thodar-20: samakala sutru suzhal savaalkal - pa.ram manohar தொடர் -20 : சமகால சுற்று சூழல் சவால்கள் - பா. ராம் மனோகர்thodar-20: samakala sutru suzhal savaalkal - pa.ram manohar தொடர் -20 : சமகால சுற்று சூழல் சவால்கள் - பா. ராம் மனோகர்

                    கவனத்தோடு காப்பாற்றப் படவேண்டிய கழிமுகங்கள்!

               நமது இயற்கை சூழல்களில், பெரும்பான்மை மக்கள் இதுவரை அறியாத நீர் சூழல், கழிமுகம்(ESTUARY ) ஆகும்.உப்பங்கழிகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர்.நன்னீர் உள்ள ஆறுகள், இறுதியாக கடலில் கலக்கும் இயற்கைசூழல், கழிமுகம் என்பதாகும். இந்த கடற்கரை உள்ளடக்கிய வாழிடத்தில் அதிகநுண் ஊட்ட சத்துக்கள் மற்றும் படிவுகள் காணப்படும். கடல் நீரும், உப்பில்லாத நன்னீரும் இணைந்த நிலையில் இந்த வாழிடம், அதிக உற்பத்திக் களமாக மாறி வணிக ரீதியாக  சிறந்த பயன்பாடுகளை தருகிறது என்பது மிகையில்லை.குறிப்பாக கழிமுக வாழிடங்கள், வளமாக காணப்படும் வெப்ப மண்டலபகுதியில்  மீன்வளம் பெருக இதுவே காரணம் ஆகும்.நிலம் மற்றும் கடல் வாழிடம் இயற்கை சூழல்களுக்கு இடையில் காணப்படும் அரிய சூழல், நிலையான தொடர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு கழிமுகம் ஆகும். இத்தகைய கழிமுக சூழல் பல்வேறு நுண்ணிய வேறுபட்ட சூழல் அமைப்புகள் கொண்டுள்ளது. அவற்றின் உயிரின நிலையும் பல்வகை பண்பினை கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது வியப்பு அளிக்கிறது.. அவை தாழ்வான திறந்த நீர் ஆதாரம், உப்பள நீர் சேற்றுப் பகுதி,மணற் பாங்கான கடற்கரை, சேற்று நிலங்கள், பாறைகரை,பவளப் புற்றுகள், அலையாத்தி காடுகள், ஆற்று சமவெளி, அலை நீரோட்ட ஓடைகள்,கடல் தாழை பகுதி, மர அடர் சேற்று நிலங்கள், கடல் பாசி, பூண்டு படிவங்கள் என காணப்படுகின்றன.

கழிமுகச் சூழல் ஒரு கலாச்சார  மையம் என்ற நிலையில் அங்கு வாழ்ந்து வரும்  கடற்கரை மக்களுக்கு விளங்கி வருகிறது. குறிப்பாக மீனவர்கள் தொழில், உப்பு உற்பத்தி, சுற்றுலா மேம்பாடு, சுண்ணாம்பு உற்பத்தி, தேங்காய் மட்டை மூலம் கயிறு உருவாக்குதல்,ஆகிய பல்வேறு செயல்களில் இந்த இயற்கைச் சூழல் தொடர்பு கொண்டு, அதன் வற்றாவளத்தின் மூலம் சமுதாய நலன் சிறக்க உதவுகிறது. மேலும் கழிமுக சூழல், சிறு துறை முகம் உருவாகி வணிகம் மேம்பட பயன் அளிக்கிறது. கழிமுகத்தில் காணப்படும் ஊட்ட சத்து மூலபொருட்கள், அங்கு வசிக்கும் நீர் உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு வாழ்வாதாரம் ஆக விளங்குகிறது.

                       இந்த அரிய நீர் சூழல், மனிதர்களின் நாகரீகம் என்ற தவறான  நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் முற்றிலும் அழிந்து போய்விடும் நிலையில் உள்ளது. நகர கழிவு நீர்,தொழிற்சாலைகள் வெளியேற்றம் செய்யும் வேதியியல் கழிவு, மாசு, வாழிட அழிப்பு, இறால் பண்ணைகள், நில ஆக்கிரமிப்பு, மக்கள் மனமகிழ் பூங்கா, பெரும் துறைமுகம், வணிக ரீதியாக பெருமளவில் மீன் பிடித்தல், பருவ கால மாற்றம் ஆகிய காரணங்கள் கழிமுகங்கள் தம் இயற்கை பண்புகள் இழந்து போக வழிகள் ஏற்படுத்தி வருகின்றன. மீன்கள், இறால், நண்டு, மெல்லுடலிகள் போன்றவை, மனித உணவுகளில் முக்கிய பங்கு வகித்து வருவது நாம் அறிந்ததே!ஆனால் கழிமுக சூழல் மூலம் கிடைக்கும் இத்தகைய உயிரினங்கள் கடல் சூழலிலிருந்து வேறுபட்டவை  ஆகும். ஆனால் வளர்ச்சி பணி என்ற நிலையில் மின் உற்பத்தி நிலையம், அணைக்கட்டு, திட கழிவு கொட்டுதல் என மக்கள் பெருக்கத் தின்  மூலம் உலகம் முழுவதும் இத்தகைய சூழல் அழிவுகள்

தொடர்ந்து வருவது, ஒரு சுற்றுசூழல் பாதுகாப்பு சவால் ஆகும்.பல்வேறு மாசுக்கள் கலக்கும் போது, கழிமுக வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். வெப்ப நிலை மாறுபடும், ஊட்ட சத்துக்கள் குறையும் சூரிய ஒளி இல்லாமல் போகும். உப்பு சத்து அளவும் வேறுபாடு அடைகிறது.

            தமிழ் நாடு கடற்கரை 1076கிலோமீட்டர் தூரம் கொண்டுள்ளது.இந்தியாவில், 15% வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருங் கடல் பகுதியில் அமைந்துள்ளது.13 கடற்கரை மாவட்டங்கள் கொண்ட  இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடாநோக்கி கடலில் ஆறுகள்  சென்று கலக்கின்றன. அதில் முக்கியமானவை,

காவேரி, வைகை, தாமிரபரணி, மற்றும் பெண்ணாறு ஆகியனவாகும். இவை மூலம் கடற்கரை பகுதிகளில்  கழிமுகம் மற்றும் லகூன் உருவாக்கிஇ ருக்கின்றன. எண்ணூர், அடையார், வைகை, தாமிரபரணி மற்றும் முத்துப்பேட்டை கழிமுகம்  பகுதிகளாகும்

 எண்ணூர் கழிமுகம்  சென்னை மாநகரின்  வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த கழிமுகத்தில் வண்டல் மண் பகுதி, கடற்கரை மண் குன்று, அலை தளங்கள் மற்றும் சிற்றோடை கிழக்கு திசையில் உள்ளன. மேலும் காயல் என்ற நீர் பகுதி உப்பு சேற்று நிலத்தினையும், உப்பங்கழியினையும் .கொண்டு அமைந்துள்ளது. ஆனால் அவை அலையேற்றத்தின் போது, மூழ்கி வங்காள விரிகுடா கடலின் திறப்பு பகுதியாக ஆகிவிடும். சென்னைக்கு அருகில் உள்ள மற்றொரு கழிமுகம், அதிக தாவர வளம் கொண்டு சுற்று சூழல் முக்கியத்துவம் உள்ள அடையாறு விளங்குகிறது. ஆனால், கடந்த காலத்தில் இந்த இயற்கை சூழல் மிகத் தீவிரமாக, நகர மயமாக்கல் காரணமாக பாதிக்க பட்டது. இந்த கழிமுகம் 358 ஏக்கர் பகுதியில், அதிக தாவர, விலங்கு வளம் கொண்டு அமைந்துள்ள பகுதி ஆகும். இங்கு 58 ஏக்கர் சூழல் பூங்கா, தமிழ் நாடு அரசினால் உருவாக்கப்பட்டது.

அடையாறு கழிமுகம், மீட்பு நடவடிக்கையாக அங்கு படிந்திருந்த, நகர கழிவு சேறு வெளியேற்றம் செய்யப்பட்டு தூர் வாரப்பட்டது. மீண்டும் கழிவு நீர் உட்புகாமல் தடுக்கப் பட்டது. நிலப்பகுதி மேம்படுத்த, புதிய தாவர, அலையாத்தி சிற்றினங்கள் மண் குன்றுகள் அமைத்து அவற்றின் மேல் நடப்பட்டன.172 தாவர சிற்றினங்கள் அங்கு உள்ளன.65 வகை முதுகெலும்பு உயிரினங்கள், (மீன் 5, நீர் நில வாழ்வி 3, ஊர்வன 11, பறவைகள் 33, பாலூட்டிகள் 13) அங்கு காணப்பட்டதாக 2007 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

எனினும், சூழல் மீட்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொண்டபிறகு,2012 ஆம் ஆண்டு, மீன்கள், நீர் நில வாழ்விகள், ஊர்வன, பறவை, பாலூட்டி ஆகிய உயிரின சிற்றினங்கள் முறையே 27,10,19,90 மற்றும் 13 என்ற எண்ணிக்கை கூடியதாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலை, மகிழ்ச்சி அளிக்கிறது.

 வைகை ஆற்று கழிமுகம் ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆத்தங்கரை கழிமுகம் என அழைக்கப்பட்டு, வங்காள விரிகுடா கடலின் பாக் நீர் சந்திப்பு (PALK STRAIT) பகுதியில் உருவாக்கியுள்ளது.தாமிரபரணி ஆறு கழி முகங்கள், புன்னை காயல் மற்றும் பழைய காயல் என இரண்டு பிரிவாக, தூத்துக்குடி தொழிற்சாலை மையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகின்றன. காவேரி ஆற்றின் கழிமுகம், கொள்ளிடம் ஆற்று பகுதி, பூம்புகார் மற்றும் திரு முல்லை வாயில் ஆகிய நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கிளை ஆறுகள் மூலம் கடலில் கலக்கின்றன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை என்ற ஊரில் காவேரி ஆற்றின் கிளை ஆறுகள், வெண்னாறு, அதில் இருந்து ஐந்து சிறு கிளை ஆறுகள், பாமணி ஆறு, கோறையாறு, மரக்கோறையாறு, கிளை தாங்கிஆறு, வளவன் ஆறு என பிரிந்து ஏழு கிலோமீட்டர் கடந்து முத்துப்பேட்டை பகுதி காயலில் சென்று கடலில் கலக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி கழிமுகம்,, இந்திய தீப கற்ப பகுதியின் தென் முனையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் துவங்கும் பழயாறு 23 கிலோமீட்டர் தூரம் கடந்து மணக்குடி கழிமுகம் ஆக மாறி அரபிக் கடலில் கலக்கிறது.

பொதுவாக நம் தமிழ் நாட்டிலும் இந்த கழிமுகங்கள் பெருமளவில், மனித செயல்பாடுகள், மூலம் வாழிட அழிவு, தொழிற்சாலை கழிவு, விவசாய கழிவு, அதீத  மீன் பிடித்தல் போன்ற மாசுபாடு, ஆக்கிரமிப்பு போன்ற காரணங்கள் வழியில் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. அடையாறு கழிமுகம் மேம்படுத்தப்பட்ட நிலை போல், மாநில, ஒன்றிய அரசுத் துறைகள்  அனைத்து கழிமுக பகுதிகளில் பாதுகாப்பு, மேம்பாடு நடவடிக்கைகள், மேற்கொள்ள திட்டம் இடலாம். மக்களுக்கும் அரிய இயற்கை கழிமுக சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய

செயல் பாடுகளை அந்தந்த குறிப்பிட்ட உள்ளூர் பகுதியில் ஊராட்சி வழியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவேண்டும். பொதுமக்கள், கற்றறிந் தோர், இதனை பற்றி சிந்தித்து பார்ப்பார்கள் என நம்புவோம்.                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *