1
நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல
மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்
கை குலுக்குகிறார்கள்
கட்டித் தழுவுகிறார்கள்
தழுவியதும்
விடைபெறுகிறார்கள்
உருவம் கலைந்ததும்
வெற்றிடம் விரிகிறது
வெற்றிடத்தைக் கண்டால்
பூமி பெருமூச்சு விடுகிறது
யார் நிரப்ப ?
எண்ணங்களின் நிழல் வழியே
நான் உனக்குள் இறங்குவேன்
நள்ளிரவில்
இந்தப் பால் கொடியைப் பற்றிக்கொண்டு
மேலேறு உயிர் பூச்சியே!
உறவுச் சங்கிலிகள் ஆடுவது
இருள் நிழல் கயிற்றின்
துணை கொண்டுதான்!
2
அந்தியுமில்லை இரவுமில்லை
இரண்டாம் கெட்டான் பொழுது
சற்று நேரத்தில்
ஆந்தைக்குக் கண் தெரியப் போகிறது
உதிர ஆரம்பித்த நட்சத்திரமும்
கண்ணுக்குள் விழுந்து தான்
மறையப் போகிறது
இருள் நதியில் குதித்து நீந்த
இதயங்கள் நிர்வாணமாகிக் கொண்டிருக்கின்றன
மனதை பிசையும் இரணம்
வழக்கம் போலவே
எல்லா உயிர்களுக்குள்ளும்
நுழைகின்றது
தலைசாய்க்க அலையும்
சருகு ஒன்றிற்குக் கூட
சிறிதும் இடமின்றிப் போய்விட்டது
இந்த உலகில்
யாவரும் போலவே
நீயும் அகதிதான்
இந்தக் கரிய இருளில்
தீட்டு
பாட்டன்களுக்குத் தோள் துண்டுகளும்
பாட்டிகளுக்கு மாராப்புத் துணியும்
மறுக்கப்பட்ட காலமது
ஏவல் நாய்களைப் போல
காலம் கழித்தார்கள் அவர்கள்
பார்த்தாலே தீட்டு என்று சொன்னவன்
அவர்களின் வியர்வையில் விளைந்த
தானியங்களை
உண்டு கொழுத்திருந்தான்
விழிகளில் சிறு நெருப்பு தோன்றவே
அவர்கள் நூறாண்டு காலம்
காத்திருந்தார்கள்
அவர்கள் நெருப்புப் பொறிகளை எடுத்து
விதை போல இருட்டில் தூவி விட்டார்கள்
அதற்குள் வர்ணங்கள்
பல பன்றிக் குட்டிகளை ஈன்றிருந்தன
அவை எண்ணிக்கையில்
பலப்பல என்றாலும்
அத்தனையும் ஒரு வித உறுமலோடு தான்
மலக்குழிகளைச் சுற்றி வந்தன
அத்தனைப் பன்றிகளையும்
மேய்த்தவன்
அடையாளம் தெரியாத உச்சாணிக் கொம்பில்
உட்கார்ந்திருந்தான்
வெள்ளாடுகளைப் போல அவை
அவனின் ஒலிகளுக்குக் கட்டுப்பட்டன
அவன் காட்டிய சாக்கடைக்குள்
புரண்டு புளகாங்கிதம் கொண்டன
உண்மையில் பன்றிகள் அவனை
அவ்வளவு நம்பின
நெடிய மூங்கில் கழியில் இறுக்கி கட்டி
வாய்க்கூடு போட்டு
கொண்டு போகும் போது
ஒரு வேளை அவற்றிற்கு
அவனைப் பற்றித் தோன்றியிருக்கலாம்
ஆனால் தீயில் சுட்டு வாட்டும் போது
நிச்சயமாக
அவற்றிற்கு அந்த உணர்விருந்திருக்காது
எங்கள் பாட்டன்களுக்கே நூறாண்டுகள் தேவை என்றால்
பாவம் பன்றிகளுக்கு எத்தனை எத்தனை
காலமோ
எழுதியவர்:
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.