பனிச்சிற்பம்
ஜன்னலில் கசியும் நிலவொளியில்
நீரில் மிதக்கும்
நிலவின் பிம்பமாய் நீ.
அந்தரங்க அறைக்குள்
கனிந்த கொய்யாப் பழ வாசனையாய்
உனது நறுமணம்.
பின்னிரவில்
குடுகுடுப்பைக்காரனின் உடுக்கை ஒலி
தொலை தூர இசையின் சன்னத் துகள்களாய்
கலைந்த படுக்கை விரிப்பின் மடிப்புகளில்
வந்து படிகையில்
என்னைப் பார்வையால் அணைக்கும்
உன் களைத்த விழிகள் சிந்தும் காதலின் குளிரில்
காலம்
ஒரு பனிக்கட்டிச் சிற்பமாய் சமைந்து நிற்கும்.
விழிகளின்
ரகசிய மொழியில் நான் உன்னை அழைக்க
சயனித்தபடி
உன் கரங்களை மாலையாய்க் கழுத்தில் சூட்டுகையில்
மெலிதாய்ப் பரவும் வெப்பத்தில்
திரவமாய் உருகும் பனிக்கட்டியாய்
காலம்
மீண்டும் சலசலத்துப் பாயத்தொடங்கும்.
காதலின் ஈரத்தில் ஊறிய மானுட விதை
மரகதப் பச்சைத் தளிராய்த் துளிர்க்க
நாளையின் நம்பிக்கை வெளிச்சம்
இருட்டில் புல்லாங் குழலிசையாய்
வான வெளியின் திசைகள் தோறும் பரவ
அதை அருந்தித் திளைக்கும் பறவைகளாய்
நீயும் நானும்..
நிலவும் நட்சத்திரங்களும் வெளிறிப் போய்
பேருந்துகளின் டீசல் மணம்
அதிகாலைக் காற்றில் மெலிதாய் மிதக்கையில்
சோம்பல் முறிக்கும் நகரம்
எனக்குள் மின்சாரம் பாய்ச்சி
படுக்கை விட்டெழுப்பும்
நுரையீரல் முழுவதும்
உன் வாசனைகளை நிரப்பியபடி.
முந்தைய கவிதைகள் படிக்க:
முத்திரைக் கவிதைகள் 1: வாக்குமூலம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 2: ராப்பிச்சைக்காரன்– இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 3: கேள்வி, சிரிப்பொலி, உனது புகைப்படம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 4: முகமூடிகளின் யுகம் – இந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.