாதத்தில் அர்ஜெண்டினாவில் இனப் பெருக்கம் செய்கின்றன. தரையிலிருந்து மூன்று மீட்டர் உயரமுள்ள மரப்பொந்துகளில் நான்கு முதல் ஆறு முட்டைகளைவிட்டு 22-24 நாட்கள் அடைகாக்கின்றன.பொதுவாகவே கிளிகள் அத்திப்பழங்களை உண்ணுவது வழக்கம் அதிலும் Green-cheeked parakeet அனைத்து பருவ காலங்களிலுமே அத்திப் பழங்களையே அதிகம் உண்ணுவதாக  ஆய்வு முடிவுகளில் கூறுகின்றனர். அத்தி மரத்தின் ஆதாரவுயிரினம் (keystone species) என்று சொல்கிறோம். அத்திமரம் ஒரு சிறிய பல்லுயிர்ச்சூழல் அமைப்பே உருவாகக்  காரணமாக உள்ளது. குளவிகள், பூச்சியினங்கள், பழம் தின்னும்  வௌவால்கள், பூச்சியுண்ணும் பறவைகள் போன்றவை அத்தி மரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இத்தகைய சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அத்திமரத்தின்  பெருக்கத்திற்கு இந்த கிளிகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.

இத்தகைய கிளியினம் எண்ணிக்கையில் குறைந்து வருவதாகப் பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. இக்கிளியை அதுவும் வெளிநாட்டிலிருந்து நாம் விலை கொடுத்து வாங்குவதால் கிளியை மட்டுமல்ல அத்தி மரம், அதைச்சார்ந்த சூழலையும் சேர்த்தே கூண்டிற்குள் அடைப்பதாகும். இது மொத்த இயற்கை அழிப்பிற்கு வழிவகுக்கும்.

நான் விசாரித்ததில் எங்கள் பகுதியில் இதன் விலை ரூபாய் (15000/-) பதினைந்தாயிரத்திற்கும், இனப்பெருக்கம் செய்யும் நிலையில் இருக்கும் ஒரு ஜோடி கிளிகளின் விலை (18000/-) பதினெட்டாயிரத்திற்கும் விற்கின்றனர்.அனைத்தையும் விட இந்த கிளிகளை வாங்கிய பக்கத்து வீட்டுக்கார அக்கா  “நீ பறவைகளைப் பற்றித் தானே ஆராய்ச்சி செய்கிறாய், அதான் உனக்கு பிடிக்குமேன்னு கூப்பிட்டோம்” னு சொன்ன பிறகு தான், எனக்கும் தோன்றியது, இவர்களுக்கு எப்படியாவது இது தவறு என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று. ஆனால் படித்த இளைஞர்கள் தான் அடம் பிடித்து இதுபோன்று பறவைகளை  வாங்குகிறார்கள் என்ற தகவல்கள் பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

மேலும் அவைகளுக்கான உணவு வாங்குவது, கைக்குழந்தை வளர்ப்பது போல மருந்துக்கடையில் செர்லாக் (Cerelac) வாங்கி கூழ் போல் கலக்கிக் கொடுக்கிறோம் என்று நடுத்தர குடும்பங்களில் பராமரிப்பு செலவுகளையும் எண்ணிப் புலம்பினார்கள்.

இவற்றை எல்லாம் கேள்விப்பட்ட உடன் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் இந்திய நாயனங்களைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் நினைவுக்கு வந்தது. நாட்டு நாய்களைத் தெருநாய்களாக கட்டுப்பாடில்லாமல் திரியவிட்டு, வெளிநாட்டு நாய்களை வீட்டிற்குள் வாழவைப்பது போல் பறவையினங்களையும் மாற்றி விடுவமோ என்ற பயத்திலேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

பறவைகள் சுதந்திரமாகப் பறந்து சூழலை வளப்படுத்தி உயிர் வாழ்வதற்கு தானே ஒழிய மனிதர்களுடன் நேரங்களைக் கழிக்க அல்ல. நேரங்களும் பயனின்றிக் கழிப்பதற்கு அல்ல. இயற்கையை  விலங்குகளைப்  பறவைகளை அடுத்த தலைமுறைக்கும்  கிடைக்கச் செய்யவேண்டும் என்றால் அவைகளைக் கூண்டில் அடைக்காமல், நமக்கு அடிமையாக்கிக் கொடுமைப்படுத்தாமல், இயற்கையாகவே வாழ விட்டு  அதன் இயல்பியலை தூரத்திலிருந்து ரசிப்போம். இயற்கையுடன் இயல்பாய் பயணிப்போம்.தரவுகள்:

1. http://www.fao.org/3/y1997e/y1997e1b.htm

2. https://ebird.org/species/gncpar 

3. படங்கள் – Google Images

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினிஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 3 Comments

3 Comments

  1. Sabari Giri

    சிறப்பு முனைவர் கிருபா நந்தினி
    கூட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கு கிளியை சுகந்திரமாக வாழவிடுவோம்…….
    இயற்கையை இயற்கையாக விட்டுச் செல்வோம்
    இந்த சுகந்திரக்காற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லுவோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *