நவீன கவிதையின் முகஜாடை இந்திரனின் முப்பட்டை நகரம் – மதிப்புரை நா.வே.அருள் 

நகரம் ஒரு விநோத மிருகம்.  ஒவ்வொருநாளும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இரவில் கண் விழித்திருக்கும்.  புதுப் புதுக் கனவுகளோடு புரண்டு படுக்கும். காலையில் வெகுநேரம் கழித்துக் கண்விழிக்கும். சோம்பல் முறித்தபடிச் சுற்றுமுற்றும் பார்க்கும்.  காபி குடித்தபடி கொட்டாவி விடும். ஐந்து நிமிடங்களில் மீண்டும் பரபரப்போடு படிக்கட்டில் நின்றபடி பயணப்படும்.  மனிதர்களுக்குத் தெரியாமலேயே மனிதர்களை விழுங்கும். நகரம் ஒரு விநோத மிருகம்.

நகரத்தின் வரைபடம் மாறிக்கொண்டே இருக்கும்.  புதுப் புது ஜீவன்களைத் தன் கருப்பையைத் திறந்து காட்டும்.  நகரத்தின் பசிக்குப் பழைய மின்சார ரயில் போதுமானதாயில்லை. புசிப்பதற்குத் தேவைப்படுகிறது புதிய மெட்ரோ ரயில். மெரினாவில் பழைய சிலைகள் அசைவதாயில்லை.  நகரத்துக்கடல் அலைகளை எண்ணிச் சொல்ல பல புதிய புதிய சிலைகளை நிறுவிக்கொள்கிறது. கடற்கரைகூட பழைய ஃபாஷன் ஆகிவிடுகிறது.

நாகரிகத்தைப் புதுப்பித்துக் கொள்ள ஏராளமான மெகா மால்களைப் பெற்றெடுத்துக் கொள்கிறது.  எத்தனையோ விஷயங்கள் மாறியிருந்தாலும் அதன் அடிப்படை குணம் அப்படியே இருக்கிறது. நகரத்தில் வசிக்கும் மலைப்பாம்பு குதிரையைப் போல சவாரி செய்யும். கரைகளில் வசித்த மனிதர்களை புறநகரங்களுக்குத் துரத்திய கூவம் கர்ப்பிணியைப்போல நகர முடியாமல் நகர்கிறது.

Image

நகரத்துப் பல்லிகளால் பிளாஸ்டிக் பூச்சிகளையும் விழுங்க முடியும்.  நகரத்துப் பூங்காவில் பூக்கள் மகரந்தத்துக்குப் பதில் தூசுகளைச் சுமந்து பழகிக் கொள்கின்றன.  இந்த நிலையில் முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்த நகரம் பற்றியத் தொகுப்பு இன்றைக்குப் பொருந்துமா என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.  ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் முடியும் என்கிறது இந்திரனின் “முப்பட்டை நகரம்”.  அன்று எழுதிய கவிதை இன்றைக்கும் பொருத்தமுடையதாக ஆக்குவது கவிதையின் எந்த அம்சம்?

//மண்ணுக்குள் நிம்மதியாய்த்

தூங்குவதை விட்டுவிட்டு

முச்சந்தி, பூங்கா, பல்கலைக் கழகம்

நாடாளுமன்றம்

தனிமையாக எதிரொலிக்கும்

மியூசிய மூலைகள் –

அனைத்திலும் இவர்கள்…

குதிரை, சிலம்பு, தடி, மணிமுடி

சால்வை, புத்தகம்

இத்யாதியோடு இயங்கிக் கொண்டிருப்பதாய்

இன்னும் எத்தனைநாள் பாவனை?”

இப்படி சிலைகளைப் பற்றியக் கண்ணோட்டம்தான் இந்தக் கவிதையை நித்தியமாக்குகிறது. சிலைகளின் எண்ணிக்கை மாறியிருக்கலாம்.  ஆனால் சிலைகளைப் பற்றிய எண்ணங்கள் மாறாததுதானே?

//நடைபாதைவாசிகளின் அடுப்பு நெருப்பு

கொதிக்கும் மீன்குழம்பை ருசிபார்க்கத்

தீ நாக்குகளைச்

சட்டிக்குள் நுழைக்க முயலும்.//

மண்சட்டி எவர்சில்வர் பாத்திரமாக மாறியிருக்கலாம்.  ஆனால் அவர்களின் அடுப்பு இன்னும் நடைபாதைகளில்தானே இருக்கிறது? நடைபாதை வாழ்க்கையில் இன்னும் அதே பழைய மானுட ‘சந்நதம்’ தானே?

Image

எழுத்தாளர் இந்திரன்

நகரத்து வரைபடத்தைக் கச்சிதமாக வரைகிற கவிதைப் பொறியாளனாக இருக்கிறார் இந்திரன்.  ஆம் என்று அவர் ஒரு கவிதைப் பிரமாணப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறார்.

//நானும் ஓர்

எலியாகிப் போனேன்.

பொத்தான் காதுகளை விறைத்து

மீசை விடைக்க

ரப்பர்வாலை தரையில்

இப்படியும் அப்படியும் வீசி

மூக்கைத் தூக்கி

நானும் நாற்புறமும் பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

சுற்றிலும்

தட்டச்சுப் பொறி

கூட்டல் யந்திரம்

கணிப்பான் என்று

அனைத்தின் முன்னாலும்

ஒரு எலி இருந்தது.//

மனிதனை எலியாக்கி ஒவ்வொரு அலுவலக இருக்கையிலும் அமர்த்தி

புதுக்கவிதையை நவீன கவிதையின் தன்மைக்கு மெல்ல உயர்த்துகிறார்.

நீதிமன்றங்கள் குறித்து அவர் அன்றைக்கு வைத்த விமர்சனங்கள் மேலதிகமாக இன்றைக்கும் பொருந்துகிறது.  அதாவது, முன்னாள் நீதியரசர் ராஜ்யசபையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுகிற இன்றைக்கும்.

//பக்கத்துப் பிளாட்பாரத்துக் கடைகளில்

கொடுக்கும் விலைக்கேற்ப

ரகவாரியாக

அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் தீர்ப்புகள்.

பிரதான சாலையில்

லாரி ஏறி

பாதியுடல் சிதைந்து துடிக்கும்

எலியின் கதறல்

நீதிபதியின் தலைக்கு மேல் சுழலும்

மின் விசிறிகளின் சத்தத்தில்

சென்று கலந்து

காற்றில் கரையும்//

ஒவ்வொரு மனிதனையும் எலியாக்கி வைத்திருக்கும் சமூகத்தைக் கேள்வி கேட்க புதிய சொல் ஒன்றைத் தேடுகிறார்.

//போதும்

தெருத்தெருவாய் கைநீட்டி

தின்று மிஞ்சிய எச்சில் சொற்களுக்காய்

பிச்சையெடுத்தது.

இனி எனக்கு வேண்டும்

யார் நாவும் பட்டிராத

புதியதொரு சொல்//

இப்படியான ஒரு சொல்லை இந்திரன் ஏன் தேடவேண்டும்?  அது நவீன கவிஞனின் தலையெழுத்து.  கவித்துவத்தின் தீர்க்க தரிசனத்துக்காக அவன் புதிய சொற்களின் புதையலைத் தேடுகிறான்.

கால காலமாக, சமாதானத்திற்கே குறியீடாகிப்போன புறாவைத் தமிழ் உலகம் இது வரையிலும் கற்பனைகூட செய்திராத ஒரு அழிவின் குறியீடாக ஆக்கிக் காட்டுவதற்கு அப்படியான எச்சில் படாத சொற்கள் தேவைப்படுகின்றன.

//நேற்று வரையிலும் தெரியாது

வெள்ளைப் புறாக்கள் எல்லாமே

அமைதியின் அடையாளம் அல்ல என்று.

அப்படியான சொல்லில் அவர் சடலத்தின் வாசனையை எப்படித் தடவுகிறார் பாருங்கள்….

//பசிமிகுந்த பற்களுடன்கூடிய அலகுகளில்

விடுதலையின்

கலைக்கப்பட்ட பிண்டங்களைக் கவ்வியபடி//

“எரிக்கப்பட்ட நூலகங்களின் சாம்பலை கழுத்தில் பூசி இருந்தன“ இதில் சொல் மட்டுமல்ல படிமம் நவீனமாகிவிடுகிறது.

//அவை

அலகில் கவ்வி வந்த சதைகள்

என்னுடன்

என்மொழியில் பேசக் கண்டு பதைத்தேன்//

என்பதில் சொல், படிமம் மட்டுமல்ல.  கவிதை நவீனமாகிவிடுகிறது.

இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியதை விமர்சிக்கும் இந்தக் கவிதை

எதிர்காலத்தில் ஈழத் தமிழனுக்காக ஒரு வாழ்க்கை இருக்குமெனில் அவர்களின் நிரந்தர இலக்கியத்தில் இந்திரனும் இருப்பார்.

Image

ஒரு குயவப் பெண் எழுந்து நின்று கொம்பை ஊன்றி அழுத்திச் சுற்றப்படுகிறது சக்கரம் என்கிறபோது இது நகரத்துக் காட்சி இல்லையே என்று புறநடையாக நினைக்கத் தோன்றுகிறது.  ஆனால், “மிதித்துப் பிசைந்த களிமண்ணாய் இருக்கிறது வாழ்க்கை” என்கிற தத்துவ தரிசனம் இந்தக் கேள்வியைத் தவிர்க்க வைக்கிறது.

நாக்கில் நரம்பின்றி தினந்தோறும் பொய்கூறும் தொலைக்காட்சிப் பெட்டி, ஒட்டுண்ணியாய் மாறிவிடும் தந்திரத்தைக் கற்றுத்தரும் வயோதிகம், வெறும் சிலந்திவலை நூற்பிகளாகிவிடும் ரத்தபந்தங்களின் கயிறுகள், தினந்தோறும் சுடுகாட்டைக் கடந்து போகும் மின்சார ரயிலிலும் தண்டவாளத்துக்கிடையில் புல்லின் நுனியில் கடுகாய்ப் பூத்த மஞ்சள் பூவில் அமரும் வண்ணத்துப் பூச்சி, காடுகளின் பச்சை வாசனையைக் காகிதத்துக்குள் கண்டு தின்கிற ஆடுகள், பிடரியில் சுரீரென அடித்து நடைபாதையில் நிழலாய்த் தள்ளும் சூரியன், இப்படி நகரத்தின் வரைபடத்தைச் சொற்களாலும், குறியீடுகளாலும், படிமங்களாலும் படமாக்கிவிடுகிறார். நகரத்தின் வரைபடத்தில் வெல்வெட் தோலுக்குள் எலும்புகளை அசைத்தபடி ஒரு பூனையும் ஓடுகிறது.

ஒரு நகரத்து அடுக்ககத்தில் வசிப்பவனுக்குக் கொசுக்களைப் ‘பேட்களால்’

அடிப்பதும் அடித்து முடித்துக் கூட்டி வாருகிறபோது கொசுக்களின் சடலங்களைப் பார்த்துச் சங்கடப்படுவதும் வாழ்வின் இயல்பான முரண்.  இது கவிமனதின் அலைவுறும் அவஸ்தை.  மனசாட்சியுள்ள நகரவாசியின் மனப்பதிவு.  சிட்டுக்குருவியின் மரணத்தில் ஒரு நகரவாசியின் அனாடமியை அடையாளம் காட்டுகிறார்.

//காலையின் குரல்களில் ஒன்றை

நேற்றைய நடுஇரவில் கொன்றேன்

………..

இருட்டில்

படபடவென சிறகை அடித்து

கம்பிக்கால்களால் என்னைக் கீறி

போர்த்தித் தூங்கும் குழந்தைகளைக் கீறி

முளைக்காத சிறகால்

பறக்க யத்தனிக்க

இருட்டில் தடவி

ஓங்கி அடித்தேன்

இன்றைய காலையோ

தனது கூட்டிசையில்

ஓர் இசைக்கருவி இன்றி

தவித்தது.//

இந்தத் தொகுப்பில் ‘தார்ப்பாம்பு’ நகரத்தின் குறியீடு.  தொன்மமும் நவீனமும் கலந்த ஒரு கவித்துவ வார்ப்பு.  “முக்கண்ணன் சிவனைப் போல் பச்சை சிவப்பு ஆரஞ்சு கண்களுடன்” என்று தொடங்கும் கவிதை “உடம்பின் மேல் அங்கங்கே விபூதிப் பட்டைகள்…சாலை நீதிகளைப் புறக்கணிப்போரின் மண்டையோடுகளை அணிந்துகொள்ளும்”….“ஓடிக்கொண்டே இருக்கும் நகரத்துக் கங்கை” காவல் துறை பூதகணங்கள் சேவை செய்ய…. என்று சிவனின் சித்திரத்தைத் தீட்டுகிறார். ”கருத்தத் தோலுக்குக் கீழே சாக்கடை நதிகள்”  “குருவிகள் சல்லாபிக்க கம்பங்களில் கிளைவிட்டு நீளும் மின்சாரக் கம்பிகள்”  “முடிவற்றுத் தேடும் இன்னும் தூரங்களை” என்று நவீன படிமங்கள் கலந்து தார்ப்பாம்பை வாசகனின் மனதில் நெளிய விடுகிறார்.

புதுக்கவிதைகள் கோலோச்சிய காலத்தில் இது நவீனத்தின் பட்டை தீட்டிய புதுக்கவிதை. வார்ப்பு, வடிவமைப்பு சித்திரங்கள் என இந்திரனே யாளியின் வெளியீடாகத் தீட்டியிருக்கிறார்.  தொகுப்பின் அட்டையில் ஒரு முப்பரிமாண ஓவியத்தை இராம.பழநியப்பன் வரைந்திருக்கிறார்.  இதை வாசித்தால் தொண்ணூறுகளிலேயே தமிழ் அன்னையின் நவீன முகஜாடையை நம்மால் காணமுடிகிறது.

நா.வே.அருள்