Paadal Enbathu Punaipeyar Webseries 16 Written by Lyricist Yegathasi தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

2004 ஆம் வருடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னை பழவேற்காட்டில் “கிழக்கு கடற்கரை” பயணத்திற்கான ஒரு நாடக பாடல் உருவாக்க முகாமை நடத்தியது. அதிலே நாடகவியலர் தோழர் பிரளயன், பிரகதீஸ்வரன், பாடகர் கரிசல் கருணாநிதி, நீலா அக்கா, தஞ்சை செல்வி, கவிஞர் தனிக்கொடி, ரோஸ்முகிலன், நான் உள்ளிட்ட பல படைப்பாளிகள் கூடி பத்து நாட்கள் தங்கி பல நாடகங்களையும் பாடல்களையும் உருவாக்கினோம். அதற்கு தோழர் கமலாலயன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். பத்துநாள் முழுவதும் கடற்கரையில் வாழ்ந்தது எனக்குள் பல்வேறு புதிய படிப்பினையைத் தந்து.

என் அடிமனதில் தங்கியிருந்ததென்னவோ செம்மண் வாசம். ஆடுகள் உடலுரசிச் செல்லும் மொட்டை மதில்கள். சாப்பிடுகையில் வாஞ்சையோடு கையைத் தட்டி சோறு கேட்கும் பூனைகள், நடுவீடுவரை வந்து பாசத்தை அள்ளித்தரும் நாய்கள், மீசை மனிதர்கள், தண்டடட்டிப் பாட்டிகள், வேம்புகள் மற்றும் பாம்புகள் தாம்.

சென்னை நகர வாழ்வின் அந்நாளைய ஐந்தாண்டு அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை அடியேன் சொல்லி தாங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. சிமிண்ட் ஓட்டின் கீழ் பொழியும் வெக்கை மழை. சாலை எங்கிலும் மனித எந்திரத்தின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து. அதிகாலையில் சேவலுக்குப் பதிலாகக் கூவும் அடிகுழாய்களின் இருமல் சத்தம். இப்படி இற்ற நிகழ்வுகள் எத்தனை சொல்வது.

பழவேற்காட்டில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு புயல் காப்பகம். நான் பேருந்தை விட்டு இறங்கியதும் அம்சவள்ளி எனும் பெயர்கொண்ட ஒரு சிறு ஹோட்டலில் இறால் பிரியாணி சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. அந்த உணவை அன்றைக்குத்தான் முதன் முதலாக சாப்பிட்டேன், அதன் பிறகு அப்படியொரு இறால் பிரியாணி எனக்கு கிடைக்கவேயில்லை. இருந்த பத்து நாட்களும் கடல் வாசம். எல்லா நாட்களும் மீன் சாப்பிட்டோம் வயிற்றுக்கு ஒன்றுமே ஆகவில்லை. இதுவே வீட்டில் நடந்திருந்தால் கழிப்பறை கிழிந்திருக்கும். ஆனால் எங்கள் உழைப்பு அப்படி இருந்தது. பாட்டு எழுதுறதுல என்ன உழைப்பிருக்கு என்று தானே கேட்கிறீர்கள். ஆமாம், பாட்டெழுதுவதற்காக யோசித்தபடியே நடந்துகொண்டிருப்பேன். அதுதான் பேருழைப்பாயிற்று, காரணம் நடந்தது கட்டாந்தரை அல்ல கால் பதியும் மணல்.

ஒரு நாள் கூத்துக்கே இந்த கதியெனில் கர்ப்பப் பையிலிருந்து பிறந்து மணலில் விழுந்த என் ஏழைத் தொழிலாளர்களின் நிலையை யோசித்துப் பார்க்கிறேன். அங்கிருந்து பல ஊர்களுக்கு பேக் வாட்டரில் படகுப் பயணமாகத் தினமும் சென்று வந்தேன். நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் காதல் கதைகள் கிடைத்தன. தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல்கள் வானத்திலும் கடலிலும் முங்கி முங்கி ஆய்வு செய்த அதியத் தகவல்களைத் தந்தன. மக்களோடு பேசினேன் மணலோடு பேசினேன். கடலோடு பேசினேன் கரையோடு பேசினேன். உண்ட நேரம் உறவாடிய நேரம், உட்கார்ந்த நேரம் ஊர் சுற்றிய நேரம் போக ஒரு பத்துப் பாடல்கள் எழுதினேன்.

அதில் ஒன்று உங்களுக்கு,
பல்லவி
வௌவால் மீனக் குழம்பு
வச்சா ருசி
வஞ்சரய வறுத்துத்
தின்னா ருசி

வாளக் கருவாடு
என்ன ருசி – ஏ
சம்சாரம் சமைச்சா
எல்லாம் ருசி

சரணம் – 1
ஆழத்தில் வாழுது சுறா
அருகினில் வாழுது கெண்ட
சளிக்கு திங்கலாம் காரப்பொடி- அதுல
மருத்துவ குணமுண்டு நியாயப்படி

தொட்டாலே அரிக்கும் செஞ்சொரி- கை
பட்டாலே வழுக்கும் நலங்கொழஞ்சான்
முள்ளால அடிக்கும் மஞ்சவேலா- ஒரு
பறவையா இருக்குது மயில்கோலா

சரணம் – 2
விசத்தக் கக்குது செல்லி
மாட்ட மறுக்குது விலாங்கு
அல்லி எலபோல செம்படக்கா – இது
இரண்டாம் தாய்ப்பால் கேட்டுக்கக்கா

மீனுல சின்னது செனாக்கூனி
யானை போல் பெரியது திமிங்கலம்
மிட்டாய் போல் சுவை தரும் இறாலு – நண்டு
பட்டாம்பூச்சி தான்டா கோபாலு

மீன் என்கிற ஒற்றை சொல் தவிர வேறு சொல் தெரியாதவனுக்கு இத்தனை வகை மீனின் பெயரையும் அதனதன் குணங்களையும் மட்டுமன்றி ஒரு பாடலையும் தந்தனுப்பிய அந்த உப்புக்காற்றின் உன்னத வாசம் எந்தப் பூவுக்குமில்லை. இதை எழுதிய நாளின் மாலையில் நண்பர் கரிசல் கருணாநிதி ஒரு கானா மெட்டுக்கட்டி அன்றைய இரவிலேயே மீனவ மக்கள் முன் பாட, அவர்கள் எழுந்தாடிய பாதத் தடங்களை என் இதயத்திலிருந்து இன்னும் எந்த அலைகளாலும் அழிக்க முடியவில்லை.

Paadal Enbathu Punaipeyar Webseries 16 Written by Lyricist Yegathasi தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

ஒருமுறை என் நண்பர்கள் சிலரோடு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி சென்றிருந்தேன். அந்த ஊருக்கு ஆறும் ஆஞ்சநேயர் கோவிலும் அழகு. நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். மதியம் ஆனதால் பசித்தது சாப்பிடச் சென்றோம். ஒரு ரகசியம் சொல்லட்டுமா.. அங்கு சாப்பிடுவதற்காகத்தான் சென்றோம். காரணம் அங்கே மீன் சாப்பாடு உலகப் பிரபலம். சாப்பிட்டோம். என்ன ருசி தெரியுமா… சரி விடுங்க இதைப் பற்றி இன்னொரு பத்தி எழுதினால் நான் அணைப்பட்டிக்கு கிளம்பவேண்டியதாகிவிடும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 16 Written by Lyricist Yegathasi தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

அருள்நிதி நடித்து, நண்பர் கணேஷ் விநாயக் அவர்கள் இயக்கிய “தகராறு” படத்தில் ஒரு கொண்டாட்டப் பாடல். தரண் இசை. வேல்முருகன் சின்னப்பொண்ணு குரல். படத்தின் நீளம் காரணமாக இந்தப் பாடல் இசையாக வெளியானது ஆனால் வீடியோவாகப் படத்தில் இடம்பெறவில்லை. ஆனாலும் அந்தப் பாடல் பட்டி தொட்டிகளில் ஒலித்தவண்ணமே உள்ளது. இந்த பாடல் எப்போதும் எனக்கு அணைப்பட்டியை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். காரணம்,

“ஏ அன்ன நட அழகு நட
அசத்துறாடா ஆப்பக்கட
சின்ன இட மின்னும் உட – அவ
அங்கமெல்லாம் தங்க கட”

என்னும் பல்லவி கொண்ட பாடலின் இரண்டாவது சரணத்தில்,

“நீ அணப்பட்டி மீன் குழம்பு
அடி அம்சவள்ளி பிரியாணி
ராணி விலாஸ் சாப்பாடு – நா
செஞ்சிருக்கேன் ஏற்பாடு”

இந்த வரிகளில் அணைப்பட்டி மீன் குழம்பும், அம்சவள்ளி பிரியாணியும் இப்போது உங்களுக்கும் தெரியும், ஆனால் “ராணி விலாஸ்” சாப்பாடு பற்றித் தெரியாதல்லவா.. இந்த ஹோட்டல் எனது பணியான் கிராமம் அருகே உள்ள செக்காணூரனி எனும் ஊரின் மதுரை சாலையில் அமைந்துள்ளது. அந்த ஊரையும் அந்த ஹோட்டலையும் பற்றி எனது, “மஞ்சள் நிற ரிப்பன்” சிறுகதையில் நிறையவே எழுதியிருக்கிறேன். அந்த கடையின் ரசம் போல், குடல் குழம்பு போல், கரண்டி ஆம்லெட் போல் பருப்புக் கூட்டு போல் பரிமாறும் பாலாஜியைப் போல் வேறெங்கும் காணேன். இப்போதும் ஊருக்குச் சென்றால் ஒருமுறையாவது அங்கு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இத்தனை சுவை எப்படி தயாராகிறதென்று சமையலறையை ஒருநாள் எட்டிப்பார்த்தேன். உள்ளே என் அம்மா போன்று சிலரும் என் அக்கா போன்று சிலரும் இருந்தார்கள்.

என் மனதில் ஏறிக்கொண்ட எவரையும் நான் எதற்காகவும் இறக்கிவிடுவதில்லை. எழுதும் கதைகளிலும் பாடல்களிலுமாக அவர்களின் பெயர்களை இடம்பெறச் செய்து என் இதய மடியை அகலம் செய்து கொள்கிறேன்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி”
  1. அஸ்திடெக் சென்ஸ் ஏகாதசி சார் நெய்தல் ,செம்மண்ணிலிருந்து கடல் மண்ணிற்கு மாறியிருக்கிறார். பொதுவாகமீன், கருவாடு என்றால் நாற்றம். ஆனால் இவரது வரி மீன்கள் மகரந்தத்தை தூவுகிறது.மீண்டும் மீண்டும் வரிகளை சுவைக்க தூண்டுகிறது. சாருக்கு அம்சவள்ளி, ராணி முதலியவர்களின் விலாசஙகள் அத்துபடி. ஹா ஹா ஹா….. எல்லாம் மீன் வாச மதிய உணவகங்கள். இவர் மீன சாப்பிட்டால் மனதில் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் என நினைக்க வேண்டும். இனி எவ்னும் ஊதா கலர் ரிப்பனை மறந்து விட்டு’ மஞ்சள் நிற ..’ ஞாபகம் கொள்வர். ஐந்து நிலங்கள் முதல் நகரம் வரை சாரின் பேனா இன்னமும் இனிதே அலங்கரிக்க வேண்டும். தொடர்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *