இரா. கலையரசி கவிதைகள்

 

 

 

1.அழகு தொப்பை

காற்றைடைத்த பலூனது
என் கைகள் பட்டதும்
எம்பிக் குதிக்கிறது.

வழுக்குப் பாறைகள்
தேடாது,
உன் தொப்பை
வழுக்கலில்
வழுக்கி மகிழ்கிறேன்

ஒற்றை விரல் அழுத்தத்தில்,
குழி பதிந்து
சிரிக்கும் அழகை
கண்களுக்குள் பதுக்குகிறேன்.

உன் தொப்பைத் தலையணையில்
தூங்கிக் கொள்கிறேன்

இடுப்பை விட்டுத் தொங்கும்
திராட்சைக் கொத்தாய்
இழுக்கிறது என்னை

உன் தொப்பை

பெருவிரல் காணா
உன் வைராக்கியம்,
என்றும் என் பாக்கியம்

மேல் கீழாய்,
ஏறி இறங்கும்,
பஞ்சு மெத்தையில்
முகம் பதிக்கிறேன்.

உப்பிய கன்னங்களை
வம்பிற்கு இழுக்கும்,
சண்டைக்காரன்
உன் தொப்பை.

யாரும் தொடவோ
பார்க்கவோ
அனுமதிப்பதில்லை
உன் அழகு தொப்பையை

 

2. அழகன் 
மெல்ல திறக்கிறது
கதவு!
எட்டிப் பார்க்கிறேன்.
தென்றல் கலைத்த
தலைமுடி,
சற்று இறங்கி
வில்லொத்த புருவத்தை
தீண்டி மகிழ்கிறது.
அகன்ற நெற்றிக்கு
நடுவில்,
வழுக்குப் பாறையின்
கூரிய முனையில்
நிமிர்ந்து நிற்கிறது
நாசி.
கோவைப் பழ சிவப்பில்
வரையப்பட்ட
உன் இதழ் வரிகள்,
மீசையில்லா முகத்தை
மிடுக்காய்க் காட்டுகிறது.
ஒன்றிரண்டு மடிப்புகளுடன்,
எழுதப்பட்ட
உன் கழுத்தின்
நீட்சியாய்,
பரந்த தோள்கள்
பிசைத்து வைத்த
கோதுமை நிறத்து
வட்ட மாவாய்
வாட்டமாய் இருக்கிறது
உன் தொப்பை மெத்தை
பூமியைத் தேடிப் பிடிக்கும் ஆசையில்
அளவாய்
நீண்டு இருக்கின்றன
நான் தொழும் கால்கள்
உன் அழகுச் சிறையில்
பூட்டி வைத்துக் கொண்டு
அதன் சாவியை
என் இதய அறையில்
வைத்து விட்டு
எங்கோ வேடிக்கை பார்க்கும்
என் அழகன்

 

இரா. கலையரசி
திருநகர்.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *