தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர். இவர் மேடையில் நின்றால் மேடை கம்பீரம் கொள்ளும். இவரின் கண்கள் பார்வையை வீசி நம்மை அளக்கிற போது மொத்த கவனமும் அவரின் கையுக்குள் அடங்கிவிடும். பிறகு சிரிப்பது அழுவது கொந்தளிப்பதென நம்மின் வெவ்வேறு உணர்வுகளை அவரின் பேச்சு வெளிக்கொணரச் செய்யும். இராமய்யாவின் குடிசை, உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி, என்று தணியும் போன்ற காத்திரமான நுட்பம் மிகுந்த சமரசமற்ற ஆவணப் படங்களை இயக்கியவர். இவரின் கட்டுரைத் தொகுப்புகளும் சிறுகதைத் தொகுப்புகளும் முக்கியமானவை. பாரதியார் மீது தீராத காதல் கொண்டவர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் நண்பராகவும் அசோசியேட் டைரக்டராகவும் பணிபுரிந்தவர். “என்று தணியும்” என்கிற திரைப்படத்தை இயக்கியவர். இவருக்கு இவ்வளவு பெரிய அறிமுகம் தேவைப்பட்டிருக்காது, முதல் வாக்கியமே அவரின் முகம் சொல்லியிருக்கும். இருப்பினும் இப்படி கடைசியில் பெயர் சொன்னால் கவிதை போன்றோர் அழகிருக்கும் அதனால். அவர் தான் தோழர் பாரதி கிருஷ்ணகுமார். இவரை பி.கே என தோழர்கள் அழைப்பர்.

Paadal Enbathu Punaipeyar Webseries 14 Written by Lyricist Yegathasi தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

இவர் மேடையில் என் தனி இசைப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசும்போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு தெலுங்குப் படம் ஒன்றை ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்தது. நான் படத்தின் மொத்தப் பாடல்களையும் எழுதுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியைத் தொடங்கினோம். இசை பிரபாகர். நகர வாழ்வின் சீர்கேடுகளைச் சித்தரிப்பது படத்தின் சூழல்.

பல்லவி:
நகரா இது நரகம் தானா
புதிதாய் ஒரு கிரகம் தானா
மனிதா நீ மனிதன் தானா
புதிதாய் வந்த மிருகம் தானா

இதயம் அதை மூடிவிட்டு
எதை நீ இங்கு தேடுகின்றாய்
கடனை வாங்கி வீடு கட்டி
கதவைச் சாத்தி ஓடுகின்றாய்

பெருமூச்சுதான் தெரு கேட்குதே
வழி தேடியே வயதாகுதே

சரணம் – 1
அழகாய் ஒரு வாழ்க்கை இல்லை
அடிமைத்தனம் மீளவில்லை
உறைந்தோம் சொட்டு ஈரமில்லை
உணவை உண்ண நேரமில்லை

எதைத்தான் நீ தேடுகின்றாய்
எறும்பாய் தினம் ஓடுகின்றாய்
உறக்கம் ஒரு விருந்தானதே
உணவும் இங்கே மருந்தானதே

சரணம் – 2
பாசம் விற்கும் பாக்கெட்டிலே
உறவும் வந்தால் படிக்கட்டிலே
மரணம் நடக்கும் எதிர்வீட்டிலே
இதயம் கிடக்கும் கிரிக்கெட்டிலே

இதயம் மிஷின் ஆனதடா
சிரிப்பும் மறந்து போனடா
கரவை செய்யும் மாடுமிங்கே
காகிதம் தின்று வாழுதடா

இந்தப் பாடலைப் பார்த்த பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். வாசிப்பும் ஆராய்ச்சியும் மிகுந்த ஓர் இடதுசாரி ஆளுமை என் வரிகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லி சொல்லி சிலாகித்தபோது என் கால் பாதம் தரையில் இல்லை. அந்தப் படம் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருந்தால் நகர வாழ்வில் சிக்குண்டு கிடக்கும் மனித வாழ்வின் வெக்கை அசலாக வெளிப்பட்டிருக்கும். அந்தப் படத்திற்கு “நண்பர்கள்” என்று பெயர் சூட்டியிருந்தார். நடிகர் விஜயின் “நண்பன்” படம் அதற்குப் பிறகு வந்தது. இந்தக் கதை பத்து நகரவாசிகளைப் பற்றியது. நகர வாழ்வு தந்த நெருக்கடி தாங்காமல் மரணத்தைத் தேடிச் செல்லும் மனிதர்கள் தாம் இந்த பத்துப் பேரும்.

தற்கொலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் ஒன்று கூடுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, ஆனால் ஒவ்வொருவரும் சாக முடிவெடுக்கும் அளவிற்குப் பிரச்சனை என்பது அவர்களின் கணக்கு. நூறு நூறு விசயங்கள் பேசி. தற்கொலைகளுக்கான காரணங்கள் விவாதிக்கப் பட்டு இறுதியில் பேருந்து ஒன்றில் அந்த பத்து நண்பர்களும் ஏறிய பின்னர் படத்தின் இன்னோர் பாடல் தொடங்குகிறது.

பல்லவி:
அடடா இது சவப்பெட்டியா
நகரும் ஒரு பூந்தொட்டியா … (2)

இரையும் தேடிப் போகவில்லை
இதமாய் கொஞ்சம் வாழவில்லை
அடையும் நோக்கம் எதுவுமில்லை
உடைய செல்லும் பானைகளோ

நிறைவேறுமா – இது
பிழையாகுமா

சரணம் – 1
சருகாய் மனம் இளைத்தாரோ
சாவை வேண்டி அழைத்தாரோ
நரம்பே இல்லா வீணைகளோ
மதில்மேல் பத்துப் பூனைகளோ

முருகா வழி போகவிடு
முக்தி அடைந் தாகவிடு
கடனை கட்டு ஆளவிடு
கருணை கொண்டு சாகவிடு

தன்னை தூக்கியே – அட
தானே ஊர்வலமோ

சரணம் – 2
கடவுள் விரல் நீட்டவில்லை
பணமும் தலை காட்டவில்லை
உடலும் உயிர் தாங்கவில்லை
உலகம் விட்டுப்போக வந்தாரோ

பயணம் இங்கு போறோரை
மரணம் தடுத்தல் நியாயமில்லை
உலகம் கிழித்துப் போட்டிடுமோ
இவர்கள் ஒரே ஜாதகமோ

ஒத்த தேரிலே – அட
பத்து பேர் தானடா

இந்தப் பாடலை நான் வாசிக்கக் கேட்டுவிட்டு சில விநாடிகள் அமைதியாக இருந்தார் பி.கே. எப்படி இருக்கு தோழர் பாடல் என்றேன், அதற்கு அவர் தன் இரு முழங்கைகளையும் விரித்துக் காட்டினார். இரண்டு முழங்கைகளும் புல்லரித்திருந்தன.

நாகமலையின் அடிவாரத்தில் எங்கள் பணியான் கிராமம். கிழக்கும் மேற்கும் வீடுகள். வடக்கும தெற்குமே எங்களுக்கு விளையாடக் கிடைத்த திசைகள். வடக்கே மலை. தெற்கே காடு. அதற்காக பாம்புக்கும் தேளுக்கும் இவ்விரு திசையே வாழ்விடமெனக் கருதிவிடக் கூடாது. அவை திசையெட்டும் வாழும். வேறும் பாம்பும் தேளும் மட்டும் தானா என்று குறைபட்டுக் கொள்கிறீர்கள் தானே.. இருங்கள் வருகிறேன். என் சொக்கர் சியான் வீட்டுத் தாழ்வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முள்ளம் பன்றி முட்கள் இருந்தன. அதன் கதை பெரிது. அந்தக் கதையை நான் சொல்லப் போவதில்லை ஏனெனில் இது கதைத் தொடரல்ல. உடும்புகள் செல்லமாய் ஓடித்திரியுங்கள் சுவர்களில், என் மாமன்மார்களின் கண்களில் சிக்கிவிட்டால் தான் பிரச்சனை அவற்றுக்கு.

மற்றபடி இன்று நாகமலையில் மான்கள் அதிகமாகிவிட்டதால் ஒத்தையில் பைக் ஓட்டி வருகிற பயல்கள் சாலைகளில் அவை குறுக்கும் மறுக்குமாக பாய்கையில் சிக்கி விழுந்துவிடுகிறார்களாம். நரி அண்ணன்கள் எப்போதும் பிரபலம் தான், காவல்கார்களின் கண்களைக்கட்டி மலையில் ஆடுகளை மேய்த்து விடலாம் ஆனால் ஆடுகளை துவம்சம் செய்திடும் நரிகளே இங்கு ராஜா. அப்பறம் ‘கடைசி விவசாயி’ படத்தில் மாயாண்டி பெரியவர் மயிலை ரசிக்கிறார் அவ்வளதான். அந்நாளில் டேப் ரெக்கார்டரில் பாட்டைப் போட்டுவிட்டு நானும் மயிலும் நடன நிகழ்ச்சியே நடத்தியிருக்கிறோம்.(இதை நீங்கள் அப்படியே நம்பினால் நான் பொறுப்பல்ல).

எல்லாவற்றையும் விட உடைசாளி முட்களே என் பால்யத்தின் வில்லன்கள். உள்ளூர் பள்ளி முடித்து ஆறாம் வகுப்பிற்கு பெரிய பள்ளிக்கூடம் சேர்க்கும்போதுதான் செருப்பு வாங்கித் தருவேன் என்பது என் ஏழை ராஜ மாதாவின் கட்டளை. அதுவரைக்கும் உடை முள்ளுக்கு என் பாதங்களை ஒப்புக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். ஒரு நாள் என் உள்ளங்காலில் உடை முள் குத்தி ஒரு அங்குலம் இறங்கிவிட்டது.

உக்கார்ந்து பிடிங்கிப் பார்க்கிறேன், உயிர் போகிறது ஆனால் முள் வரவில்லை. எத்தனை குல தெய்வங்களைக் கூப்பிட்டிருப்பேனோ. பதினொரு வயதில் செருப்பு வந்துவிட்டது எனக்கு, ஆனால் இப்போதும் நாகமலை உச்சியிலிருந்து அடிவாரம் வரை என்னால் வெறும் பாதத்தோடு ஓடியபடி இறங்கிவர முடியும். ( குறிப்பு: நான் வேகமாக இறங்குவேன் என்றுதான் சொன்னேன், ஏறுவதில் வெறும் பாதம் என்பது சரி. வேகம் என்பதெல்லாம் நினைத்து மட்டுமே பார்க்கலாம்.)

Paadal Enbathu Punaipeyar Webseries 14 Written by Lyricist Yegathasi தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, நான் விளையாடித் திரிந்த காடும் மலையும் என் திரைப்படப் பாடலுக்கான சூழலாக அமையுமென்று. தம்பி பிரசாத் முருகேசன் ஒரு திரைச் சித்திரம் இயக்கினார். சசிக்குமார் நாயகன் வேல ராமமூர்த்தி வில்லன். மற்றும் நிகிதா விமல், நெப்போலியன். S.R.கதிர் ஒளிப்பதிவு. தர்புகா சிவா இசை. படம் “கிடாரி”. படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன் அவற்றுள். இன்று ஒன்று.

பல்லவி:
வெட்டருவா வீச்சருவா
போற இடம் வெட்டவெளி
எட்டு திக்கும் கள்ளிச் செடி
பதுங்குதடா ரெட்டப் புலி

வலசாருக் கூட்டம்
வழி சொல்லும் போடா
உட முள்ளு பாஞ்சா
உயிர் போகும் தான்டா

சரணம்:
யாராரோ காடு பாத்தாக
சாமி பூதம் எல்லாம்
கிடையாடு போட்ட பாதையில்
நீயும் நானும் போறோம்

ஊருக்குள் பல வேஷந்தான்
ஒரு நேரம் வன வாசந்தான்
சூதாட்டம் அட ஆடாம
சூரியனும் இங்கு முளைக்காதா

எளியது விடும் மூச்சில்
வலியது உலை காய்ச்சும்
உண்மையில் அரிசியில – அட
எவனுக்கும் பேர் இல்ல

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.