சிறுவயதில் தந்தை பெயர் என்ன என்று கேட்டபோது

அவர் பெயரோடு ஜாதியை சேர்த்துச் சொன்னேன்

அப்போது எனக்கு தெரியவில்லை

பள்ளியில் இன்ன ஜாதியினர்

நோட்டு வாங்க எழுந்து நிற்கவும் என்று

ஆசிரியை சொன்னதும் சிரித்துக் கொண்டே நின்ற போது

எனக்கு தெரியவில்லை

மாட்டுக்குப் புல்லு கொண்டு வந்த அம்மா வெளியே நிற்க,

குனிய வைத்து, குடிக்கும் தண்ணீரைக் கையில் ஊற்றும் போது

எனக்கு தெரியவில்லை.

நாராயண கோபாலா சொல்லிக் கொண்டு

அரிசி வாங்க சென்ற இடத்தில் சிலர் முகம் சுழித்த போது

எனக்கு தெரியவில்லை

பாயம்மா வீட்டில்
கை அப்பளக் கட்டும், நைனார் கடையில் அரிசியும் வாங்கி வர

அம்மா சொன்ன போது

எனக்கு தெரியவில்லை

‘ அந்த ‘ பையனோட சேராதே என்று

அண்ணனைக் கண்டித்த போது

எனக்கு தெரியவில்லை

மார்வாடி தோழி தன் வீட்டில் என்னை

வெளியே உட்கார வைத்துத் தண்ணீர் கொடுத்த போது

எனக்கு தெரியவில்லை

செட்டியார் வீட்டுப் பிள்ளையைக் காதலித்த அக்காவை அடித்துத்

தொடையில் சூடு வைத்துத் தெலுங்கில் அசிங்கமாகத் திட்டிய போது

எனக்கு தெரியவில்லை.

வீட்டுக்கு வந்த ரோஸ் மேரிக்குப்

படையலில் வைத்த கொழுக்கட்டையை ஆசையாக தந்த போது

அவள் வாங்க மறுத்த காரணம்

எனக்குத் தெரியவில்லை

ஹரிஜனம் என்றால் ஹரியின் ஜனம் என்று பாட புத்தகத்தில் படித்த போது

அது சொன்னவர்களுக்கே கசக்கும் முரணான வார்த்தை என்று

எனக்குத் தெரியவில்லை

ஜாதி மத தீண்டாமையைச் சேர்த்து டி என் ஏ போல் பிணைக்கப்பட்ட கயிற்றில்
சிறு வயது முதல் நாம் அனைவருமே கட்டப்பட்டு இருக்கிறோம் என்று…
அப்போது எனக்கு தெரியவே இல்லை…

பூ. கீதா சுந்தர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *