சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேனி மாவட்டத்தின் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையினை தனது எழுத்தின் மூலமாக கலை படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிற தோழர் அல்லி உதயன் அவர்கள் , தேனி மாவட்டத்தில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை வடிவமைத்து வளர்த்தெடுத்த சிற்பிகளில் ஒருவர் . ஏழை எளிய மக்களின் சாரம் போகாத வாழ்க்கையினை , அவர்களின் தனித்துவ மொழியின் வழியாகவே தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வரும் மகத்தான படைப்பாளி.

இதுவரை நான்கு சிறுகதை தொகுப்புகளும் ஒரு நாவலும் அவரின் பங்களிப்பாக வெளிவந்துள்ளன .எந்த விதமான மொழிப் பாசாங்கும் இன்றி , உழைக்கும் மக்களின் வாழ்க்கையினை , அவர்களின் வார்த்தைகளையே எடுத்து , எழுத்துக்களாக பதிவு செய்து தற்போது நம் முன்னே அவர் வைத்திருக்கும் எளிமையான படைப்புதான் ‘’ துணைநலம் ‘’என்ற இந்த அற்புதமாக சிறுகதை தொகுப்பு

இந்த சிறுகதை தொகுப்பின் மூலம் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அவர் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது. இந்த சிறுகதைகளின் மீது முதல் வாசிப்பை நிகழ்த்தும் போதே அதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம் . ஒரு படைப்பாளி எவ்வாறு தன் வாழ்க்கையையும் , தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் கூர்ந்தாய்வு செய்து , விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அதன் மீது எப்படி இணை வினை மற்றும் எதிர்வினையாற்றி படைப்பாக்கம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த செய்தியாகும்

உழைப்பாளியே படைப்பாளியாக மாறும் போது கலைக்குள் என்ன மாயம் நிகழ்கிறது என்பதை இத் தொகுப்பில் உள்ள பதினாறு சிறுகதைகளையும் நீங்கள் வாசித்து முடிக்கும் போது கண்ணார கண்டு தரிசிக்கலாம்.

பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறுகதை தொகுப்பிற்கு தோழர் கமலாலயன் ஒரு மிகச் சிறந்த மதிப்புரை வழங்கி உள்ளார் .

தோழர் அல்லி உதயன் அவர்களின் சிறுகதையின் பண்புகளைப் பற்றி பேசும்போது அவரின் படைப்புகளை வாசிக்கும் எவரும் முதலில் கண்டு கொள்வது , அவர் எவ்விதம் மக்களின் அன்றாட வாழ்க்கையை கூர்ந்து நோக்கும் பண்பினை பெற்றுள்ளார் என்பதாகும்

தன்னைச் சுற்றியுள்ள உழைக்கும் மக்களின் அன்றாடப் போக்கினை அவதானித்து , வாழ வழியற்ற சூழலிலும் அவர்கள் வாழ்க்கையை எவ்வாறு நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதையும் , அதற்காக அவர்களின் இடைவிடாத போராட்டங்களையும் , ஒரு பரிவும் எள்ளலும் நடையில் இவர் கூறிச் செல்வது இவரது எழுத்துக்களின் ஆகப் பெரும் சிறப்பென்று கூறலாம்.

வாழ்க்கையின் மீது அவர் முன் வைக்கின்ற விமர்சனங்கள் , வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகனின் மனதுக்குள்ளும் மீன் முள்ளைப் போல கூர்மையாக பாய்ந்து செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அடுத்ததாக அவரது எழுத்துக்களின் ஆகச் சிறந்த சிறப்பம்சம் எதுவென்றால் அவர் தேனி வட்டார வழக்கு மொழியை சிறப்பாக பயன்படுத்தும் விதமென்று கூறலாம். இம் மாவட்டத்தின் பழமொழிகளையும் , சொலவடைகளையும் சிறிதும் மிகைப்படுத்வும் செய்யாமல் , குறைத்தும் விடாமல் தேவைப்படுகின்ற இடங்களில் கனகச்சிதமாக பயன்படுத்தும் பாங்கு அவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது. . ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் தேனி வட்டார வழக்குகள் கொட்டிக் கிடக்கின்றன .அவர் பயன்படுத்தும் லாவகத்தில் அவைகள் உயிர்பெற்று நமது கண்முன்னால் நடமாடத் தொடங்கி விடுகின்றன .

பெரும்பாலான கதைகளில் எழுத்தாளரே கதை சொல்லியாக இருக்கிறார் .அல்லது ஒரு பார்வையாளராக இருக்கிறார் . அவர் இந்த கதைகளுக்குள் எப்படி வந்தாலும் , கதைக்குள் தன்னை எந்தவித சார்புமில்லாதவராகவும் ,நடுநிலைமையாளராகவும் மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்பது தான் அவர் மிகச் சிறந்த கதையாளர் என்பதற்கான அடையாளம்.

ஒரு காட்சியை இவ்வாறு நடந்தது என்று விவரித்து விட்டு செல்பவராக மட்டுமே அவர் இருக்கிறார் தவிர தனிப்பட்ட விமர்சனத்தை சிறுகதையின் மீது எப்போதும் அவர் சுமத்துவதில்லை .அவரே பாத்திரமாக வந்தாலும் சரி அல்லது பார்வையாளராக வந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக ஒரு சொல்லைக் கூட பயன்படுத்துவதுமில்லை . தன் சொந்தக் கருத்தாக எதையும் முன் வைத்து வலியுறுத்துவதில்லை. கதை அதை செய்யட்டும் என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார். கதையே படைப்பாளியின் குரலாக ஒலிக்கும் போது தனியாக தான் ஏன் பேச வேண்டும் என்பது முற்றிலும் நியாயமே.

தேர்ந்தெடுத்த எளிமையான சொற்களை பயன்படுத்துவதே இவரின் பெரும் பலமாக இருக்கிறது. சிறுவர் இலக்கியத்திற்கு தேவைப்படுவது போல அப்படி ஒரு எளிமையான மொழியை எடுத்துக் கொண்டு , அதில் பெரியவர்களுக்கான இலக்கியம் செய்து வெற்றியும் பெற்று விடுகிறார் என்பது தான் இவரின் கலை நேர்த்தி என்று சொல்லலாம். வாசிப்பவரை எந்த வித சிரமத்திற்கும் உள்ளாக்காமல் தான் சொல்ல வந்ததை கன கச்சிதமாக சொல்லிச் செல்வதே தோழர் அல்லி உதயன் அவர்களின் தனித்தும் என்றால் அது மிகையாகாது.

முதல் கதையான ‘ உபதேசம் ‘’ என்ற சிறுகதையில் எழுத்தாளரே கதை சொல்லியாக வருகிறார். கதிரேசன் சார் இவருடைய நீண்ட நாள் நண்பர்தான். எங்கே பார்த்தாலும் நிறுத்தி நலம் விசாரிக்க கூடியவர் தான். ஆனால் சமிப காலமாக அவர் யாருடனும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை . அவருடைய மகள் ஒரு மாட்டுக் கறி கடைக்காரருடைய மகனோடு சென்று விட்டாள் என்பதுதான் அதற்கான காரணம் . ஊரே ஒவ்வொரு விதமாக பேசும் போது , கதிரேசன் சார் வெளிய தலை காட்டுவதற்கும் அஞ்சுகிறார் .

இவர் தன் நண்பருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று தான் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கிறார் ‘’ விடுங்க சார் ஒரு ஆணும் பெண்ணும் தானே சேருகிறார்கள் . வேற ஒன்றும் இல்லையே ‘’ இப்படியெல்லாம் சொல்லலாம் என்று தான் நினைக்கிறார் .ஆனால் முடியவில்லை. காரணம் இதே போன்ற சூழ்நிலை இவர் குடும்பத்திற்குள் முன்பு ஒரு முறை வந்த போது , இவர் எப்படி நடந்து கொண்டார் என்ற குற்ற உணர்ச்சி இவரை உறுத்துகிறது.

இவருடைய மகளோடு பார்த்த அந்தப் பையனை அவமானப்படுத்திவிட்டு மகளை மிரட்டி , அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவர்களின் காதலை ஒரு வழியாக முறித்துப் போட்டு விடுகிறார் .

இதை தன் மனைவிக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் . தன் குடும்பத்தில் . ஆனால் அவர் மனைவிக்கு எல்லாம் தெரிகிறது- அவள் இவரை ஒரு கேள்வி கேட்கிறாள். அது ஒட்டு மொத்தப் பெண்களும் ஆண்களைப் பார்த்து கேட்கும் ஒரு கேள்வியாக நம் காதுகளுக்குள் ஒலிக்கிறது. கடைசியில் உங்களைப் பொறுத்த வரை எல்லாம் ஊருக்குத்தான உபதேசம் என்று முடிக்கிறாள் ‘’ .

ஒரு பொண்ணோட மனசை இன்னொரு பொண்ணால தான் புரிஞ்சுக்க முடியும் என்று சாதாரணமாக கடந்து போகிறாள். ஆண்களின் சீர்திருத்த மனோபாவமெல்லாம் இவ்வளவுக்குத்தான் என்பதை பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டு அனாயாசமாக கடந்து போகிறார்.

இந்த தொகுப்பின் இரண்டாவது சிறுகதை கதை ‘’ பதிலுக்கு பதில் ‘’ இது தேனி மாவட்ட மக்கள் எவ்வாறு மொய் செய்து , பதிலுக்கு மொய் வாங்கி அதை தங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே நடத்திச் செல்கிறார்கள் என்பதை எள்ளல் நயத்துடன் சுட்டிக்காட்டுகிறது. கணேசனும் அவன் மனைவி தேவகியும் மதுரைக்கு ஒரு செய்முறைக்கு சென்று விட்டு கம்பத்திற்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் கணேசனுக்கு இப்படியான செய்முறைகள் பிடிக்கவில்லை தான். ஆனால் அவன் மனைவிக்கு அது மிகவும் விருப்பமானதாக இருக்கிறது.

வருடத்தில் பாதி நாட்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை எந்த ஊரில் எப்பொழுது எங்கே மொய் செய்ய வேண்டும் என்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது .இரவு நேரம் நல்ல பசி வேறு தேனியில் இறங்கி இரண்டு புரோட்டாவாவது சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று தேவகி. சொல்கிறாள் ஆனால் கணேசன் நம்ம கம்பத்துக்கு டிக்கெட் எடுத்து விட்டதனால் பஸ் சார்ஜ் வீணாகப் போய் என்று தடுத்து விட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் ஒரு தண்ணீர் பாட்டிலும் வாங்கி கொண்டு வருகிறான். . பசியோடும் அதற்கு அடுத்த மாதம் தாங்களே எவ்வாறு ஒரு வசந்த விழா நடத்த வேண்டும் என்றும் திட்டம் தீட்டிக்கொண்டே வருகிறாள் தேவகி.

கணேசன் செய்வதறியாமல் இருளில் கடக்கும் வயல்வெளிகளையே பார்த்துக் கொண்டு வருகிறான். ஒரு விதத்தில் பார்த்தால் அவர்களின் வாழ்க்கையும் கூட இருளில் தானே ஓடிக் கொண்டிருக்கிறது.

‘’ பிடிமானம் ‘’ என்ற கதை 1996 ஆம் ஆண்டு எழுதப்பட்டு , செம்மலரில் பிரசுரமாகியுள்ளது . கதை முன் வைக்கும் ஒரு அவல வாழ்க்கை இன்றும் அடித்தட்டு மக்களுக்கு சொந்தமாகத்தான் உள்ளது. ஒரு சிறு கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த குடும்பம் பெரும் முதலாளிகளின் படையெடுப்பால் தொழில் நட்டமாகி , கடன்காரக் குடும்பமாக ஆக்கப்பட்டு வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள வெளியூரைத் தேடி பயணிக்கிறது.

திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கே உள்ள ஒரு கிணற்றில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். நடக்க முடியாத இரு குழந்தைகளையும் ஆளுக்கு ஒருவராக தூக்கி வைத்துக் கொண்டு ஆளறவமற்ற ஒரு கிணறை தேடிச் செல்கின்றனர் . இதற்கு இடையில் ஐம்பது ரூபாய்க்கு குழந்தைகளுக்கு அல்வா வாங்கி கொடுக்க வேண்டும் என்ற சிறிய ஆசையை கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. எதிர்பாராத சூழ்நிலையில் அங்கே தற்கொலை செய்து கொள்ள வந்த இன்னொரு ஜோடியை சந்திக்க நேர்கிறது அதன் மூலமாக வாழ்க்கையில் ஒரு பிடிமானம் கிடைக்கின்றது

அல்லி உதயன் அவர்களின் கதைகளின் ஊடாக எளிய மனிதர்கள் வாழ வழியற்ற போதும் வாழ்க்கையை தேடிப் போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள் .
மூச்சைப் பிடித்துக் கொண்டு பிழைத்து விடலாம் என்று நினைக்கும் உழைக்கும் மக்களிடம் மூச்சு விடுவதற்கு கூட ஒரு வழிவகை செய்ய முடியாத பொருளாதாரச் சூழ்நிலை இந்த மண்ணில் நிலவுகிறது. இந்த ஆட்சிக் காவலர்களும் , அதிகார வர்க்கத்தினரும் , இங்கே உள்ள முதலாளி வர்க்கமும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை சிதைக்கின்றன .

’ நாணயத்தின் இரு பக்கம் ‘’ என்ற சிறுகதை தேனி மாவட்ட வட்டாரங்களில் எப்படி சினிமாவும் ஒரு தொழிலாகி விட்டது என்பதை எள்ளல் நடையில் நகையாடிச் செல்கிறது. இந்த மாவட்டத்தில் இருந்து இயக்குனர்களும் கதாசிரியர்களும் ஒளிப்பதிவாளர்களும் பாடலாசிரியர்களும் திரைத்துறைக்கு சென்று கோலோச்கின்றனர் .அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஒன்றும் உருப்படியாக செய்யவில்லை . ஆனால் அவர்களின் புகழ் வெளிச்சம் மங்கியதும் , நடிகர்களாகவும் சிறு திரை இயக்குனர்களாகவும் மீண்டும் அவதாரம் எடுத்து வந்து இந்த மண்ணில் உள்ள மனிதர்களை நடிகர்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் .

அவ்வாறு இந்த மண்ணிலிருந்து ,இப்பொழுது அலங்காரத்தம்மா என்ற ஒரு பெண் சின்னத் திரை நடிகையாகி தினமும் சீரியலில் சென்று நடித்து விட்டு வருகிறார் . அவர் அழகின் உச்சத்தில் இருந்தபோது அவரை ஐம்பது முறைகளுக்கும் மேலாக நிராகரித்த அதே இயக்குனர் தான் இப்பொழுது அவரை சின்னத்திரை நடிகையாக பயன்படுத்திக் கொள்கிறார். பலரின் கலை கனவுகள் எவ்விதமாக திரையில் சீரழிக்கப்படுகின்றன என்பதை எள்ளல் நடையில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்தக் கதை

‘’ எதிர் விளைவு ‘’ என்ற சிறுகதையில் கிராமங்களில் இன்னும் மரித்துப் போகாமல் இருக்கின்ற மனிதாபிமானத்தை மிகவும் அற்புதமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர். தேனியில் இருந்து விருதுநகரின் கடைக்கோடியில் உள்ள ஒரு கரிசல் கிராமத்திற்கு , கமிசன் கடைக்காக தானியங்களை வாங்கச் செல்லும் நரேந்திரன் அந்த கிராமத்தில் ஒரு தேனீர் கடை கூட இல்லாதது கண்டு திகைத்துப் போகிறான் . கிராமத்து ஏஜென்ட் இவனுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதும் , அதை அலட்சியப்படுத்திவிட்டு அங்கே சென்று பார்க்கும் போது அவர் சொல்லியதற்கு மேலாகவே அந்த கிராமம் மிக மிக பின் தங்கியதாக இருக்கிறது .

விரைவாக வேலையை முடித்துவிட்டு ( மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகிறது ) சரி சரி சீக்கிரம் வந்து காசு வாங்கிக்கங்க நான் கிளம்பனும் என்று அவன் சொல்லும் போது அந்த வீட்டில் மூத்தவர் போல இருப்பவர் ‘’ காசெல்லாம் அப்புறம் பார்த்துக்குவோம் முதல்ல வந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போங்க ‘’ என்று அழைக்கிறார். மனிதம் இன்னும் கிராமங்களில் உயிர்ப்போடு தான் இருக்கிறது.

துலாக் கோல் என்ற சிறுகதையின் நாயகன் பெரிய ஓவியனாக வரவேண்டும் என்று சிறுவயதில் இருந்து கனவு காண்கிறான் . ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்திலும் படங்களாக வரைந்து வைத்திருக்கிறான் . இப்படி இருபது நோட்டு புத்தகங்கள் தேறும் ஆனால் அவன் நினைத்தது போல வாழ்க்கை வாய்க்கவில்லை திருமணம் ஆகி ஒரு டீ ப் பட்றையில் தொழிலாளியாக வேலை செய்கிறார் . என்ன செய்வது நிறைய மனிதர்களுக்கு கைவந்த கலை வாழ்க்கையிலே கடைசி வரைக்கும் வராமல் போய்விடுகிறது அந்த இயக்கத்தை இந்த சிறுகதையில் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார்

‘’ பேரம் ‘’ என்ற சிறுகதை கிராமங்களில் பெண்கள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறது செங்காளியப்பன் தனது மனைவி குப்பத்தாவை அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறான் அவள் போட்டு வந்த நகை நட்டு எல்லாவற்றையும் செலவு செய்து விட்டு ஒரு குரங்கியோடு வேறு தொடர்பு கொண்டு இருக்கிறான் . இதை தட்டிக் கேட்ட குப்பத்தாவையும் அவளுடைய அண்ணனையும் அடித்து சண்டையிடுகிறான் இவள் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு போகிறாள். கதை முடியும் தருணம் முடியும் வரையிலும் அவர்களுக்கு மகளிர் காவல் நிலையத்திலும் நீதி கிடைக்கவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்தக் கதை.

‘’ இழப்பின் அதிர்வுகள் ‘’ என்ற சிறுகதையில் எவ்விதம் பணம் நட்பை விட முன்னணியில் இருக்கிறது என்பதையும்‘’ இணக்கம் ‘’ என்ற சிறுகதையில் இந்த வாழ்க்கை சூழலில் எப்படி அண்டை வீட்டுக்காரர்கள் வீட்டுக்காரர்கள் சினேகமும் பகைமையும் கொள்கிறார்கள் என்பதை மனிதாபிமானத்தோடு பேசுகிறார்.

‘’ துணைநலம் ‘’ என்ற சிறுகதை இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஒரு முத்தாய்ப்பான சிறுகதையாகும் .வானதி தன் குழந்தை பவித்ராவோடு ஆட்டிச குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பிரத்யேக பள்ளிக்குச் சென்று தன் மகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறாள் .இவ்வளவுக்கும் அந்த பள்ளி நிர்வாகம் தான் முதலில் இவர்களை கூப்பிட்டு அனுப்பியது. ஆனால் கடைசியில் நோய் முற்றிய தன்மையல் உள்ளதை காரணம் காட்டி, உதாசீனப் படுத்தி அனுப்பி விடுகிறது- ஆளரவமற்ற காட்டு வழியாக அவள் தன் குழந்தையை தூக்கி கொண்டு நடந்து வரும் போது ,பெண்கள் தலையில் தான் எல்லாச் சுமைகளையும் இந்த சமூகம் சுமத்துகிறது என்பதை கண்கூடாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர் – அவள் கணவன் ஒரு வழியாக கடைசியில் பைக்கில் அங்கே வந்து சேருகிறான்.

அவனது கண்களிலும் நீர் நிறைந்திருந்தது அவள் சொல்கிறாள் ‘’ நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சாமி வந்துட்டீங்களா ‘’ ஆனந்தத்தில் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது .நமது கண்களிலும் தான்.

‘’ உதைபடும் ஏணிகள்’’ என்ற கதையில் கதையில் கமிசன் கடை வியாபாரிகள் எவ்வாறு சாதாரண விவசாயிகளை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள் என்று அற்புதமான பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

‘’ வெள்ளைக்காரன் ‘’ சிறுகதை ஒரு சிறிய கடை நடத்தி வரும் இவர் ராமன் என்று குடிகாரனிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுவதை அவல நகைச்சுவையோடு சித்தரிக்கிறது.

‘’ புதுப்புது உறவுகள் ‘’ என்ற சிறுகதை சென்ற ஆண்டு எழுதப்பட்டது . கொரோனா காலகட்டத்தில் எப்படி மனிதர்களுக்கு இடையே இருந்த உறவுகள் சிதைந்தன என்பதை துயரத்துடன் பதிவு செய்துள்ளது.

‘’ கண்ணாடி ‘’ என்ற சிறுகதை ஒரு அற்புதமான சமூகக் கதையாகும். முன்னால் மில் வேலைக்காரனான வேலு இப்போது ஆட்குறைப்பால் கரும்புச் சோகை எடுத்து பிழைப்பு நடத்துகிறான். இங்கே தேனாறும் பாலாறும் ஓடுவதாக அரசாங்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன .ஆனால் ஒரு டீ குடிக்க கூட காசில்லாத நிலையில் தான் மனிதன் இருக்கிறாள் . ஒரு நான்கு ரூபாய்க்கும் வழியில்லாமல் மனிதர்களை வைத்திருக்கிறது இந்த வாழ்க்கை.. வாசிக்கும் எவரின் இதயத்தையும் ஒரு முறையாவது நெகிழ்த்திப் பார்க்கும் வல்லமை கொண்டது இந்தச் சிறுகதை.

‘’ இடைவெளி ‘’ என்றொரு சிறுகதை பாரதி நூற்றாண்டு விழா நடத்துவதற்காக ராஜ் முதலாளியிடம் டொனேஷன் கேட்டுச் சென்ற நண்பர்கள் எவ்வாறு அவமானப்படுகிறார்கள் என்பதை எள்ளல் நடையுடன் பேசுகிறது. இந்த பாரதி யாரென்று தெரியாதவன் தான் இங்கே முதலாளியாக இருக்கிறான். ஆனால் அவனே கோயில் குளத்திற்கு நன்கொடை கேட்டுச் சென்றால் அள்ளி அள்ளித் தருகிறான். இந்த மண்ணில் இலக்கியத்திற்கான மரியாதை இவ்வளவுதான் என்று சொல்லி விட்டது கதை.

இந்த தொகுப்பின் இறுதி கதையாக ‘’ எம்ஜிஆர் பாட்டு ‘’ என்ற கதை வருகிறது அதில் வரும் ஒரு கிழவனும் கிழவியும் வயதான காலத்தில் சண்டை இட்டு பஞ்சாயத்து வரை போகிறார்கள் .லோக்கல் அரசியல்வாதியான முனியப்பன் அவர்களுக்கு பஞ்சாயத்து பண்ண வருகிறான். பெரும்பாலும் அவன் இது போன்ற பஞ்சாயத்துக்களை வெட்டி விட்டுத் தான் பழக்கம். ஆனால் அவனுக்குள்ளும் ஒரு மனிதாபிமானம் இருக்கிறது கடைசியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் .கிழவனையும் கிழவியையும் சேர்த்து வைத்து விட்டுப்போகிறான். பிறகு தான் ஒவ்வொருவருக்கும் நிம்மதிப் பெரு மூச்சு வருகிறது. நமக்கும் தான்.

தோழர் அல்லி உதயனின் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்த பின்பு நமக்கு தோன்றுவது இது தான் ‘’ இத்தனைக்குப் பிறகும் மனிதர்களுக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது ‘’

நானும் அதையே தான் சொல்கிறேன் . அற்புதமான இந்த அல்லி உதயன் என்ற கலைஞன் இன்னும் எழுத வேண்டியது இன்னும் எவ்வளவோ மீதமிருக்கிறது. ‘’
வாழ்த்துக்கள் தோழர் அல்லி உதயன் அவர்களுக்கு.

நேசத்துடன்
தங்கேஸ்

நூலின் பெயர் : துணை நலம்
ஆசிரியர் பெயர் :அல்லி உதயன்
விலை :₹140.00
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *