உதயசங்கர் - யார் அந்த மர்ம மனிதன் | Yar Antha Marma Manithan?

வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் நூல்

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் இளையோருக்கான வரலாற்று புதினம் இந்த நாவல். “கேப்டன் பாலு” – உதயசங்கர் அவர்களின் எழுத்தில் உருவான கதாபாத்திரம். பதின்பருவ வயதை ஒட்டிய இளைஞன், இன்னும் சுருக்கமான சொல்லப்போனால் – இன்றைய தலைமுறையின் இளைஞர்களான 2கே கிட்ஸ் என்று சொல்லலாம்.

ஆதனின் பொம்மை, பீம்பேட்கா என ஆசிரியரின் மற்ற நாவல்களில் இடம்பெற்ற கேப்டன் பாலுதான் இந்த நாவலிலும் நாயகன். பாலுவிற்கு காலத்தைக் கடந்து பயணிக்க உதவுபவன் ஆதன்.

ஆதன் கற்பனையில் உலா வரும் பாலுவின் தோழன். அவன் உதவியுடன் தான் பாலு வரலாற்று உண்மைகளை கண்டறிபவனாக இருக்கிறான்.

முந்தைய நாவல்களில் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி மூலம் கணிக்கப்பட்ட காலத்திற்கு அழைத்துச் சென்ற ஆதன், இந்த நாவலில் இந்திய சுதந்திந்திர போராட்டக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறான். அதற்கு காரணமாக பாலுவின் கனவு அமைகிறது.

ஆம்! பாலு தனது கனவில் ஒரு மர்ம மனிதனைச் சந்திக்கிறான். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது.

அதன் தோட்டா அவனை நோக்கி பாய்கிறது. அவன் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறான்.

யார் அந்த மர்ம மனிதன்?

அவனை எங்கோ பார்த்ததுப் போல் இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ஆதன் அங்கு தோன்றி பாலுவிடன் பேசுகிறான். அவர்களது பேச்சு வழியே வரலாறு விரிகிறது.

இந்திய சுதந்திர போராட்டம் என்பது – பல்வேறுபட்ட உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டது.

அடித்தட்டு உழைக்கும் மக்களின் பெரும்பான்மையான பங்களிப்பு என்பது காந்தியின் வருகைக்குப் பின்னரே நடைப்பற்றதை நாம் அறிந்திருப்போம். இன்னொரு பக்கம், பெரியார்-அம்பேத்கர் அதற்கு முன்பு வாழ்ந்த பூலே போன்றோர் சமூக நீதியே முக்கியம் – ஆதலால் ஆங்கிலேயரின் ஆட்சி இருக்கும்வரை – “சமூக நீதி “க்கு தொடர்பான விசயங்களைப் பெறுவதிலே முனைப்பாக இருந்தனர்.

பகத் சிங் போன்றோர் சமூக விடுதலையும் – ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதும் (இரண்டுமே) முக்கியமென நினைத்தனர்.

காந்தியின் வருகைக்கு முன்பான காலம் என்பது, அகிம்சை-சத்தியாகிரகம்-அறப் போராட்டம் ஆகிய சொற்களே பொதுமக்கள் அறிந்திருக்காத காலம் என்று கருதுகிறேன்.

ரஷ்ய புரட்சி, உலக யுத்த சூழல் என ஆயுதம் தாங்கிய போராட்டங்களே முதன்மையானவையாக இருந்தன.

அது இந்திய சுதந்திர போராட்டங்களிலும் பிரதிபலித்தன. அதே போல் போராட்டத்திற்கு ஆட்களை இணைப்பதில் மக்களை உந்திதள்ளும் பல்வேறு விதமான கருத்தியல்கள் தேவையாக இருந்தன. ”

மதம்” மக்களை எளிதாக உணர்ச்சிதளங்களில் கடத்தி – போராட்டத்திற்கு இணைக்கும் ஒரு கருவியாக இருந்தது என்பதை நாம் வரலாற்றில் காணலாம்.

இந்தச் சூழலில்தான் திலகர் போன்ற தலைவர்கள் – ஆயுதப் போராட்டத்திற்கு ஆதராவாகவே இயங்கினர். அவர்கள் மதத்தை முக்கிய கருவியாக இயக்கினர்.

அதன் தாக்கம் தமிழகத்திலுரும் இருந்தது. பாரதி, வ.வே.சு ஐயர், வங்காளத்தைச் சேர்ந்த அரபிந்தோ என பாண்டிசேரியில் இவர்கள் தொடர்ந்து புரட்சிகர விசயங்களைத் தூண்டும் வகையில் ஈடுபட்டு வந்தனர்.

திருநெல்வேலி பகுதியில் வ.ஊ.சி, சுப்ரமணிய சிவா என மக்களுடன் இயங்கிய தலைவர்களும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தச் சூழலில்தான் ஒரு கொலை நடந்தது. இந்திய இளைஞர் ஒருவரால் ஆங்கிலே அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த இளைஞனைதான் பாலு தன் கனவில் கண்டான். அவரைச் சந்திக்க, 1911ஆண்டிற்கு செல்கின்றனர் பாலுவும் ஆதனும்.

2022ஆம் ஆண்டிலிருந்து, 100ஆண்டுகள் பின்னே சென்று அன்றைய காலத்தையும் சூழலையும் காண்கின்றனர் என்று நாவலின் கதைகளம் அமைந்துள்ளது.

இதுவரை சிறார்களுக்கான நாவல்களில் சுதந்திரப் போராட்டம் என்பது புனிதப்படுத்தும் விதமாகவே அதிகம் பயணித்திருக்கும்

. ஆனால் இந்த நாவல் உணர்ச்சிவசப்படும் இடத்திலிருந்து பகுத்தறியும் இடத்திற்கு வாசகரை அழைத்துச் செல்கிறது.

அதற்கு முக்கிய விசயமாக பாலுவின் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. 2000க்கு பின்பான இந்திய அரசியல் என்பது வரலாற்றை திரும்ப பார்க்க வைத்துள்ளது,

மக்களை வாசிப்பை நோக்கி நகர்த்தியுள்ளது, புனித பிம்பங்கள் கடந்து உரையாடலை தொடங்கி இருக்கிறது – இந்த அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கிய கதாபாத்திரமாகவே பாலு இருக்கிறான். அதனால்தான் அவனால் கேள்விகள் பலவற்றைக் கேட்க முடிகிறது.

முன்னர் சொன்னதுபோல், இந்திய சுதந்திர போராட்டம் என்பது “மதம்” என்ற உணர்ச்சியின் அடிப்படையிலும் கட்டமைப்பு செய்யப்பட்டது.

அப்படியிருக்க இந்தக் கதையின் உள்ள மர்ம மனிதனின் உந்துதல் என்ன? வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதுகுறித்து என்ன சொல்கிறார்கள்? என்றெல்லாம் இந்த நாவல் பேசுகிறது.

இதுவரை இளையோரிடம் பேசாத விசயங்களையெல்லாம் துணிச்சலுடன் இந்த நாவல் பேசுகிறது என்று கருதுகிறேன்.

தமிழில் வெளிவந்த வரலாற்று ஆய்வுப் புத்தகங்களை இளையோருக்குப் பேசும் முயற்சி இந்தப் புத்தகம். இப்படி ஒரு துணிச்சலான முயற்சியில் எழுத்தாளர் உதயசங்கர் வெற்றியும் பெற்றுள்ளார்.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் படைப்புகளில் சிறார்கள் மீதுள்ள அக்கறையும் அதே நேரம் சொல்லப்படும் கருப்பொருள் மீதுள்ள கவனமும் மிக முக்கியமானவை. அவற்றைக் கையாள்வதில் துணிச்சலும் இருக்கும் துள்ளலும் இருக்குமபிரபு

சிறார் இலக்கியத்தில் இதுப்போன்று அவர் எடுக்கும் புதிய முயற்சிகள் கட்டாயம் வெற்றியடையும் என்று நம்புகிறேன்.

 

நன்றி

நூலின் தகவல்கள் 

புத்தகம் : யார் அந்த மர்ம மனிதன்?

ஆசிரியர் : உதயசங்கர்

வெளியீடு :இணையோர் இலக்கியம் 

நூலைப் பெற :  44 2433 2924

விலை : ரூ.80

 

எழுதியவர் 

‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *