தென்றல் கவிதைகள்

தென்றல் கவிதைகள்

1
செடியின் முன்னுரிமை
பூக்களெனில்
வெட்டுக்கொடுக்கும்
தண்டுக்கு முதலுரிமை
சூரிய ஒளியில்
முகம் கழுவி
நிமிர்ந்தால்
கூந்தல் இரவில்
தலைகீழாய்த் தொங்கும் முடிவு
யாருக்காவது எப்போதாவது முன்னுரிமை
எப்போதாவது யாருக்கோ முதலுரிமை
யாரின் யாருக்கோ
கிடைக்கும்
எப்போதாவதில்
என்ன உரிமை இருக்கிறது
யாதுமாகி
—–
2
உந்தி இட்ட
நெற்றி முத்தத்தில்
தீவுப்பொட்டு மட்டும்
ஒட்டிக் கொண்டது
கடலான பூவின்
திசையாகும் நீ
—-
3
அன்பொரு தலைகீழாய்த்
தொங்கும் கூட்டுப்புழு
கல்லெறிந்தால் சிதையும்
காற்றில் புதையவிட்டால்
பட்டாம்பூச்சியின்
வானத்தை பத்திரமாகப்
பெத்துக் கொடுக்கும்.
4
மே மாச சனிக்கிழமையொன்றில்
தவிடு வாங்கிவிட்டுத்
திரும்பும்போது அமலா அக்காவைப் பார்த்தேன்
ரேசன் அரிசி வடிவில்
அமலா அக்காவின் உயிர்
தராசிலிருந்து சாக்குக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது
இடது புறங்கையைக் கிள்ளி
சொல்லாலும் வலிக்காத அளவுக்கு
கடைசிவரைக்கும் பேசாமயே இருந்துட்ட
என்றது
டீச்சராகிட்டீங்களா அக்கா என்றதும்
வீட்ல கஷ்டம்.
கம்பெனிக்குப் போறேன்.
வேற வழியில்ல.
ஏத்தமான ரோட்டின் ஓரத்தில்தான் சைக்கிளை நிறுத்தியிருக்கிறேன்.
டீச்சராக முடியாத அமலா அக்காவின்
அன்றைய இரவில் வாசமடித்த ரேசன்
சோத்தை விக்கி விக்கி அழுது
திங்க முடியாமல் தின்றேன்.
இன்று நல்ல அரிசிச் சோறு
அமலா அக்காவுக்கும் சேர்த்து
அமலா அக்கா
எனக்கும் சேர்த்து ஆக்கியிருக்கும்.
இருந்தாலும்
அடுத்த கவிதைத் தொகுப்பு
அமலா அக்கா (எ) அமலா டீச்சருக்கு
சமர்ப்பணம்
தென்றல்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *