அன்பினாலான வலிகள் – மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்

இல்லோடு சிவாவின் கவிதைகள் அவரைப் போலவே அறிமுகமற்றவை. ஆனால் ஆக்க பூர்வமானவை. எளிமையானவை. அதே சமயத்தில் உரத்து பேசுபவை. நேசமிக்கவை. அடர்த்தியானவை. வாசிப்பவர்களை வாஞ்சையோடு உள்ளிழுத்துக்கொண்டு அழகையும், வலியையும் இரண்டறக் கலந்து தருபவை. கவிதை கவிதையாய்த் தானே இருக்க முடியும் என்று கவிதையை அறிமுகப்படுத்தும் அவரை அவரது கவிதைகள் கவிதைகளாகவே அறிமுகப்படுத்துகின்றன.

அவர் கவிதை படைக்கவில்லை வலிந்து உருவாக்கவில்லை. வார்த்தைகளைக் கோர்க்கவில்லை. அவருடைய எண்ணங்கள், நினைவுகள், சமூகப் புரிதல்கள், அன்பின் மீதான ஆற்றாமைகள், பசிய ரணத்தின் உறைந்து போன வலிகள், தனிமையின் மௌன ஆறுதல்கள், அழுகையின் விசும்பல்கள்  உறவு சார்ந்த பொருமல்கள், எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டிய நடைமுறை நெருக்கடிகள் அனைத்தும் சொற்களின் லாவகத்தன்மையால் கவிதைகளாய் உருவெடுத்துள்ளன.

வாழ்வின் அனைத்துப் பக்கங்களிலும் உறவுகளின் மீதான நம்பிக்கையின்மையே படர்ந்து, போலித்தனங்களே புன்னகைகளாக மலர்ந்து கிடக்கின்ற, சூழலில் வாழ்வதும், சாவதும் ஒன்றாகிய நிலையில் ஒருவரையொருவர் சார்ந்து வாழ நேர்கின்ற கட்டாயத்தின் இடர்பாடுகளை

உன் கவலைகளைத் தீர்க்க வேண்டிய
கவலை எனக்கும்
என் கவலைகளைத் தீர்க்க வேண்டிய
கவலை உனக்குமாக
இருப்பதைத் தவிர
வேறென்ன இருக்க முடியும்
இந்த வாழ்ந்து சாகிற காலத்தில்

என்று அடர்த்தியான மௌனத்தின் ஆற்றாமையை அதிர்வுடன்  வெளிப்படுத்தியுள்ளார்.

நகரம் நோக்கி பெயர்ந்துவிட்ட நிலையில் மண்வாச இழப்பு தனியொரு பாடுபொருளாகிறது. நடமாடும் இடமெல்லாம் காடாக இருந்த நிலை  மாறி இன்று வீடாகி, வீட்டுக்குள்ளிருந்து காட்டை, கண்ணாடி வழியாகப் பார்க்க நேர்த்திட்ட நனிநாகரிக வளர்ச்சியின் அவலத்தை

வானுயர் கட்டடத்தின்
அறையொன்றில்
கண்ணாடிச் சுவர்களுக்குள்ளிருந்து
மெல்ல எட்டிப்பார்த்தது
காடு

எனும் கவிதை வரிகள் இயற்கையின் இழப்பீடுகளைப் பூச்சற்று வெளிப்படுத்துகின்றன.

முகமூடிகளே முகமாகிவிட்ட யதார்த்த வாழ்வின் போலித்தனங்களை

உங்களின் அத்தனையும் பிடிக்மெனக்கு
உங்களை எளிதில் அம்பலப்படுத்த
உதவுவதால்

என்று சுட்டும்போதே நிஜம் தொலைந்து போகின்ற வலியின் பொருமலை எந்தவிதச் சாயமும் இன்றி வெளிப்படுத்தியுள்ளார்.

எந்த இடத்திலும் மனித உறவுகளையும், அவர்களின் வசிப்பிடங்களையும் இயல்பாகக் கடந்து வாழ முடியாத சூழலில், சமூக நடைமுறையின் அகோரம் கண்டு கொதிப்புற்ற கவிஞர் மனித மனம் வறண்டு கிடப்பதன் ஆற்றாமையை

எந்த மண்ணிலும்
நிலைக்க முடியாத தவிப்பில்
நம் பாட்டன்
சொல்லிவிட்டுப் போனான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

வெட்டும் காய முகமாகப் பதிவு செய்துள்ளார்.

மாற்றம் ஒன்றுதான் எப்பொழுதும் மாறாதது என்பதற்கு மாறாக எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்படினும் மனித மனங்களில் வஞ்சம், பொய், குரோதம், வன்மம் மாறாமல் இருப்பதைக் கண்டு மனம் குமைந்து மடிந்து போனவர்களின் நிலையை

புத்தனும் மௌனமாகிவிட்டான்
சித்தனும் ஒதுங்கிக் கொண்டான்
இராமலிங்கரும் மறைந்து கொண்டார்

எனும் வரிகளில் சமூக நெருக்குதல்களின் திணரலைப் பதிவு செய்துள்ளார். எளிமைக்குள்ளும் ஆழம் இருத்தலுக்கான உணர்வு  வெளிப்பாட்டினை இக்கவிதை சற்றும் தொனி குறையாமல் நிரம்பச் சொல்கிறது.

அறையின் நிசப்தத்தைக் கலைப்பதற்கு மின்விசிறியை அழைத்திட, செய்தித்தாளின் பக்கங்களில் தந்தையால் அடிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்காகவும், இடிபாட்டில் இறந்த தொழிலாளிக்காகவும், ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளுக்காகவும் அகோர ஓலமிட்டு அழும் அழுகுரல் நிதர்சனத்தில் நம்மையும் கதறச் செய்கிறது.

வலிகளைச் சுமந்து திரிகின்ற வாழ்க்கையில் மனிதனம் பிறரிடம் இரந்து கேட்டது. நிறைய அன்பும், நெகிழ்ந்த ஆறுதலும், கொஞ்சம் கண்ணீரும்தான். காதல் வசீகரமான அன்பின் சாயல். வெளிர்த்து போனபின் வலி. தான் கண்டு சிலாகித்து உணர்ந்து நெகிழ்ந்த அனைத்துமாய் காதல் இருக்குமென்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ரணத்தின் உறைதல்களை

ஆரவாரமில்லாத
அதிகாலைப் பொழுது
மெல்லிய மழைச்சாரல்
நின்ற மறுகணம்
வெய்யிலில் வாடிய முதியவன்
நிழலைப் பார்த்துவிட்ட நொடி
உண்மையாகக் கிடைக்கிற
பாட்டியின் முத்தம்
இப்படித்தான் எண்ணியிருந்தேன்
காதலையும்
அது அப்படி அல்ல

எனும் வரிகள் உணரச் செய்கின்றன.

பால்ய நண்பர்களைக் காணும்போது ஒவ்வொருவருக்குள்ளும் கல்வி, திருமணம், குடும்ப சூழல், பொருளாதாரம் என்று ஏதோ ஒன்றின் பொருட்டு ஏற்றத்தாழ்வுகள் உள்நுழைந்து விடுகிறது. எந்தவிதப் பீடிகையும் இன்றி அன்பின் முழு பரிமாணத்துடன் நண்பன் பனங்காய் வெட்டுகிறான். அவன் படிக்கவில்லையே என்று எண்ணும்போதே தான் படித்தப் படிப்பும், பட்டங்களும் உடன் வருகின்ற குற்ற உணர்ச்சியின் வலியை

எந்தப் பரிதவிப்புமின்றி
எனக்காய் நீ 
பனை ஏறுகையில்
வெட்டு பனங்காய்க்கும்
வலி எனக்குமாகவே
இருக்கிறது

எனும் கவிதை குரல் தாழ்ந்து ஒலிக்கிறது.

வாழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள் மெய்சிலிர்க்க வைப்பதுண்டு. மெய்சிலிர்ப்பே நெகிழ்ச்சியாவதை

மழையில்
நனைந்தபடி நீயும்
உன்தோள்
தடவியபடி நானும்
மெய்மறந்து நிற்கையில்
எரும மாட்ட
ஓட்டிக்கிட்டு வாடா
எரும

எனும் அதட்டல் நிறைந்த கவிதை ஏதோ காதலியுடன் இணைந்து நனைந்த மழையின் சிலிர்ப்பைச் சொல்வதைப் போல் எரும மாட்டைப் பற்றிப் பேசி மனநெகிழ்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

எறப்பு மழைக்கு ஏங்கிய விவசாயி, ஏமாற்றிப் போகும் கார்மேகம், பசிய மரத்தை வாளால் அறுத்து அதன் ஈரம் காய்வதற்குள் அகலப்பாதைத் திட்டம், முத்தமிட்ட தேவதை பிசாசாக மாறுதல் அனைத்தும் காதல் சார்ந்த தனிமனித வெளிப்பாடுகளை அவருக்கே உரிய எளிய மொழியில் கண்ணீரும் வலியுமாய் உணர்த்தியுள்ளார்.

கண்ணாடிகளைப் பலவாறு பட்டியலிட்டு ஒவ்வொரு விதமான கண்ணாடியிலும் ஒவ்வொரு முகம் (அகம்) உடைபடுவதைக் கண்டு ஏற்றுக்கொள்ள முடியாமல் உடைத்துத் தள்ளியபோது உடைந்த சில்லுகளிலும் முகம் உடைபட்டிருப்பதன் உண்மை, போலித்தனங்களைத் துகிலுரித்ததன் உச்சம், வார்த்தைகளில் அர்த்தமில்லை ஆயுதமிருக்கிறது எனும் தொனி கண்ணுக்குப் புலப்படாதத் தென்றல் திடுமென அகோராமாய் அறைவதைப் போன்று ஓங்கி ஒலிக்கிறது. வாழ்க்கையே வார்த்தைகளில் அடக்கம் பெற்றிருக்கின்ற தத்துவத்தைத் தரிசிக்கின்றது.

புதுவெள்ளம் உருட்டி விளையாடும் கோலிக்குண்டுகள், நிலவுத் தேன்கூடு ஆகியவை மிகச்சிறந்த படிமங்கள். சாதாரண நிகழ்வுகள் கண்டு அசாதாரணமான திடுக்கிடல்கள் நேரிடுவது எளிய மொழிகளில் கவிதையாய் ஆட்கொண்டிருக்கிறது. முத்தங்கள் ஈட்டியை விடக் கூர்மையானது எனும் வரி அன்பின் அடர்த்தியை முழு பரிமாணத்துடன் பதிவு செய்துள்ளது. ஈரம் காய்தல் கவிதை புதுமைப்பித்தனின் சிறுகதையை வார்த்தெடுத்துள்ளது. முனுமுனுப்பு வயதான ஒருவரின் மரணம் தேரவேண்டிய எத்தனிப்புகளை நடைமுறையில் உள்ளவாறே காட்டியிருக்கின்றது. தேநீர் எதுகுறித்தும் பதற்றப்படாத மனநிலையின் முதிர்ச்சி.

ஓரிரு கவிதைகள் கவிதைக்கான அழகியலில் இருந்து விலகியும், நவீனப் பாசாங்கை அடியொற்றி காணப்படினும் கவிதையை நோக்கிப் பயணப்பட்டதற்கான நிறைவினைக் காணமுடிகிறது. கவிதை கவிதையாகவே மட்டும் இருப்பது கவிஞரின் கவித்திறனைக் காட்டுகிறது. மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன் கவிதைகளை வாசிக்கும்போது பரந்துபட்ட நேசிப்பும், அன்பின் மீதான ஏகப்பட்ட நம்பிக்கையும், ஆற்றாமையின் ரணங்களும் மனம்திறந்து, கூர்பார்த்து கொத்திவிடுகின்றன. நமக்கும் அந்தவலி உணரத்தக்கதாக, நேசிப்பிற்குரியதாக மாறிவிடுகின்ற மாயம் நிகழ்ந்து விடுவதை மறுப்பதற்கில்லை. இல்லோடு சிவாவின் கவிதைப் பயணம் தொடர்ந்து படைப்புலகிலும், வாசகத் தளத்திலும் பயணிக்க வேண்டும் என்று நிறைந்த நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

நூல்: மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்
ஆசிரியர்: கவிஞர் இல்லோடு சிவா
வெளியீடு: நறுமுகை பதிப்பகம், செஞ்சி
9003624066

 

வாழ்த்துகளுடன்
முனைவர் ப.அமிர்தவள்ளி

உதவிப் பேராசிரியர்
பாரதிதாசன் மகளிர் கல்லூரி, புதுச்சேரி

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

One thought on “ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன் ” – முனைவர் ப.அமிர்தவள்ளி”
  1. சிறப்பான மதிப்புரை செய்து அறிமுகப்படுத்தியுள்ள முனைவர் ப.அமிர்தவள்ளி அவர்களுக்கும்
    Book Day தளத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    கவிஞர்சி.சிவராஜ் (இல்லோடு சிவா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *