வாசிப்பிற்கு திசை இல்லை - பேராசிரியர் பெ விஜயகுமார் (Professor P Vijayakumar -vaasippatharku disai illai )
வாசிப்பிற்கு திசை இல்லை என்ற தலைப்பே வாசிப்பின் பொருளை அருமையாக வெளிக்காட்டுகிறது திசையில்லா வாசிப்பில் நாம் வாசிக்கும் நூல்கள் நமக்கான திசையைக் காட்டி நமக்கான இலக்கையும் அடைய வைக்கிறது.
உலகம் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பல்வேறுபட்ட புத்தகங்களின் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாடும் புத்தகங்களை நேசிக்கும் பரந்த மனப்பான்மையும் கொண்ட பேராசிரியர் அவர்களின் விரிவும் ஆழமும் கூடிய தொடர்ந்த வாசிப்பும் பன்மொழி நூல் வாசிப்பும் இப்படி ஒரு நூல் எழுத சாத்தியப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இலக்கிய வகை சார்ந்தோ வகைமை மொழி ஆகிய வரையறைகள் வைத்துக் கொண்டு நூலினை தரம் பிரித்தோ வாசிக்காமல் பல்வகையான நூல்களையும் பல மொழி நூல்களையும் பரந்துபட்ட அறிவின் துணை கொண்டு தான் ஒரு சமூக சிந்தனையாளர் மற்றும் களப்பணியாளர் என்ற கூடுதல் சிறப்போடு வாசித்திருக்கும் நூல்கள் பற்றிய மதிப்புரை அடங்கிய தொகுப்பு நூல் இது.
இதில் உலகம் எங்கும் பரவலாக பாராட்டுப் பெற்ற மற்றும் சமூகத்தின் பால் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய பல நூல்கள் பற்றிய மதிப்புரை இடம் பெற்றிருக்கிறது. தாமஸ் ஹார்டி குஷ்வநத் சிங் தஸ்தயெவ்ஸ்கி அலெக்ஸ் ஹேலி பேராசிரியர் எம் ஏ சுசீலா ரவீந்திரநாத் தாகூர் இரா முருகவேள் ஹென்றி எப்சன் ஜிஜூபாய் பதேதிக்கா பாண்டிய கண்ணன் அருந்ததிராய் வந்தனா சொனால்கா சல்மா ஆகியோரின் நூல்கள் பற்றிய மதிப்புரை அருமையான சொல்லாடல்களுடனும் விருப்பு வெறுப்பற்று நடுநிலையான கருத்துக்களைக் கொண்டும் நூல் கூற வந்த கருத்துச் செறிவுகளை சுருக்கி நம் மனதிற்குள் ஆழப் பதியும் படியும் எழுதப்பட்ட மதிப்புரைகள்.
நாவல் சிறுகதை நாடகம் மொழிபெயர்ப்பு கட்டுரை பயணம் என பலவிதமான நூல் வடிவங்களை வாசித்திருக்கும் நூலாசிரியரின் சமூக பார்வையும் சமூக அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் ஒப்பிட்டுப் பார்த்து படைப்பு உருவான பின்புலங்களையும் அப்படைப்பின் தேவையும் இணையாக எழுதிச் செல்கிறார். ஒரு நூலின் மதிப்புரை என்பது நூலில் உள்ள கதையை விவரிப்பதோ நூல் கூறும் கருத்தை அப்படியே எழுதிச் செல்வதோ சிறப்பானதாக அமையாது. நூல் ஆசிரியரின் கடந்து வந்த பாதை அன்றைய காலகட்டத்தில் அந்த நூல் கூறும் கருத்துக்களின் பின்னணி நூல் உருவான வரலாறு என பலவற்றைத் தொகுத்து மதிப்புரை வழங்கியிருக்கும் பாங்கு வியக்கத்தக்கது. உடன் அந்த நூல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் பிற நூல்கள் பற்றிய அட்டவணையையும் இணைத்துக் கூறி இருப்பது நூல்களின் மீதான ஆசிரியரின் நேசத்தையும் அதேசமயம் நூல் கூற வந்த கருத்துக்களின் தொடர்ச்சியை முழுமையாகவும் நடுநிலையோடும் நாம் அறிந்து கொள்வதற்கு உதவும் பொருட்டும் நமக்கு வழிகாட்டுகின்றன
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கண்டுபிடிப்புகள் சமூகம் கொண்டிருந்த நம்பிக்கைகளை அசைத்துப் பார்த்தும் பகுத்தறிவு சிந்தனைகள் மதக் கோட்பாடுகளை கேள்வி கொண்டு இயக்கியும் மனித குலத்தை சிந்திக்கத் தூண்டிய காலகட்டத்தில் கல்வியின் பயனை அடைந்தே தீர வேண்டும் என்று தேடிச் செல்லும் ஒருவன் தனது ஆசைகள் நிறைவேறாமல் வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும் அவலத்தை எழுதியிருக்கும் தாமஸ் கார்டியின் ஜுட் தி அப்ஷ்கியூர் நாவல் விதியின் கோரப் பிடிக்குள் அகப்பட்டு அல்லல் படும் மனிதர்களின் அவலத்தை சிறப்புற எடுத்துரைக்கிறது. தாமஸ் ஹார்டி எழுதிய ஆறு நாவல்களும் துயரத்தில் தோய்ந்துள்ள முடிவையே தருகின்றன வாழ்வின் மீது அவநம்பிக்கை கொண்டவர் என்று தூற்றப்பட்டாலும் இவருடைய கதைகளின் வழி எளிய மனங்களின் வாழ்க்கையை சிறப்புற உணர்ந்து கொள்ள முடிகிறது
இருநூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு விடுதலை வழங்கும் நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் எதிரும் புதிருமான 12 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்தும் ஒரு மில்லியனுக்கு மேலான மக்கள் உயிரிழந்தும் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டும் இந்தியா தனது பெருமையை இழந்த தருணத்தை குஷ்வந்த் சிங் எழுதியிருக்கும் ட்ரெயின் டு பாகிஸ்தான் நூலின் வழியாக ஆசிரியர் விவரிக்கும் தருணம் நமது நாட்டின் இறையாண்மைக்கும் சமாதானத்தை சிறப்பிக்கும் கட்டமைப்பிற்கும் மிகப்பெரிய களங்கத்தைத் தேடித்தந்த சம்பவத்தை நம்மால் மறக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். நிறுவனமயப்பட்ட மதங்களால் மனிதர்களுக்கிடையில் மன வேறுபாட்டையே உருவாக்க முடிகிறது அன்பை விதைக்க முடிவதில்லை என்பதை தனது ஒவ்வொரு நூல்களின் வழியையும் குஷ்வந்த் சிங் வெளிப்படுத்தி இருப்பதை இந்த நூலின் வழியாகவும் அறிய தருகிறார். மனிதர்களுக்குள் இன பேதங்கள் எப்பொழுது தோன்ற ஆரம்பித்தன மதங்கள் தாங்கள் பெரிது என்ற கொள்கையை உயர்த்தி பிடிக்கும் அந்த நேரமே மனிதர்களுக்குள் பிளவு ஏற்பட ஆரம்பிக்கிறது என்பதை குஸ்வந்த் சிங் அருமையாக எழுதியிருப்பதை நூலாசிரியர் சிறப்பாக விளக்குகிறார்.
உலகின் 170 மொழிகளில் படிக்க கிடைக்கும் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான தஸ்தயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும் பற்றிய தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எழுதிய எம் ஏ சுசீலா அவர்களது நூல் பற்றிய திறனாய்வும் சாவின் விளிம்பிலிருந்து கடைசி நொடியில் மரண தண்டனை பெறப்பட்டு 8 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்த தஸ்தயெவ்ஸ்கியின் காலச் சூழ்நிலையை தெளிவாக நமக்குள் கடத்துகிறது. அவர் அனுபவித்த வாழ்வின் நிலையை குற்றமும் தண்டனையும் நூலில் அருமையான கதையின் வாயிலாக நொடி நேரத்தில் மாறும் வாழ்வின் போக்கை உணர்த்திச் செல்கிறார்.
உலகின் வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா ஆப்பிரிக்க நாட்டின் கருப்பின மக்களை அடிமைகளாக வைத்து தன்னை கட்டமைத்துக் கொண்டதை இன்றும் யாரும் புறந்தள்ளி விட முடியாது. கருப்பின மக்களின் வாழ்க்கையை சொல்லும் அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் நாவல் 1977 இல் வெளிவந்து உலகையே உலுக்கியது 12 ஆண்டுகள் இந்த நூலுக்காக ஆசிரியர் உழைத்து பல்லாயிரம் மைல்கள் பயணித்து தனது குடும்பத்தின் ஆதி தாயை கண்டறியும் வரலாற்றை அருமையாகச் சொல்கிறது வேர்கள் நூல்.
அறிவியல் தொழில்நுட்பம் என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான மனித குலத்தின் செயல்பாடுகளால் விளையும் பேரழிவை விவரிக்கும் முத்தா தாரா நாடகம் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கு மற்றும் ஆணவங்களால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதை எழுதிச்செல்லும் வார்டு எண் ஆறு என்ற ஆண்டன் செகாவின் சிறுகதை துப்புரவுத் தொழிலாளிகளின் துயரம் இன்றும் சொல்ல முடியாத வலிகளையும் வேதனைகளையும் அவர்களுக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை விவரிக்கும் நுகத்தடி நாவல் பவானி ஆறு வீழ்ச்சியில் கோவை நகரம் எழுந்து நிற்கிறது என்பதை உரைக்கும் முகிலினி நாவலை எழுதிய முருகவேள் அவர்களின் சமூக சிந்தனையின் வெளிப்பாடு இஸ்லாமிய பெண்களின் அக உலகத்தை விவரித்து தமிழ் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் தேவைப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் குறித்தும் பெண் மீதான ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து சுய விருப்பத்தில் பெண்கள் முன்னேறும் காலம் உருவாக வேண்டும் என்ற சல்மாவின் மனாமியங்கள் நாவல் என நூலாசிரியர் விவரிக்கும் ஒவ்வொரு நூலின் மதிப்புரையும் ஆழ்ந்து உற்று நோக்கத்தக்கது. இந்த ஒரே நூலின் வழியாக ஒரே சமயத்தில் 16 நூல்களை வாசித்த சிறப்பு நமக்கு கிடைக்கிறது என்றால் நூலாசிரியரின் மதிப்புரையும் நூல்களின் மீதான அவரது வாசிப்புத் திறனையும் நமக்கு உணர்த்துகிறது என்பதில் ஐயமில்லை.
வளர்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறைக்கு புத்தகங்களை வாசிப்பதன் அவசியத்தையும் எவ்வகையான புத்தகங்களை வாசிப்பது என்ற தேடலையும் நிறைவேற்றுவதற்கான மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் கையேடாகவும் விளங்குகிறது இந்த நூல். ஒரு படைப்பு கூற வரும் பொருள் அன்றைய காலகட்டத்திற்கு மட்டுமல்லாமல் எதிர்வரும் காலகட்டத்திற்கும் சிறந்ததொரு தீர்வையும் வழியையும் ஏற்படுத்தித் தந்தால் அந்த நூல் செறிவும் விரிவும் கொண்டு எல்லோரும் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் என்பதை இந்தத் தொகுப்பின் வாயிலாக ஆசிரியர் சிறப்புற எடுத்துரைத்திருக்கிறார்.
நூலின் தகவல்கள்:- 

நூல் : “வாசிப்பிற்கு திசை இல்லை” 

நூலாசிரியர் : பேராசிரியர் பெ விஜயகுமார்

வெளியீடு : பட்டறை , மதுரை

முதல் பதிப்பு : 2021

தொடர்புக்கு9500740687

விலை : ரூ. 150

பக்கங்கள் : 128

நூலறிமுகம் எழுதியவர்:- 

இளையவன் சிவா 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *